பெரியாரை அவமதிப்பு - மதப் பதட்டங்களை உருவாக்கும் வகையில் அடாவடித்தனமாக செயல்பட்டு வரும் எச். ராஜா, தமிழகத்தின் அவமானச் சின்னம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா அவர்கள் ஆளுங்கட்சியின் துணையோடு பி.ஜே.பி-யின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்த வரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியா விலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரைத் தான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.
நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ்ச் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பது தான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.பாரதிய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.
அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல்ரீதியாக - தத்துவ ரீதியாக - கொள்கை ரீதியாக - விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப் படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக் கூடியவர்தான் எச்.ராஜா அவர்கள்.நான் கேட்க விரும்புவது, இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசுகின்ற, ஏன், தந்தை பெரியாரின் சிலைகள் அனைத்தையும் உடைப்பேன் என்று சொல்லுகின்ற, அறிஞர் அண்ணாவை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நம்முடைய திராவிட இயக்கத்தை இழிவுபடுத்தி பேசுகின்ற எச்.ராஜாவிற்கு, இந்தத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய பாடத்தை நீங்கள் புகட்டிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.