வரலாறு காணாத பேய்மழை; சென்னை வெள்ளத்தில் மிதந்தது; காஞ்சீபுரம் சென்னைக்கு அடித்து வரப்பட்டது; கடலூர் கடலோடு கரைந்தது; இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள எந்த நகரங்களையும் சிற்றூர்களையும் மழை விட்டு வைக்கவில்லை. கடைசியாகத் தூத்துக்குடியையும் துவைத்தெடுத்தது; காவிரிப் பாசன மாவட்டங்களின் நெல் வயல்களை மூழ்கடித்துச் சேதம் விளைவித்த பின்னர்தான் அது ஓய்ந்துள்ளது.

திருக்குறளில் வள்ளுவர் கடவுளுக்கு அடுத்த இடத்தை மழைக்குத்தான் வழங்கியுள்ளார். வானம் பொழிதலால் உலகம் வாழ்கிறது. அதனாலேயே மழைக்கு அமிழ்தம் என்று பெயர் என்பார் நம் ஆசானாகிய அவர்.

        வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

        தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

இக்குறளோடுதான் ‘கடவுள் வாழ்த்து’க்கு அடுத்த அதிகாரமான ‘வான் சிறப்பு’ தொடங்குகிறது.

இளங்கோ அடிகளாரும் மழையைப் போற்றித்தான் சிலப்பதிகாரக் காவியத்தைத் தொடங்குகிறார். “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்பார் அவர். தலை சிறந்த தமிழ் இலக்கியங்கள் வாழ்த்தி வணங்கிய அமிழ்த மழையும் மாமழையும் இன்று பேய்மழையாகித் தமிழனுக்குப் பெருந்துயர் விளைவித்து விட்டது.

jayalalitha ministers

பேய்மழை பேரழிவு என்றாலும், அழிவோடு ஆக்கமும் நிகழ்ந்துள்ளது. அறியப்படாதிருந்த மனிதம் விழித்தெழுந்து வியப்புறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. வரலாறு இங்குச் செயற்கையாய்க் கட்டமைத்திருந்த அனைத்து வேற்றுமைகளும் வெள்ளத்தில் மூழ்கிப் போயின. கடந்த தலைமுறையால் கவலையோடு பார்க்கப்பட்ட இன்றைய இளைய தலைமுறையின் புலிப்பாய்ச்சல்தான் எல்லோரையும் பெருமிதத்தால் பேருவகை கொள்ளச் செய்துள்ளது. மக்களின் கண்ணீரைத் துடைத்ததில் அரசைக் காட்டிலும் இவர்கள் பங்கே பெரும் பங்கு.

ஆனால் இன்னொரு புறம் வெறுப்பூட்டும் அரசியல் கட்சிகள். மழை ஓய்ந்தும் ஓயாததற்கு முன்னரே அவை பதவி வேட்டையைத் தொடங்கி விட்டன. மக்களின் துயரைத் தங்கள் பதவிக்கான படிக்கட்டாய் மாற்ற அவை துடியாய்த் துடிக்கின்றன. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே கூட்டணிக்காய் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையாய் அலைகின்றன. மக்கள் நலன் பற்றி இவர்களுக்குக் கிஞ்சிற்றும் கவலையில்லை. எதிர்காலத்தில இப்படியொரு கொடிய இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் அதனை எப்படி எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுவது என்ற எண்ணம் சிறிது கூட இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த இயற்கைப் பேரழிவுக்கான காரண கர்த்தாக்களே இவர்கள்தாமே? எதுவாக இருந்தாலும், அது ஆக்கமாக இருந்தாலும் சரி அழிவாக இருந்தாலும் சரி அதை எப்படி வாக்காக மாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே இவர்கள் மூளை சிந்திக்கும்; திட்டங்கள் தீட்டும். மழை ஓய்ந்தும் ஓயாததற்கு முன்னரே தேர்தலுக்கான கூட்டணி வேலையைத் தொடங்கி விட்ட ஒன்றே இக்கட்சிகளின் வக்கிர மனநிலையைக் காட்டப் போதுமானது.

