கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
நந்தினி – காயத்ரி என்ற இந்த இரண்டு பார்ப்பன பெண்களும், பெரியார் பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார். பிராமணப் பெண்களை கொச்சையாக பேசினார் என்ற உண்மைக்கு புறம்பான கருத்துகளை பேசி வருகின்றனர். பெரியார் மிகச்சிறந்த மனிதநேயக் காவலர். அவர் பார்ப்பனியத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் எதிர்த்தாரே தவிர எந்தவொரு பார்ப்பனர்கள் மீதும் தாக்குதலும் கலவரமும் நடத்தியதாக சரித்திரம் கிடையாது. தமிழ்நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொண்டவர்கள் இந்த உண்மையை நன்கு அறிவார்கள்.
காயத்ரி – நந்தினி ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து சங்கீத கலாநிதி விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்ததுடன், பெரியார் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பார்ப்பனர்கள் தங்களுக்கான எதிர்ப்பை தாங்களே தேடிக்கொள்கிறார்கள். காலத்தின் மாறுதலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பதை அவ்வப்போது இப்படியான கருத்துக்கள் மூலமாக வெட்ட வெளிச்சமாகிறது. சித்திர வீணை இசைக் கலைஞரான ரவிக்கிரன், டி.எம்.கிருஷ்ணாவை எதிர்த்து மியூசிக் அகாடெமி தனக்கு வழங்கிய விருதை திருப்பியளிப்பதாக அறிவித்துள்ளார். ஹரி கதை காலட்சேபகர் துஸ்யந்த் ஸ்ரீ தர் என்பவர் தர்மம், அயோத்தியா, ஸ்ரீ ராம பகவான் குறித்து டி.எம்.கிருஷ்ணாவின் கருத்துக்களால் நான் மிகவும் துயரமடைந்துள்ளேன் என்று கூறியதோடு பரமாச்சரியாருக்கும், சங்கீத ஆத்மாவுக்கும் இது எதிரானது என்று கூறியுள்ளார்.
காலமெல்லாம் பெண்களின் விடுதலைக்காக போராடிய தலைவர் பெரியார். அவரின் பெண் விடுதலைப் போராட்டம் என்பது அனைத்து பெண்களுக்குமானதே தவிர ஒருநாளும் ‘பிராமணப்’ பெண்களை தவிர்த்துவிட்டு அவர் போராடியதும் இல்லை, பேசியதும் இல்லை. பெரியார் நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் இன்றைக்கு பார்ப்பன சமுதாயத்தில் விதவைக் கோலங்களை காண முடிவதில்லை. மொட்டை அடித்து, காவி உடைப் போர்த்தி அவர்களை வீட்டிற்குள் முடக்கிவைக்கும் வழக்கமும் இப்போது இல்லை. பெரியாரின் பெண்ணுரிமைப் போராட்டங்களால் மிகப்பெரிய பயனை அடைந்த சமுதாயம் பார்ப்பன பெண்கள் என்பது தான் உண்மையான வரலாறு.
ஆனால் இசை நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்கிறது மனுசாஸ்திரம். வேலைக்கு செல்லும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று கூறியவர் தான் சங்கராச்சாரி. மேடையில் பக்கவாத்திய இசைக் கலைஞர்களாக பெண்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை பல பார்ப்பன சங்கீத வித்துவான்கள் மறுத்ததும் உண்டு. பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகை (20.04.1930) ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறது.
