பார்ப்பனர் என்ற சொல் தொல்காப்பியம் தொடங்கி அனைத்து இலக்கியங்களிலும் தொழில் சார்ந்த பெயராகவே இருந்து வந்தது. அது முதலில் தமிழர்களைக் குறித்த பெயராகவே இருந்தது. தமிழகத்தில் புகுந்த ஆரியர்கள் தமிழர்களின் பார்ப்பார் தொழிலைக் கைப்பற்றி தனதாக்கிக் கொண்டனர். தோழர். பெ. ம சொல்வதைப் போல தமிழர்களின் பெயரை பிராமணர்கள் திருடவில்லை, தொழிலைத் திருடினார்கள். எனவே, பிராமணர்கள் பார்ப்பனர்கள் என்று தொழில் சார்ந்து அழைக்கப்பட்டனர்.

காமநிலை உரைத்தல், தேர்நிலை கூறல், காதலன் குறிப்பினைக் கூறல், பசு நிமித்தம் கூறல், பயணத்தைத் தெரிவித்தல், பயணம் தவிர்த்தலை அறிவித்தல் ஆகிய ஆறுவகையான செயல்கள் பார்ப்பானுக்குரிய கடமைகளாகும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை நாம் ஏற்கனவே பார்த்தோம்

"தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்

யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப (கற்பு.36 )

பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி

களவிற் கிளவிக் குரியவர் என்ப...

...பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. (செய். 181)

என்கிறது தொல்காப்பியம்.

பாங்க னிமித்தம் பன்னிரண்டென்ப (தொல்.பொ. 104).

மொழியெதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே -(தொல்.கற்பியல் 41) என பாங்கன் தொழில் குறித்து தொல்காப்பியமும் விளக்குகிறது. பாங்கன் என்பவன் தலைவனின் பாங்கறிந்து ஒழுகுபவன். எப்போதும் தலைவனுடன் இருப்பவன். தலைவனுக்கு உறுதுணையாக இருத்தல் மட்டுமல்லாது தலைவனோடு மாறுபட்டு இடித்துரைக்கும் உரிமையும் உள்ளவன் என்கிறது தொல்காப்பியம்.

தொல்காப்பியக் காலத்தில் பார்ப்பனருக்குப் பாங்கன் தொழில் இருந்ததேயன்றி புரோகிதத் தொழில் இல்லை என்றும் இதில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்து, முன்னவன் ஆரியனும், பின்னவன் தமிழனுமாவர் என்று பாவாணர் விளக்குகிறார்.

மேலும், இவ்விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவதாகவும் சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன் என்று கூறும் பாவாணர், முதன்முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது என்கிறார்.

மேலும், பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பானென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பானென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் 'வேளாப் பார்ப்பான்' (அகம். 24) என்று கூறப்படுவான் என்று விளக்குகிறார். மேலும்

"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்...

அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையால் "

என விளக்குகிறது தொல்காப்பியம்

கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்

முக்கோல் அசை நிலை கடுப்ப, நற்போர்

ஓடா வல்வில் தூணி நாற்றிக்,

கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப்....

எனப் பாடுகிறது முல்லைப்பாட்டு. தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலி என்னும் அறுவரும், நற்றாய், கண்டோர், பாணன், கூத்தர், விறலி, பரத்தை என்னும் எழுவரும் ஆகப் பதின்மூவரும் கற்பில் கூற்று நிகழ்த்துவர் என்று நாற்கவிராச நம்பி விளக்குகிறார்.

”பார்ப்பனமகனே பார்ப்பன மகனே செம்பூ முடுக்கின் நன்னார் களைந்து

தண்டொடுபிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே.”

என்று குறுந்தொகை (பாடல் 150) பாடுகிறது.

”நான்மறைமருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறைமருங்கின் அரசர்க்கு ஓங்கிய

நெடுநல் வேள்விநீ செயல் வேண்டும்”

என்கிறது சிலப்பதிகாரம்.

"வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச்

சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்க ணோன்பொன்னை"

என்னும் பாடல் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் பூசாரி நிலையில் இருந்ததைக் காட்டுகிறது. ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல் (தனக்காக) வேள்வி செய்தல் (பிறர்க்காக) ஈதல், ஏற்றல் எனும் ஆறு செயல்களைப் புரிவோர் இவர்கள் எனப் பதிற்றுப்பத்து கூறுவது கவனிக்கத்தக்கது.

பார்ப்பனப் பெண்களைப் பார்ப்பினி என்று அழைப்பதை “பாசண்டன் யான் பார்ப்பினி தன்மேல்” என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.

”மாபெரும்பாத்திரம் பார்ப்பினி சாவி

கட்புடைக்கழித்து வருவான்”

என்று இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான மணிமேகலை கூறுகிறது.

'பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு ஆற்ற வழிவிலங்கினாரே பிறப்பிடைப் போற்றி எனப்படுவார்' எனவும் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு என பாதுகாக்கப்பட வேண்டியவர்களை ஆசாரக்கோவை பட்டியல் போடுகிறது.

“பார்ப்பார்மறை ஓதுக” என்றும் “பார்ப்பனக் குறுமகன் போலத்தாமும்” என்றும் ஐங்குறுநூறு கூறுகிறது.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மாபூண் வையத் தேரூர்ந்து

நாக நாணும் மலை வில்லாக

மூவகை யாரெயில் ஓரழல் அம்பின் முனிய

மாதிரம் அழலவெய்து அமரர் வேள்விப்

பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்

என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

“திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான்”

என்று கலித்தொகை வருணிக்கிறது.

“நின்முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார்”

என்று புறநானூறு (பாடல் 43) காட்டுகிறது.

வேளாப் பார்ப்பான் வாளரந்துமித்த

வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, தளை பிணி அவிழா, கரி முகப்

பகன்றை

என வேள்வியோடு தொடர்பு படுத்தி அகநானூறு பேசுகிறது.

‘பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு ஏற்பன கூறார்”

“படுபொருள்வவ்விய பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார்”

என்று கூறுவதும் சிலப்பதிகாரம் தான்!

 "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்.. என்ற புறநானூற்றுச் செய்யுள் பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும் என்று கூறுகிறது.

"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"

என்று வள்ளுவர் கூறுகிறார். பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம், பழக்கவழக்கம் முதலியவற்றை அறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள்' (புராணங்கள்) வட மொழியில் வரைந்துகொண்டு மதத்திற்கு அதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர் என்றும் இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ்நாட்டில் தலைமைத் தன்மை கிடைக்க வாய்ப்பு கிடைத்தது என்றும், பார்ப்பனர்கள் எப்படி பூசாரித் தன்மை அடைந்தார்கள் என்பதை விளக்குகிறார் பாவாணர். (ஒப்பியன் மொழி நூல்)

எனவே, பார்ப்பனர் என்னும் சொல் எவ்விடத்திலும் இழி சொல்லாக இருந்ததில்லை என்பதை மேற்காணும் எடுத்துக்காட்டிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

பார்ப்பனர் என்பது வரலாற்றில் இழி சொல்லாக இருந்ததில்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் தோழர் பெ. ம. தந்தைப் பெரியாரும் திராவிட இயக்கத்தவரும்தாம் இழிசொல்லாக மாற்றிவிட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார். உங்களை இழிவுபடுத்தும் வகையில் ஏன் நடந்துகொண்டீர்கள் என்று பார்ப்பனர்களைப் பார்த்து தோழர் பெ.ம கேட்பதற்குப் பதிலாக அவர்களை ஏன் இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறீர்கள் என்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அரசியல் களத்தில் பார்ப்பனர் என்ற சொல் வேத பிராமணர்களின் தவறுகளைச் சுட்டும் சொல்லாக, வேதநெறி எதிர்ப்புச் சொல்லாக உருப்பெற்று இன்று வரை தொடர்கிறது.