உண்மையிலேயே மக்கள் நலனில் இக்கட்சிகளுக்குக் கடுகளவேனும் அக்கறை இருந்திருப்பின் தேர்தலைத் தள்ளி வைப்பற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும். தேர்தல் தள்ளிப் போனால் மாணவர்களின் தேர்வும் தள்ளிப் போயிருக்கும். தேர்வு என்ற கொடிய அரக்கனைச் சந்திக்க இளம் பிஞ்சுகளுக்கு அப்பொழுது ஒரு கால இடைவெளி கிடைத்திருக்கும். எந்தத் தேர்வும் தள்ளிப் போகாத நிலை. பத்து, பன்னிரண்டாம் வகுப்பு  மாணவர்களின் நிலைதான் கொடிதினும் கொடிது. இரு வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணைகளையும் அறிவித்தாயிற்று. இனி பள்ளிகளும் பெற்றோர்களும் அவர்களை வாட்டி வதைத்து விடுவார்கள்.

ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையம்(UPSC) நடத்தும் ஆட்சியாளர்களுக்கான தேர்வு(அய்.ஏ.எஸ்) திட்டமிட்டபடி நடந்து முடிந்து விட்டது. தேர்வுக்கான தங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் வெள்ளத்தில் பறிகொடுத்து விட்ட அரசியல் ஆதரவற்ற  தமிழ்நாட்டு ஏதிலி இளைஞர்கள் தேர்வை எப்படித்தான் எதிர் கொண்டனரோ? மய்ய அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாட்டைப் பற்றி அது எப்பொழுதுதான் கவலைப்பட்டுள்ளது?

மழை வெள்ளத்தை இயற்கைப் பேரிடர் என அறிவிக்கச் சட்டத்தில் இடம் இல்லையாம். அதனால் தேர்தல் முதற் கொண்டு எதையும் தள்ளிப் போட முடியாதாம். மக்கள் மீதும் எதிர்காலத் தலைமுறையினர் மீதும் அக்கறை இருந்திருந்தால் தேர்தல், தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி கட்சிகள் தெருவில் இறங்கிப் போராடி இருக்கும்; சட்டத்தில் இடம் இல்லையென்றால் சட்டத் திருத்தம் கோரியிருக்கும். தேர்தல் குறித்த காலத்தில் நடந்தால்தானே இவர்கள் கனவு காணும் அறுவடையைக் காண முடியும்.

ஆக மழை இங்கே எதிர் எதிர் இரண்டு ஆற்றல்களை அடையாளம் காட்டி உள்ளது. பதவி வெறி பிடித்தாட்டும் தந்நலக்கட்சிகள்; எந்த எதிர்பார்ப்பும் இன்றி மக்கள் துயர் துடைத்த பொதுநல இளைஞர்கள். பதவி வெறிக் கட்சிகள் மழையை வாராது வந்த வாய்ப்பாகக் கருதி அதைத் தவற விடாது பயன்படுத்திக் கொள்ளத் திட்டங்கள் தீட்டிச் செயல்படுகின்றன. எவர் தூண்டலும் இன்றி மக்கள் நலம் நோக்கித் தாமாய் ஒன்று திரண்ட பொதுநல இளைஞர்கள் அப்படியே காணாமல் களைந்து போய்க் கொண்டுள்ளார்கள்.

எள்ளளவும் தந்நலமற்ற இந்த இளைஞர்களின் ஈகவுணர்வு சரியான திசைவழியில் பயணப்பட்டால் நாம் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கான பாதை திறக்கக் கூடும். இந்த அவா அரசியல் தளத்தில் ஒரு சிலரிடம் வெளிப்பட்டும் உள்ளது. மக்கள் இணையம் ஆழி செந்தில்நாதன் தம் முகநூலில் இவ்விளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவையை எழுதி உள்ளார். ‘தி இந்து’(தமிழ்)வில் சமஸ் அதன் எல்லைக்குள் நின்று எந்த அளவு எழுத முடியுமோ அந்த அளவு எழுதி வருகிறார். சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என நடத்தப்பட்ட ஊர்வலமும் இந்த அவாவின் வெளிப்பாடுதான்.

