சில நாட்களுக்கு முன்னால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே நந்தனார் பிறந்த ஊரான ஆதனூர் கிராமத்தில் நந்தனார் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட ஆளுநர் ரவி 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை ‘தலித் பார்ப்பனர்களாக’ மாற்றினார்.
இந்தப் புனித நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னொருவர் ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு ஆவார்.
தலித்துகளுக்கு பூணூல் போட்டு அழகு பார்க்கும் இந்த பார்ப்பனின் யோக்கியதை என்ன?
தனது மகனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன் தன்னுடைய மனைவி பிரமிளா சீனிவாசன் மற்றும் மகன் ஆகியோரை அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு ஓடி வந்ததோடு மட்டுமல்லாமல், மனைவிக்கும் இவருக்கும் பொதுவாக இருந்த சொத்துகளை, பங்குகளை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சட்ட விரோதமாக மாற்றி ஏமாற்றிய பேர்வழிதான் இந்த மகா யோக்கியன்.இவர்கள்தான் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தலித்துகளுக்கு எல்லாம் பூணூல் போட்டு இருபிறப்பாளர் ஆக்கி, அவர்களை இந்தப் பிறவியிலேயே பூலோக தேவர்கள் ஆக்கி இருக்கின்றார்கள்.
இவர்களிடம் பூணூல் போட்டுக் கொண்ட தலித் பார்ப்பனர்கள் நாளை முதல் சங்கர மடத்தில் சங்கராச்சாரியர்களாகவும், ஜீயர்களாகவும் ஆன்மீக மதகுருமார்களாகவும், கோயில் அர்ச்சகர்களாகவும் தமது பணியைத் துவங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.
கூடிய விரைவில் பார்ப்பனர்கள் தங்களின் மகன்களுக்கு தலித் பெண்களையும், தலித் ஆண்கள் அக்கிரகாரத்துப் பெண்களையும் மணக்கும் நிகழ்வுகள் கூட நடைபெறலாம். அதில் ஆளுநர் ரவி, எச்.ராஜா போன்றவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தலாம்.
பூணூல் போடுவதை தங்களின் பிறப்புரிமையாக வைத்திருந்தவர்கள் எப்போதெல்லாம் அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதோ அப்பொழுதெல்லாம் அதைக் கழற்றி எறியாமல் தங்களால் சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் இழிவுபடுத்தப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு அதை அணிவித்து தங்களின் அசிங்கம் பிடித்த பெருந்தன்மையை காட்டிக் கொண்டார்கள்.
இன்று ஆசாரி, செட்டி, குயவர்கள் போன்றவர்கள் பூணூல் அணிந்து கொள்வதை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இந்தப் பூணூலுக்கு எந்த மரியாதையுமே எப்போதுமே சமூகத்தில் இருந்தது கிடையாது. இவை எல்லாம் தாங்களும் பார்ப்பனர்களைப் போல மேலானவர்கள் என்று காட்டிக் கொள்ள சில சூத்திர சாதிகள் செய்து கொண்ட வழியாகும்.
விஸ்வ பிராமணர்கள் என்கிற சமூகத்தினர் 1938 ஆம் ஆண்டுகளில் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போட்டுக் கொண்டனர். ஆனால் அதை கடுமையாக எதிர்த்த சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்த இராஜகோபாலச்சாரி, விஸ்வகர்ம சாதியார் தங்கள் பெயருக்குப் பின்னால் ”ஆச்சாரி” என்று போடக்கூடாது; ”ஆசாரி” என்றுதான் போடவேண்டும் என்று உத்திரவு போட்டார்.
“நீ பூணூல் போட்டுக்க, உச்சி குடுமி வைச்சுக்க... ஆனால் சமூகத்தில் உன் இடம் எப்போதுமே ‘ஆசாரி’ தானேயொழிய ‘ஆச்சாரி’ கிடையாது என்பதுதான் இதன் பொருள். இது ஆசாரிகளுக்கு மட்டுமல்ல குயவர்கள், செட்டியார்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
அதுமட்டுமல்ல சூதிரர்கள், பஞ்சமர்கள் தவிர பூணூல் போடும் தகுதியுள்ள சத்திரியர்கள் மற்றும் வைசியர்களும் கூட பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக் கொண்டுதான் பூணூல் போட முடியும்.
