teacher venkateshநக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (11)

ஆசிரியர்: வெங்கடேஷ் ஆத்ரேயா

பிரிட்டனில் வளர்ந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஆளும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் இடையிலான தொடர்  போராட்டத்தின் விளைவாகவே முதலாளித்துவ சக்திகள் ஆட்சியதிகாரம் பெற்றன. 1688ஆம் ஆண்டின் ‘புகழ்பெற்ற புரட்சி’ முதல் 1840களின் பிற்பகுதியில் காப்பு வரிகள் ரத்து செய்யப்படும் வரை, இந்தப் போராட்டமானது பொருளாதார, கருத்தியல் மற்றும் அரசியல் தளங்களில் தொடர்ந்தது. உணவு தானியங்கள் இறக்குமதியைத் தடுப்பதற்கான காப்பு வரிகளை நீக்கியதே இங்கிலாந்தில் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இறுதி அடியாகும்.

நிலக்கிழாரியம் வீழ்ந்து பண்ணையடிமை முறை முடிவுக்கு வந்தது. தேவாலய நிலங்கள் அழிக்கப்பட்டன. பொது நிலங்கள் கொள்ளையிடப்பட்டன. பிரிட்டனில் நிலத்திலிருந்து மக்கள் பிரிக்கப்பட்டார்கள். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வலுவந்தமாகக் கூலித் தொழிலாளர்களாக்கப்பட்டனர்.

அதில் பெருமளவில் விவசாயிகளே இருந்தனர். பண்ணையடிமை முறையிலிருந்தும், கில்டுகளின் தளைகளிலிருந்தும் விடுதலை  பெற்ற அதே நேரத்தில் உற்பத்தியாளர்கள் அவர்களது உற்பத்திச் சாதனங்களிலிருந்து பிரிக்கப்பட்டார்கள் என்பதால் இந்நிகழ்வானது இரட்டைத் தன்மையுடையதாய் இருந்தது. ஏழைகளுக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. தொழிலாளர்களின் கூலியைக் குறைக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிற்சங்கங்கள் உருவாவதும் தடுக்கப்பட்டது.

16ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ விவசாயிகள் தோன்றினர். மார்க்ஸ், ஆபிரகாம் லிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் தென் அமெரிக்காவில் முரண்பாடுகள் குறித்தும் சமூகப் போராட்டத்தின் மூலம் அடிமை உழைப்பை நீக்குவது குறித்தும் எழுதியிருப்பார்.

(இந்தியாவில் நிலக்கிழார்களுக்கெதிராகச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் உத்திரபிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலமில்லாதவர்களுக்கு  நிலம் அளிக்கப்படவில்லை.)

ஆதி மூலதனத் திரட்டல்:

முதலாளித்துவம் எப்படி உருவானது? சமூகமானது உற்பத்திச் சாதனங்களையும் பணத்தையும் கொண்ட சிறிய எண்ணிக்கையிலான நபர்களாகவும், பெரும் எண்ணிக்கையில் தம் உழைப்புச் சக்தியை விற்பதற்கு நிர்பந்திக்கப்பட்ட உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிரிந்திருக்க வேண்டியது முதலாளித்துவ உற்பத்திக்கான முன்தேவையாக இருந்தது.

கூலித் தொழிலாளியை ஒரு முனையிலும், மூலதனத்தை மறு முனையிலும் பிரித்த இந்தச் சமூகப் பிரிவினையின் நிகழ்வுகளே ஆதி அல்லது முதன்மை மூலதனத் திரட்டலின் பகுதிகளாயின. கூலி உழைப்பும் மூலதனமும் எப்படி  உருவானது. உழைப்பாளர்களிடமிருந்து (முதன்மை உற்பத்தியாளரிடமிருந்து) உற்பத்திச் சாதனங்களைப் பறித்த நிகழ்வுகள்தான் முதலாளித்துவம் உருவாக வழி ஏற்படுத்தியது. உற்பத்திச் சாதனத்தைப் பறிகொடுத்த உற்பத்தியாளர் கூலித் தொழிலாளியானார்.