ஆனால் ஏற்கனவே களத்தில் உள்ள புரட்சி ஆற்றல்கள் இந்தத் திசையில் எடுத்துள்ள முன்னெடுப்புகள் வெளிப்படையாகத் தெரியவில்லை. உணர்ச்சித் தூண்டலில் ஒன்று திரண்ட இளைஞர்கள் தூண்டலுக்கான களம் கரைந்ததும் காணாமல் போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ?அரசியல் தத்துவத் தெளிவும் கோட்பாட்டுப் பிடிப்பும் இல்லாதவர்கள் அரசியல் மாற்றத்திற்கான போராட்டத்தில் நிலைத்து நிற்க மாட்டார்கள் என்று கருதுகிறார்களோ என்னவோ?

உண்மை அப்படி இல்லை. மழை அடையாளம் காட்டி உள்ள ஆயிரக்கணக்கான இந்த இளைஞர்கள்தாம் அரசியல் பணியை முன்னெடுத்துச் செல்ல மிகவும் தகுதியானவர்கள். தான் உண்டு தன் வேலை உண்டு எனறு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இளைஞர்களைக் காட்டிலும் திரைப்பட இரசிகர் மன்ற இளைஞர்கள் மேலானவர்கள் என்றும் அவர்களிடம் சென்று அரசியல் பணி செய்யலாம் என்றும் பொதுவுடைமைக் களப்பணியாளர் ஒருவர் அடிக்கடி கூறுவார். மெய்நடப்பில் புரட்சி ஆற்றல்கள் மிகவும் பலவீனப்பட்டுப் போயிருப்பதால்தான் கிடைக்கும் வாய்ப்புகள் கைநழுவிப் போய்விடுகின்றன. தமிழக வரலாற்றில் இதற்கு முன்னரும் இப்படிப் பலமுறை நடந்திருக்கின்றன.

ஈழப் போராட்டத்தில் இளைஞர்கள் வீறு கொண்டு ஒன்று திரண்ட அந்த எழுச்சிமிகு நாள்களை எண்ணிப் பாருங்கள்! அந்த எழுச்சிகளும் அரசியல் சூழ்ச்சிக்காரர்களால் திசை மாற்றம் செய்யப்பட்டனவே! முத்துக்குமாரும் செங்கொடியும் மூட்டிய தீ வெறும் சாம்பலாகிப் போனதே! அந்தத் தீயிலும் பதவி அரசியல்காரர்கள்தானே குளிர் காய்ந்து கொண்டார்கள். மூவர் உயிர் காக்க ஒன்று திரண்ட இளைஞர் படை எங்கே போனது? இன்று எழுவர் விடுதலையும் கேள்விக்குள்ளாகிய நிலையில் தமிழகம் அமைதி காக்கிறதே? இந்தி எதிர்ப்புப் போரில் மாணவர்கள் காட்டிய வீரமும் ஈகமும் பதவி நாற்காலிகளை அலங்கரிக்கத்தானே பயன்பட்டுப் போனது? ஒவ்வொரு முறையும் நம் இளைஞர்களின் அளப்பரிய ஆற்றலும் ஈகமும் பதவிக்காரர்களுக்கே பலியாகிப் போனால் வரலாற்று மாற்றம் எப்படி நிகழும்?

அவ்வப்பொழுது எழும் எழுச்சிகளை அப்படியே வற்றிப் போக விட்டு விடுவதா? பழம்பெரும் தமிழகத்தைக் கொடிய அரசியல் கொள்ளைக்காரர்கள் கைகளிலேயே விட்டு விடுவதா? கேள்விகள் நம் முகத்தில் மாறி மாறி அறைகின்றன. கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும். இல்லையெனில் எதிர்கால வரலாறு நம் மீது காறித் துப்பும்.

