உ.பி. மாநிலத்தில் பன்டல்கான்ட் பகுதியில் பஞ்சு என்ற கொள்ளைக்காரன் தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டம் செயல்பட்டு வருகிறது. இவன் மீது 50 கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவனை காவல்துறையால் பிடிக்க முடியாததோடு, 12க்கும் மேற்பட்ட காவல்துறையினரைக் கொலை செய்துவிட்டு, தப்பியிருக்கிறான்.

உ.பி. காவல்துறை, கடைசியில், இந்தக் குற்றவாளியைப் பிடிக்க சோதிடர்களிடம் சரணடைந்திருக்கிறது. மகோபா மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு காவல்துறை உயர்அதிகாரிகள் பஞ்சுவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு, சோதிடர்களிடம் போய் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். “அவன் சாதகம் எந்தக் காலத்தில் மோசமான திசைக்கு வரும்? அப்போது தான் நாங்கள் சுட்டுக் கொல்ல முடியும். இல்லாவிட்டால் நாங்கள் பலியாகி விடுவோம்” என்று யோசனை கேட்டிருக்கிறார்கள். உருப்படுமா, இந்த நாடு?

பழனி முருகன்: மீண்டும் பார்ப்பனர்களின் கைவரிசை!

மூலிகைகளால் - சித்தர்களால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலையை ‘அய்ம்பொன்’ சிலையாக மாற்றி அமைக்கும் முயற்சிகளில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ள ஜெயேந்திரன் முயன்றார். அதற்கு ஜெயலலிதா ஆட்சியின் அறநிலையத் துறையும் ஆதரவாக இருந்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது. சங்கராச்சாரியின் குறுக்கீட்டை எதிர்த்து, கழகமும் போராட்டம் நடத்தியது. இப்போது மீண்டும், பழனி முருகன் சிலையை மாற்றி குடமுழுக்கு நடத்தும் முயற்சிகளை அறநிலையத் துறை திடீரென துவக்கியது. இதற்காக கோயில் ‘கர்ப்பக்கிரகம்’ மூடப்பட்டது.

மீண்டும் பார்ப்பனரல்லாதவர்களிட மிருந்தும், கோயிலுக்கு பரம்பரை உரிமை கொண்ட சித்தர் குடும்பத் தினின்றும் எதிர்ப்பு வரவே, கருவறை திறக்கப்பட்டது. இப்போது சென்னையைச் சார்ந்த வடபழனி சித்தர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மூலிகையால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலையை - ‘அய்ம்பொன்’ சிலையாக மாற்றுவது ‘ஆகமத்துக்கு’ எதிரானது என்றும், மூலிகை தொடர்பான நிபுணர்களைக் கொண்டு சிலையை சரி செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன் பல கோயில்களில் “கும்பாபிஷேகங்களை” நடத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

 அசோக்சிங்கால் குரலை மாற்ற வைத்த கழகத்தின் பிரச்சாரம்

மாநாடு நடத்திய விசுவ இந்து பரிஷத்தை நோக்கி, மக்கள் மன்றத்தில் துண்டறிக்கை - சுவரெழுத்து வாயிலாக கழகம் முன் வைத்த கேள்விகள் - அவர்களின் பார்ப்பன சுய உருவத்தை அம்பலப்படுத்திவிட்டது. இதனைத் தொடர்ந்து, விசுவ இந்து பரிசத்தின் சுருதி, ஈரோட்டில் வேறுவிதமாக ஒலித்தது. அசோக் சிங்கால் தனது பேச்சில், ‘தீண்டாமையையோ, வர்ணாஸ்ரமத்தையோ, மனுதர்மத்தையோ’ நாங்கள் ஏற்கவில்லை என்று மாநாட்டில், தன்னிலை விளக்கமளித்துள்ளார். கழகமும் மதச்சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நடத்திய போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது!

