literature legendsபல இடங்களில் சிதறிக் கிடக்கும் கலைச் சொற்களைத் தொகுத்து வெளியிடுவதற்கும் புதிய கலைச் சொற்களை உருவாக்கவும் அரசாங்கம் குழு ஒன்றைத் தோற்றுவித்தது.

1932இல் சென்னை அரசாங்கம் அமைத்த குழு வேதியியல், இயற்பியல், கணிதம், இயற்கை விஞ்ஞானம், உடலியலும் சுகாதாரமும், நிலவியல், வரலாறு, பொருளாதாரம், நிர்வாகம். அரசியல், குடியியல் ஆகிய துறைகள் பாடங்களுக்குக் கலைச் சொற்களை வெளியிட்டது, இக்குழுவினரால் உருவாக்கப்பட்ட கலைச் சொற்களில் வடமொழிச் சொற்களே மிகுதி. இக்காலகட்டத்தில்தான்...

அறிவியல் துறைப் பாடநூல்கள் வட்டார மொழிகளின் வாயிலாக அறிவியல் கல்வியை வழங்க அரசு முடிவெடுத்தது. இதன் தொடர்ச்சியாக 1933இல் தமிழ்ப் பயிற்றுமொழி, கலைக் களஞ்சியத் திட்டம், தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிக்கை, நாட்டுப்புறப் பாடல்கள் சேகரிப்பு ஆகிய தமிழின் வளர்முகப் பணிகள் பற்றி விவாதிக்க தமிழன்பர்கள் மாநாடு சென்னையில் கூடியது.

இம் மாநாட்டில் உ.வே.சாமிநாதைய்யர் தலைமையுரையாற்றினார். அப்பொழுது ‘மொழிபெயர்ப்புகளில் சீர்மை உருவாக்க வேண்டும். புதிய கலைச் சொற்களை உருவாக்கும் பணிகளால் கால தாமதமாகும். கலைச் சொற்களை தனித் தமிழில் உருவாக்குவது இயலாத காரியம்’ என்று கூறினார்.

இது தவிர தமிழில் தக்க பதங்கள் இல்லாத இடத்து வழக்கத்திலுள்ள பதங்களை உபயோகித்தல் நல்லதென்றும் தமிழ் எழுத்துக்களில் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் தமிழன்பர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களில் உடன்பாடு இல்லாத தமிழறிஞர்கள் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் கூடி தமிழன்பர் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானங்களை (7-01-1934) நிறைவேற்றினர். பிறகு இது தொடர்பாக இவர்களின் கூட்டு முயற்சியில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க மாநாடு திருநெல்வேலியில் நடந்தேறியது.

அப்போது இது தமிழன்பர் மாநாட்டுக்குப் போட்டியில்லை என்று இ.மு.சுப்பிரமணியபிள்ளை அறிவித்தார். இருப்பினும் உ.வே.சா போன்றோர் முன்வைத்த வடமொழி கலைச் சொற்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற வாதத்திற்கு எதிராக மொழித் தூய்மைவாதத்தை முன்வைத்தே சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க மாநாடு நடைபெற்றது.

அதன் முன்னுரையில் இக் கலைச்சொல் பட்டியலுக்கான காரணத்தை அச் சங்கம் ‘சென்னை அரசினர் அரிதின் முயன்று 1932 - 33ஆம் ஆண்டுகளில் வெளியிட்டுள்ள கலைச் சொற்களால் தமிழுலகடைந்த நன்மை மிகச் சிறிதே. தமிழ்ச் சொற்கள் எனப் பேர் கொண்ட அச்சொற்கள் நூற்றுக்குத் தொண்ணூற்றிரண்டு விழுக்காடு பிற மொழிச் சொற்களாயிருக்கின்றன.

அவற்றுள் பெரும் பகுதி (84%) வட மொழிச்சொற்களையும் வடமொழிச் சொற்களுள் பெரும்பகுதி பொருத்தமற்றதாகவும் எஞ்சிய பகுதி அம்மொழி வல்லுநர்க்கும் விளங்காததாயும் இருப்பதோடு ஒலிகளும் முறைப்படி தமிழ்ப் படுத்தப்படாததால் மிக்க கரடு முரடாயிருக்கின்றன’ என்று தெரிவித்தது.