தமிழ்நாடு மேற்புறமாக அமைதித் தோற்றம் தந்தாலும் உள்ளே எப்பொழுதும் கொதித்துக் கொண்டுதான் உள்ளது. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள என்றில்லை. ஆதிக்கத்திற்கு எதிராக அனைத்து மக்களும் போராடத்தான் செய்கிறார்கள். பல்வேறு வடிவங்களில் தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் வெடித்த வண்ணம்தான் உள்ளன.

கூடங்குளத்தில் அது அணு உலைக்கு எதிரான போராட்டமாக இருக்கலாம்; தஞ்சையில் அது மீத்தேனுக்கு எதிரானதாக இருக்கலாம்; இன்னொரு புறம் தங்கள் விலைபொருளுக்குக் கட்டுப்படியான விலை கேட்கும் உழவர்கள் போராட்டமாக இருக்கலாம்.; மறுபுறம் கூலி உயர்வு கோரும் தொழிலாளர்கள் போராட்டமாக இருக்கலாம். ஆற்றுநீர் உரிமை கோரும் போராட்டங்கள் தொடங்கித் தெருவில் குடிநீர் கேட்கும் போராட்டங்கள் வரை போராட்டங்கள் தொடரவே செய்கின்றன. அவை அனைத்துமே இருக்கின்ற அமைப்பின் மீது மக்களின் ஒவ்வாமையைத்தான் வெளிப்படுத்துகின்றன.

இன்னொன்றும் மிகத் தெளிவு. மக்கள் பதவிக் கட்சிகளை நன்கு புரிந்தே வைத்துள்னர். எந்தக் கட்சிகளின் மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவற்றை வெறுக்கவே செய்கின்றனர். யார் பதவிக்குச் சென்றாலும் பெரும் மாற்றம் விளைந்து விடப் போவதில்லை என்பதை உணர்ந்தே உள்ளார்கள். தேர்தல் அரசியல் தந்நலப் பேய்களின் வேட்டைக்காடாய் மாறி விட்டது என்பதில் யாருக்கும் எந்த அய்யமும் இல்லை. இருக்கின்ற பேய்களில் எந்தப் பேய் ஓரளவு இரக்கமானது என்கின்ற வகையில்தான் மக்கள் வாக்களித்து வருகிறார்கள். தேர்தலின் போது வாரி வழங்கப்படும் பணம் தம்மிடம் திருடியதுதான் என்பதால் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு மாற்றுவழி தெரியாததால் இந்த நச்சுச் சுழலில் அகப்பட்டுத் திணறிக் கொண்டுள்ளார்கள். மக்கள் முட்டாள்களும் இல்லை; ஏமாளிகளும் இல்லை.

தமிழ்நாடு மாற்றத்திற்குக் கனிந்துள்ளது. மாற்றலை மெய்யாக்கக் கூடிய ஆற்றல்கள் எங்கே? தமிழ்ச் சமூகத்தின் இயங்கியலை வரலாற்றுப் புரிதலோடு உள்வாங்கிக் கொண்ட ஆற்றல்கள் இல்லாமலா போயின?கடந்த காலத்தில் திராவிட இயக்கமும் இடது இயக்கமும் அத்தகைய ஆற்றல்களாக நம்பப்பட்டன. அவை இரண்டுமே இன்று பொய்த்துப் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதுதான் வரலாற்றுப் பெருஞ் சோகம்.

karunanidhi stalin kanimozhi

பெரியார் பாதையிலிருந்து பிரிந்து தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தத் திராவிட முன்னேற்றக் கழகம் கருணாநிதிக் குடும்பக் கழகமாய் மாறிப் போக அதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா திராவிட முன்னேற்றக் கழகமாய் வளர்ச்சி கண்டது. அடுத்துப் பிரிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மறுபடியும் மறுபடியும் மற்றுமொரு திராவிட முன்னேற்றக் கழகமாகவே தன்னை மெய்ப்பித்துக் கொளகிறது. திராவிட இயக்கத்தின் உச்சபட்சத் திரிபு ‘தேசிய’ முன்னேற்றத் திராவிடக் கழகம். கட்சியின் பெயரை எப்படிப் புரிந்து கொள்ள முடியாதோ அது போலவே அக்கட்சியின் தலைவர் பேச்சையும் புரிந்து கொள்ள முடியாது.