பார்ப்பனியம் என்னும் சொல் பிராமண எதிர்ப்பு, வைதீக மறுப்புச் சொல்லாக மாறியுள்ளது. மற்றபடி தனிப்பட்ட பிராமணர்களின் எதிர்ப்பாக உருவெடுக்கவில்லை. அதைப் பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தோடு மட்டும் பார்க்கக் கூடாது.

பார்ப்பனர்களைத் தண்டச் சோறு எனும் பொருளிலும், பார்ப்பனர்களைப் பேராசைக்காரன் என்றும் பார்ப்பனர்களை எழுதிய பாரதியார் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவரா?

பார்ப்பனச் சிறுவனின் குடுமியைக் கிண்டல் செய்யும் ஐங்குறுநூறு பாடல் திராவிட இயக்கப் பாடலா ?

பெரியார் தான் அந்தச் சொல் மீது இழிவு வழங்கி விட்டார் என்பதெல்லாம் பெரியார் மீதான வன்மம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

1938 இல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகமெங்கும் பரவிய போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சிலர் ‘பூணூல் ஒழிக' என்றும் ராஜகோபாலச்சாரியாரின் வீட்டுப் பெண்களையும் பார்ப்பனப் பெண்களையும் இழிவாகச் சொல்லி முழக்கமிட்டதாகவும் பத்திரிகைகள் குற்றம்சாட்டிய போது

"பூணூல் என்பது பார்ப்பனியத்தைக் குறிக்கிறது. அப்படிச் சொல்வதில் தவறில்லை என்றும், அதே நேரம், பெண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேசுவது என்பது குற்றம்தான்... அவர்கள் (பார்ப்பனர்கள்) வேறு பெண்டு பிள்ளை வேறு, அவர்களுக்கு வரும் இழிவு வேறு, அவர்களுக்கு வரும் அவமானம் வேறு, நமது பிள்ளைகளுக்கு வரும் அவமானம், இழிவு வேறு என்று நாம் கருதவில்லை, கருதுவதுமில்லை என உறுதிபடக் கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும் கூப்பாடு போட்டவனையும் அப்படி தண்டிப்பதிலும் எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் எனக்கு சிறிதும் ஆட்சேபணையில்லை" என்று கூறியவர் பெரியார். (குடியரசு அரசு, 28.8.1938)

அதேபோல், 1962 -ஆம் ஆண்டு புத்தாண்டு நாளன்று விடுத்த அறிக்கையில்,

"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத்தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல. தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் -பெரியோர்கள் ஆகியோர்களுக்கு மதிப்புக்குரியவனாகவும், அன்பனாகவும், நண்பராகவும்கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்"

என்று எழுதுகிறார். பார்ப்பனர்களை மிகவும் மரியாதையோடு பார்ப்பனத் தோழர்களே, என்று அழைக்குமளவுக்கு அவரது பண்பு உயர்ந்திருந்தது. உண்மையில், நமக்கு அந்தச் சொல் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. அந்தச் சொல்லுக்கு உரியவர்களின் கோட்பாடும் செயலும் தான் இழிவுக்குரியது. ஒருவரை உயர்த்தி மற்றொருவரைத் தாழ்த்தும் எந்தச் சொல்லும் இழிவானதுதான். அதனால்தான் பிராமணர் என்னும் தங்களை மட்டும் உயர்த்திக் கொள்ளும் அந்தச் சொல்லுக்குப் பதிலாக பார்ப்பனர் என்னும் தொழில் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்கிறோம். மற்றபடி, நமக்கோ, பெரியாருக்கோ, திராவிட, தமிழ்த் தேசிய, இடதுசாரி, தலித் இயக்கங்கங்களுக்கோ, பார்ப்பனர் என்ற நபர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை. அவர்கள் கடைப்பிடிக்கும் பார்ப்பனியத் தன்மையைத் தான் எதிர்க்கிறோம்.