இதற்கான மூலகாரணம் தனித் தமிழ் இயக்கத்தினால் வடமொழி எதிர்ப்பு தீவிரமடைந்து அவ்வியக்கத்தில் ஈடுபட்டோர்களால் இக்கால கட்டத்தில் தமிழ்க் கலைச் சொற்கள் மிகையாக உருவாக்கப் பெற்றன. பிற மொழிகளினின்றும் கடன் வாங்கித் தமிழ் மொழியை உருமாற்றி உயிரற்றதாக்கக் கூடாது. பிறமொழி ஓசை தமிழ்மொழி ஓசைக்கு மாறுபட்டது.

தமிழ் இலக்கணத்திற்கும், தமிழ் இசைக்கும் பிறமொழி ஒத்துவராது என்பது இவர்களின் கருத்து. எனவே தூய தமிழ் சொற்களைப் பயன்படுத்துதல், இலக்கியச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், வடமொழி மற்றும் ஆங்கிலச் சொற்களை, குறிப்பாக வடமொழிச் சொற்களைப் புறக்கணிப்பது ஆகியவை இவர்களின் முக்கிய நோக்கமாகும். இதன் விளைவாகவே சிறந்த கலைச்சொல் நூல் வெளிவந்தது.

பாரதி தந்துள்ள வரைவிலக்கணத்தில் பரிபாஷை. சங்கேதம், குழுவுக்குறி என்ற மூன்று சொற்களையும், கீறீனின் பரிபாஷை, அருஞ்சொல் என்ற சொற்களையும் பெயர் கட்டியிருக்கிறது என்ற தொடரையும், பிறகு சிலர் விஞ்ஞானச் சொல் என்ற கலைச் சொல்லிற்கான சொல்லைப் பயன்படுத்திய நிலையில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் (1930) நடத்திய கலைச் சொற்கருத்தரங்கு அதன் வெளியீடான கலைச்சொல் நூல், தனித்தமிழ் இயக்கம் - இவற்றின் பின்னணியில் இச்சொல் ‘Technical Team’ என்பதற்கு நிகராக உருவாக்கப்பட்டது எனலாம் (பொருள் புதிது. வளம் புதிது. இராமசுந்தரம்-1999)

இம்மாநாட்டின் எதிர்காலத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை: தாய்மொழி வழியாகவே கற்பிக்கும்படி திட்டம் செய்ய வேண்டும். கலைச் சொற்களைப் பெரும்பாலும் தமிழ்ச்சொற்களாக ஆக்கி வெளியிட வேண்டும். பயிற்று மொழியாகத் தமிழ் மொழி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன. இச்சங்கத்தின் தீர்மானங்கள் கலைச் சொல்லாக்க வரலாற்றில் மொழித் தூய்மைவாதத்திற்கான அடிக்கல்லாக அமைந்தது.

இம்மாநாட்டுத் தீர்மானத்தின்படி ஓர் உட்கழகத்தை, ‘சொல்லாக்கக் கழகம்’ எனப் பெயரிட்டு. பணிகளைத் துறை வாரியாகத் தொடங்கியது. இக்கழகம் ஏற்கெனவே வெளியிடப்பட்ட கலைச் சொற்களைத் திருத்தம் செய்வதுடன் புதிய சொற்களையும் உருவாக்கியது. இதன் முதற் கூட்டம் 29-09-1935 அன்று திருநெல்வேலியில் இலக்குமணப்பிள்ளை தலைமையில் கூடியது.

9 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் பௌதீகம், ரசாயனம், உடலியலும் நலவழியும் என்னும் துறைச் சொற்கள் ஆராயப்பட்டன. மீண்டும் 25-12-1935 முதல் 07-01-1936 வரை கூடி கணிதம், இயற்கை விஞ்ஞானம், நிலவியல், வரலாறு முதலிய துறைகளின் சொற்களை ஆராய்ந்தனர்.