இடது இயக்கம் இம்மண்ணில் வேர் கொள்ளாமல் புற வழிகாட்டுதலைச் சார்ந்து நின்றே திசை மாறிப் போனது. அம்பேத்கர் ஆழ்ந்தகன்று விளக்கிய சாதி இயங்கியலை உளவாங்கிக் கொள்ளாமல் மார்க்சிய வர்க்க வரையறைக்குள அது தன்னைச் சிறையிட்டுக் கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாய் துணைக்கண்டத்துத் தேசிய இனங்களின் புறமெய்ம்மைகளைப் புறம் தள்ளி இந்தியத் தேசியத்திற்குள் புதைந்து போனது. விளைவு ஒருபுறம் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள்; மறுபுறம் கருவிப் புரட்சியைக் கனவு கண்டவர்கள். தேர்தலைத் தேர்ந்தெடுத்வர்கள் கூட்டணிக்குள் குளிர் காய கருவிப் புரட்சிக்காரர்கள் பல்வேறு குழுக்களாய்ச் சிதறுண்டு காட்டுக்குள் சிலரும் நாட்டுக்குள் சிலருமாகிப் போனார்கள். மொத்தத்தில் இவர்கள் வழி புரட்சிக்கான வாய்ப்புகள் குறுகிப் போயின.

அடுத்து நம்பிக்கைக்கு உரியவர்களாக வலம் வந்தவர்கள் தலித் இயக்கத்தினரும் தமிழ்த் தேசிய அமைப்பினரும் ஆவர். இவர்கள் திராவிட இயக்கத் தாக்கத்திலிருந்து கிளைத்தவர்களே. இடது இயக்கங்களின் பின்னடைவுகளுக்குப் பின் அதிலிருந்து வெளியேறியவர்களும் இவ்விரு பிரிவுகளிலும் உள்ளனர். இவர்களிடமும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தலித் அமைப்புகளில் வலிமை வாய்ந்த விடுதலைச் சிறுத்தைகளும் புதிய தமிழகமும் தேர்தலுக்குள் கரைந்து போயின. தேர்தல் மூலம் பெறும் பதவிகளே ஒட்டு மொத்தத் தலித்துகளுக்கு அதிகாரத்தைத் தரும் என்று இவர்கள் கதைத்தனர். ஆனால் இவர்கள் பெற்ற எந்த அதிகாரமும் தலித்துகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதே உண்மை. மேற்கு மண்டலத்தில் அருந்ததியருக்கான அமைப்பாக உள்ள ஆதித்தமிழர் பேரவையும் தேர்தலில் நாட்டமுள்ள அமைப்பாகவே தெரிகிறது.

தமிழ்த் தேசியர்களைப் பொருத்தவரை இவர்களில் ஒரு பிரிவினர் இனவாதச் சேற்றுக்குள் மூழ்கி வருகின்றனர். வரலாற்று இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் முற்றிலும் தமிழர்களாக மலர்ந்தவர்களின் மூதாதை அடையாளங்களைத் தோண்டி எடுத்து கன்னடியர் தெலுங்கர் என்று முத்திரை குத்தி இவர்கள் எழுப்பும் காட்டுக் கூச்சல் காதை அடைக்கிறது. அதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சூறாவளியாய்ச் சுற்றி வந்து மான உணர்வூட்டி நமக்கு நம்மை யார் என்று அடையாளம் காட்டிய தனமானத் தந்தை பெரியாரைத் தமிழ்ப் பகைவராகக் கட்டமைப்பது தமிழர் ஓர்மையைக் கெடுக்கும் தீச்செயலாகும். இவர்களால் சிதைவுகளே விளையும்; விடுதலையை நோக்கிய எந்த மாற்றமும் நிகழவே நிகழாது.

