இந்த வாழ்வு சக மனிதர்களால் ஆனது. மானுடத்தின் கவசம் நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளாலும்... நட்புகளாலுமே பலமாகிறது. இலக்கியம் மானுடத்தின் நேர்த்தி. மானுடம் இலக்கியத்தையும் சேர்த்தி.

கொரோனா காலகட்டம். கட்டுப்பாடுகள், பயம், சமூக இடைவெளி. எல்லாம் தாண்டி மனம் நெருங்கி உணர்ந்து கொண்ட அதி அற்புதமான தருணங்களாகவே 11.04.2021 ஞாயிறு ஆசீர்வதிக்கப்பட்டது.

அரங்கினுள் நுழைகையில்.... முன்னாலேயே வைத்திருந்த முக கவசமும்... சானிடைசரும்.... வருவோரை நம்பிக்கையோடு அமர்ந்துக் கொள்ள உறுதி செய்தது. உறுதி கொண்ட மனமெல்லாம்தான் உள்ளபடி வந்திருந்தது.

"தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" நிகழ்த்திய "கவிஜி படைப்புலகம்" நண்பர்களாலும்... உறவுகளாலும் ஜொலித்தது. உள்ளம் கள்வெறி கொண்ட போதெல்லாம் கண்ணீர் கழுத்து வரை ததும்பி நின்றது.

குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடித்தோம். திட்டமிட்ட கரங்களின் வழியே இலக்கியம் தன்னை செவ்வனே நிகழ்த்திக் கொண்டது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். காதலாரா... அமர்... விவே... சேகுவேரா சுகன்... கோபி சேகுவேரா... துரை... மழை... பிரவீ... அசோக்... தோளோடு தோள் நின்ற நண்பன் கமல் என்று இவர்கள் தூண்களாய் நின்று தூள் கிளப்பியது... இளைஞர்களின் வலிமையை முன்னிறுத்துகிறது.

நெருங்கிய நண்பர்கள்... ஒவ்வொருவராக வர ஆரம்பிக்கையில்... வாழ்வின் நிதர்சனம் அதுவென அறை கூடி அறை கூவல் விடுத்தது. அன்பின் சுவடுகள் மெல்ல மெல்ல பூக்க ஆரம்பித்தன.

ஒவ்வொருவரின் இருத்தலிலும் என் இருப்பை நான் பரிசோதித்துக் கொண்டேன். நானே நினைப்பது போல நான் கோபக்காரன் கிடையாதுதான் போல. அன்பில்லாதவனுக்கு இத்தனை கூட்டம் எப்படி கூடும். நிஜத்தின் அருகே நிற்கும் அறத்தின் வழியே நடைபோடும் எல்லாருமே வந்திருந்தார்கள்.

ஒவ்வொரு முகத்திலும் முகக் கவசம் இருந்ததே தவிர முகமூடி இல்லை.

ஒரு விழாவில் எல்லா அற்புதங்களும் நிகழுமா என்று நம்ப முடியவில்லை. ஒவ்வொரு மணித்துளியும் அற்புதத்தின் சிறகில் தான் கவிஜியின் படைப்புலகம் சுற்றியது. சுழன்று தீரவில்லை எனக்கு.

ரோஸியைப் பற்றி "காமு" சார் பேசுகையில் துக்கம் தொண்டை அடைத்தது. என் உறவுகளின் கண்களில் கண்ணீர் என்னை உதிர்த்தது. கண்கள் கலங்கிக் கொண்டே இருந்ததாக தம்பி சொன்னான். அண்ணி அழுது விட்டதாக அழுந்த சொன்னான். ஆனந்தம் கண்ணீரில் நனைகையில் ஆழ்மனம் அமைதி கொள்கிறது.

"என்ன மாமா இவரு... ரகுவரன் மாதிரியே பாக்கறாரு... செமயா பேசறாரு மாமா" என்று பிரவீ சொன்னது... தோழர் "ஜான் பூபதி" பற்றி. வில்லன் சாயலிலும் இலக்கியம் இருக்கும். மிக அழகிய வில்லன் ஜான் பூபதி. வில்லங்கமாக ஆரம்பித்து... வெள்ளந்தியாக சிரிக்க வைத்து... வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்து... கொடுத்த நேரத்தில்... குரலோவியம் செய்து விட்ட தோழரை இன்னமும் வியந்துக் கொண்டிருக்கிறேன்.

தலைவர் "செல்லம் ரகு" சார்... எப்போதுமே செல்லமானவர். என்ன ஒரு எனெர்ஜிட்டிக்கான மனிதர். எது எடுத்தாலும் பாசிட்டிவ் தான். இயல்பில் நீந்தும் இன்னொரு நிலா அவர். அவர் சுற்றிலும் பவர் ஒட்டிடும்.