இதனைச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் திருப்பனந்தாள் காசிமடத் தலைவர் சாமிநாத சாமிகளின் உதவியுடன் நூலாக (1936) வெளியிட்டது. இந்நூல் எட்டு அணா விலைக்கு விற்கப்பட்டது. மேலும் இக்கலைச்சொல் பட்டியல் நூல் கல்வி நிலையத் தலைவர், துணைத் தலைமை ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர் என 453 பல்துறை வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டுத் திருத்தி வாங்கப்பட்டன.

இச்சொற்களை மீண்டும் திருத்தம் செய்து வெளியிட, மாநாடு கூட்ட முடிவு செய்து, இவைகளை விவாதிப்பதற்கென கணிதம், விவசாயம் உட்பட பல்வேறு துறைகளுக்கு ஐந்து உட்கழகங்கள் அமைக்கப்பட்டது. பூத நூல் (physics), இயைபு நூல் (chemistry), கணிதம் (Mathematics), இயற்கை நூல் (Natural Science), உடலியலும் நலவழியும் (Physiology and Hygiene), தரை நூல் (Geography), வரலாறு (History) முதலிய துறை சார்ந்த 5.300 கலைச் சொற்கள் இப்பட்டியலில் இடம்பெற்றன.

இதில் உள்ள கலைச் சொற்களைத் திருத்திச் செம்மைப்படுத்த உதவிய அறிஞர்கள், விபுலாநந்தர், இராஜாஜி (Physics), கே.எஸ்.இராமசாமி (Maths), வைத்தியநாத சுவாமி, சீனிவாச ராகவன், இ,மு,சுப்பிரமணிய பிள்ளை, டி.எஸ். வேலாயுதம்பிள்ளை, எம்.எஸ்.சபேச ஐயர் (Botany), எஸ்.ஜி.மணவாள ராமானுசம் (zoology and Physiology), தேவநேயப் பாவாணர், டி.எஸ்.நடராசப்பிள்ளை (History, Administration and Politics etc), அ.முத்தையா பிள்ளை, டி.சொக்கலிங்கம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை. அ.கி.பரந்தாமனார், என்.சுப்பிரமணிய ஐயர் (Geography), எஸ்.சச்சிதானந்தம் பிள்ளை (phsychology photography, Music etc). இக்குழுக்களின் பணி மாநாட்டின் பின்னரும் நடைபெற்றது.

கூட்டங்கள் சில வேளைகளில் காலை 6:30 மணிக்குத் தொடங்கி இரவு10 மணி வரை தொடர்ந்தது. இது ஆர்வத்துடன் கூடிய முயற்சியாக இருந்தது.

தமிழ்ச் சங்கத்தின் கலைச் சொல்லாக்க மாநாடு ஞாயிற்றுக் கிழமை (20-09-1936) சென்னையில் நடைபெற்றது. இம் மாநாட்டை சர்.சி.பி. இராமசாமி திறந்து வைக்க சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்றார். இதற்கு இராஜாஜியின் ஒத்துழைப்பும் இருந்தது.

இதில் சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் எஸ்,வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, இலங்கையின் மொழி பெயர்ப்பாளர் கே.எஸ்.இராமசாமி ஐயர், தென்னிந்திய ஆசிரியர் சங்க எம்.எஸ்.சபேச அய்யர், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் க.ப.சந்தோஷமும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் கலைச்சொல் பணிகளுக்காக நான்கு சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டன, இவைகளால் தொகுக்கப் பெற்ற சொற்களின் நூலாக்கம் 1938இல் ‘கலைச்சொற்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இந்நூலினை அச்சிட சென்னைப் பல்கலைக்கழகம், திருவாங்கூர் பல்கலைக்கழகம் சென்னை அரசின் முதலமைச்சர் இராஜாஜி ஆகியோர் நிதி உதவி அளித்தனர்.