தலித் இயக்கங்களைப் போலவே இசுலாம் இயக்கங்களிலும் தேர்தல் பிளவுகளையே ஏற்படுத்தி உள்ளது. அதிமுக சார்பாகவும் திமுக சார்பாகவும் பிரிந்து அவை இசுலாம் மக்களுக்கு இரண்டகமே செய்து வருகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் இசுலாம் சமூகம் இன்னும் பின தங்கிய சமூகமாகவே உள்ளது. இதற்கிடையில் வல்லாதிக்கங்களின் தேவைக்கேற்ப வளர்த்தெடுக்கப்பட்டுள்ள முசுலீம் பயங்கரவாதப் பூதம் இங்கு இந்துத்துவா வெறியர்களின் தேவையையும் நிறைவு செய்கிறது. இங்கும் இசுலாம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கூட்டணியைத் தேடி அலையும் கட்சிகளிடம் இம்மக்களின் துயர் துடைக்கும் தீர்வுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆக மாற்றத்தை விரும்பும் மக்களுக்குத் தலைமை தாங்கக் கூடிய அமைப்புகளே இல்லையா? பொதுநல நாட்டமுள்ள இளைஞர்களை ஒன்றிணைக்கும் வழியே இல்லையா? மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும்; அயர்ச்சியும் ஏற்படும். ஆனால் இந்தத் தேர்தல் கட்சிகளைத் தாண்டி, இந்தப் பதவிப் பித்தர்களுக்கு அப்பால் மக்கள் நலம் நாடும் பலர் அமைப்பாகவும் அமைப்பாக அல்லாமலும் இயங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

கல்விப் புலத்தில், சூழலியல் தளத்தில், மனித உரிமைச் செயற்பாட்டுக் களத்தில், ஊழல் எதிர்ப்புப் பணியில், தலித்திய வெளியில், பெண்ணியம் பேணலில், அம்பேத்கர் மார்க்சிய சிந்தனை வட்டங்களில், பெரியாரியப் பரப்புரையில், எழுத்துலகில் என இன்னும் பிற வடிவங்களில் எண்ணற்றோர் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் உள்ளனர். இசுலாம் மக்களுக்குள்ளும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இவர்களிடமிருந்துதான் மாற்றத்திற்கான தலைமை உருவாக வேண்டும். இங்கும் சில முழுப் புரட்சிக்காரர்கள் உண்டு. புரட்சி, பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம் என்பன தவிர்த்து வேறெதைப் பற்றியும சிந்திக்காதவர்கள். நடப்பியலை உள்வாங்காமல் கனவுலகிலே வாழ்ந்து காணாமல் போகக் கூடியவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால் நாம் நம்பும் இவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் உண்டு; கொள்கை மாறுபாடுகள் உண்டு. சிலபல நேரங்களில் கடுமையான விமர்சனங்களை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்வதும் உண்டு. இவ்வெல்லாவற்றையும் தாண்டி அவ்வப்பொழுது அறிந்தும் அறியாமலும் கூட்டாகச் செயல்படுவதும் உண்டு. காட்டாகக் கூடங்குளத்தில் வேறுபட்ட கருத்தியலாளர்கள் இணைந்து செயல்பட முடிந்தது. மீத்தேன் எதிர்ப்பு இயக்கமும் பலரையும் இணைத்துள்ளது. இதற்கு முன்னர் ஈழ ஆதரவிலும் மூவர் உயிர் காத்தலிலும் ஒருங்கிணைவைக் காண முடிந்தது. அப்படியான மீண்டும் ஒன்றிணையும் வாய்ப்பை மழையும் தேர்தலும் வழங்கி உள்ளன.

