திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது ‘வாழ்க்கைத் துணை நலம்' என்று தான் குறளில் குறப்பிட் டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல் லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன.

முதலில் மதத்தில் இருந்து தமிழை பிரிக்க வேண்டும் என்றார். அடுத்ததாக வட மொழியில் இருந்து தமிழைப் பிரிக்க வேண்டும் என்கிறார் பெரியார்.

periyar 524ஒரு மொழி என்பது எளிமையாக கற்றுக் கொள்ள முடிகிற அளவிற்கு இருக்க வேண்டும். மிக கடினப்பட்டு படிக்கின்றவாறு இருக்கக் கூடாது. அப்படி எளிமையாக கற்றுக் கொள்ளு மாறு இருந்தால் தான் ஒரு மொழி மக்கள் மத்தியில் வேகமாக வளர்ச்சியடையும். ஆங்கிலத் தில் வெறும் 26 எழுத்துதான் ஆனால் உலக அளவில் வளர்ச்சி அடைந்து சென்று விட்டது. ஆனால் தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. 247 எழுத்து உள்ள தமிழில் என்ன அறிவியல் நூல்கள் இருக்கின்றன? எதுவும் இல்லை. குறிப்பாக படிப்பதற்குக்கூட கடினமாக உள்ளது. மொழி என்பது ஒவ்வொரு நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உருவாகக் கூடியது.

எதற்கு இப்படி பெரியார் கூறுகிறார் என்றால், “ஒரு மொழியை மேம்படுத்திக் (update) கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார். மன்னர் காலங்களில் போர் என்றால் வாளை வைத்து சண்டையிடுவார்கள். அந்த காலத்தைப் போன்றே தற்போதும் வாளை வைத்து சண்டை யிட்டால் சரியாக இருக்குமா ? எனவே நவீன காலங்களுக்கு ஏற்ப ஒரு மொழி மேம்பாடு அடைய வேண்டும் என்கிறார்.

பெரியாரின் மொழி குறித்த பார்வை மிக ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்தேசியவாதிகள், திராவிடர்கள் என்றாலே கன்னடர்கள், தெலுங்கர்கள் என்கிறார்கள். ஆனால் பெரியார், ‘கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவைகள் தமிழே என்கிறார். மூன்றும் தமிழ் தான் அவைகள் தனித்தனி மொழி என்று நான் கருதவில்லை. ஏனென்றால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள வட மொழி சொற்களை எடுத்துவிட்டால் மீதமிருப்பது தமிழ் தான். பள்ளிக்கூடத்திற்கே பெரியார் போகவில்லை என்கிறார்கள் ஆனால் பெரியாரின் மொழி குறித்தான ஆராய்ச்சி நம்மை வியக்க வைக்கிறது. “நான்கு இடங்களில் நான்கு விதமாக தமிழைப் பேசுகிறார்கள். இதை வேறு மொழி என்று கூறுவது நியாயமா ?” என்று கேட்கிறார் பெரியார். இன்னும் சந்தேகமா? பெரியார், நமது மாநிலத்திலேயே தென் தமிழகத்தில் பேசும் மொழிக்கும், மேற்கு மாநிலத்தில் பேசும் தமிழுக்கும் வேறுபாடு இருக்கும் போது, பக்கத்து மாநிலத்தில் பேசுவதில் வேறுபாடு இருக்காதா? ஏன், பார்ப்பனர்கள் பேசக்கூடிய ‘நேக்கு, நோக்கு’ என்பது தமிழ் என்றால், ‘உனிக்கு, எனிக்கு’ தமிழ் ஆகாதா ? என்று பாமர மக்களுக்கு புரியும் வகையில் பெரியார் எழுதுகிறார். இது தான் பெரியாரின் மொழி குறித்தான பார்வை.

இனி பெரியாரின் தமிழ் மொழிக்கான தொண்டு குறித்து பார்ப்போம். பெரியார் தன்னை ஒரு மொழிக்கானவராகவோ, நாட்டிற்கானவராகவோ வட்டப் படுத்திக் கொண்டவர் அல்ல. இவையனைத்தையும் கடந்த மனிதநேயத்திற்காக வேலை செய்தவர். “ஒருவனுடைய கல்வி வளர்ச்சி என்பது, அவன் தாய் மொழியில் இருக்க வேண்டும்” என்கிறார் பெரியார். “அவரவர் தாய் மொழியில் கல்லூரி படிப்பையும், தொழிற் படிப்பையும் படிப்பதே சிறந்தது, என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம்” 22.11.1952 ஆம் தேதி விடுதலையில் இவ்வாறு எழுதியுள்ளார். கல்வி மட்டும் தாய் மொழியில் பயின்றால் போதுமா ? ஆங்கிலத்தில் உள்ள அறிவியல் நூல்களை இங்கிருக்கும் தமிழ்ப் பண்டிதர்கள் மொழி பெயர்த்து மலை மலையாக குவித்திருக்க வேண்டாமா ? எதற் கென்றால், தமிழில் அறிவியலை படிக்க வேண்டும் என்கிறார் பெரியார். இராமா யணத்தையும், மகாபாரதத்தையும் பாடமாக படித்து என்ன பயன்? இவையெல்லாம் செய்யவில்லையென்றால் எப்படி தமிழ் வளரும்?

