சென்னை மாவட்டக் கழகம் சார்பில் எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பில் - வெளியிட்ட துண்டறிக்கை.

1. காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட - வீரசவர்க்கார் பற்றிய திரைப்படம் எடுப்பதற்கு வாஜ்பாய் ஆட்சி நிதி உதவி செய்த போது இந்தப் பார்ப்பனர்கள் அதைக் கண்டித்தார்களா?

2. பார்ப்பன சங்கத்தின் ‘பிராமண’ மாநாடுகளில் பங்கெடுத்து, பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தி வரும் எஸ்.வி.சேகர் - அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தலைமைக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டு தொடர்ந்து தமிழர் தலைவர் பெரியாருக்கு எதிரான - கீழ்த்தரமான கருத்துகளைப் பேசி வருகிறார்.

3. கோவையில் மாநகராட்சி அரங்கில் ‘கலகக்காரர் பெரியார்’ நாடகம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் இந்தப் பார்ப்பன நடிகரின் நாடகம் நடந்தது. அதில் பேசும் போது, ‘மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் - மாநகராட்சி அரங்குகளில், பெரியார் நாடகத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாய்க் கொழுப்போடு பேசினார்.

4. ‘தலித்’ ஒருவர் மடாதிபதியாக வருவதை நியாயப்படுத்தி மாலி என்ற நாடக இயக்குனர் ‘ஞான பீடம்’ என்ற நாடகத்தை நடத்தினார். உடனே கொலைக் குற்றச்சாட்டுக்கு இப்போது உள்ளாகியுள்ள ஜெயேந்திரனை வைத்து இயக்குநர் மாலியை மிரட்டியவர், இதே நடிகர் தான்! ‘எஸ்.வி. சேகர் போல சிரிப்பு நாடகம் போடு; ஆன்மீகத்தில் தலையிடாதே; தலையிட்டால் நடப்பதே வேறு’ என்று ஜெயேந்திரன் மாலியை (இவரும் பார்ப்பனர்தான்) அழைத்து, எஸ்.வி. சேகர் முன்னிலையில் மிரட்டினார்.

5. அ.இ.அ.தி.மு.க.வின் மயிலாப்பூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், ஓடிப் போய் “பிராமண சங்கத் தலைவரிடம்” ஆசியைப் பெற்றுக் கொண்டு, தேர்தல் களத்துக்கு வந்தவர் இந்த பார்ப்பன நடிகர்.

6. விஜய் தொலைக்காட்சியில் இந்த நடிகர் தொடர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியபோது - தொடர்ந்து - பெரியார் இயக்கத்தைக் கிண்டல் செய்வதற்கும் - ஜெயேந்திரன் புகழ் பரப்புவதற்கும், அதைப் பயன்படுத்தினார். ‘கடவுள் இல்லை’ என்று சொல்கிற கூட்டத்துக்கு, கோயிலில் யார் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கருத்து சொல்ல உரிமை இல்லை” என்றார்.

7. இந்த நிகழ்ச்சியில் பல தலைவர்களைப் பேட்டிக் கண்டபோது - கிண்டல், இறுமாப்போடு, நிகழ்ச்சி நடத்திய இந்த பார்ப்பன நடிகர், ஜெயேந்திரனிடம் பேட்டி கண்ட போது, தரையில் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தி தனது பார்ப்பனப் பற்றை வெளிப்படுத்தினார்.

8. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது அன்றைய ஜெயலலிதா ஆட்சி அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்ததை நியாயப்படுத்திப் பேசிய இந்த நடிகர், “அரசு ஊழியர்கள் எங்கெங்கு அதிகம் வசிக்கிறார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை எல்லாம் அரசு கண்காணிக்கும். அப்படி அரசுக்கு எதிராகத் தங்கள் உணர்வுகளைக் காட்டினால் மீதமிருக்கும், இரண்டு ஆண்டுகளில் அவர்கள் நசுக்கப்படுவார்கள்” என்று அரசு ஊழியர்களை பகிரங்கமாக தனது தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக மிரட்டினார்.

