கூட்டாட்சி நிதிமுறை அழுத்தத்தைக் குறைத்திட உறுதியான நடவடிக்கைகள் - பிரவின் சக்கரவர்த்தி

ஒருவர் தன் நாட்டாட்சி எல்லைக்குள் வேறொரு வெளிநாட்டவரைப் பெயரளவில் நுழைய அனுமதித்தால் விரைவில் அவரே முழுதாக நாட்டை விட்டுத் துரத்தப்படும் சூழல் நேரிடும் என்பதை (ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதாம் - சொலவடை - மொழிபெயர்ப்பாளரின் சேர்க்கை) ஒரு ஒட்டகத்தின் மூக்குடன் உருவகப் படுத்தும் ஓர் அரேபியப் பழங்கதை விவரிக்கிறது. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வருவாய் ஈட்டுதல், வருவாய் பகிர்வுத் தொடர்பு ‘ஒட்டக மூக்கு’ நோய் அறிகுறியாக விரைந்து மாறுவதாகத் தெரிகிறது.

parliament 600மாநிலங்களின் வரிவிதிப்பு அதிகாரங்களுக்குத், தீங்கு விளைவிக்காது என்ற தோற்றத்துடன் ஒன்றிய அரசின் பொருள் - சேவை வரி (G.S.T) நுழைக்கப்பட்டு விட்டதை அடுத்து, ஒன்றிய அரசு வலிமை பெற்றுக் கொண்டு அது மாநிலங்களின் வரியீட்டும் அதிகாரங்களையும் அவற்றிடமிருந்து முற்றிலுமாகத் தூக்கி எறிந்துவிட்டது. இது, நாடு மிகவும் மோசமான பிளவுச் சிந்தையிலுள்ளது என்ற ஓர் இடர் விழைவிக்கும் முன்னேற்றமாகும்.

இந்திய ஒன்றியம் என்பது அடிப்படையில் மாநிலங்களின் கூட்டாகும். ஒவ்வொரு மாநில மக்களும் தத்தம் மாநில அரசுகளைத் தன்னுரிமை பெற்றவையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு திறமையாக ஆட்சி நடத்துவதும், அந்த வாக்காளப் பெருமக்களுக்குப் பதில் சொல்லவும் கடமை ஏற்றுக் கொள்வதும் அதன் முதன்மையான பொறுப்பாகும். தம் குடிமக்களிடம் வரிவிதித்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும், அதை மக்களின் நலனுக்காக முறையாகச் செலவிடுவதும் அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களாகும்.

சென்ற அய்ந்தாண்டுகளில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளிடமிருந்து அவற்றின் வரிவிதிக்கும் அதிகாரங்கள் யாவும் முற்றிலும் பறித்துக் கொள்ளப்பட்டு விட்டது. மேலும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு செலவு செய்ய வேண்டிய பொறுப்புகளிலிருந்து கைகழுவிக் கொள்வதற்கான முயற்சிகளைப் படிப்படியாக முயற்சித்து வருகிறது. மேலும் மாநில அரசுகளின் செலவு செய்யும் அதிகாரங்கள் முடக்கப்படுவதாகவும் பேசப்படுகின்றது.

மதிய உணவுத் திட்டம் தந்த பாடம் : மாநிலத்திலிருந்த 52000 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக மதிய உணவுத் திட்டத்தை 70 இலக்கம் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துவதற்காக 1982-இல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் விரும்பினார். ரூ.150 கோடி அதிகச் செலவு பிடிக்கும் அத்திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நிதி இல்லை. எனவே அந்த நிதியைத் திரட்டத் தமிழ்நாட்டில் விற்கப்பட்ட பொருள்கள் மீது அதிகப்படியான வரிவிதிக்க எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார். அந்தத் திட்டம் அடுத்து பதவிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் தொடரப்பட்டது. இதன் விளைவாய் 1981-இல் 54 விழுக்காடாக இருந்த மாநிலத்தின் படிப்பறிவு 2011-இல் 83-ஆக உயர்ந்தது. இவ்வாறாக, மூன்று பத்தாண்டுகளில் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் அதிகம் படிப்பறிவு பெற்ற மாநிலங்களுள் ஒன்றானது.

