பார்ப்பனர்களின் ஒடுக்குமுறை பண்பாடுகளை தமிழர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் பார்ப்பனப் பாசிசம். மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, சட்டத்தையும் அதிகாரத்தையும் காட்டி அச்சுறுத்தி, பார்ப்பன பண்பாடுகளை திணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி ஆட்சி மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அதன் காவல்துறை செயல்பாடுகளும் மோடி ஆட்சியைவிட தீவிரமான மதவாத ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

திராவிடர் கழகம் அவர்களுக்கு சொந்தமான பெரியார் திடலில் விரும்பியவர்கள் தாலியகற்றும், பெண்ணடிமைக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்புதலை நடத்துவதற்கு முன் வந்தால் அதை தமிழக அரசும் காவல்துறையும் ஏன் தடுக்க வேண்டும்?

இந்த நிகழ்வைக்கூட இப்போது நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘சர்வதேச மகளிர் நாளில்’, ‘பெண்களுக்கு தாலி வேண்டுமா?’ என்ற ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருந்தது. அதை ஒளிபரப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்து ‘வெடிகுண்டு’களை வீசக் கிளம்பியது ஒரு கூட்டம். அதன் காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது.

கணவனுக்கு அடங்கிப்போய் ‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ என்று ஒரு பெண் வாழ்ந்தாக வேண்டும் என்றும், அதுவே ‘பண்பாடு’ என்றும் கட்டாயப்படுத்துகிற சமூகத்தில் பெண்களுக்கான நீதியையும் சமத்துவத்தையும் கோரும் உரிமைகளின் வெளிப்பாடுதான் ‘தாலி வேண்டாம்’ என்பது. இந்தக் கருத்தை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கோ, விரும்புகிறவர்கள் பின்பற்று வதற்கோ உரிமைகள் கிடையாது என்று சட்டத்தைக் காட்டி அச்சுறுத்துவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் வாழும் ‘இந்துக்கள்’ அனைவருக்கும் தாங்களே பாதுகாவலர்கள் என்று அறிவித்துக் கொண்டு வெகுசில ‘மதவெறி சக்திகள்’ மிரட்டுகின்றன. அதற்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும், அதன் காவல்துறையும் துணை போகிறது.

திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் வழங்கிய தீர்ப்பு மிகச் சரியானது!

தாலியை விரும்பாதவர்கள், அதை நீக்கிக் கொள்வது அவர்களுக்கான உரிமை என்ற கருத்துரிமைக் கண்ணோட்டத்தில் நிகழ்வுக்கு அனுமதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, அவசர அவசரமாக இரவோடு இரவாக மேல்முறையீடு செய்து இந்த நிகழ்வை தடுத்து நிறுத்திடவே துடித்தது. ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சியில் இந்த விவாதத்தை சில வன்முறை சக்திகள் வெடிகுண்டுகளை வீசி தடுத்தது. அதே ‘திருப்பணி’யை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, ‘காவல்துறை’யை வைத்து தடுக்க முயற்சித்தது.

நீதிபதி டி.அரிபரந்தாமன் தீர்ப்பு வந்தவுடன், தடை ஆணை வராதபோது ‘தாலியகற்றும்’ பெண்ணுரிமைக்கான பரப்புரை நிகழ்வை திராவிடர் கழகம் அமைதியாக பெரியார் திடலில் நடத்தி முடித்தது. காலை 10 மணியளவில் மேல்முறையீட்டில் நீதிமன்றம் தடைவிதித்தவுடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனே நிறுத்தி விட்டார்கள். இவ்வளவுக்கும் பிறகு, நாட்டு வெடிகுண்டு, கடப்பாறைகளுடன் வன்முறை கும்பலை, பெரியார் திடலுக்குள் - 144 தடை அமுலில் இருக்கும்போது, காவல்துறை அனுமதித்தது ஏன்? பெரியார் திடலுக்குள் இருந்த திராவிடர் கழகத் தொண்டர்கள் தற்காப்புக்காக இதை எதிர்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியதே காவல்துறைதான். இதைப் பயன்படுத்தி, திராவிடர் கழகத் தோழர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறார்கள். 10க்கும் மேற்பட்ட தோழர்கள் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் சிறைபடுத்தப்பட்டிருக் கிறார்கள். சமூகத்தில் பெண்களின் அடிமைத்தனத்துக்கு எதிராக ஒரு கருத்துப் பரப்புதலை நடத்துவதற்காக இவ்வளவு ‘தண்டனை’யை அனுபவிக்கத்தான் வேண்டுமா?

தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, தாலி கட்டாத ‘புரோகிதர்’ இல்லாத திருமணம் செல்லும் என்று சுயமரியாதை திருமண சட்டத்தை நிறைவேற்றினார். கட்சியின் பெயரில் அண்ணாவை வைத்துக் கொண்டு, அண்ணா கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராகவே ஆட்சி செயல்படுகிறது என்றால், இது அண்ணா வழியில் நடக்கும் கட்சியும் அல்ல; அண்ணாவின் ஆட்சியும் அல்ல! அண்ணாவுக்கு துரோகம் செய்யும் ஆட்சி!

வரலாற்றில் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டு, பரிதவித்த சமுதாயம், பெண்கள் சமுதாயம். கணவன் இறந்த தீயில் போட்டு மனைவியைக் கொளுத்தினார்கள். கணவன் இறந்த பிறகு, அவன் கட்டிய தாலியை அறுத்து, மொட்டை அடித்து, வளையல்களை உடைத்து, ‘முண்டச்சி’ என்று மூலையில் தள்ளி, குடும்பத்தாலே புறந்தள்ளப் பட்டார்கள். பெண் குழந்தை பிறந்தாலே பாவம் என்று அன்றும் இன்றும் கருவிலேயே அழிக்கிறார்கள். சொத்துரிமை மறுக்கப்பட்டது; படிப்புரிமை பறிக்கப்பட்டது.

இவையெல்லாம் அன்றைக்கு ‘மதம், பண்பாடு, பழக்க வழக்கம்’ என்ற பெயரால் திணிக்கப்பட்ட கொடுமைகள். இந்த அவலங்களுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் நடந்த பிறகுதான் தடை சட்டங்கள் வந்தன. இந்தப் போராட்டங்களின் நீட்சிதான் ‘தாலி அகற்றும்’ நிகழ்வு.

‘மக்களின் முதல்வர்’ என்று அ.இ.அ.தி.மு.க.வினால் அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - ஒரு பெண். அவரது ஆட்சியில் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதே குற்றமா? அதற்குப் பரிசு அடக்குமுறையா?

தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான பார்ப்பன பாசிசம் காலூன்றத் தொடங்குவதும் அதற்கு ஆளும் கட்சியும் காவல்துறையும் துணை போவதும் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்தாகும். இந்த அடக்கு முறைகளுக்கு எதிராக மனித உரிமை, கருத்துரிமை, சமூக மாற்றம் மற்றும் பெண்ணுரிமைக்காக செயல்படும் இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க முன்வரவேண்டும் என்ற திராவிடர் விடுதலைக் கழக சார்பில் வலியுறுத்துகிறோம்.

Pin It