மேடையில் இசை நிகழ்ச்சி நடத்தும் பார்ப்பனரல்லாத பெண்கள், சபைக்கு ஒவ்வொரு நபர்கள் வரும்போதெல்லாம் எழுந்து நின்று வணங்க வேண்டும். பிறகு அமர்ந்து பாட வேண்டும் என்ற நிலை நீடித்துவருகிறது. இது மிகப்பெரிய அவமானம் என்று எழுதிய பெரியார், சுயமரியாதை மாநாட்டோடு தமிழ் இசைக்கான மாநாட்டையும் சேர்த்து நடத்தினார் பெரியார். திருவையாறு தியாகராயர் உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் தமிழில் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகிவிட்டது என்று கூறி மேடையில் தீட்டுக்கழித்தவர்கள் பார்ப்பனர்கள். இதைக் கண்டித்து அன்றைக்கு கலைஞர் குடிஅரசு ஏட்டில் எழுதியுள்ளார்.
டி.எம்.கிருஷ்ணாவும் பிறப்பால் ஒரு பார்ப்பனர் தான். ஆனால் அவர் பார்ப்பனியத்தை நோக்கி கேள்வி கேட்கிறார். இப்படி பார்ப்பனியத்தை எதிர்த்து கலகம் செய்யும் பார்ப்பனர்கள் வரலாற்றில் எப்போதாவது அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். அதில் டி.எம்.கிருஷ்ணாவும் இருக்கிறார் என்பது வரவேற்க கூடிய ஒன்றாகும். டி.எம்.கிருஷ்ணா மீது இவர்கள் ஏன் இவ்வளவு வெறுப்பைக் காட்டுகிறார்கள்?. அப்படி அவர் என்ன குற்றத்தை செய்தார்?. கர்நாடக இசையை குடிசை வாழ் மக்களிடம் கொண்டு சென்றார். அந்த இசை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்தார். அவர் தனது ‘செபஸ்டியான் அண்ட் சன்ஸ்’ என்ற நூலில் மிருதங்கம் பசு மாட்டுத் தோலில் செய்யப்படுவதை சுட்டிக்காட்டினார். பசுவைப் புனிதமாக போற்றும் பார்ப்பன மிருதங்க வித்துவான்கள் இதை எப்படி வாசிக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்பினார் டி.எம்.கிருஷ்ணா.
பார்ப்பன மூத்த மிருதங்க வித்துவான் பாலக்காடு மணி அய்யர், இது குறித்து சங்கராச்சாரியிடம் விளக்கம் கேட்ட போது அது ஒன்றும் பாவமில்லை என்று அவர் கூறியதாக அந்நூலில் அவர் அம்பலப்படுத்தியிருந்தார். பசுவைப் புனிதம் என்று பேசுகிறவர்கள், தங்கள் தொழிலுக்கு பசுத் தோலைப் பயன்படுத்துவது பாவமில்லை என்பது தான் பார்ப்பனியத்தின் அணுகுமுறை ஆகும். பெரியார் – அண்ணா – இயேசு உள்ளிட்டோரை புகழ்ந்து டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசையில் பாடினார். இதை சனாதன கலாச்சாரம் ஏற்க மறுக்கிறது.
விருது பெறுவதற்கு முன் நிபந்தனை சங்கராச்சாரி ஆதரவும், பெரியார் எதிர்ப்பும் என்று சொன்னால் இவர்களை விட இனவாதிகள் வேறுயாரும் இருக்க முடியாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியிடம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசுக்காக பாடித்தருமாறு கலைஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து ஒரு பார்ப்பனரை திருமணம் செய்து கொண்டு தன்னை பார்ப்பனியத்தில் மூழ்கடித்துக் கொண்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. எனவே பார்ப்பனியம் எம்.எஸ்.சுப்புலட்சுமியை அங்கீகரித்துக் கொண்டது. ஆனால் பிறப்பால் ‘பிராமணராக’ இருந்தாலும், பார்ப்பன எதிர்ப்போடு துணிந்து வெளியே வந்திருக்கிறார் டி.எம்.கிருஷ்ணா. டி.எம்.கிருஷ்ணாவின் இந்த கலகக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்கான அவரின் அழுத்தமானப் போராட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவுக் கரம் நீட்டுவோம்.
- விடுதலை இராசேந்திரன்
பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!
சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் The Music Academy-ன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!