எம்.ஜி.ஆரும் மற்ற முதலமைச்சர்களும் மதிய உணவுத் திட்டத்தை நிறைவேற்றவும், அதற்கான நிதி ஆதாரத்தைப் பெருக்க அதிகப்படியான விற்பனை வரி விதிப்பதற்கும் தில்லிக்கு ஓடவில்லை. அது சென்னையில் முடிவானது; உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இந்தியாவில் எம்.ஜி.ஆர். இசைவு பெறுவதற்குத் தில்லிக்குச் செல்ல வேண்டும்.

அரசு வருவாயில் முதன்மையாக 80 விழுக்காட்டுக்கு மேல் வருமான வரி (நேர்முக வரி) மற்றும் விற்பனை வரி (மறைமுக வரி) வாயிலாகத்தான் கிடைக்கிறது. இந்தியாவிலுள்ள மாநில அரசுகளுக்கு வருமான வரி விதிப்பதற்கு அதிகாரம் இல்லை. மாநில அரசுகளின் மூலவரியாகக் கருதப்படும் மறைமுக வரி விதிப்புக்குள் ஒன்றிய அரசு பொருள் - சேவை வரி வழி தன்னுடைய மூக்கை நுழைத்து விட்டது. மாநிலங்கள் மறைமுக வரி விதிக்கும் தங்கள் அதிகாரத்தை இழந்து நிற்கின்றன. மாறாக, அவை வரி அளவை விதிப்பதற்கும் வருவாய் பெறுவதற்கும் பொய்யான வஞ்சகக் கூட்டுறவு கூட்டரசு என்ற பெயரில் பொருள் - சேவை வரி குழுவை எதிர் நோக்கியுள்ளன. எனவே இந்தியாவில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் வருமான வரி விதிக்க முடியாது; விற்பனை வரியும் விதிக்க முடியாது; அமெரிக்கர்கள் சொல்வது போன்று வரி விதிக்க முடியாத பிரதிநிதித்துவம்.

திட்டமிட்ட நடவடிக்கைகள் : மேல் தாழ்வாரத்தில் மூக்கை நுழைத்த ஒன்றிய அரசு தன் கைகளையும் கால்களையும் உள்ளே நீட்டியுள்ளது. தன் பிடியை அதிகரித்துக் கொள்ள மொத்த வரி வருவாய் குவிப்பிலிருந்து பாதுகாப்புக்கென்று நிரந்தர செலவினத்திற்காக நிதியை ஒதுக்குவதற்காக இப்போது ஒன்றிய அரசு முனைந்துள்ளது. மொத்த வருவாயில் 52 விழுக்காட்டை ஒன்றிய அரசு தனக்கென்றும் 42 விழுக்காட்டை மட்டும் மாநிலங்களுக்கும் ஒன்றிய பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றது. அதற்கென்றுள்ள 52 விழுக்காட்டு வருவாயிலிருந்து பாதுகாப்புத் துறைக்குச் செலவளிக்காமல் தற்போது ஒன்றிய அரசு செலவிடுவதும் அன்றி அதை அனைத்து மாநிலங்களின் மீதும் சுமத்த விரும்புகின்றது. மேலும் தன் செலவுகளை அதிகப்படுத்தும் நோக்கில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாய் அளவை இன்னும் குறைத்திடலாம். தேசியம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கூட்டுறவுக் கூட்டரசு என்ற போர்வையில் வரி விதிப்பு அதிகாரங்களில் நுழைத்து விட்டது போன்று மாநிலங்களின் ஒட்டுமொத்த வரி வருவாய்த் தொகுப்பையும் வலுவிழக்கச் செய்ய விரும்புகிறது.

இதுவும் போதாது என்று முதன்மை அமைச்சர் பொருளாதாரக் குழுவின் உதவியுடன் பொருள் சேவை வரி குழுவைப் போன்று செலவினக் குழு ஒன்றையும் உருவாக்குவதாக பேசப்படுகிறது. இக்கருத்தினால் மாநில அரசுகள் வரி விதிக்கும் அதிகாரங்களை இழப்பது மட்டுமின்றி, அவை செலவு செய்யும் அவற்றிற்கென்ற அதிகாரத்தையும் இழக்க நேரிடும்.