பிரிட்டனில் முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆரம்ப நிலையில் உற்பத்தி அமைப்புகளிலும், உற்பத்தி உறவுகளிலும் முதலாளித்துவ ஆளுகை என்பது பெயரளவிலே இருந்தது. அதே நிலையை இப்பொழுதும் காணப்படும் குடிசைத் தொழில்களிலும், தீப்பெட்டி தயாரிக்கும் ஆலைகளிலும் காணலாம். அதில் உழைப்பு நிகழ்முறையானது நேரடியாக முதலாளியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. முதலாளி மூலப்பொருட்களைக் கொடுத்து வேலைசெய்யச் சொல்வார்.

தொழிலாளர்கள் வீட்டிலே குடும்ப உறுப்பினர்களுடன் அந்த வேலையை செய்வர். பிறகு சரக்குகளை முதலாளி பெற்றுக் கொள்வார். அதன் பின்னர்தான் தொழிலாளர்களைப் பொதுவாக ஒரே இடத்தில்  நேரடிக் கண்கானிப்பின் கீழ் வேலை செய்யும் முறை ஏற்படுத்தப்பட்டது. அதுவே பின்னர் பட்டறைகளாக வளர்ச்சி பெற்று, பின், நவீனத் தொழிற்சாலைகளாகவும் வளர்ச்சி பெற்றது. ஆலைகளில்தான் கூட்டுப்பணி மூலமும் உழைப்புப் பிரிவினை மூலமும் உற்பத்திமுறை வளர்ச்சி பெற்றது.

முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது உபரி மதிப்பு உற்பத்தியே ஆகும். உபரி உழைப்புக்கும், அவசியமான உழைப்புக்கும் இடையிலான விகிதத்தை மார்க்ஸ் உபரி மதிப்பு வீதம் என்று குறிப்பிடுகிறார். அவசியமான உழைப்பு நேரம் என்பது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் சமமான உழைப்பு நேரம் ஆகும். இந்த உபரி மதிப்பு வீதமானது எந்த அளவிற்கு முதலாளி தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுகிறார் என்பதை அளவிடும் உழைப்புச் சுரண்டலின் அளவுகோலாக உள்ளது.

உபரி மதிப்பு வீதம் = உபரி உழைப்பு /அவசிய உழைப்பு

                        = உபரி மதிப்பு / உழைப்புச் சக்தியின் மதிப்பு

உபரி மதிப்பு வீதம் = உபரி மதிப்பு / மாறுமூலதனம்.

மூலதனமானது மாறா மூலதனம்(c), மாறு மூலதனம்(v) ஆகிய இரு கூறுகளைக் கொண்டுள்ளது.

மாறா மூலதனம் :

உற்பத்திச் சாதனங்களான கருவிகள் எந்திரங்கள் ஆகியவை உற்பத்தியில் ஈடுபடும் போது அவற்றின் மதிப்பு பகுதி பகுதியாக தான் சரக்குகளுக்கு மாற்றப்படுகிறது என்பதை பார்த்தோம், இத்தகைய உற்பத்தி சாதனங்களுக்கு ஒரு பொதுவான பண்பு உள்ளது.அது என்னவென்றால் அவற்றின் மதிப்பானது அவை உற்பத்தி செய்யப்படும் போது நிர்ணயிக்கப்படுகிறது.அவை உற்பத்தி சாதனங்களாக உழைப்பு நிகழ்முறையில் ஈடுபடுத்தப்படும் போது அவற்றின் மதிப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை.ஆகையால் இத்தகைய உற்பத்தி சாதனங்களை மார்க்ஸ் நிலை மூலதனம் என பெயரிட்டார்.

மாறுமூலதனம்:

மூலதனத்தின் மற்றொரு பகுதியான உழைப்புச் சக்தியானது உற்பத்தி நிகழ்முறையில் அதன் மதிப்பை மறுவுற்பத்தி செய்வதுடன் கூடுதலாக உபரி மதிப்பையும் (surplus-value - s)  உற்பத்தி செய்கிறது. அதுவே மூலதனத்தின் மதிப்பில் மாற்றம் ஏற்படக் காரணமாகிறது. ஆகவே மார்க்ஸ் மூலதனத்தின் இப்பகுதியை மாறும் மூலதனம் என்று குறிப்பிட்டார். ஒரு சரக்கில் பொதிந்துள்ள மாறா மூலதனத்தின் (constant capital) மதிப்பை ‘c’ என்றும், அதிலுள்ள மாறும் மூலதனத்தின் (variable capital) மதிப்பை ‘v’ என்றும் குறிப்பிட்டால், ஒரு வேலை நாளின் முடிவில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பை c+v+s எனக் குறிப்பிடலாம். இதில் s என்பது உபரி மதிப்பை அல்லது உழைப்புச்சக்தியின் மதிப்புக்கு சமமான உழைப்பு நேரத்தை விடக் கூடுதலாக முதலாளிக்காக உழைத்த வேலை நேரத்தைக் குறிப்பிடுகிறது.

உபரி மதிப்பானது இருமுறைகளில் அறுதி உபரி மதிப்பாகவும், ஒப்பீட்டு உபரி மதிப்பாகவும் பெருக்கப்படுகிறது.

அறுதி உபரி மதிப்பு:

வேலை நேரத்தை (உழைப்பு நேரத்தை) நீட்டிப்பதன் மூலம் உபரிமதிப்பை அதிகரிக்கச் செய்வதை அறுதி உபரி மதிப்பாக்கம் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையால் உழைப்பு நேரமானது வரைமுறையில்லாமல் கடுமையாக நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தொழிலாளர்களில் பெருமளவு விவசாயிகளும், கைவினைஞர்களுமே இருந்தனர், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக அமைப்பாக்கம் பெறவில்லை, அப்போது உழைக்கும் வர்க்கத்தின் காப்பரண்களான தொழிற்சங்கங்களும் வளர்ச்சி பெறாத நிலையில் இருந்தன.

வேலை நேரத்தை நீட்டித்து உழைப்புச் சுரண்டல் கடுமையாக்கப்பட்டதன் விளைவாகவே உழைக்கும் வர்க்கத்திற்கான போராட்ட இயக்கங்கள் உருவாகின.வேலை நேரத்தை நீட்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வர்க்கப் போராட்டங்கள் வலுப்பெற்றன. சார்டிஸ்டு இயக்கத்தின் போராட்டங்கள், கிழக்கு ரயில்வே ஊழியர்களின் மறியல் போராட்டங்கள் ஆகியவற்றை இத்தகைய வர்க்கப் போராட்டங்களுக்கான உதாரணங்களாகும்.

வர்க்கப் போராட்டத்தின் இந்த வரலாற்று வளர்ச்சி நிலையே இம்முறையில் உபரி மதிப்பை பெருக்குவதிலிருந்து முதலாளிகளை தடுத்தது.இன்னும் கூட இம்முறையில் உலகின் பல்வேறு இடங்களிலும், நம் நாட்டின் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் அறுதி உபரி மதிப்பாக்க சுரண்டல் தொடர்கிறது.முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு தொழிலாளர் இயக்கங்களும் வளர்ச்சி பெற்றதால் வேலை  நேரத்தை நீட்டித்து உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்துவது கடினமாக்கப்பட்டது.

ஒப்பீட்டு உபரி மதிப்பாக்கம்:

அறுதி உபரி மதிப்பாக்கத்திற்கு எதிரான தடைகளின் காரணமாக முதலாளித்துவம் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் உற்பத்தி முறையை மேம்படச் செய்து வேறு வடிவங்களில் உழைப்புச் சுரண்டலை மும்முரமாக்கி உபரிமதிப்பை அதிகமாக்கியது. வேலை நேரத்தை அவசிய உழைப்பு மற்றும் உபரி உழைப்பாக பங்கிடுவதில் மாற்றத்தை ஏற்படுத்தி உபரி மதிப்பாக்கத்தை அதிகப்படுத்தியது.

