நாடு முழுதும் மதக்கலவரங்களைத் தூண்டி விட்டு வன்முறைகளை நடத்தி வரும் சங்பரிவார்களின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில பொதுக் குழு சேலத்தில் கூடியபோது மதவெறியை எதிர்க்கும் மனிதநேய உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பையும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். பெரியார் திராவிடர் கழகம், சுற்றுச்சூழல், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த 250க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

அண்மைக்காலமாக நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பா.ஜ.க. சங்பரிவாரங்கள், மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். மதக் கலவரங்களை உருவாக்கி படுகொலைகளை நடத்தி, மத அடிப்படையில் வாக்காளர்களை கூறு போடுவதே இவர்களின் நோக்கம். தமிழ்நாட்டிலும் பெரியார் கருத்துப் பரப்பும் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, அதற்கு 'இந்துக்களின் தன்னெழுச்சி' என்று பார்ப்பனர்கள் இல.கணேசன், ராம.கோபாலன் போன்றோர், அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சங். பரிவார்களின் அரசியல் அமைப்பான பா.ஜ.க. சேலத்தில் மாநில பொதுக் குழுவை கடந்த 27 ஆம் தேதி கூட்டியது. பா.ஜ.க.வின் - அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், இதில் பங்கேற்க வருகை தந்தார். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, மதவெறிக் களமாக மாற்றிட திட்டமிட்டு வன்முறைகளை நடத்தி வரும், பா.ஜ.க.வின் செயற்குழு தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நடத்திடக் கூடாது என்று, எதிர்ப்பு தெரிவிக்க, மதச்சார்பற்ற மதவெறிக் கலவரங்களை எதிர்க்கும் அமைப்புகள் முடிவு செய்தன.

பெரியார் திராவிடர் கழகம், 'சேலமே குரல் கொடு', குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ் தேசிய இயக்கம், தமிழக இளைஞர் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் முதல் கட்டமாக சேலத்தில் 23 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பேட்டியில், "சங்பரிவாரின் அரசியல் முகமான பா.ஜ.க.வின் மாநில செயற்குழு சேலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் நடத்தவிட மாட்டோம்; அமைதிப் பூங்காவான தமிழகத்தை வன்முறைக் களமாக்கிடும், எந்த சிறு நிகழ்வும், தமிழகத்தில் நடக்கக் கூடாது என்று அமைதி விரும்பிகளாகிய நாங்கள் அறிவிக்கிறோம்; பொதுக்குழு நடத்தப்படுமானால் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம்" என்று அறிவித்தார்.

அடுத்த நாளே - 'தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்ற விரும்பும் பா.ஜ.க.வின் பொதுக் குழுவை அனுமதிக்காதே' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஏராளம் ஒட்டப்பட்டன. பத்திரிகையாளர்கள் சுவரொட்டிகளை படம் பிடித்து, பத்திரிகைகளில் வெளியிடவே, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் செய்தி வேகமாகப் பரவியது. அதிர்ச்சியடைந்த மதவெறி சக்திகள் - கழகத்தின் சுவரொட்டிகள் மீது பா.ஜ.க. பொதுக்குழு சுவரொட்டிகளை ஒட்டியதோடு, கழக சுவரொட்டிகளை கிழிக்கத் தொடங்கினர்.

கழகத் தோழர்கள் சுவரொட்டி கிழிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக சுவரொட்டிகளை அடித்து, ஒட்டி, பதிலடி தந்தனர். சுற்றுச்சூழல்களை நாசப்படுத்தி, மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வரும் 'கெம்பிளாஸ்ட்' நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வரும் 'கோனூர் விவசாயிகள் சங்கம்' மக்களின் வாழ்வுரிமையை பறித்து, நிலங்களை பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 'தாரை' வார்ப்பதை எதிர்த்துப் போராடி வரும் 'கஞ்சமலை பாதுகாப்புக் குழு'வினரும், மனித உரிமைக்கும், சுற்றுச் சூழலுக்கும் எதிராக செயல்படும் மதவெறி சக்திகளை எதிர்த்து இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த காரணத்தால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி, மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் விநாயக்சென் அவர்களை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. வங்காளியான விநாயக்சென் வேலூர் மருத்துவக் கல்லூரியில் படித்து - சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் மருத்துவப் பணியாற்றி வந்தவர். மனித உரிமைப் போராளி; மனித உரிமைக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவர்; மருத்துவர் விநாயக்சென்னை கைது செய்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கத்தோடும், ஒரிசா, கருநாடகம், தமிழ்நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைக் கண்டித்தும், பா.ஜ.க. பொதுக் குழு நடக்கும் மண்டபத்தின் முன், கறுப்புக்கொடிகளுடன் திரளுவது என முடிவு செய்யப்பட்டது.

'மதத்தின் பெயரால் வன்முறைகளை அரங்கேற்றாதே'; 'மருத்துவர் விநாயக்சென்னை விடுதலை செய்'; 'அமைதியும் நல்லிணக்கமும் மலரட்டும்' என்ற வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு, மார்பிலும், முதுகிலும் தொங்கவிட்டு, தோழர்கள் வந்த காட்சி, பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த மனித உரிமையாளர் பியுஸ் மானஷ் - இவைகளைத் தயாரித்து வழங்கினார்.

