தேசத்தை - மதத்தை மாற்றிக் கொண்டு அதிகாரத்தைப் பிடிக்கும் அமெரிக்கப் பார்ப்பனர்கள்  பற்றி சங்பரிவாரங்கள் வாய் திறப்பதில்லையே, ஏன்?

சங்பரிவார் பார்ப்பனர்கள் ஏழை முஸ்லிம் மக்களை ‘தாய் மதம்’ திருப்புவதாகக் கூறி ‘இந்து’ மதத்துக்கு மாற்றுகிறார்கள். அதற்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் ‘கார் வாப்சி’. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய பார்ப்பனர்கள், தங்களது ‘தேசத்தையே’ மாற்றிக் கொள்வது பற்றி சங்பரிவாரங்கள் வாய் திறப்பது இல்லை. அமெரிக்காவில் பார்ப்பனர்கள் ‘பச்சை அட்டை’ வாங்கிக் கொண்டு அமெரிக்க குடிமகன்களாக வாழ்வதற்குத்தான் போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.

இந்த பார்ப்பனர்கள், தேசத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை. ‘இந்து’ மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு, கிறிஸ்தவ மதத்துக்கு தாவுகிறார்கள். இப்படி மதம் மாறிய பார்ப்பனர்களை ஏராளமாக பட்டியலிட முடியும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வருவதற்கு முன்பு, ஒரு ‘பரிசை’ வழங்கியுள்ளார். என்ன தெரியுமா? இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு ‘அமெரிக்க இந்தியரையே’, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அறிவித்துள்ளார். இந்த புதிய தூதரின் பெயர் ரிசர்ட் ராகுல் வர்மா. பஞ்சாபிலிருந்து அமெரிக்காவுக்குப் போன பார்ப்பனர்தான் இந்த ராகுல் வர்மா. இவரது தந்தை பெயர் கமல் வர்மா. தாயார் பெயர் சாவித்திரி. அமெரிக்காபோன பார்ப்பனர்கள், அந்த நாட்டின் அரசியல் அமைப்புகளில் முக்கிய பதவிகளை எட்டிப் பிடிக்க துடிக்கிறார்கள். அமெரிக்க சமூகத்தில் உயர் பதவிகளைப் பெற வேண்டுமானால் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால், பார்ப்பனர்கள் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு கிறிஸ்தவர்களாகி விடுகிறார்கள். அப்படி கிறிஸ்தவரானவர்தான் இந்த ராகுல் வர்மா. ஆனால், மதம் மாறியதை இவர் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனாலும் இவரது மனைவி, குழந்தையின் பெயர்கள், இவரது மதமாற்றத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. (மனைவி பெயர் பிங்கி; குழந்தைகள் பெயர் லூசி, டய்லான்)

வர்மா மட்டுமல்ல; அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் போபி ஜின்டால் கதையும் இதுதான். அமெரிக்காவின் மாநிலம் ஒன்றில் ஆளுநர் பதவிக்கு வந்த முதல் இந்தியர் இவர். இவரும் இந்தியாவிலிருந்து குடியேறிய பார்ப்பனர் குடும்பத்தைச் சார்ந்தவர்தான். அமெரிக்காவில் பள்ளிப் படிப்பு படிக்கும் போதே அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க இவரது குடும்பம் குறி வைத்து செயல்பட்டது. இவர் ஆளுநராக வந்தவுடன் ‘வாஷிங்டன் போஸ்ட்’ (அக்.21, 2007) பத்திரிகை இவரது குடும்பப் பின்னணி குறித்து இவ்வாறு எழுதியது: “ஜின்டால் - ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து, இந்துவாகவே வாழ்ந்தவர். ஆனால், ‘பேட்டன் ரோக் மேக்னட்’ பள்ளியில் பள்ளிப் படிப்பு படிக்கும்போதே கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிவிட்டார். பிரவுன் பல்கலையில் முதலாம் ஆண்டு படிக்கும் போதே ரோமன் கத்தோலிக்க ‘சர்ச்’ அவருக்கு வரவேற்பு கொடுத்தது. அவரது குடும்பம் வாரந்தோறும் தவறாமல் “செயின்ட் அலோசியஸ் பாரிஷ் சர்ச்சில் பிரார்த்தனைக்கு வருவது வழக்கம்” என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ எழுதி, அவரது கிறிஸ்துவ அடையாளத்தை அமெரிக்கர் களிடம் உறுதிப்படுத்தியது.

தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநர் ‘நிக்கி ஹேலே’யின் கதையும் இதுதான். இவர் சீக்கியராக இருந்து, பிறகு கிறிஸ்துவ மதத்துக்கு மாறி அமெரிக்க அரசியலில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர். இப்படி நீண்ட பட்டியலைப் போட முடியும்.

அமெரிக்காவில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் மட்டுமே அதிபராக முடியும். இதற்கு விதிவிலக்காக இருந்த ஒரே அமெரிக்க அதிபர் ஜான். எப். கென்னடி மட்டுமே. இவர் ஒரு கத்தோலிக்கர்.

அரசியலில் உயர் பதவிகளைப் பெறுவதற்காக தங்களது ‘இந்து’ அடையாளத்தைத் தூக்கி எறியத் தயங்காத பார்ப்பனர்கள்தான், இந்தியாவில் ‘இந்து மதம்’, ‘இந்து தேசம்’ என்று கூச்சல் போடுகிறார்கள். மதம் மாறுவது தேச விரோதம் என்று அலறுகிறார்கள். ‘இந்து மதம்’

என்ற பெயரில் இவர்கள் முன் வைப்பது பார்ப்பன வேத மதத்தைத் தான். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தியபோதுதான் ‘இந்து’ என்ற பெயரே வந்தது. அதற்கு முன்பு ‘இந்து’ மதமே கிடையாது. வேத மதம் - பார்ப்பன மதம் தான் இருந்தது. பிரிட்டிஷாரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஏனைய மதப் பிரிவினரைவிட, மக்கள் தொகை எண்ணிக்கையை கூடுதலாக்கிக் காட்டுவதற்காகத்தான் பார்ப்பனர்கள், மதம் சாராத வெகு மக்களை ‘இந்து’ அடையாளத்துக்குள் திணித்தார்கள்.

ஏழை அப்பாவி மக்களை ‘தாய் மதம்’ திருப்பும் சங்பரிவாரங்கள், இந்தியாவின் அமெரிக்க தூதரகத்தில் தூதராக வந்து அமர்ந்திருக்கிற ராகுல் வர்மாவையும், அவரது குடும்பத்தையும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் என்று போராடுவார்களா? உண்மையில், ‘தாய் மதத்துக்கு திரும்பும்’ சங்பரிவார் கூட்டத்துக்கு ஒபாமா தந்திருக்கிற பதிலடிதான் ‘ராகுல்வர்மா’!

அமெரிக்கா-அய்ரோப்பிய கிறிஸ்தவர்களின் முதலீட்டுக்கு கதவை திறந்து வைத்திருக்கிறார் மோடி. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். மோடியின் இந்த திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருப் பதும் அவர் செல்லப் பிராணி களாக வளர்த்து வரும் சங்பரிவார் பார்ப்பனர்கள் கூட்டம்தான். இப்படி மத உரிமைகளில் குறுக்கிடும் நாடுகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வருவது இல்லை. அவர்களின் நோக்கம் லாபம் ஒன்று மட்டும்தான். சீனா மதவெறி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தபோது, மேற்கத்திய முதலீடு குறைந்து போனதையும், பிறகு, சீனா, தனது கொள்கையை மாற்றிக் கொண்டுவிட்டதையும் தொழில்துறை வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

பார்ப்பன மதவெறி நடவடிக்கைகளை ஒரு பக்கம் ‘தூபம்’ போட்டுக் கொண்டு மற்றொரு பக்கத்தில் நாட்டின் வளர்ச்சிப் பற்றி பேசுவது இரட்டைக் குதிரை சவாரியாகத்தான் இருக்கும். இதேபோல் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் குவிந்து கிடக்கும் பார்ப்பனர்கள் அங்கே சமூக நீதியை மறுத்து, ஜாதி ஆதிக்கத்தைத் திணிப்பதால் முறையான உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்று சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

“இந்தியாவில் உற்பத்தி மய்யங்களிலும் சந்தை விநியோகத்திலும் நிலவும் ஜாதிய செயல்பாடுகள் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது” என்று உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிங் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

வேத காலத்திலிருந்து மக்களை கூறு போட்டு வளர்ச்சியை முடக்கிப் போட்ட பார்ப்பனர்கள், இப்போது அதிகாரம் வந்துவிட்ட இறுமாப்பில் மீண்டும் வேத காலத்துக்கு திரும்ப துடிக்கிறார்கள்.

பார்ப்பனர் கூறும் இந்து மதம், வேத மதமே! இது தமிழர் மதமல்ல என்ற உண்மையை உரத்து முழங்குவோம்!

Pin It