உழைப்புச் சக்தியின் மதிப்பை குறைக்காமல் அளித்தவாறே உபரி மதிப்பை  அதிகப்படுத்தவேண்டுமானால் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக தொழிலாளர்கள் தினசரி நுகர்வுக்குத் தேவையான பொருட்கள், சேவைகள், மற்றும் அதற்கான உற்பத்தி சாதனங்கள் இவற்றை உற்பத்திசெய்யும் துறைகளின்  உற்பத்தித் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பது மிகவும் அவசியம். ஏனென்றால் அவசியமான உழைப்பு நேரத்தை (உழைப்புச்சக்தியின் மறுவுற்பத்திக்கான உழைப்பு நேரத்தை) குறைத்து உபரி உழைப்பு நேரத்தை  நீட்டிப்பதன் மூலமே ஒப்பீட்டு உபரி மதிப்பை அதிகரிக்கமுடியும்.வேறுவிதமாகக் கூறவேண்டுமெனில் உழைப்புச் சக்தியை மலிவாக்க வேண்டும்.

உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்திக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்குவகிக்காத துறைகளில் உற்பத்தித் திறன் அதிகரிக்குமானால், அது வேலை நேரத்தை அவசிய உழைப்பு நேரம், உபரி உழைப்பு நேரம் எனப் பங்கிடுவதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தனிப்பட்ட முறையில் ஒரு முதலாளி அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு, உழைப்புசக்தியை மலிவாக்குதல் பற்றியெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்.

முதலாளித்துவத்தின் போட்டா போட்டி சூழலே  இன்னும் மேம்பட்ட உற்பத்தி முறையை கண்டறிந்து கடைபிடிக்க அவரை நிர்பந்திக்கும். அவரது ஒரே நோக்கம் தன் உற்பத்திக்காகும் செலவை  தன் போட்டியாளரை காட்டிலும் குறைக்கவேண்டும் என்பதே.அவர் உழைப்புச் சக்திக்குரிய மதிப்பை அளித்துவிடுகிறார் எனக் கருதுவோமானால் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதன் மூலமே அவரால் உபரிமதிப்பாக்கத்தை அதிகப்படுத்த முடியும்.

இதை புதிய தொழில் நுட்பத்தின் மூலமும், உழைப்புப் பிரிவினையை மேம்படுத்துவதன் மூலம் செய்ய முடியும்.மொத்தத்தில் ஒரு வேலை நாளில் முன்னை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் சரக்குகளை உற்பத்தி செய்ய முடிந்திருக்க வேண்டும்.போட்டியானது மற்ற முதலாளிகளையும் இத்தகைய மலிவான மேம்பட்ட உற்பத்திமுறையை கையாள நிர்பந்திக்கும். இதனால் உழைப்புச் சக்தி மலிவாக்கப்படும். அவசியமான வேலை நேரம் குறையுமாதலால், அதே வேலை நேரத்தில் உபரி உழைப்புக்கும் அவசிய உழைப்புக்கும் இடையிலான விகிதம் அதிகமாகும், இவ்வாறே ஒப்பீட்டு உபரி மதிப்பு பெறப்படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தியின் இயக்குசக்தியாக மதிப்பும் உபரி மதிப்பும் உள்ளது.இவற்றின் உற்பத்தியிலுள்ள வெளிப்படையான முரண்பாடானது ஒப்பீட்டு உபரி மதிப்பாக்கத்தால் சரி செய்யப்படுகிறது.ஒப்பீட்டு உபரிமதிப்பாக்கத்தினால் சரக்குகளின் மதிப்பு குறைகிறது. ஒவ்வொரு முதலாளியும், அவர் உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்திக்கான பொருள்கள் சேவைகளை உற்பத்தி செய்யாதவராகவே இருந்தாலும், உற்பத்திச் செலவைக் குறைத்து உற்பத்தித்திறனை அதிகரித்து ஒப்பீட்டு உபரி மதிப்பை அதிகரிக்கவே விரும்புவார்.

மூலதனத் திரட்டல்

முதலாளித்துவ சமூகத்தில் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் சமூக உற்பத்தியே மறுவுற்பத்தி எனப்படுகிறது.முதலாளித்துவ மறுவுற்பத்தி என்பது அதே அளவிலான எளிய உற்பத்தியாகவும் இருக்கலாம், அல்லது விரிவாக்கப்பட்ட உற்பத்தியாகவும் இருக்கலாம்.எளிய மறுவுற்பத்தியில் உபரி மதிப்பு முழுவதும் திறனற்ற முறையில் நுகரப்படுகிறது சமூகத்தில் அதே அளவிலே உற்பத்தியை தொடரத் தேவையான உற்பத்தி சாதனங்களையே கொண்டிருக்கிறது.

