கால்களின் முடிவுறாத பயணத்தின்Dalit lady

சுமை

வாழ்வினை வரைகிறது

 

உழைப்பின் எழுத்துகளாய்

கொட்டிக்கிடக்கும் கற்களைக் கொண்டு

பிழைப்பை அடுக்குவது வலி

 

உயர உயர எழும்

உழைப்பின் பயன்நிழலில்

ஒதுங்குத லாகா நிலையிலும்

நலிவில்லை உழைப்பிற்கு

 

நிலவின் குளிரும்

பூக்களின் மென்மையும்

போலியானவை

சும்மாடு கோலும்

கிழிந்த முந்தானையின் முன்

 

தேய்ந்த எலும்பும்

சுண்டிய ரத்தமும்

தூசி நிறைந்த நுரையீரல்களும்

வாழ்வின் அந்திமத்தின் படிகள்

 

பாரங்களற்று இருக்கும்

இடம் நோக்கி ஏகும் தருணம்

வறுமையின் கோடுகளே

வழியாகி வழிகிறது

கால்களிலிருந்து

- யாழன் ஆதி