சேலம் இரும்பாலை சாலையிலுள்ள ஜகீர் ரெட்டிப்பட்டி எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில், பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இரும்பாலை பிரிவு சாலை அருகே திரண்ட தோழர்கள் மண்டபத்தை நோக்கி, மதவெறி சக்திகளுக்கு எதிராக முழக்கமிட்டு, அணிஅணியாகப் புறப்பட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் முதல் அணியில் வந்த 150 கழகத் தோழர்கள் மண்டபத்தை நெருங்கும் முன்பே காவல்துறை தடுத்து கைது செய்தது. சேலம் மாவட்டக் கழகத் தலைவர் மார்ட்டின் தலைமையில் இரண்டாவது அணியில் 50 தோழர்கள் கறுப்புக் கொடியுடன் புறப்பட்டு, வேறு வழியாக மண்டபத்தை அடைந்து, மண்டப வாயிலின் அருகே கறுப்புக் கொடிகளுடன் முழக்கமிட்டபோது அதிர்ச்சியடைந்த காவல்துறை கழகத்தினரை சுற்றி வளைத்து போலீஸ் வேனில் ஏற்றியது.

மூன்றாவது அணியில் 50 தோழர்கள் மாவட்டக் கழக அமைப்பாளர் பாலன் தலைமையில் மண்டபத்தை நெருங்கி வாயிலிலே கூடியபோது காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது. கோனூர் விவசாயிகள் சங்கத் தோழர்கள் 25 பேர் மாதேஷ் தலைமையில் - கழுத்தில், கோரிக்கைப் பதாகைகளை மாட்டிக் கொண்டு மண்டபத்தை நோக்கி வந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கஞ்சமலை பாதுகாப்புக் குழுவினர் தோழர் கண்ணன் தலைமையில் வந்தபோது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 250க்கும் மேற்பட்ட தோழர்கள் திருவாக்கவுண்டனூர் சாலை யிலுள்ள பி.என்.சி.ஜி. திருமணமண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, 30 நிமிட நேரம் கழித்து, சேலம் இளம்பிள்ளையைச் சார்ந்த கழகத் தோழர் மணிமாறன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் போராட்டத்தில் பங்கேற்க வந்தனர். மணிமாறன் கருப்புச்சட்டை அணிந்திருந்தார். மண்டபத்தின் வழியாக வந்தபோது, மோட்டார் சைக்கிளை மெதுவாக நகர்த்தி, கழகத் தோழர்கள் நிற்கிறார்களா என்ற தேடிக் கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க.வினர் கூட்டமாக ஓடிவந்து, தனியாக சிக்கிய தோழரை தாக்கத் தொடங்கினர்.

ஆடிட்டர் ரமேஷ் என்ற பா.ஜ.க. பார்ப்பனர், 'அவனைப் பிடித்து நொறுக்குங்கடா' என்று கூச்சல் போட்டுக் கொண்டு முதலில் வெளியே ஓடிவந்தார். கும்பல் மோட்டார் சைக்கிளைப் பிடித்துத் தள்ளியது; கழகத் தோழர் மணிமாறனைத் தாக்கியபோது, காவல்துறை தோழரை மீட்டு, திருமண மண்டபத்துக்கு அனுப்பி வைத்தது.

வெறி பிடித்த மதவெறி சக்திகள் - சாய்ந்து கிடந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததோடு, வண்டியின் பெட்ரோல் டேங்க் மீது கல்லைத் தூக்கிப் போட்டு உடைத்தது. பெரியார் படம் போட்டு எழுதப்பட்டிருந்த வண்டி எண் அறிவிப்பு பலகையையும் உடைத்தது. கையில் தடி கற்களுடன் திரிந்த மதவெறியர்கள் கழகத்தினரை கைது செய்து ஏற்றி சென்ற காவல்துறை வேன்கள் மீது கற்களை வீசினர். ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு, அந்தப் பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர் களிடையே கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாதேஷ் (கோனூர் விவசாயிகள் சங்கம்), செந்தில் (குடியுரிமை பாதுகாப்பு நடுவம்), கண்ணன் (கஞ்சமலை பாதுகாப்பு இயக்கம்) ஆகியோர் பேசினர்.பா.ஜ.க. சங்பரிவார் கும்பலின் மதவெறி வன் முறைகள் மற்றும் டாக்டர் விநாயக் சென்னின் மக்கள் நலப்பணிகள் பற்றி விரிவாக பேசப்பட்டு கருத்தரங்கம் போல் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜ.க. செயற்குழு மாலை 6.45 மணிக்கு முடியும் வரை, தோழர்கள் திருமண மண்டபத்திலேயே வைக்கப்பட்டு, பிறகு, விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சூரமங்கலம் காவல்நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றனர். கழகத் தோழர் தாக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது பற்றி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையைத் தந்த பிறகே கலைந்து செல்வோம் என்று கழகத்தினர் காவல்நிலைய வாயிலேயே நின்று விட்டனர்.

இரவு 8.30 மணி வரை காவல் நிலையத்திலே இருந்து முதல் தகவல் அறிக்கையின் பிரதியைப் பெற்ற பிறகே - தோழர்கள், கலைந்து சென்றனர். மதவெறி சக்திகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக வன்முறைகளை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டில் கலவரங்களை நடத்தி வந்த சங்பரிவார் - பா.ஜ.க. வன்முறைகளுக்கு எதிராக சேலத்தில் பெரியார் திராவிடர் கழகம் - சுற்றுச் சூழல், மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பு மதச்சார்பின்மையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அமைப்பினரும் தங்கள் மகிழ்ச்சியை நேரிலும், பேசிகள் வழியாகவும் பகிர்ந்து வருகின்றனர்.

திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்களை விடுதலை சிறத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் உஞ்சை அரசன், அரங்க செல்லத் துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர்கள், கவிஞர் தமிழேந்தி, திருச்சி கலியபெருமாள், த.தே.பொ.க. தோழர் பிந்துசாரன் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்து, பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

சூரமங்கலம் காவல் நிலையத்தில் தோழர்கள் திரண்டிருக்கும் செய்தி கிடைத்தவுடன், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் தங்கள் மகிழ்ச்சி, வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

Pin It