திரு கோபிநாத் அவர்களின் ஒரு வீடியோ கிளிப்பிங் பார்த்தேன்.

"சாப்பிட முடியலயா... சாப்பிட இல்லயா..." என்று கேட்கிறார். சாப்பிட இல்லையா என்பதை அவர் குரல் மெல்ல தான் வாசிக்கிறது. கை ஜாடை இயலாமையை என்ன செய்வதென தெரியாமல் வெளிக்காட்டுகிறது. அதற்கு பதில் சொல்லும் பெண்... கண்கள் கலங்க... "இல்ல" என்கிறார். அதாவது சாப்பிட இல்லை என்கிறார். கண்களில் நடுக்கம் பிளிற... சொல்லில் அவமானமும் அமைதியும். முகத்தில் வெறுமையும் வலியும். தான் ஒரு கபடி வீராங்கனை... போதிய எடை இல்லாத காரணத்தால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் என்கிறார். வீட்டில் வறுமை. மூன்று வேளை சாப்பிட சோறு இருந்திருந்தால்... தன்னால் கபடி விளையாட முடிந்திருக்கும் என்று சொல்கையில் கோபிநாத் க்கும் பேச்சு முழுதாக வரவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் பேச ஒன்றுமில்லை. ஆழ்ந்த மூச்சில் சட்டென உடைய தான் முடிந்தது.

விளையாட்டு வீரர்களுக்கு உணவு தானே ஆயுதம். அதுவன்றி உள்ளம் எப்படி உறுதி ஆகும். வெற்றிகளின் படி சரியான சோறில்லை என்ற வரியிலேயே உடைபடுவதை எப்படி பார்ப்பது.

கோபிநாத்... ரேஷன் கடையின் தேவையை... நொந்து கொள்ளும் முக மொழியில்... இயலாமை சொற்களில் வலியுறுத்தும் போது... பசி என்ற பொருளின் ஆழம் நம்மை கலங்கடிக்கிறது. இந்த பசி என்ற சொல்லின் வடிவத்தை நான் எப்போதும் உன்னிப்பாக கவனித்தே வந்திருக்கிறேன்.

சிறு வயதில்... 'பசிக்குது' என்று சொல்ல தெரியாமல்... பசி வந்த போதெல்லாம் வயிறு வலிக்குது என்று சொல்லி இருக்கிறேன். பிறகு ஒரு பசி வேளையில்... அது வயிறு வலி இல்ல மயிலு... பசி என்று பசியை காட்டிக்கொடுத்தது என் பாட்டி தான். பசிக்கு பெரிதாக காவு வாங்கப் படாத வயிறு எனது. ஆனாலும்... பசி என்ற பள்ளத்தாக்கை சுற்றி சுற்றி தேடி அலையும் பிறர் வயிறாகவும் இருந்திருக்கிறேன். எனது "ஓடை வெயில்" கதையில் வரும் ஹீரோ என் நண்பனின் நண்பன். தினமும் மதிய சோறில்லாமல் கல்லூரிக்கு பின்னிருக்கும் ஓடையில் நீர் அள்ளி குடித்து பசி போக்கிய போது... பசியின் பாடுபொருள் எத்தனை கனம் என்று அறிய முடிந்திருக்கிறது.

இன்றும் இரவு உணவில்லாமல் தூங்க போகும் மனிதர்கள் நிறைய இருக்கும் உலகம் தான் இது. சீமான் ஒரு படத்தில் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது. ஆயுதம் வாங்கின காசுக்கெல்லாம் அரிசி வாங்கி இருந்தா... மனுஷன் பசிக்கு சாவறது நடந்துருக்காது இல்ல. ஆயுதம் அரணாக இருக்கும் போது அரிசி உணவாக இருக்கும். ஆயுதமே ஆட்சியாக இருந்தால்.. அரிசிக்கு சாகத்தானே வேண்டும்.

விதைத்து.. அறுவடை செய்து... சமைத்த உணவு தானே நாகரீக சமூகத்தின் சாட்சி. ஆனால் இன்னுமும் தேவைக்கு சாப்பிட முடியாமல்... வேளைக்கும் சாப்பிட முடியாமல்... எத்தனை உயிர்கள் தவிக்கின்றன. குறிப்பிட்ட கோட்டுக்கு கீழே மதிய சோறு... டீயும் பன்னும் என்றால்... நம்பத்தான் வேண்டும். இரவு உணவுக்கு அளவு உணவு கணக்கு போடும் வீடுகள் இருக்கத்தானே செய்கின்றன.

சோற்றை வீணாக்கிறவர்களை முதலில் செவிட்டில் அறைந்து விடுங்கள். பிறகு இரண்டு வேளை பட்டினி போடுங்கள். சோறு தான் மூளை என்று தெரியட்டும். உணவு தான் உடல் என்று புரியட்டும். இல்லாமையும் தப்பு. அதீதமும் தப்பு. சோமாலியாவில் மண்ணை ரொட்டியாக்கி தின்ற கதைகள் நாம் அறிவோம். இப்போது கூட அவ்வப்போது குழந்தைகள் வரிசையாக நின்று சோறு வாங்கி போகும் காணொளி காட்சிகள் இதயத்தை கிழித்து போடுவதை உணர்ந்தபடி தானே இருக்கின்றோம்.

சோறு போடும் வரை சோற்றையே பார்த்துக் கொண்டிருக்கும் கண்களில் இருக்கும் சோகம் எழுத்தில் சொல்லக் கூடியவையா. கடுமையான உள்ள அதிர்வின் வழியே வரிசை நகர காத்திருக்கும் பசித்த கால்களின் நடுக்கத்தை எந்த பத்தியில் நிரப்ப முடியும்.