“பிராமணனுக்கு பஞ்சு நூலாலும் சத்திரியனுக்கு சணப்ப நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது (2:44)” என்று மநு தர்மம் கூறுகிறது.
மேலும் பார்ப்பனர்களின் தொழிலான ஓதி வைத்தல், ஓதல், யாகஞ்செய்தல், யாகஞ் செய்வித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்றவற்றில் ஓதிவைத்தல், யாகஞ் செய்வித்தல், தானம் வாங்குதல் போன்றவற்றை சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் மறுக்கின்றது.
நிலைமை இப்படி இருக்கும் போது பூணூல் போடுவதில் இருந்து மட்டுமல்ல இந்து மதத்தில் இருந்தே விலக்கப்பட்ட பஞ்சர்மர்களுக்கு பூணூல் போடுவதால் என்ன சமூக மாற்றம் நடந்துவிடப் போகின்றது?
பார்ப்பன பாரதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கனகலிங்கம் என்பவருக்குப் பூணூல் போட்டு, காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து அவரை பார்ப்பனராக அறிவித்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. அதனால் என்ன நடந்துவிட்டது? சேரிகள் எல்லாம் அக்கிரகாரங்களாக மாறி விட்டதா?
கனகலிங்கத்தின் வாரிசுகள் இன்னும் சேரிகளில்தானே இருக்கின்றார்கள். இன்னும் அவர்களால் ஊர் பொதுக்கோயிலில் நுழைய முடியவில்லையே! அவர்கள் பார்ப்பன வீட்டுப் பெண்களை அல்ல, சூத்திர வீட்டுப் பெண்களை காதலித்தாலே அவர்களின் உடல் இரயில்வே தண்டவாளங்களில்தானே கிடக்கின்றது!
கனகலிங்கத்தின் வாரிசுகள் ஆளுநாராகவோ, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ, முதலமைச்சராகவோ, பிரதமராகவோ வர முடியவில்லையே! ஏன் இந்துக்களின் ஒற்றுமையைப் பேசும் ஆர்.எஸ்.எஸ்சின் தலைமைப் பொறுப்பில் இதுவரை ஒரு தலித் கூட வந்ததில்லையே!
தலித்துகளுக்கு பூணூல் போடுவதற்கு முன்னால் ஏன் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஒரு தலித்தை நியமிக்கக் கூடாது? ஒருவேளை அப்படி செய்வதற்கு எந்த மந்திரமும் பார்ப்பனர்களிடம் இல்லையா?
பூணூல் போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி “வேதத்தில் நாம் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை. அனைவரும் சமமானவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும் பின்னர் வந்தவர்களே பிரிவினையை உண்டாக்கி, நான் பெரியவன் நீ தாழ்ந்தவன் என மாற்றியதாகவும் இது மிகவும் அவமானகரமான செயல் என்றும் கூறினார். மேலும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழித்தும் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருவதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
ஆளுநர் ரவி மிகப்பெரிய பொய்யர் என்பதும், தலித்துகளை ஆர்.எஸ்.எஸ்சின் அடியாள் படையாக மாற்ற எந்த எல்லைக்கும் சென்று பித்தலாட்டங்கள் பேசி மயக்குபவர் என்பதும் நூறு சதவீதம் உண்மையாகும்.
வேதத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேறுபாடு உண்மையில் இல்லையா?
ரிக்வேதத்தின் 10.90 வது பாடல், சுக்ல யஜுர்வேத சம்ஹிதையில் 31.1-16 மற்றும் அதர்வ வேத சம்ஹிதை 19.6 ஆகியவற்றிலும் காணப்படும் பாடல்களில் எல்லாவற்றிலும் “அவரது முகம் ப்ராமணனாக ஆயிற்று. கைகள் க்ஷத்ரியனாக ஆயின. தொடைகள் வைசியனாக ஆயின. அவரது பாதங்களிலிருந்து சூத்திரன் தோன்றினான்” என்று உள்ளதே இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?
இதை எல்லாம் இடைச்செருகல் என மறுக்கலாம். ஆனால் இன்றுவரையிலும் அதைத்தானே பார்ப்பனக் கும்பல் கடைபிடித்து வருகின்றது. இன்றுவரையிலும் பிறப்பின் அடிப்படையில் தன்னை சமூகத்தில் அனைவருக்கும் மேலானவனாக காட்டிக் கொள்வதோடு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தும் கும்பலாகவும் உள்ளது.