இது தவிர இக்கலைச் சொல்லாக்க முயற்சிக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை பொதுமக்களும், கல்வியாளர்களுமாகத் தொண்ணூற்றுக்கும் மேற்பட்டோர் நிதியுதவி வழங்கினர். சுருங்கச் சொன்னால் இக்கழகம் ஒரு பொதுமக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

இந்நூலின் (1938) முன்னுரையில் முதலமைச்சர் இராஜாஜி “தமிழில் கலைச் சொற்களனைத்தையும் எழுதவும், விளக்கவும் முடியும் என்பதைச் சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் பௌதீக சாத்திர ஆராய்ச்சிக்கு வேண்டி சொற்கள் புழக்கத்தில் இல்லாமையேயழிய வேறில்லை.

எந்தப் பாஷையும் அதன் வாயிலாகப் பொருள்களை விளக்க முயன்றால் ஒழிய நூல்களுக¢கு வேண்டிய மொழிகளும் தொடர் மொழிகளும் அதன் கண் அமைவதில்லை. பொருள்களை எடுத்துக் கொண்டு விளக்கமுயன்றால் மொழிகள் தானாகவே அமைத்து பொங்கும்.

இவ்வாறே ஆங்கிலத்திலும் பிறமேல் நாட்டு மொழிகளிலும் கலைச் சொற்கள் உண்டாகி அம்மொழிகள் வளர்ச்சியடைந்து வருகின்றன’ (கலைச்சொற்கள் 1938 முன்னுரை) என கருத்துத் தெரிவித்தார். இதில் ஒரு சிறப்பு என்னவெனில் இந்தியை கட்டாயப் பாடமாக்கிய இராஜாஜி வடசொல் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இச்சங்கக் குழுவில் தானும் ஓர் உறுப்பினராக இருந்து கலைச் சொற்களை உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.

சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் கலைச் சொல்லாக்க முயற்சிகளைத் தமிழில் நடந்த முதல் கலைச் சொல்லாக்க இயக்கம் எனலாம், இதற்கு முந்தைய முயற்சிகள் அனைத்திலும் இது போன்று அதிக உட்குழுக்களை அமைத்தல், கோட்பாட்டு அடிப்படையிலான கலைச் சொற்களை உருவாக்குதல், உருவாக்கிய கலைச் சொற்களைத் தரப் படுத்துவதற்காக வெளியிடுதல், வெளியிட்ட கலைச் சொற்களுக்கு வந்த மறுமொழிகளைத் தொகுத்தல், பின் மீண்டும் உட்கழகங்கள் மூலம் விவாதித்து சொற்களை உருவாக்குதல் முதலிய செயல்பாடுகள் இடம்பெற்றிருக்கவில்லை.

அப்போதைய சென்னை அரசாங்கம். சென்னைத் தமிழ்ச் சங்கம் தயாரித்த இக்கலைச் சொல் பட்டியலை பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

தமிழகத்தில் இம் முயற்சி நடந்த இந்த நேரத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகம் ஒரு கலைச் சொல்லகராதியை உருது மொழியில் வெளியிட்டது. 1938இல் தமிழ் அறிவியல் நூல்களுக்கு சென்னை அரசு பா¤சளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது.

1936ஆம் ஆண்டு வெளியிட்ட கலைச் சொல் பட்டியலில் விடுபட்டிருந்த கலைச் சொற்களுடன் பல புதிய கலைச் சொற்களும் 1938ஆம் ஆண்டு பட்டியலில் இடம் பெற்றன.

இப்பட்டியலை விலைக்கு வாங்கி அன்றைய சென்னை மாகாண அரசு அக்கால கட்டத்தில் தமிழ்ப் பகுதிகளில் வழங்கியது போற்றப்படக்கூடியது ஆகும். ஏனெனில் இதற்குக் காரணம் சென்னை மாகாண கல்விச் செயலர் மாஸ்டர் மேன்தன் குறிப்பாணை ஒன்றின் மூலம் உத்திரவிட்டதினால் ஆகும். இது ஒரு மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்டது.

