தன்மானத் தலைவர் தந்தை பெரியார் மீதான அவதூறுகளை, எதிரிகளைக் காட்டிலும், அவர்களின் ஏவலாட்களே திட்டமிட்டு, ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். இவர்கள் முன்வைக்கும் பொய்களை நாம் தொடர்ந்து அம்பலப்படுத்தினாலும், அதற்கு எவ்வித மறுப்பையும் தெரிவிக்காமல், ஆங்கில ஏடுகளில் இந்தக் கட்டுக் கதைகளை வெட்கமின்றிப் பரப்பி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘புதிய கோடங்கி'யில் வெளிவந்த தனது கட்டுரையை, ரவிக்குமார் Seminar - மார்ச் 2006 இதழில் வெளியிட்டுள்ளார். பெரியார் கொள்கைகள், வட இந்தியாவையும் ஆக்கிரமிப்பதைக் கண்டு அஞ்சுகிறார்கள் போலும்!

விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளரும், ‘தாய்மண்' இதழின் ஆசிரியருமான தோழர் தொல். திருமாவளவன், பெரியாருக்கு எதிரான சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, தற்பொழுது தமது உரை வீச்சுகளில் அம்பேத்கர் கருத்துகளுக்கு இணையாகப் பெரியார் கொள்கைகளையும் முன்னெப்போதைக் காட்டிலும் வீரியத்துடன் முழங்கி வருவது கண்டு, அவதூறுவாதிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இறுதியில், ‘பிராமின் டுடே' இதழில் சரணடைந்துள்ளனர். இவ்விதழில், ரவிக்குமாரின் சிறப்புப் பேட்டி வெளிவந்திருக்கிறது; அதிலும் கட்டுக் கதைகளுக்குப் பஞ்சமில்லை. அவ்வேடு ‘பிராமணர்களும் தலித்துகளும்' (அதிலும் தலித்துகள் கீழேதான்) என்றொரு புதிய கூட்டணியை முன்மொழிந்து, தனது சதித் திட்டத்தை அரங்கேற்றியுள்ளது. ராஜாஜியைவிட, எல்லா வகையிலும் ஆயிரம் மடங்கு தனது திறமையால் உயர்ந்து நிற்கும் அம்பேத்கரை, பார்ப்பனர்கள் இனி ‘பிராமணராக' ஏற்றுக் கொள்வார்களா? சாதியால் மட்டுமே உயர்ந்த ராஜகோபாலாச்சாரியை, ராஜகோபால் பறையராக அங்கீகரிப்பார்களா? ஏவலாட்களும் பதில் சொல்ல வேண்டும்.
அடுத்து, கீழ்வெண்மணி படுகொலை குறித்து பெரியார் அமைதி காத்ததாக ஒரு செய்தி திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. அண்மையில் வெண்மணி குறித்து வெளிவந்த ‘ராமய்யாவின் குடிசை' ஆவணத் திரைப்படத்திலும் பெரியார் விடுத்த அறிக்கை, இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்விதழிலும் அடுத்த இதழிலும் ‘பெரியார் பேசுகிறார்' பகுதியில் இவ்வறிக்கை இடம் பெறுகிறது.