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். தமிழை கல்லூரிகளில் பயிற்று மொழியாக்கிவிட்டீர்கள், மகிழ்ச்சி. ஆனால் இன்னும் ஏன் ஆங்கிலம் ஆட்சி மொழி யாக இருக்கிறது ? தமிழ் ஆட்சி மொழியாக இருந்தால் ஏழை எளிய மக்கள் பயன்பெறு வார்களே ! மேலும், கூறுகிறார், நீதி மன்றங் களில் தமிழை வழக்காடு மொழியாக வைக்க வேண்டும். அதற்கும் ஒரு உதாரணத்தை கூறுகிறார். 'குற்றவாளியாக இருப்பவருக்கு ஆங்கிலம் தெரியாது, நீதிபதியும், வழக்கறிஞரும் பேசிக் கொள்வது குற்றவாளிக்கு புரியாது. குறைந்த பட்சம் குற்றவாளி புரிந்து கொண்டு பதிலளிக்கிற அளவிற்காவது தமிழில் வாதாட வேண்டும். அதற்கு தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்கிறார் பெரியார். எனவே ஆங்கிலம் இருப்பதால் பாமர மக்கள் நீதியைப் பெறுவதற்கு நிறைய பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. குறைந்தபட்சம் சட்ட புத்தகத்தையாவது தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்கிறார். இது தான் பெரியார்.

எவ்வளவோ தமிழ் புலவர்கள் இருந்தார்கள்; ஆனால் அவர்கள் அனைவருக்கும் கோவில், பூஜை, புனஸ்காரங்களின் மீது மட்டும் தான் கவலை இருந்தது. எந்த புலவர்களும் தமிழ் மக்கள் சார்ந்து கவனங்களை செலுத்தவில்லை.

மறைமலை அடிகளார் இருந்தார். தமிழ் மீது பற்றுள்ளவர் தான். வேதாச்சலனார் என்ற பெயரை தமிழில் மாற்றிக் கொண்டார். ஆனால் அவர் குறிப்புகளை ஆங்கிலத்தில் தான் எடுப்பார்.

பெரியார், மொழி வளர்ச்சி என்பது, அந்த மொழி பேசக்கூடிய மக்களின் சம்மந்தப்பட்டது என்று சிந்தித்தார்.

திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும் என்கிறார். கலியாணம், விவாஹம், கன்னிகா தானம் இவை எதுவுமே தமிழ் கிடையாது. தமிழரின் சொல் என்பது 'வாழ்க்கைத் துணை நலம்' என்று தான் குறளில் குறப்பிட்டிருக்கிறது. மற்ற மொழி சொற்களெல்லாம், பெண்ணை தாரை வார்ப்பது, வேசி போன்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன. எனவே கலியாணம், விவாஹம், கன்னிகாதானம் போன்றவைகளால் தமிழரின் சுயமரியாதை இழக்கப்படுகிறது. சுயமரியாதை இயக்கத்திற்குப் பிறகு “சுயமரியாதை திருமணம்” நடைபெறு கின்றன. இணையர்கள் இருவரும் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை தமிழில் வாசிக் கிறார்கள். அனைவருக்கும் புரியும் படியாகவும் இருக்கிறது. எனவே, சமஸ்கிருதம் இருந்த இடத்தை சுயமரியாதை திருமணம் மூலம் தமிழை கொண்டு நிரப்புகிறார்கள். 28.05.1928 அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கிலநத்தம் எனற ஊரில் தான் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றதாக குறிப்பு இருக்கிறது. பெரியார் நடத்தி வைக்கிறார். இதில் நிறைய தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