9. சட்டமன்றத்தில் தனது முதல் பேச்சில் தனக்கு, சோதிடம், வாஸ்து, கடவுள், மதம் போன்ற அனைத்திலும் நம்பிக்கை உண்டு என்றும், இதை அங்கீகரித்து வாக்களித்த மயிலாப்பூர் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதாகவும் குறிப்பிட்டு - தனது பார்ப்பன அடையாளத்தைப் பதிவு செய்தார்.

வைத்திய நாத அய்யரின் வரலாறு என்ன?

சேலம் இளம்பிள்ளை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ‘கொடும்பாவி’ எரிப்பையொட்டி வெளியிட்ட துண்டறிக்கை

திராவிடர் இயக்கத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு படத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவியை நக்கலடித்த பார்ப்பன திமிர் பிடித்த எஸ்.வி.சேகர், ‘இதே போல் வைத்தியநாத அய்யர், ராஜாஜி இவர்களைப் பற்றி படம் எடுத்தால் அரசு நிதி உதவி செய்யுமா?’ என்று கேள்வி கேட்டுள்ளார்.

கோவில் நுழைவு போராட்டத்திற்கு முன்னோடி மதுரை வைத்தியநாத அய்யர்தான் என்று உண்மைக்கு மாறான செய்திகளை பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளம் பரப்பி வருகின்றன.

நாடார்களுக்கும் இதர தாழ்த்தப்பட்டோருக்கும் கோவிலில் நுழையும் உரிமை வேண்டும் என்றும், அதற்கு விரோதமான சாத்திரம், பழைய ஆச்சாரம் ஆகியவற்றை மாற்ற வேண்டும் என்றும் தந்தை பெரியாரால் 1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தை கொண்டு வர விடாமல் பார்ப்பனர்கள் தகராறு செய்தனர். அதையும் சமாளித்து திரு.வி.க. அவர்கள் முன்மொழிய தந்தை பெரியார் வழி மொழிந்தார். அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து சத்தியமூர்த்தி, வைத்தியநாத அய்யர், பந்தலு ஆகிய பார்ப்பனர்கள் கூச்சல் குழப்பம் விழைவித்து, பெரும் கலகத்தையே உருவாக்கி அத் தீர்மானம் வெற்றி பெறவிடாமல் தடுத்துவிட்டனர்.

1922 ஆம் ஆண்டில் கோவில் நுழைவு உரிமைக்கு எதிராக செயல்பட்ட வைத்தியநாத அய்யர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில் நுழைவுப் போராட்டம் நடத்த காரணம் என்ன?

தீண்டாமைக்கு எதிரான மனநிலை மாற்றமா? இல்லை - இல்லவே இல்லை.

அப்போது நடக்கவிருந்த மதுரை, ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சூழ்ச்சியே. காங்கிரசில் ராஜாஜியா? காமராஜரா? என எழுந்த கோஷ்டி மோதலில் ராஜாஜியின் பார்ப்பன செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ள ராஜாஜியின் ஆதரவாளரான வைத்திய நாத அய்யரை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், ‘தீண்டத்தகாதவர்கள்’ வாக்குகளை பெறுவதற்காகவே கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி நாடகமாடினார்.

1922 ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் கொண்டு வந்த தீர்மானம். 1924 ஆம் ஆண்டு நடந்த வைக்கம் போராட்டம். 1926 ஆம் ஆண்டு நடந்த சுசீந்திரம் சத்தியாகிரகம். 1927-1928 ஆம் ஆண்டுகளில் பல கோவில்களில் சுயமரியாதை இயக்கம் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டம் - அதில் ஏற்பட்ட அடிதடி வழக்குகள். 1929 ஆம் ஆண்டு குத்தூசி குருசாமி தலைமையில் நடந்த நுழைவுப் போராட்டங்கள் போன்றவை வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.

