‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று ஊர்தோறும் சுவர்களில் எழுதி, திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்று சூளுரைத்த பா.ஜ.க. தான் இப்போது அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் எடப்பாடி நல்லாட்சியையும் ‘தேசபக்த’ மோடி ஆட்சியையும் கொண்டு வருவோம் என்று பேசி வருகிறது.

2018 ஜனவரி 26, 27, 28 தேதிகளில் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து இந்து சாம்ராஜ்யம் அமைக்க பல கோடி ரூபாய் செலவில் பார்ப்பன புரோகிதர்களை வைத்து யாகம் நடத்தியது பா.ஜ.க. ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள ஏ.பி.டி. பள்ளி வளாகத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் தகரப் பந்தல் அமைத்து சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 300 பார்ப்பனப் புரோகிதர்கள் வேதம் ஓத நடத்தப்பட்டது அந்த யாகம்.

இராமாயணத்தில் - இராமன் செய்த யாகத்துக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் யாகம் இதுதான் என்றார்கள், யாகம் நடத்திய பா.ஜ.க.வினர், காஞ்சி இளைய சங்கராச்சாரி விஜயேந்திரன் தலைமையில் இலட்சுமி மகா யாகம்! (அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்ததால் உருவான எதிர்ப்பு காரணமாக பயந்துபோய் நிகழ்ச்சிக்கு வரவில்லை) இரண்டாம் நாள் - வேலூர் பொற்கோயில் சக்தி அம்மா தலைமையிலும், மூன்றாம் நாள் - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்ற ஆன்மிக வியாபாரப் பார்ப்பனர் தலைமையில் அஸ்வமேத ராஜ சூய யாகமும் நடந்தது.

யாகத்தில் பா.ஜ.க. தமிழக விவசாய அணியின் பொதுச் செயலாளர் கோவிந்த ராஜு, மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனராம். “தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி இராஜ்யத்தைப் பிடிக்க கட்சித் தலைமையின் ஆலோசனைப்படி இந்த யாகத்தை நடத்தினோம். விரைவில் பி.ஜே.பி. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்” என்று ஈரோட்டில் உள்ள பா.ஜ.க.வினர் கூறினார்கள். (செய்திக்கு ஆதாரம்: ஜுனியர் விகடன் 7.2.2018) யாக பூஜையில் பா.ஜ.க. தலைவர்களோடு பங்கேற்கும் படத்தையும் ஜூனியர் விகடன் வெளியிட்டது.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வீழ்த்த பார்ப்பனர்களை வைத்து யாகம் நடத்திய பா.ஜ.க. தான் இப்போது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி போட்டுக் கொண்டு ஓட்டுக் கேட்டு வருகிறது. கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கம் எங்கே போனது? அதையும் யாக நெருப்பில் போட்டு எரித்து விட்டீர்களா?

இப்போது சிவகங்கையில் போட்டியிடும் பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா, நாகையில் ஒரு கோயிலில் தனது குடும்பத்துடன் ‘சத்ரு சம்ஹார யாகம்’ நடத்தியிருக்கிறார். எதிரிகளை அழிப்பதற்கான இந்த யாகத்தை தனது உள்ளூர் கட்சிக்காரர்களுக்கே தெரியாமல் நடத்தி யிருக்கிறார். ‘சூத்திரர்’களை எப்படி யாகத்துக்கு அழைப்பார்?

யாகத்துக்கு சக்தி இருந்தால் தமிழக ‘இராஜ்யம்’ தானாக உங்களது காலடியில் வந்து சேர வேண்டுமே? பிறகு ஏன் ‘கால்கடுக்கக்’ கூட்டணிக் கதவு வாசலில் தவம் கிடந்தீர்கள்?

Pin It