இவைகள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என்றும் கூறினார். திராவிட இயக்கம் செய்த சாதனைகளில் முதன்மையானது தமிழில் பெயர் வைப்பது தான். அதற்கு முன் வரை மனுதர்மத்தில் கூறியவாறு தான் பெயர்கள் இருக்கும். இங்கே இருக்கும் சூத்திரர்களுக்கு அடிமைத்தனத்தை குறிக்கக் கூடிய பெயர்களைத் தான் வைத்திருப்பார்கள். வீரமான பெயர்களை வைக்க முடியாது. சுயமரியாதை இயக்கத்திற்குப் பிறகு, தலித் மக்களுக்கு சுப்பையா, குப்புசாமி போன்ற பெயர்கள் வைக்கப்பட்டது. ஏனென்றால் இறுதியாக முடியும் சொல் அவர்களை மரியாதையாக அழைப்பதாக இருக்கும். ஆனாலும், ஆதிக்க ஜாதியினர், அவர்களை சுப்பா, குப்பா என்றே அழைத்தனர். இறுதியாக முடியும் அய்யா, சாமி போன்ற பெயர்களை சுருக்கி அப்படி அழைத்தனர். அதற்கும் ஒரு சில இடங்களில் ‘கும்பிடுகிறேன் சாமி’ போன்ற பெயர்களும் வைக்கப்பட்டன. எப்படி சுருக்கினாலும் மரியாதையாக அழைத்தாக வேண்டுமென்பதால். பெரியார் அதிலும் குறிப்பாக மதம் சம்மந்தப்பட்ட பெயர்களை வைக்கக் கூடாது என்றார்.

உலகிலேயே தமிழன் மட்டும் தான் இரண்டு மொழியில் பெயரை எழுதுகிறான். அதாவது தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும், பெயரை தமிழிலும் எழுதுகிறான். இப்படி உலகில் யாரும் எழுதுவது கிடையாது. எனவே தலைப் பெழுத்தை தமிழில் போட வேண்டும் என்று கூறுகிறார். பெரியார் இறுதி வரையும் தன்னுடைய கையெழுத்தை ஈ.வெ. இராமசாமி என்று தமிழில் தான் போட்டார். கன்னடர் பெரியார், தமிழை காட்டு மிராண்டி மொழி என்று கூறிய பெரியார் இறுதி வரை முழுமையான தமிழில் தான் கையெழுத்தைப் போட்டார். மறைமலை அடிகளார் போன்று குறிப்புகளை ஆங்கிலத்தில் எடுக்கவில்லை.

சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடுகின்றனர். ஆனால் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு அல்ல; 60 ஆண்டுகளை சொல்கிறானே அதில் ஏதாவது ஒன்று தமிழ்ப் பெயர் இருக்கிறதா ? சரி தமிழ்ப் பெயர் தான் இல்லை. அவன் சொல்லும் கதையாவது அறிவுப்பூர்வமாக இருக்கிறதா ? வெளி நாட்டவரிடம் சென்று, எங்களது ஆண்டு பிறந்த கதை என்று கூறினால் நம்மை எப்படி அவர்கள் மதிப்பார்கள் ? எனவே தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று பெரியார் கூறினார். திராவிடர் இயக்கம் மட்டும் தான் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக இன்று வரை கூறி வருகிறது. பல தமிழறிஞர்கள் சித்திரையைத் தான் தமிழ் புத்தாண்டாக கூறுகிறார்கள். சைவ மடத்தினர் இன்று வரை தை முதல் நாளை ஏற்றுக் கொண்டதில்லை.

 திருக்குறளை பெரியார் ஆதரித்தார். விமர்சனங்கள் இருந்தாலும், 3% வடமொழி சொற்கள் இருந்தாலும் பெரும்பாலும் மனித சமூகத்திற்கு ஏற்ற நூலாக திருக்குறள் இருக்கிறது, என்கிறார் பெரியார். திருக்குறள் மாநாடு நடத்துகிறார். மாநாடு நடத்தியது மட்டுமல்ல மலிவு விலையில் பதிப்பித்தும் கொடுத்தார். பல இடங்களில் திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார். “குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்” என்ற குறள் பெரியாருக்கு மிக பிடித்தமான குறள்.

பெரியார், “நான் கேட்கக் கூடிய தமிழ், ஆரியம் கலக்காத தமிழ், சமஸ்கிருதம் கலக்காத தமிழ், ஆரிய சிந்தனை ஒழிந்து தமிழ் பண்பாடு மட்டுமே கொண்ட தமிழ், அது குறள் நெறி தமிழ்” என்கிறார். திருக்குறள் மாநாடுகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்த வைத்தார். இவையெல்லாவற்றையும் விட தமிழர் உரிமைக்காக “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தையும் முன் வைத்தார். வெறும் சொல்லாக நிற்காமல் தொடர்ந்து அதை பேசியும், எழுதியுமே வந்தார். தமிழ்நாடு தனி நாடாக மாறினால் தான், ஆரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும், தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்படும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.

(தொடரும்)

பால் பிரபாகரன்

Pin It