முதல் பேச்சென்று சொன்னால் மூச்சு வாங்கும் மேடையும். வந்து நின்று பேசினானா.... வந்ததும் நின்றும் பேசினானா... வர வர பேசினானா... கனக்கச்சிதமாக வரவேற்புரையை போகிற போக்கில் "நாங்கெல்லாம் வேறடா..." என்று யானை வரும் ஓசையை ஓங்கி ஒலித்து சென்ற தம்பி "காதலாரா"... விதைக்குள் அடைப்பட்ட ஆலமரம். இனி சீக்கிரம் முளைத்து விடுவான்.

சிரித்துக் கொண்டே பேசி விட சிலரால் தான் முடியும். அப்படிச் சிரித்துக் கொண்டே பேசினாலும் சிலிர்க்க வைக்க அதிலும் சிலரால் தான் முடியும். அதிலும் சிலரின் சிரிப்பில் தான் ஜீவன் இருக்கும். "க்றிஸ்டிக்கா" சிரிப்பில் ஜீவன் கண்டேன். அதில் நித்திய ஒளி. நீண்ட நெடு உறவின் பாதையெங்கும் புன்னகை பூக்கள் தான்.

அக்காவின் சொற்களில் நானும் கூட பூக்களானேன். உடைத்து போட்ட வானவில் தான் கவிஜி... ஒவ்வொரு துண்டிலும் கவிதை இருக்கும் என்ற க்றிஸ்டிக்காவை வியந்து பார்க்கிறேன். அந்த உடைத்து போட்ட வானவில் துண்டுகளை எடுத்து வீசினால் கவிஜி ஓவியம் கிடைக்கும் என்ற தோழர் பூபதியின் பேச்சில் பூச்சு இல்லை. தமிழ் கோலோச்சு.

நேரம் கூட கூட கூட்டமும் கூட ஆரம்பித்தது.

10.30- க்கு 30 பேர்கள் மட்டுமே இருந்த அரங்கில்... ஒரு கட்டத்துக்கு மேல் 100 பேரை நெருங்கி இருந்தது விழா. ( அந்த ஹால் 150 பேர் அமரும் கொள்ளளவு கொண்டது...) முக கவசத்தின் வழியே இடைவெளியில் தான் இன்னிசை சுவாசம். ஆக... சீன பூச்சிக்கு சீல் தான். பயம் கொள்ளலாகாத எழுத்து கொண்டாட்டம் தான்... அந்த மூன்று மணி நேரமும்.

என் ஆசான் சேனாவரையன் சார் ஒரு அப்பாவைப் போல பேசினார். சில இடங்களில் அப்பாவாகவே பேசினார். அத்தனை ஆனந்தம். என்றோ அவர் காட்டிய வழித்தடத்தில் இந்த மரம் கிளை விட தொடங்கி இருக்கிறது. இந்த கிளையில் பனித்துளி உருளும் நுட்பத்துக்கு அவர் தந்த தமிழும் உயிர் சக்தி.

காமு சார் வழக்கம் போல வார்த்தைகளில் வண்ணங்கள் சேர்ந்தார். வண்ணங்களில் கொஞ்சம் கருப்பு வெள்ளை அவரின் சிறப்பம்சம். நல்லவை கண்டு சிலாகித்தல் என்ற பதத்துக்கு "காமு" என்றொரு இன்னொரு பொருளும் உண்டு. பெரிய மனிதர், மூத்த கவிஞர், ஆசான். சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று முன்னமே பேசினார். முகம் குளிர்ந்தது என் குல்லா வனமும்.

நிகழ்த்துக்கலைக்கு சொந்தக்காரர். நின்றாடும் நண்பர் "பூபாலன்" அவையில் இருந்தாலே... ஓர் அரூப நல் அதிர்வு நம்மை சுற்றும். மெல்லிய கோட்டில்... மேக மெத்தையென வார்த்தைகளுக்கு வலிக்காமல் வாக்கியம் செய்வார் செய்தார். இவர் பேசி தீருகையில்... சுவாசம் கூடும் இலக்கியம். தரமான தயாரிப்புகளோடு தான் மேடை ஏறுவார். அதுதான் மெகா ஊர்வலம் வாசகர்களுக்கும்.

நிகழ்வை நடத்திக் கொண்டிருப்பவர்... "விசாகன் சார்". இப்படி ஒரு எளிமையான மனிதனை நான் இத்தனை அருகே இதுவரை கண்டதில்லை. போகிறப் போக்கில் உண்டு உடுத்தி... கேமராவும்... கையுமாக மிக இயல்பாக நின்று விடுகிறார். சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கிறார்.