ராஜாஜி முதல்வராக இருந்த போதுதான் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். பெரியார் அதனை எதிர்த்தார். இறுதியாக பார்ப்பன சேரிகளை கொளுத்துவோம் என்று பெரியார் அறிவித்த பின்பு ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

எஸ்.வி.சேகர் ‘பெருமையோடு’ குறிப்பிடும் ராஜாஜி, வைத்தியநாத அய்யரின் வரலாறு இதுதான்! தமிழர்களே புரிந்து கொள்வீர்!

இப்போது தான் தெரியுமா? அ.தி.மு.க. அக்கிரகார தி.மு.க. என்பது!

கோவை (வடக்கு) மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அச்சிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரம் :

பெரியார் திரைப்படத்திற்கு கலைஞர் அரசு ரூ.95 லட்சம் ரூபாயை பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பார்ப்பன நடிகர் எஸ்.வி.சேகர் கிண்டல் செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எஸ்.வி. சேகரின் பேச்சு பற்றி கி.வீரமணியிடம் நிருபர்கள் கேட்கிறார்கள். வீரமணி பதில் சொல்கிறார்.

“பூனைக்குட்டி வெளியே வந்து இருக்கிறது. அ.தி.மு.க. அக்கிரகார தி.மு.க. என்பது தெளிவாகியுள்ளது”, அதற்கு நன்றி என்கிறார். (நன்றி: தினத்தந்தி 27.7.2006)

அடடா! கி.வீரமணிக்கு இப்பத்தான் தெரிந்திருக்கிறது. ஜெயலலிதாவின் அ.தி.மு.க. என்பது அக்கிரகார தி.மு.க. என்று!

ஜெயலலிதா, சட்டமன்றத்தில் மூன்று முறை “நான் பாப்பாத்திதான்” என்று சொன்ன போதும், சட்டமன்ற உறுப்பினராக “குடுமி” வைத்த கும்பகோணம் பார்ப்பன ராமநாதனை கொண்டு வந்த போதும், அ.தி.மு.க. அக்கிரகார தி.மு.க. என்று கி.வீரமணிக்கு தெரியவில்லை.

அப்போது வீரமணி, ஈரோட்டு கண்ணாடியை போடவில்லை போலும்; ஜெயலலிதா ஆட்சியை காப்பாற்ற தற்கொலைப் படையாக மாறுவோம், என்று வீரமணி சொன்னபோது பெரியார் தந்த புத்தியை விட்டு விட்டு சொந்த புத்தியை பயன்படுத்தினாரா?

ஜெயிக்கிற (ஜெயித்த) குதிரையில் பணம் கட்டுகிறவர்தான் வீரமணி.

“பொது மக்களும், பெரியார் தொண்டர்களும் வீரமணியை புரிந்து கொள்ளுங்கள்”.

எஸ்.வி.சேகருக்கு சத்யராஜ் கேள்வி

எஸ்.வி.சேகர் எதிர்ப்பு பற்றி - ‘பெரியார்’ படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ள கருத்து.

“நிதி உதவி பற்றிக் கேள்வி எழுப்பிய சேகர், பெரியாரின் படத்திற்கு நிதி தந்ததற்காக நன்றி சொல்லிவிட்டு, அடுத்து மற்றவர்கள் பற்றிக் கேட்டிருக்கலாம். அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர் அண்ணா, எம்.ஜி.ஆர். இவர்களை விட்டுவிட்டு வேறு தலைவர்களைப் பற்றிக் கேள்வி எழுப்பியது ஆச்சரியமாக இருக்கிறது.

அடுத்து, இவர் சொல்வது மாதிரி 70 லட்சத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. ஆக... ஒரு நல்ல முயற்சியைச் சிலர் செய்யும் போது இது போன்று தடையோ, சிக்கலோ ஏற்படுத்த நினைத்தால், அது தவறாகத்தான் இருக்கும். வேறு என்ன சொல்ல?” என்று சொன்னார் சத்யராஜ்.

‘குமுதம்’ ரிப்போர்ட்டர்

Pin It