நிதி திரட்டுதலும் அல்லது மக்கள் நலனுக்கான திட்டங்களுக்குச் செலவிடவும் தன் விருப்புரிமை அற்றதாகி விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தம் அரசாட்சி உரிமையை உண்மையில் தில்லியிடம் கையளிப்பதாகி விடும். இது இன்றைய மாநில அரசுகள் பிரித்தானியப் பேரரசு காலத்து மாகாண அரசுகளிலிருந்து வேறுபட்டவையல்ல என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

வருமான வரி விதிக்கும் அதிகாரங்கள் : இன்றைய இந்திய ஒன்றியத்தில் அரசியல் அதிகாரக் குவிப்பு ஒருமுனைப்படுத்தப்படுவதாகத் தோன்றினாலும் பல் வேறு மாநிலங்களுள் மிகப்பெரும் பொருளாதாரப் பண்பாட்டுப் பன்முகத் தன்மை உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்திய ஒன்றியப் பொருளாதாரம் முழுமையையும் ஒன்றிய அரசு தில்லியிலிருந்து ஆண்டுவிடலாம் என்றெண்ணுவது மட்டு மீறிய தப்பெண்ணம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளையும் தலைவர்களையும் நெடுநாள்களுககு நிதி அதிகாரம் அற்றவர்களாகப் பொம்மைகளாக வைத்துக் கொள்ள முடியாது. ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான இந்த கூட்டரசு நிதிநிலைப் பிறழ்வு இன்னும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். நாடு முழுவதும் பரவிடும். சம அமைதி நிலையைத் திரும்பப் பெற மாநில அரசுகளுக்கு வருமான வரி விதிக்கும் அதிகாரங்களை வழங்கிடுவது ஒரு திடமான தீர்வாகும்.

குடியரசு நாடானதிலிருந்து மாநில அரசுகள் மிகச் சிறு அளவிலான வேளாண்மை வரிகள் விதிப்பதைத் தவிர்த்து குடிமக்கள் வருமானத்தின் மீது வரி விதிக்கும் அதிகாரம் அற்றவை. அமெரிக்க அய்க்கிய நாடுகள் போன்ற பெரிய சனநாயக நாடுகளில் மாநில அரசுகளும், ஏன் உள்ளாட்சி அரசுகளும் வருமான வரி விதிக்கும் உரிமை பெற்றவையாக உள்ளன. பெருமளவிலான பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசுகள் தத்தம் தேவைகளுக்கும், முன்னுரிமைகளுக்கும் தக்க வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கும் செலவுகள் செய்வதற்கும் அவற்றிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்பது தவிர்க்க முடியாத தேவை.

நேரடி வரி விதிப்புக்கான ஒரு புதிய சட்ட வரைவுத் தொகுப்பு அண்மையில் ஒன்றிய அரசின் நிதியமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு நேரடி வரி விதிக்கும் அதிகாரங்களை வழங்கிடும் வகையில் ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தைத் தாங்கள் சரி என்று கருதும் வகையில் திருத்திடுவதற்கு இதுவே சரியான நேரமாகும்.

தற்போதைய அரசின் பல்வேறு அறிவாற்றல் சார்ந்த செயல்பாடுகளுள் ஒரு வேளை மிகவும் பெரிதாக அய்யுறத்தக்கதாகச் கருதப்படுவதாவது ஒற்றுமைக்கும் ஓர்மைக்கும் இடையிலான வேற்றுமையைப் புரிந்து கொள்ளாத தன்மை எனலாம். நம்முடைய நாடு போன்றதில் பன்மைத் தன்மையைக் கொண்டாடுவதே மிகப்பெரும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக அமையும். இலண்டன் பேரரசுக் காலங்கள் கடந்து விட்டன. இது காந்தி நகர், சென்னை, இலக்னோ, கல்கத்தா ஆகியவற்றின் காலமாகும்.

நன்றி : தி இந்து (ஆங்கிலம்), 23.10.2019

தமிழில் : இரா.பச்சமலை

Pin It