மேடைக்கென்று இதுவரை வைத்திருந்த ஜோடனை எல்லாம் தூக்கி போட்டு எல்லாரும் சமம் என்கிறார். எழுதுபவன் மேலே.. வாசகன் கீழே... என்பதெல்லாம் வேண்டாம். எழுதுபவனும் வாசகனும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடி அதிலிருந்து இந்த சமூக மேம்பாட்டுக்கான வழிகளை கட்டமைக்கலாம் என்கிறார்.

அலட்டல் இல்லாத... எந்த பதட்டமும் இல்லாத... மிக இலகுவாக ஒரு தெளிந்த நீரோடையை போல இவ்விழா... அமைய விசாகன் சாரே விதி செய்தார். மதி நிறைந்த விதியில் குற்றம் சாட்டும் கோடுகள் இல்லவே இல்லை.

கோடை அருவிகள் இரண்டென.... விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யாவும் கவுசல்யாவும் சிறுமிகள்... ஆனால் ஜுவாலைகள். சுடர் விடும் வெம்மை சுலபத்தில் அவர்களை சுற்றுகிறது.

நிகழ்வில் எங்குமே தொய்வில்லை. இறுதி வரை கட்டுக்கோப்பாக நிகழ்வு நடந்தது. மனம் நிறைந்த மனிதர்களை முகம் நிறைந்து கண்டேன். தேநீரும் பிஸ்கட்டும்... 12 மணியை பக்குவப் படுத்தியது.

ஒரு கோடி எழுத்துக்கள் கூடி புத்தகமாகிறது. ஒரு கோடி புத்தகம் கூடி கவிஜி என்ற நூலகம் ஆக வேண்டும் என்று தம்பி கண்ணா சொன்னதெல்லாம்... சக மனிதனின் அன்பின் ஆழத்தின் வெளிப்பாடு தான்.

சேனாவரையன் சார் கூட... இது நண்பர்களால் நிகழ்ந்த விழா. அவர்களே உங்களின் பெரும்பலம் என்றார். தோழர் பூபதி... ஆண்டன் செக்காவோடு ஒப்பிட்டதெல்லாம்... மெய்சிலிர்க்க வாய்த்த தருணங்கள்.

பொறுப்பு கூடி... மனம் நிறைந்து... சக மனிதர்களின் மீதான ஆச்சரியங்கள் தான் எனக்குள். இந்த விழா எப்போதோ நடந்திருக்க வேண்டும்... இப்போதாவது நடந்ததே என்று தன் ஆதங்கத்தை பதிவு செய்த நண்பர் சந்தோஷ் அவர்களின் வருகை பேருவகை.

தனி மனித பாராட்டுக்கள் இல்லாமல் படைப்புகளோடு கூடிய பாராட்டுக்கள் உள்ளத்தின் உண்மையில் இருந்து வெளி வந்தவை. நிதர்சனங்களின் வழியே அறத்தை கைக்கொள்ளும் பிள்ளைகளின் கூட்டமைவாகத்தான் இந்த நிகழ்வைக் காண்கிறேன்.

அரங்கத்தில் நான் யாருமில்லை என்பது போல அமர்ந்திருக்கும் "முத்து மீனாட்சி..." மேடை ஏறினால் அமர்க்களம்தான். சரவெடி என்று வார்த்தை ஜாலத்துக்கு சொல்லவில்லை. வந்தோரெல்லாம் வியந்து பார்த்தது இந்த குட்டிப்பெண்ணைத் தான். தங்கு தடையில்லாத தமிழ் அவருக்கு வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் தங்கம் மின்ன கவிதைகள் ஆனது சொற்பொழிவு.

ஜான் சார்-ம் ரமணி சார்-ம் வந்தது ஆசீர்வாதம். எதிர்பாராமல் திலீப் சார்... தோழர் கரீமின் வருகை... நம்பிக்கை.

கிட்டத்தட்ட என்னோடு பயணிக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் எல்லாருமே வந்திருந்தார்கள். புரிந்த மனமெல்லாம் நண்பர்களாய் வந்திருந்தார்கள். நெருங்கிய... ஆனால் குறுகிய மனம் கொண்ட சில நண்பர்கள் மட்டும் தவிர்த்திருந்தார்கள். வராதவர்கள் பற்றி பேச ஒன்றுமே இல்லை. வந்தோர் போற்ற வாக்கியம் தேடுகிறேன்.