பிறமொழிக் கலைச் சொல் ஆதரவு நிலை

1923ஆம் ஆண்டு அரசு அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவில் இடம்பெற்றிருந்த தனித் தமிழ்ப் பற்றுடையவரான பா.வே.மாணிக்க நாயக்கர் கலைச் சொற்களை உருவாக்கும் போது வடமொழிச் சொல்லை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இவர் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க கலைச் சொல்லாக்கத் திட்டத்தில் வடமொழிச் சொற்களை அகற்றுவதற்கான முயற்சிகளை வற்புறுத்தினார்.

இதனை அச்சங்கம் செயல்படுத்தியது. இச்சங்கத்தின் முயற்சியால் கலைச் சொல்லாக்கத்தில் வடமொழி ஆதிக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. நல்ல தமிழ்ச் சொற்கள் கலைச் சொற்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதே காலகட்டத்தில் இக்கருத்துக்கு மாறாக ஏ.வி.சுப்பிரமணிய அய்யர், தினமணி இதழ் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகியோர் ஆங்கிலக் கலைச் சொற்களை ஏற்றுக் கொள்வதே சரியானது என வாதிட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர்களால் கிரேக்க லத்தீன் சொற்களை ஆங்கிலேயர்கள் ஏற்றுக் கொண்டது சுட்டிக் காட்டப்பட்டது. அச்சொற்களுக்கு மாற்றுச் சொற்களை அவர்கள் உருவாக்க முயற்சிகள் எடுக்கவில்லை எனவும் அதே போல பிறமொழிச் சொற்களுக்கு இணைச் சொற்களை முதலில் தமிழில் தேடவேண்டும். இல்லையெனில் பிறமொழிச் சொற்களை அப்படியே எடுத்துக் கொள்வது சிறந்தது எனக் கூறப்பட்டது.

சொற்கள் எந்த மொழிக்கு உரியன என்று கவலைப்படத் தேவையில்லை. மக்கள் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அப்படியே எடுத்துக் கொள்வது நலம் எனவும் வற்புறுத்தப்பட்டது. இதேபோல டி.எஸ். சொக்கலிங்கம் இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு மொழியில் கலைச் சொற்கள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது வடமொழியை மனதில் கொண்டதேயாகும்.

இந்தியாவுக்கு ஒரே ஆட்சிமொழி என்ற அடிப்படையில் தமிழின் இருப்பைப் புறக்கணிக்கும் வகையில் டி.எஸ். சொக்கலிங்கம் கருத்து அமைந்துள்ளது. ஆனாலும் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் தன் நிலைப்பாட்டிலிருந்து சிறிதும் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில் 1932இல் வெளிவந்த கலைச்சொல் பட்டியலுக்கு எதிராக சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் மேற்கொண்ட முயற்சி மொழி உணர்வுக்கு முதன்மை தருவதாயிற்று.

1938ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்சி மொழியாக்கப்பட்டது. கல்விக் கொள்கைகளை சீரமைக்கும் நோக்கத்துடன் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு (1948-49) ஏ.எல்.முதலியார் கல்விக்குழு (1952-53), கோத்தாரி கல்விக்குழு (1964-66) ஆகிய குழுக்களை அரசு நியமித்தது. இக்குழுக்கள் உயர் கல்வியில் தாய்மொழி அல்லது தாய்மொழியே பயிற்சி மொழியாக அமையவேண்டியதன் தேவையை வலியுறுத்தின.

வடமொழி வெறுப்பு தூய தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு உதவியது போன்றே ஆங்கிலச் சொல் பயன்பாட்டிற்கும் காரணமாயிற்று. தமிழிலே சொல் அகப்படாதபோது வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதை விட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் கோட்பாட்டிற்கு முதன்மை கிடைத்தது. பல சொற்கள் இக்கால கட்டத்தில் ஆங்கிலமாக மாறின.