பூணூல் போடுவதைவிட உண்மையில் தலித்துகளின் நலனில் அவர்களின் சமூக விடுதலையில் அக்கறை இருந்தால் நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமத்திற்கு சென்றதற்குப் பதிலாக விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு அல்லவா சென்றிருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே சுமார் 80 கிலோ மீட்டர்கள்தான் வித்தியாசம்.
பூணூல் போடுவதைவிட மிக முக்கியம் அதே சாதி மக்கள் அங்கே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதுதான். ஆனால் இதுவரை எவானது ஒரு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி சங்கி அங்கு சென்றிருக்கின்றானா?
யாரை ஏமாற்றுவதற்கு இந்த பூணூல் போடும் நாடகம்? பத்து அப்பாவிகளைப் பிடித்து பூணூல் போட்டு விட்டால் சங்கி கும்பல் தலித்துகளுக்கு நண்பன் என மக்கள் நம்பி விடுவார்களா?.
ஆர்.எஸ்.எஸ், பிஜேபி சங்கி கும்பலின் தலித் பாசம் தெரியாததா? வெளியே இருந்து சாப்பாடு வாங்கிச் சென்று தலித் வீட்டில் சாப்பிடுவதையும், அவர்களின் வீட்டில் தண்ணீர்கூட குடிக்க மறுப்பதையும், மீறி சாப்பாடு தந்தால் அதை வாங்கி வைத்துக் கொண்டு ஊருக்கு வெளியே கொட்டிச் செல்வதையும் நாம் பார்த்துதானே வந்திருக்கின்றோம்.
இவை எல்லாம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக சங்கி கும்பல் நடத்தும் நாடகங்கள் ஆகும்.
ரவி மட்டுமல்ல, ஒரு சில தினங்களுக்கு முன்னால் குஜராத் மாநிலம், வதோதராவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே,
“அனைத்து இந்துக் கோவிலிலும் அனைவருக்கும் நுழைய உரிமை உண்டு. அனைத்து நீர் ஆதாரத்திலிருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதிப் பாகுபாட்டின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, ஏனெனில் அது ஒட்டுமொத்த இந்து சமூகத்திற்கும், சாதியப் பாகுபாடு என்பது அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும்” எனப் பேசினார்.
ஏன் ஆளுநர் ரவியோ, அண்ணாமலையோ, அவரை மேல்பாதி கிராமத்திற்கு வந்து கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தச் சொல்லக் கூடாது? தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்திற்குச் சென்று போராட்டம் நடத்த சொல்லக் கூடாதா?
எப்போதுமே தேர்தல் காலங்களில் சங்கி கும்பலுக்கு தலித்துகள், பழங்குடியின மக்கள் மேல் ஒரு அன்பும் பாசமும் பீறிக்கொண்டு வரும். அந்த பாசமும், அன்பும் தேர்தல் முடிந்தவுடன் வந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
ஆளுநர் ரவியின் பித்தலாட்ட நாடகங்கள் அதன் வரம்புகளை மீறி சென்று கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு மக்களுக்கு பூணூல் போடுவது என்பதெல்லாம் உச்சபட்ச பார்ப்பனக் கொழுப்பின் வெளிப்பாடாகும்.
பூணூலை புனிதமாக நினைத்து அதை அடுத்தவர்களுக்கு போடுவதற்கு ஆளுநர் ரவிக்கு உரிமை இருக்கும் போது, அதை மயிரளவுக்குக் கூட மதிக்காதவர்கள் அதை அறுப்பதற்கும் உரிமை உண்டு என்பதை ரவி ஒப்புக் கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதிய அடையாளங்கள் அனைத்துமே அழிக்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் மலம் அள்ள வேண்டும், செருப்பு தைக்க வேண்டும், முடிவெட்ட வேண்டும், செத்த மாட்டை தூக்க வேண்டும், இழவு செய்தி சொல்ல வேண்டும், பறை அடிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஒழிக்க வேண்டும்.
அதை எல்லாம் செய்யத் துப்பில்லாமல் இந்த பூணூல் போடும் கேடுகெட்ட அயோக்கியத்தனமான வேலையைச் செய்யும் ஆளுநரையும், அவருக்குத் துணையாக இருக்கும் சங்கி கும்பலையும் தமிழ்நாட்டு மக்கள் ஒரு அற்ப புழுவாக நினைத்து கடந்து போக வேண்டும்.
- செ.கார்கி