சமூக அளவில் உருவாக்கப்பட்ட உபரி மதிப்பில் ஒரு பகுதியானது மூலதனமாக மாற்றப்பட்டு மூலதனம் திரட்டப்படுகிறது. மூலதனத் திரட்சியின் மூலம்  விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி செய்யப்படுகிறது.

முதலாளித்துவ பொருளாதாரவியலாளர்கள் முதலாளிகள் தன் உடனடி நுகர்வை தள்ளிப்போட்டு சேமித்த செல்வமே மூலதனம் என்கின்றனர்.அவரின் இத்தகைய துறவிற்கான பரிசாக லாபம் கிடைக்கிறது என்கிறார்கள்.ஆனால் நாம் நடைமுறையில் பார்ப்பது அதற்கு முற்றிலும் புறம்பாக உள்ளது. முதலாளி வர்க்கத்தை சேர்ந்தவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்து கொண்டே செல்கிறது.உழைக்கும் மக்கள் மிகவும் அடிப்படைத் தேவைகளை கூட துறக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

முதலாளி உபரி மதிப்பு முழுவதையுமே நுகராமல் அதில் ஒரு பகுதியை நுகர்வுக்கும் மீதமுள்ள உபரி மதிப்பை மேலும் அதிக உபரி மதிப்பை பெறும் விதமாக மூலதனமாக்குகிறார்.உழைப்புச் சுரண்டலின் அளவும், உழைப்பின் உற்பத்தித் திறனுமே மூலதனத் திரட்சியின் அளவை நிர்ணயிக்கிறது. பழைய மற்றும் நிகழ்கால உபரிமதிப்புகளே மொத்தத்தில் சமூக மூலதனமானமாகிறது. கூட்டு பங்குதாரர் நிறுவனங்களின் மூலதனத் திரட்சியில் முதலாளித்துவ அமைப்புக்குள்ளே சமூகமயமாக்கம் நிகழ்வதை காணலாம். பிறர் உழைப்பில் செல்வத்தை பெருக்குவதே முதலாளித்துவத்தின் நியதியாக உள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி என்பது சரக்குகளை உபரி மதிப்புகளை மட்டும் மறுவுற்பத்தி செய்வதில்லை, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளையும் மறுவுற்பத்தி செய்கிறது, இது முற்றிலும் வரலாற்று அடிப்படையிலான சமூக காரணிகளால் ஏற்பட்டதே தவிர இயற்கையாக பெறப்பட்டவையல்ல.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைய, வளர்ச்சியடைய  உபரி மதிப்பும் அதிகமாகிறது, உழைப்பின் சுரண்டல் வீதமும் அதிகமாகிறது. உழைப்புச் சுரண்டலை அதிகமாக்குவது, கூலி உயர்வுடன் முரண்பாடுடையதல்ல. உழைப்புச் சுரண்டலை மும்முரமாக்குவதன் மூலம், கூலி உயர்வோடு நிகர லாபத்தையும் அதிகரிக்க முடியும்.

லாப வீதம் = உபரிமதிப்பு(s) / மாறாமூலதனம் ( c)+ மாறுமூலதனம் (v)

லாபவீதம் = s/c+v இச்சமன்பாட்டை v (மாறுமூலதனத்தால்) வகுத்தால் பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்

லாபவீதம் = s/v/c/v+1

இதில் s/v உழைப்புச் சுரண்டல் வீதத்தைக் குறிக்கிறது. c/v மூலதனத்தின் அங்கக மதிப்பைக் குறிக்கிறது ஆகவே இவற்றை பதிலீடு செய்வதன் மூலம் பின்வரும் சமன்பாட்டைப் பெறலாம்.