ஈரோடு மாநாட்டை எதிர்த்து - கழகம் பரப்பிய துண்டறிக்கைகள்.

 ‘தீண்டாமை பாராட்டுவது கிரிமினல் குற்றம்’. சொல்கிறது அரசியல் சட்டம். ‘தீண்டாமை சேமகரமானது’ சொல்கிறார் காஞ்சி சங்கராச்சாரி. பொது சிவில் சட்டம் கோரும் விசுவ இந்து பரிசத்தே! கிரிமினல் காஞ்சி சங்கராச்சாரியை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று போராடத் தயாரா?

 ‘தலை நிமிர்ந்தால் நாம் இந்துக்கள்’ என்று கூக்குரல் இடும் விசுவ இந்து பரிசத் கும்பலே! பார்ப்பானும், பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகியோரும் ஒன்று என்பதை ஏற்றுக் கொண்டு காஞ்சி சங்கர மடத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவரை சங்கராச்சாரியாக நியமிக்கத் தயாரா?

 ‘பசுவதைத் தடைச் சட்டம்’ கோரும் விசுவ இந்து பரிசத்தே! சாதிக்கொரு சுடுகாடு ஏன்? இந்துக்கள் அனைவருக்கும் ‘ஒரே சுடுகாடு’ வேண்டும் என்று கேட்டுப் போராடத் தயாரா?

 ‘நமது பண்பாடு இந்துப் பண்பாடு’ என்று பேசும் விசுவ இந்து பரிசத் கூட்டமே! பார்ப்பனரல்லாத பிற சாதியினரை கோயில் கருவறைக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிப்பது ஏன்?

 கிராமக் கோயில் பூசாரிகளுக்காக மாநாடு நடத்தும் விசுவ இந்து பரிசத் கூட்டமே! அவர்களுக்கு ஆகம வேத பயிற்சியளித்து இந்து அறநிலைய கோயில்களில் அர்ச்சகராக்க முன் வருவீர்களா?

 ‘அனைவருக்குமான பொது சிவில் சட்டம்’ கேட்கும் விசுவ இந்து பரிசத்தே! பார்ப்பனரல்லாதார் வேதப்பியாசம் செய்யக் கூடாது என்று கூறும் சங்கராச்சாரியைக் கண்டித்து போராட்டம் நடத்தத் தயாரா? ஆகம விதிகளின்படி தேவ பாசையே (சமற்கிருதம்) வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறும் உங்களை எந்த சட்டத்தின்படி தண்டிப்பது?

 ‘இந்துக்களே ஒன்றுபடுவீர்’ என்று கூறும் விசுவ இந்து பரிசத் கூடாரமே! இந்துக்களை பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப் பிரித்துக் கூறும் மனுதர்ம சாத்திரத்தையும் வேதத்தையும் எதிர்த்துப் போராட மறுப்பது ஏன்?

 இந்து, இந்து! என்று புலம்பும் கூட்டமே! பசுக்களுக்காக கண்ணீர் விடும் நீங்கள் இராமேசுவரம் பகுதியில் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவும் ஈழத்தில் சிங்கள காடையர்களால் கொல்லப்படும் இந்துக்களுக்காகவும் குரல் கொடுக்காதது ஏன்?

 ‘மாட்டுக் கறியைத் தடை செய்யக் கோரும்’ விசுவ இந்து பரிசத் கும்பலே! உழைக்கும் மக்களான ஒடுக்கப் பட்டவர்களாகிய எங்களுக்கு உயர்ந்த புரதச் சத்து உணவு கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் ‘மாமிசம்’ விற்கத் தயாரா?

 கேரளாவில் ஆகம கோயில்களில் தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக நியமித்த கேரள அரசின் முடிவை ஏற்றுத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள விசுவ இந்து பரிசத் வரவேற்றதே! தமிழ்நாடு விசுவ இந்து பரிசத்தின் நிலை என்ன?

Pin It