அழுது கொண்டிருந்த சிறுவன்.. சோற்றை அள்ளி அள்ளி வாய்க்குள் போட்டபடியே சிரிக்கும் காட்சி... மானுட குலத்துக்கான எத்தனை செய்தி. கையில் இருக்கும் ரொட்டியை வேக வேகமாய் கடித்து இழுத்து தின்று வெறி கொண்ட கண்களை மெல்ல அமிழ்த்தும் குழந்தை என்று பசிக்கு தான் எத்தனை பிளிறல். பிராயச்சித்தம் போர்களா. இருப்பதிலேயே கடுமையான கொடுமையான மிருகம் மனிதன் என்றால் தகும் தானே. human being is a wanting animal. அதெல்லாம் சரி. ஆனால் அதிகார தீர்க்கத்தில் அடக்கு முறையின் வழியே... பசியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் குரூரம் எந்த வகையில் நியாயம்.

போண்டாவை தின்று கொண்டே மூன்று நாள் சமாளித்து பத்தாவது பரீட்சை எழுதியதாக என் அப்பா சொல்லி இருக்கிறார். திகைத்து நடுங்கி இருக்கிறேன். கல்லூரியில் என் நண்பன் ஒருவன்... சரியாக சாப்பிடும் நேரத்துக்கு என்னை பார்க்க வந்து விடுவான். அவன் வேற டிபார்ட்மென்ட். முதலில் எனக்கு புரியவில்லை. பிறகு புரிந்து கொண்டேன். அதன் பிறகு அவன் வராத நாளில் கூட நான் அவனைத் தேடி சென்று விடுவேன். என் டிபன் பாக்ஸ் எப்போதும் இருவருக்கும் தான் சோறு கொண்டிருக்கும்.

"ரெண்டு இட்லி எவ்ளோ விக்கிது தெரியுமா..? இருவது ரூவா குடு... பசிக்குது...!" என்று கேட்ட பெரியவரை மறக்க முடியாத திரை பசி என்ற இரண்டு எழுத்துக்கு நடுவே தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கூட ஒரு தோழர் தன் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது... அதில் தூர வறட்சியாய் தேங்கி இருந்தது பசி தான். பசிக்கு மாற்று ஒன்றுமே இல்லை என்பது தான் தினம் தினமாக தலையில் விடிந்து கொண்டே இருக்கிறது.

நான் ஆறாவது படிக்க அம்பிளிக்கையில் விடுதியில் சேர்க்கப்பட்ட போது... தினமும் காலையில் அவதி அவதியாக வரிசையில் வந்து அமரும் மாணவர்கள் மத்தியில் நானும் இருந்திருக்கிறேன். சோற்றை தட்டில் வாங்கிய அடுத்த நொடி அதை முறத்தில் உமியை புடைப்பது போல தூக்கி போட்டு தூக்கி போட்டு சோற்றின் சூட்டை ஆற்றுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் வேர்த்து ஒழுகிக் கொண்டிருக்கும் பசியைக் கண்டு நான் மிரண்டிருக்கிறேன். அங்கிருந்த நாட்களில் பிறகு அதற்கு நானும் பழகி இருக்கிறேன்.

"இன்னைக்கு நைட் மட்டும் ஓட்டிட்டா போதும்... நாளைக்கு மதியம் சேலரி போட்ருவீங்கள்ல.... ஹெச் ஆர்...??!" என்று கண்கள் பிதுங்க கடன் கேட்ட செக்யூரிட்டியை காலத்துக்கும் மறக்க முடியாது.

பக்கத்தில் கூரியர் அலுவலத்தில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் இருக்கிறார். நான் புக் அனுப்ப போகும் நேரம் பல நாட்களில் சரியாக மதிய உணவு வேளையாக இருந்து விடும். காத்திருக்கும் நேரத்தில் கவனித்தது... பெரும்பாலும் அவர் ரச சோறு தான் சாப்பிடுவார். பிறகு நான் போகும் நேரத்தையே மாற்றிக் கொண்டேன்.

"சோறு வெச்சாச்சு. குழம்புக்கு ஒன்னும் இல்ல... அதான்....!" என்று கிண்ணம் தூக்கி வந்த பக்கத்து வீட்டு அக்காவை நினைத்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் பசிக்கு வாழ்கிறவன் தான். மாலை வேளையில் ஒரு ஆறு ஏழு மணிக்கு வருமே ஒரு பசி. தலை சுற்றி தேனீர் கடைக்குள் ஓடுவது... அதனால் தான். ஒரு நாலு நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால்... எத்தனை வசதியாக இருக்கும் என்று கூட யோசித்திருக்கிறேன்.

பாட்டி தாத்தா ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் உடம்பு சரி இல்லை. படுத்த படுக்கை. நமக்கோ ஒரு வெங்காயமும் தெரியாது. ஒரு நேரம் சமாளித்து.. மறு நேரமும் சமாளித்து.... இரவுக்கு ஒன்றுமில்லை. இப்போது அவர்களுக்கும் கஞ்சி தர வேண்டும். 9 வது படிக்கிறேன் என்றாலும்... அடுப்பு பதம் அறியேன். விஷயம் தெரிந்து பத்மினிக்கா தான் ஓடி வந்து சமைத்தது.

"ஏன்டா... பையா... பசியோடயா இருந்த...?" என்று குண்டா கடலையைக் குடுத்த போது அழாமல் இருக்க முடியவில்லை. அடுத்த வீட்டில் இருந்த அத்தையை இப்போது வரை ஏன் வெறுக்கிறேன் என்பதற்கு அந்த நாள் பசி தானே பதிலாக இருக்க முடியும்.

- கவிஜி

Pin It