லாபவீதம் = உழைப்புக் சுரண்டல் வீதம்/அங்கக மதிப்பு+1 

இச்சமன்பாட்டில் உழைப்புச்சுரண்டல் வீதமும் மூலதனத்தின் அங்கக மதிப்பும் லாப வீதத்துடன் கொண்டுள்ள தொடர்பைக் காணமுடியும். மாறா மூலதனத்திற்கும் மாறு மூலதனத்திற்கும் உள்ள விகிதத்தை மூலதனத்தின் அங்கக மதிப்பு என மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மூலதனத்தின் அங்கக மதிப்பு = மாறா மூலதனம் / மாறு மூலதனம்

மேல்கண்ட லாபவீதத்திற்கான சமன்பாட்டில் லாபவீதமானது உழைப்புச் சுரண்டல் வீதத்திற்கு நேர் விகிதத்திலும், மூலதனத்தின் அங்கக மதிப்புடன் எதிர்விகிதத்திலும் இருப்பதைக் காணலாம். உழைப்புச் சுரண்டல் வீதத்தை அதிகரிக்க, அதிகரிக்க லாபவீதமும் அதிகரிக்கும் அதே நேரத்தில் மூலதனத்தின் அங்கக மதிப்பை அதிகரிக்கும் போது லாபவீதமானது குறையும்.

உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெற்று மூலதனத் திரட்சி அதிகரிக்கும் போது மூலதனத்தின் மொத்த மதிப்பில் மாறாமூலதனத்தின் பங்கானது மாறுமூலதனத்தை காட்டிலும் ஒப்பீட்டளவில் அதிகரிப்பதால் லாபவீதம் குறையும் இதையே  லாபவீதம் வீழ்ந்து கொண்டே போகும் போக்கு (TRPF) என மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

முதலாளித்துவ அமைப்புமுறையில் உற்பத்தித் திறன் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டமும், முதலாளிகளுக்கிடையே காணப்படும் போட்டியும் முக்கியமான தூண்டுகோல்களாக அமைகின்றன. வளங்களை அபகரிப்பதும், உற்பத்தி செயல்முறையை மிகப் பெருமளவில் நிகழ்த்துவது இரண்டுமே முதலாளித்துவத்தின் பண்புகளாக உள்ளன. சமூக சொத்து, மூலதனத் திரட்சியின் அளவும் வளரும் போதே அதனுடன் பாட்டாளி வர்க்கத்தின் அளவும், உற்பத்தித் திறனும் வளர்கிறது.

முதலாளித்துவ அமைப்புக்குள் நல்ல முதலாளியாக ஒருவர் செயல்பட முடியாது போட்டி அவரை முதலாளி நிலையிலிருந்து வெளியேற்றிவிடும்.மூலதனத்தின் மையப்படுத்தல் நிகழ்முறையால் பெருமளவிலான மூலதனமானது  சிறு எண்ணிக்கையில் உள்ள நபர்களின் வசமாகிறது.

தொழிலாளர்கள் தொழில் நுட்ப வளார்ச்சியால் பதிலீடு செய்யப்படுகிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி தான் தொழிலாளர்களின் வேலையிழப்புக்கு காரணமாகிறதா, என்று பார்த்தால் இல்லை முதலாளித்துவ அமைப்பே தொழிலாளர்களின் வேலையிழப்பிற்குக் காரணமாகிறது.உடலுழைப்பிற்கும் மூளையுழைப்பிற்கும் இடையிலான பிரிவினையையும் முதலாளித்துவம் அதிகப்படுத்துகிறது.

முதலாளிக்கு மனித உரிமை பற்றியோ, காலநிலை நெருக்கடி பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. அதனால் தான் அபாயகரமான சுரங்கத் தொழில்களில் பாதுகாப்பு வசதிகளின்றி தொழிலாளிகளை ஈடுபடுத்துகிறார்கள். முதலாளித்துவத்தால் காலநிலை நெருக்கடியை சரி செய்ய இயலாது. முதலாளித்துவம் பல்வேறு முறைகளில் தொழிலாளர்களை திறனற்றவர்களாக்கி அவர்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைக்கிறது. சேமப்பட்டாளத்தை அதிகரிக்கிறது.

வேலையில்லாத சேமப் பட்டாளத்தின் அளவை பன்மடங்கு பெருக்குவதே முதலாளித்துவ திரட்டலின் பொதுவிதியாக உள்ளது. ஒரு புலத்தில் மூலதனம் குவிக்கப்படும் போது மறு புலத்தில் துயரமும், அடிமைத்தனமும், அறிவின்மையும், வளர்கிறது. மூலதனம் தடையற்று இயங்குவதற்கான உரிமை கொண்டுள்ளது.ஆனால் அந்த உரிமை தொழிலாளர்களுக்கு இல்லை.

