பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல், திருச் செங்கோடு பெண்களின் ‘ஒழுக்கத் துக்கே’ சவால் விடுகிறது என்று கோவை ஈஸ்வரன் போன்ற கொங்கு வேளாள கவுண்டர் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, நாவலை முடக்கி, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரையும் முடக்கி, மன்னிப்புக் கேட்கச் செய்தனர். குழந்தை இல்லாத மனைவி, திருச் செங்கோடு தேர்த் திருவிழாவில் வேறு இளைஞருடன் உறவு கொண்டு குழந்தைப் பெறும் வழக்கம் இருந்தது என்ற தொன்மக் கதையை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் இது. ஜாதி வெறியர்களின் இந்த மிரட்டலுக்கு இராம கோபாலன் போன்ற ‘சங்பரிவார்’ பார்ப்பனர்களும் சேர்ந்து கொண்டு இப்பிரச்சினையை ஊதிவிட்டனர். கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர் களோடு உறவு கொண்டு ஏனைய ஜாதியினர் குழந்தைப் பெற்றுக் கொள்வதை பெருமையாகவே கருதினர். அப்படி ஒரு பழக்கம் - அங்கே நடைமுறையில் இருந்ததை அம்பேத்கரே எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தலை வராகவும் தத்துவ வழிகாட்டியாக வும் இருந்த கோல்வாக்கரே இதை உறுதி செய்திருப்பதோடு, அதை ஆதரித்தும் எழுதியுள்ள ஆவணம் ஒன்று கிடைத்திருக்கிறது.

குஜராத் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் துறை மாணவர் களிடம் 1960 டிசம்பர் 7ஆம் தேதி கோல்வாக்கர் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

“இன்று கலப்பினங்களை உருவாக்கும் சோதனைகள் விலங்கு களின் மீதுதான் செய்யப்படுகின்றன. அத்தகைய சோதனைகளை மனிதர்கள் மீது செய்து பார்க்கும் துணிவு, நவீன விஞ்ஞானிகள் என்று சொல்லப்படுவோருக்குக்கூட இல்லை. இன்று மனிதர்களிடையே கலப்பினத்தை நாம் காண்கிறோம் என்றால், அது அறிவியல் சோதனையால் ஏற்பட்ட விளைவு அல்ல; கீழ்த்தரமான காமத்தின் விளைவு. இந்த விசயத்தில் நமது முன்னோர்கள் செய்திருக்கும் சோதனைகளைப் பார்ப்போம். கலப்பின சேர்க்கை வழியாக மனித இனத்தை மேம்படுத்தும் பொருட்டு வடநாட்டைச் சார்ந்த நம்பூதிரி ‘பிராமணர்கள்’ கேரளத்தில் குடிய மர்த்தப்பட்டார்கள். நம்பூதிரி குடும் பத்தின் முதல் மகன் வைசிய, சத்திரிய அல்லது சூத்திரப் பெண்ணைத்தான் மணக்க வேண்டும் என்ற விதி அன்று உருவாக்கப்பட்டது. இதைவிடத் துணிவான மற்றொரு விதி என்ன வென்றால் எந்த வர்க்கத்தைச் (ஜாதியை) சார்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும் அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் தகப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அவனுடைய கணவன் வழியாக அவள், மற்ற பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. இன்றைக்கு இந்தப் பரிசோதனையை ஒழுக்கக்கேடு என்று கூறுவார்கள். இந்த விதி முதல் குழந்தைக்கு மட்டும்தான் என்பதால், அதனை ஒழுக்கக் கேடு என்று கூற முடியாது” (எம்.எஸ். கோல்வாக்கர், ‘ஆர்கனைசர்’ ஏடு, ஜன.2, 1961, பக்.5)

(2004ஆம் ஆண்டு கோல் வாக்கரின் எழுத்துகளை 12 தொகுதி களாக வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ்., 5ஆவது தொகுதியில் 28-32 பக்கங் களில் இடம்பெற்றுள்ள உரை யிலிருந்து மேற்கண்ட வரிகளை நீக்கிவிட்டது. ஆனால், நூலகங் களில் பாதுகாக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரபூர்வ வார ஏடான ‘ஆர்கனைசரில்’ இப்பகுதி இடம் பெற்றுள்ளது) - தகவல்: ‘புதிய ஜனநாயகம்’, பிப்.2015

கோல்வாக்கர் கூறும் இந்த இழிவான மரபுகளை எதிர்த்துத்தான் பெரியார் போராடினார். பெரியார் இயக்கத்தை சாடிக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கைகோர்க்கும் கொங்கு வேளாளர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க ஜாதி சங்கங்கள், கோல்வாக்கரின் இந்தக் கருத்தையும் - பெருமாள் முருகன் நாவலில் ஒரு பகுதியை நகல் எடுத்து வழங்கியது போல் நகல் எடுத்து, திருச்செங்கோடு மக்களிடம் விநியோகிப்பார்களா? அப்போது திருச்செங்கோடு மக்கள் தம்மை இழிவுபடுத்துவது, ‘கோல் வாக்கர்’ பார்ப்பன மரபா? அல்லது அதை எதிர்த்துப் போராடிய பெரியார் இயக்கமா என்பதை தீர்மானிக்கட்டும்!

Pin It