பழைய அலுவலக நண்பர்கள்... அதற்கும் பழைய அலுவலக நண்பர்கள்... அதற்கும் பழைய அலுவலக நண்பர்கள்... என்று வந்த நண்பர்கள் எல்லாரிடமும் அதே எங்கள் பழைய நட்பின் ஆதுரம். உள்ளம் நிறைந்து முகம் மலர... கிட்டத்தட்ட 3 மணி நேரம் எந்த வித இடையூறுமின்றி கவிஜியின் படைப்புலகம் வண்ணங்களால் ஜொலித்தது.

சிறப்புரை என்றும் சொல்லலாம். சிலிர்ப்புரை என்றும் சொல்லலாம். ஆற்றிய "சரிதா ஜோ"... சிறார் இலக்கியத்தில் தனக்கென இடம் கொண்டவர். கவிஜியின் உலகத்திலும்... வலம் வந்தார். கூடக் குறைய சில நட்சத்திரங்களையும் அள்ளி தெளித்தார். நான் இதுவரை எழுதிய ஏழு வகைமைகளை சுட்டிக் காட்டி இது ஏழும் வானவில்.. இனி எட்டாவது ஒன்பதாவது பத்தாவது என்று வண்ணம் கூடட்டும் என்று வாழ்த்திய சரிதா ஜோவுக்கு மனம் கனிந்த நன்றிகள்.

"தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை - கோவை" யின் முதல் நிகழ்வு. இனி மாத மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவிப்பதில்... பேரின்பம். நூல்களோடும்... எழுத்துக்களோடும் உருண்டு கிடப்பதில் பாறைகள் எல்லாம் நீர் கசியும் பெரு வாழ்வை நம் வசப்படுத்த இருக்கிறோம்.

கவிஜி படைப்புலகம் ஜொலிக்கக் காரணமான அத்தனை பேசுச்சாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ஹோட்டல் நிர்வாகம்.. மிக அழகாக ஒத்துழைப்பு நல்கியது. நன்றி.

நண்பர்கள் தூண்கள் என்றால்... வீடும் உறவும்... கூரை. இரண்டும் சம அளவில் கை கோர்த்து தோள் சேர்ந்து கவிஜி படைப்புலகத்தை அற்புதமாக கட்டினார்கள். அடித்தளம்... "தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை" என்பதில் பெருமிதம்.

வந்திருந்து வாழ்த்திய அத்தனை நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்... பல்வேறு காரணங்களால் நிஜமாகவே வர முடியாமல் வாட்ஸப்பில் வாழ்த்து வழங்கிய நண்பர்களுக்கும் நன்றிகள்.

இலக்கிய பணி செவ்வனே தொடரும். இதயம் நிரம்ப சுவாசிக்கிறேன்.. இதோ இன்னொருமுறை சிறகு முளைக்கிறது... இந்த எழுத்து பறவைக்கு.

எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருந்தவர் என் எழுத்து ஆசான் "அகன் அய்யா" அவர்கள்.

அவர் கவிஜி படைப்புலகத்துக்கு தந்த வாழ்த்தை இங்கே இணைப்பதில் பெருமையாகவும் மகிழ்வாகவும் உணர்கிறேன்.

எப்போதும் எனக்கு வேலை செய்வதில் ஒரு பிடிப்பு இருந்ததே இல்லை. இதை நான் மறுக்கவும் இல்லை. மாறாக நான் வாசித்தேன். கதைகள் சொன்னேன், பேசினேன் சிரித்தேன்... என வேலை செய்வதை விட எதையும் செய்தேன். இப்படிச் சொன்னவர் ஆப்ரகாம் லிங்கன். இதை இங்கே சொல்வதற்கு காரணம்.. நமது கவிஜி எழுதினார்... எழுதுகிறார்... எழுதுவார்.

அவருக்கு எழுத்து கை வந்த கலை. அதோடு அது தான் உயிர் மூச்சாக இருக்கிறது. பலரும் சிந்திப்பதுண்டு. ஒரு தனிமனிதனால் எவ்வாறு இப்படி தொடர்ந்து எழுத முடிகிறது என்று. அதற்குக் காரணம் அவருக்கு வேலை செய்வது பிடிக்குமோ பிடிக்காதோ நான் அறியேன்.