முதலாளித்துவம் எவ்வாறு அதன்  ஆரம்ப போட்டி வடிவத்திலிருந்து ஏகபோக முதலாளித்துவமாக வளர்கிறது என்பதை லெனின் ஆய்வு செய்தார். ஏகபோக முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியம் என்றும், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்றும் லெனின் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையான  பண்புகளாக பின்வருபவற்றை குறிப்பிடுகிறார். 1. மூலதனத் திரட்சியும், உற்பத்தியின் விரிவாக்கமும் உயர் நிலைக்கு வளர்ந்து பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஏகபோகங்களை உருவாகின்றன 2. வங்கி மூலதனம் தொழிலக மூலதனத்துடன் இணைந்து நிதி மூலதனமாக உருவெடுக்கிறது 3.பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது போல் மூலதனம் ஏற்றுமதி செய்யப்படுவதும் முக்கியத்துவத்தை பெறுகிறது. 4. உலகத்தைப் பங்கிடும் சர்வதேச ஏகபோகங்கள் உருவாகின்றன. 5.முதலாளித்துவ ஆற்றல்களால் உலகமானது மறுபங்கீடு செய்யப்படுகிறது. லெனின் பகுத்தறிந்த முதலாளித்துவமானது 1870-1914 இடைப்பட்ட காலகட்டத்தை சேர்ந்தது.

லெனின் காலத்தில் இருந்த நிதி மூலதனமானது தேச எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தது.  அதற்கு பிறகு  தான் உலக அளவில் நிதிச் சந்தைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. தேச எல்லைகளைத் தாண்டி வளர்ச்சி பெற்ற புதிய வடிவிலான சர்வதேச நிதி மூலதனம் உருவெடுத்தது. மாபெரும் நாடுகடந்த ஏகபோக ஆற்றல்கள் உருவானது - பல நாடுகளில் உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் ஈடுபடும் முதலாளித்துவ நிறுவனங்கள்- சமகால முதலாளித்துவத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும். 1945க்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் எக்கச்சக்கமாக லாபத்தை குவித்தன.

முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததிலிருந்தே அரசு அதிகாரத்தை விரிவாகப் பயன்படுத்தி வருகிறது, அதன் மூலம் மலிவான நிதிக்கடன் பெறுதல், குறைந்த வரிவிதிப்பு என பல்வேறு விதத்தில் அதிக லாபத்தை நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், தொழிலாளர் வர்க்கத்தை கருத்தியல் தளத்தில் வீழ்த்துவதற்கும், அவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது.

1945-70க்கும் இடைபட்ட பகுதியில் ஆற்றல் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட்டது. சக்திவாய்ந்த சோசலிச சமூகம் உருவானது. உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சோசலிச சமூகத்திலுள்ளவராக இருந்தனர்.தேசிய விடுதலை இயக்கங்களின் வெற்றியின் மூலம் காலனியாதிக்கம் முறியடிக்கப்பட்டது.அரசின் பங்கு ஓங்கியது.

1974-75இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வளர்ச்சி குறைந்து முதலாளித்துவப் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்த பிறகு   நவீன காலனியாதிக்க வடிவில் ஏகாதிபத்தியம் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. சமூக ஜனநாயகவாதிகள் வலதுசாரிகளிடம் அடிபணிந்தனர். முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும், ஏகபோக ஆற்றல்களுக்கிடையே மூலப்பொருட்களையும் சந்தைகளையும் அடைவதற்கான போட்டியும் தீவிரமாகிள்ளன.

பிரச்சனைகள் உருவாகும் சமூகத்தில்தான் தீர்வுகளும் பிறக்கின்றன. உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்குவதே முதலாளித்துவத்தின் பிரச்சனைகளுக்கான தீர்வாகும். அந்த வரலாற்றுப் பணியை நிறைவேற்றும் சமூக முகவரே உழைக்கும் வர்க்கம்.

(தொடரும்)

- சமந்தா