சென்னை மாகாண சங்கத்தின் வெற்றி நெடுநாள் நீடிக்கவில்லை. 1939இல் காங்கிரஸ் அரசு பதவி விலகியது. ஆளுநரின் ஆலோசனையைக் கொண்ட அரசு ஆட்சிசெய்யத் தொடங்கி 8.6.1940இல் வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரின் தலைமையில் ஒரு குழு அமைத்துக் கலைச் சொற்களைச் செம்மைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது, இக்குழு தன் அறிக்கையை

24-07-1940இல் அரசுக்கு அளித்தது. இவ்வறிக்கையின் உட்பொருள் திராவிட மொழிகளுக்குச் சமஸ்கிருத வேர்களைக் கொண்டு சொற்களை ஆக்கிக் கொள்ளலாம் என்பதே ஆகும். இப்பரிந்துரை அன்றைய தமிழர்களிடையே பெருங்கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

25-12-1940இல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஒரு பெரிய மாநாட்டைக் கூட்டியது. தி.மு.நாராயணசாமி பிள்ளை, முத்தையா செட்டியார் போன்ற பலர் இம்மாநாட்டில் பங்கேற்று அரசுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஆனால் அரசு இதைக் கண்டுகொள்ளாது 26-12-1940இல் அரசு தமிழுக்கென ஓர் துணைக் குழுவை அமர்த்தியது. அக்குழுவின் உறுப்பினர்களுள் சேலம் அ.இராமசாமிக் கவுண்டர், பேரா.கே.சுவாமிநாதன், பேரா.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இக்குழு 15-05-1943இல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. இச் சொற்கோவையில் பெரும் பகுதி சொற்களாக இருப்பதினாலும் தம்மை அழைக்காமலேயே சொற்கோவையை ஆக்கியளித்திருப்பதாலும் இக்குழு உறுப்பினர் அ.இராமசாமி கவுண்டர் இச்சொற்கோவையைத் தம்மால் ஏற்கவியலாது எனத் தெரிவித்தார்.

மீண்டும் மக்கள் அரசு ஏற்பட்ட பின்னர், தமிழறிஞர்களின் வேண்டுகோளின்படி ஐந்து துணைக்குழுவை ஏற்படுத்தி பழைய உறுப்பினர்களோடு சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் பரிந்துரைத்த எண்மர் கொண்ட குழுவை அமர்த்தியது.

மொழித்தூய்மையைப் போற்ற வேண்டுமென்ற கோட்பாடுடைய இப்புதிய உறுப்பினர்களோடு பேரா.வையாபுரிப் பிள்ளையும், பேரா.கே.சுவாமிநாதனும் ஒத்துழைக்கவில்லை.

அவர்கள் இருவரும் சேர்ந்து தனியாக ஒரு பட்டியலை அளித்தனர் (இது ‘A’ என்று அழைக்கப்பட்டது). இ.மு.சுப்பிரமணிய பிள்ளையும் ஏனைய பத்து அறிஞர்களும் கொண்ட குழு ஆக்கியளித்த பட்டியலும் அரசுக்கு அளிக்கப்பட்டது (இது ‘B’ என்று அழைக்கப்பட்டது). அரசு இவ்விரண்டு பட்டியல்களிலிருந்தும் சொற்களை எடுத்துக் கொண்டு ‘C’ என்ற மூன்றாவது பட்டியலை உருவாக்கி, பள்ளிகள் இப்பட்டியலைப் பின்பற்ற வேண்டும் என்று 27-01-1947இல் ஆணை பிறப்பித்தது.

இப்பட்டியல் தமிழன்பர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தவில்லை. எனினும் கலைக்கதிர், தமிழ்ப்பொழில், தென்மொழி, குறள்நெறி போன்ற இதழ்களாலும், பூசா.கோ.கலைக்கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்களின் சொல்லாக்க முயற்சிகளினாலும் புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன.

அதன் பிறகு அரசு தனது சொற் கோவையில் அவ்வப்போது மாற்றம் செய்து தமிழ் கலைச் சொற்களுடன் பட்டியலை வெளியிட்டது.

(சொல்லாக்கம் - இ.மறைமலை.பக்.38)

- டாக்டர் சு. நரேந்திரன்

Pin It