ஆனால் எழுதுவது அவருக்கு பிடிக்கிறது. எழுதிக் கொண்டே இருக்க பிடிக்கிறது. தன்னைப் பற்றி எழுதுகிறார். தன்னை சூழ்ந்திருப்பவர்கள் பற்றி எழுதுகிறார். தன்னுடைய சூழலுக்குள் தன்னை இருத்தி எழுதுகிறார். தன்னை மறந்து எழுதுகிறார். கவிதை எழுதுகிறார். உரைநடை எழுதுகிறார். நாவல் படைக்கிறார். குறும்படம் எடுக்கிறார். அவ்வப்போது தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு ஒரு கதாநாயகனாக வலம் வருகிறார். தலையில் குல்லா அணிகிறார். இவையெல்லாம் ஒரு படைப்பாளியின் வேஷங்கள் அல்ல. இப்படித்தான் ஒரு படைப்பாளி இருக்க முடியும். அவன் அவனாக இருப்பது.

அவன் அவனாகயிருந்தாலும்... அவன் எழுத்தை... அவனை... எல்லாரும் சேர்ந்து ஆராதிக்கும் பொழுது... வாழ்த்தும் பொழுது... அவனுக்குள் இன்னொருவன் பிறக்கின்றான். அவனையும் வாழ்த்தும் போது அவனுக்குள் இன்னொருவன் பிறக்கின்றான். இது ஒரு சங்கிலித் தொடர்.

இப்புவியில் மாந்தர்கள் எல்லாரும் இதைத்தான் செய்ய வேண்டும். ஒரு படைப்பாளியை கொண்டாட வேண்டும். கோடி பொருள் அவனுக்கு கொடுக்க வேண்டாம். அவனுடைய எழுத்துக்களை ஆண்டுக்கு ஒருமுறையாவது எல்லாரும் கூடி... அல்லது ஒரு சிலராவது கூடி... அவனை அமர வைத்து... உன்னுடைய எழுத்து இது தான்.. நீ இப்படித்தான் எழுதி இருக்கிறாய். உன்னால் இந்த மாற்றம் வந்துள்ளது. உன்னால் இந்த மாற்றம் வரும்... என்று அவனுடைய படைப்புகள் பற்றி சிலாகித்து பேசுவது.. சில மணி நேரங்கள் என்பது அவனுடைய வாழ்நாளில் சில வருடங்களை கூட்டும்.

இவ்வாறு தான் படைப்பாளியை அவன் வாழும் போதே கொண்டாட வேண்டும். கவிஜி படைப்புலகம் என்ற அருமையான நிகழ்வை செய்கிறீர்கள். நான் அங்கு இருந்திருந்தால்.. கண்டிப்பாக கலந்து கொண்டிருப்பேன். ஏனென்றால் கவிஜி உங்களுக்கு எல்லாம் எழுத்தாளன். கவிஜி என்றைக்கும் என் குருதி ஓட்டத்தில் இருப்பவன்.

என் நினைவுகள் "எழுத்து இணையதள"த்துக்குள் நுழைகிறது. அது ஒரு வசந்த காலம். அங்கே கவிஜி தன் தொடக்க காலத்தை ஒரு அரிச்சுவடி பள்ளிக்குச் செல்லும் மாணவனைப் போல தொடங்கினான்.

இன்று அவன் பல அரிச்சுவடி பள்ளிகளை நடத்தக் கூடிய அளவுக்கும்.. மேல் நிலைப் பள்ளிகளை... கல்லூரிகளை ஏன் ஒரு பல்கலைக்கழத்தையே நடத்தக்கூடிய அளவுக்கும்... படைப்பாற்றல் மிக்க திகழ்ந்து வருகின்றான்.

கவிஜி இன்னமும் எழுத வேண்டும். சிகரங்களைத் தொட வேண்டும். கவிஜி இளமையிலேயே தன்னுடைய எழுத்துக்களால் முதுமையைத் தொட்டவன். அனுபவ உச்சத்தை தொட்டவன். இன்னமும் வாழ்க்கை இருக்கின்றது... அவனுடைய எழுத்துக்களை போலவே.

கவிஜி வாழ்க.. வளர்க உயர்க சிறந்து விளங்குக. என் வாழ்த்துக்கள் அன்பான முத்தங்களோடு.

என்னுடைய ஆதர்ச எழுத்தாளன் மட்டுமல்ல. கவிஜி எனக்கு குரு.

நன்றி வணக்கம்

இந்த அன்புக்கெல்லாம் என்ன சொல்வது. இந்த வாழ்த்துக்கெல்லாம் என்ன சொல்வது. தலை வணங்கி மனம் உருகி நன்றி சொல்கிறேன். பெரும் ஆசீர்வாதம் என் ஆசானின் ஒவ்வொரு சொல்லும். இதயத்தின் ஆழத்தில் இருந்து எழுந்த ஒவ்வொரு வாக்கியமும் என்னை வானளவு நிரப்புகிறது.

நிரம்புகிறேன்.

- கவிஜி

Pin It