ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் (DOPT) 2023-24ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றிய ஆட்சியில் வேலை, பதவி உயர்வுத் தொடர்பானத் தரவுகள் முழுமையாக இருட்டடிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வெளியிடப் படும் அறிக்கையில், பட்டியலினம், பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், ஏ.பி.சி.டி.பிரிவு பதவிகளில் எவ்வளவு சதவீதம் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் இடம்பெறும். இவ்வாண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த அத்தியாயம் ஏன் இடம் பெறவில்லை என்று ஆங்கில ‘இந்து’ ஏடு எழுத்துப்பூர்வக் கேள்விக்கு, துறையிடம் இருந்து பதில் இல்லை. டெல்லியில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் பங்கேற்ற சமூகநீதித் தலைவர்கள், இதைக் குறிப்பிட்டுக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேசிய பிருந்தா காரத், “விளிம்புநிலை மக்களை அதிகாரமற்றவர்களாக்கும் சதி நடக்கிறது. அவர்களைப் பற்றிய தகவல்கள் முழுமையாக இருட்டடிக்கப்பட்டதால் அவர்கள் நீதிமன்றம் செல்லும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியாக உள்ள இடங்கள் பற்றி அவர்களுக்கே தெரிவிக்கப்படவில்லை” என்றார்.
ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் விகாஸ் ராவ் பேசுகையில், 2018 முதலே முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. நிதி அமைச்சகத்தின் ஊதியம் வழங்கும் ஆய்வு ஆவணங்களைப் பரிசோதித்துப் பார்த்த போது, 30 லட்சத்துக்குக் கூடுதலாக ஒன்றிய ஆட்சியில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதாகக் காணப்படுகிறது. ஆனால் 2018ஆம் ஆண்டு துறையின் ஆண்டு அறிக்கையில் 19 லட்சம் பணியாளர்கள் பற்றிய விவரங்களே தரப்படுகின்றன. அவர்களுக்கான இட ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய 11 லட்சம் பணியாளர்கள் பற்றிய தகவல்களே இல்லை. அவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறார்களா? அல்லது வேலையை விட்டு வெளியேறிவிட்டார்களா? என்ற செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன என்றார்.
அனைத்து அரசுப் பணிகள், அமைச்சகப் பணிகள், வங்கிகள், கல்வி மற்றும் அரசு நிதி நிறுவனங்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், திட்டப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணிகள், தனியார் துறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றுவோர் மற்றும் இடஒதுக்கீடு பற்றிய முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.
- விடுதலை இராசேந்திரன்