காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே, ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்று உறுதி செய்து, காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சே அளித்த பேட்டி இது. 1994இல் ‘பிரன்ட் லைன்’ பத்திரிகையில் வெளி வந்தது இந்த பேட்டி.

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவரா?

நாங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சில் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) சத்பத்ரேயா, நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்த வர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.சில்தான் அதிகமாக வளர்ந்தோம்.

நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.சில் இருந் தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு விலகிட வில்லையா?

நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.இல் (காரியவாஹ்) செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில்தான் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றார். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.சின் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.சும், காந்திஜியின் கொலைக்குப் பின் பயங்கர கெடுபிடிகளுக்கு உள்ளானதுதான். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை.

அண்மையில் அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.விற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே?

நான் அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன், மறுத்திருக்கிறேன். அத்வானி சொல்வது கோழைத் தனம் எனக் கூறி இருக்கிறேன். நீங்கள் ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். “நீ போய் காந்திஜியை கொலை செய்” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிடவில்லை. ஆனால், அவரை (கோட்சேயை) கைவிடுவது சரியல்ல. இந்து மகாசபை அவரைக் கைவிடவில்லை. 1944ஆம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கினான். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ்.இல் காரியவாஹ் என்ற அறிவுத்துறை செயலாளராகவும் இருந்தான்.

காந்திஜியைக் கொலை செய்யும் திட்டம் எப்போது தீட்டப்பட்டது?

நாதுராம் ‘இந்துராஷ்டிரா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர். பத்திரிகையின் ஆசிரியர் என்பதால் அவனுக்கோர் டெலிபிரிண்டர் இருந்தது. அதில் அவனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி காந்திஜி அடுத்த நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியது.

(காந்தி பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்திய அரசு தந்திட வேண்டும் என்பதற்காகவே அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இந்தப் பணம் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தருவதாக உறுதியளித்தப் பணம். ஆனால், காஷ்மீர் பிரச்சினை தீரும் வரை அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கு தருவதில்லை என இந்திய அரசு முடிவு செய்திருந்தது)

காந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதுதான் என்ற எண்ணம் நாதுராமுக்கு தோன்றியது. அதுதான் திருப்புமுனை.

ஆனால், அதற்கு முன்னால் பல சூழ்நிலைகளில் காந்திஜியைக் கொலை செய்ய வேண்டும் என நாதுராம் எண்ணி இருக்கலாம். அகதிகள் முகாமில் அப்படியொரு எண்ணம் தோன்றியிருக்கலாம். காந்தி தான் நமக்கு இந்த அவலங்களைக் கொண்டு வந்தவர். அதனால், அவரை ஏன் கொலை செய்யக் கூடாது? என்ற சிந்தனைகள் பலமுறை தோன்றி இருந்தது.

மேகங்கள் சூல் கொண்டு ஒரு திசையில் ஒதுங்குகின்றன. இதனால், அடுத்த 15 நிமிடத்துக்குள் மழை பொழியும் என நாம் நினைக்கிறோம். அந்த மழையும் பெருமழையாய் அமையும் எனக் கருதுகிறோம். ஆனால், நடப்பவை வேறாக இருக்கின்றன. பெருங்காற்று வீசுகின்றது. எந்தத் திசையிலிருந்து என்பது நமக்குத் தெரியவில்லை. அத்தனை மேகத்தையும் அழைத்துச் சென்று விடுகின்றது.

அந்த மழைக்கு என்ன தேவைப்பட்டது? ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலை. ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம். இவை அந்த மேகங்களோடு இருந்திட வேண்டும். அப்போதுதான் அந்த மேகக் கூட்டம் மழையைப் பொழியும்.

ஆகவே சதிக்கு மேல் சதிகள் என சதிகள் நடத்திருக்கலாம். கலைந்து சென்றிருக்கலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளும் சரியாக இருந்தால் அந்தச் சதிகள் பலனளிக்கலாம். சதிகாரர்களைப் பொறுத்தவரை சதியை நிறைவேற்றிட முடிந்தது. இலக்கை அடைய முடிந்தது.

சாவர்க்கருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இப்படியொரு கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் அவரது சீடர்கள் அவரை எங்களுடைய ‘குரு’வாக மதித்து நடந்தோம். நாங்கள் அவருடைய எழுத்துக்களை படிப்போம். சாவர்க்கரை முழுமையாகப் புரிந்து கொண்டோம், எனவே இதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாகும்.

ஆதாரம்: ‘ஃப்ரண்ட்லைன்’, ஜனவரி 28, 1994

Pin It