பூணூல், குடுமி, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுதல், தனியான பேச்சுநடை, இறைச்சி உண்ணாமை என தங்களது பழக்கங்களை பார்ப்பனர்கள் இன்றுவரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் பணியின் பொருட்டு குடுமி, பஞ்சகச்சம் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டார்கள் என்றாலும் அதன் தன்மையை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தன்மையை தனி நபர்களாக அவர்கள் கைவிடாதவரை அவர்கள் கண்டிக்கப்படுவார்கள். அதே போல், சமூக அளவில் பரப்பி வைத்திருக்கும் பார்ப்பனியம் வீழும்வரை இந்நிலை தொடரவே செய்யும். பார்ப்பனியம் என்பது கடவுளின் பெயரால், நிறத்தின் பெயரால், தொழிலின் பெயரால் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள ஆரியக் கூட்டத்தால் கட்டமைக்கப்பட்ட, வருணாச்சிரமச் சட்டத்தை வைத்து பார்ப்பனரல்லாதோரை ஒடுக்குவதாகும்.

பார்ப்பனியம் என்பது வர்ண அடுக்கு முறையை ஏற்றுக் கொள்வதாகும். பார்ப்பனியம் என்பது கோவில் கருவறைக்குள் பார்ப்பனரல்லாதோரை அனுமதிக்க மறுப்பதும், பஞ்சமர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுமாகும். பார்ப்பனியம் என்பது வர்ணத்தின் மேல்அடுக்கில் உள்ள பார்ப்பனர்களை அழைத்துத் திருமணம், புதுமனை புகல் உள்ளிட்ட இன்ப, துன்ப காரியங்களைச் செய்வதை ஏற்றுக் கொள்வதாகும்.

பார்ப்பனியம் என்பது சமூக நீதிக்கு எதிரானது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகும். பார்ப்பனியம் என்பது ஆணாதிக்கத்தை உயர்த்திப் பிடித்து பெண்களை ஒடுக்குவதாகும். பார்ப்பனியம் என்பது தனது மேலாதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சமற்கிருதத்தை உயர்த்திப் பிடித்து தமிழை -நீச பாசை என்று கோவில் கருவறைக்குள்ளும், குடமுழுக்கு உள்ளிட்ட இறை செயல்கள் அனைத்திற்கும் மறுக்கப்படுவதாகும்.

பார்ப்பனர்களால் மட்டுமே வளர்க்கப்பட்ட பார்ப்பனியம் இன்று உயர்சாதி, மேல் சாதி என்று கருதிக் கொள்கிற எல்லா சாதிக்காரர்களிடம் விரவிக் கிடக்கிறது. எனவே தான், பார்ப்பனரல்லாத தமிழர்கள் தங்களை மேல்சாதி -உயர்சாதி என்று அழைப்பதையும் மறுக்கிறோம். இந்தச் சொல்லும் தன்னை "மேல்" என்றும் "உயர்" என்றும் அழைத்துக் கொள்வதன் மூலம் மற்றவர்களை கீழ் என்றும், தாழ்ந்த என்றும் மறைமுகமாகச் சுட்டுகிறது. பார்ப்பனரல்லாத தமிழர்கள் என்பதற்காக நாம் இத்தகைய சொற்பயன்பாடுகளை நாம் ஏற்கவில்லை. இதனால்தான் மேல் சாதி, உயர்சாதி என்பதற்குப் பதிலாக ஆதிக்கச் சாதி என்கிறோம். எனவே, நம்மைப் பொருத்தவரை பிராமணர்களை பிராமணர்கள் என்று அழைப்பதை விட பார்ப்பனர்கள் என்று அழைப்பதே பொருத்தமானது. அதிலும் குறிப்பாக ஆரிய மேலாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் அவர்கள் கருத்தியல் காரணமாகவும், தமிழ்ப் பார்ப்பனர்களைப் பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் ஆரியப் பார்ப்பனர்கள் என்று அழைப்பதே பொருத்தமான அரசியல் சொல்லாடலாகும்.

க.இரா.தமிழரசன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்

Pin It