கட்டுரையின் தொடக்கத்தில் கேடகப்பட்ட அதே கேளவிதான். வளம் கொழிக்கும் தமிழ்நாட்டை அரசியல் கொள்ளைக்காரர்களிடமே விட்டு விடுவதா? விட்டுவிடக் கூடாதென்றால் மக்கள் நலம் நாடும் ஆற்றல்கள் ஒன்றிணைய வேண்டும். பதவிக்காகத் தேர்தல் கட்சிகள் கூட்டணி காணும் பொழுது மக்கள் நலனைத் தவிர வேறெதுவும் நினைக்காதவர்கள் கூட்டணி அமைக்கக் கூடாதா? அமைக்க வேண்டும். சட்டமன்றத்தில் நாலைந்து இருக்கைகளுக்காகத் துளியும் ஜனநாயகப் பண்பாடற்ற விசயகாந்தையும் கீழ்வெண்மணிக் கொலைகாரர்களின் வாரிசையும் தேடி அலையும் பொய்யான, ஏமாற்றும் மக்கள் நலக் கூட்டணியாக இல்லாமல், மக்கள் விடியலை நாடும் உண்மையான மக்கள் நேயக் கூட்டணி காண வேண்டும். அப்பொழுதுதான் விடிவை நோக்கி ஒரு சில அடிகளாவது எடுத்து வைக்க முடியும்.

மக்கள் விடியல் தேடும் மக்கள் நேயக் கூட்டணியைச் சிலபல புள்ளிகளில் கட்டமைக்க முடியும். நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஆற்றல்களில் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போர், தேர்தலில் பங்கெடுப்போர் என இரு வகையினரும் இருக்கலாம். ஆனால் இருவருமே இங்குள்ள மக்கள் விரோதப் பதவிக் கட்சியினருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவே உள்ளனர். ஆக இவ்விரு நிலைப்பாட்டுக்காரர்களுமே  மக்கள் விரோதக் கட்சிகளை அம்பலப்படுத்துவதில் கூட்டணி காணலாம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இழைத்த இரண்டகத்தைப் பட்டியலிட்டு மக்கள் முன் வைக்கலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா முன்னேற்றக் கழகமாக உள்ளதையும் ஈழத்தமிழர் சிக்கலில் அது போடும் இரட்டை வேடங்களையும் வெளிப்படுத்தலாம். இரண்டு கட்சியினருமே ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் என்பதைத் தோலுரிக்கலாம். மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ் தமிழ் என்று முழக்கம் இட்டவர்களின் ஆட்சியில் தமிழ் காணாமல் போகும் சோக வரலாற்றை எடுத்துரைக்கலாம். கல்வி வணிகமாக்கபட்டுள்ள வஞ்சகத்தை விளக்கிக் கூறலாம். ஆற்றுநீர் உரிமையைக் காவு கொடுத்ததைப் புரிய வைக்கலாம். உலகமயமாக்கலில் தமிழர்தம் உழவும் தொழிலும் சூறையாடப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். கண்முன் நடந்த வெள்ளப் பேரழிவுக்கு யார் காரணம் என்பதை விரித்துக் கூறலாம். இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம். பதவிக் கட்சிகள் ஒவ்வொன்றின் முகமூடிகளையும் மக்கள் முன் இவ்வாறாகத் தோலுரிக்க முடியும்.

தேர்தலில் நாட்டமுள்ளவர்கள் வாய்ப்புள்ள ஓரிரு இடங்களைத் தேர்ந்தெடுத்து நின்று பார்க்கலாம். இதற்காகத் தேர்தலைப் புறக்கணிக்கின்றவர்கள் அவர்களுக்கு எதிர்நிலை எடுக்காமல் விட்டு விடலாம். இருவரும் ஒரே கூட்டணியில் நின்றும் வேலை செய்யலாம். வாய்ப்பில்லை என்றால் தனித்தனிக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு, பகைமுரணை வளர்த்துக் கொள்ளாமல் பதவிக் கட்சிகளுக்கு எதிராக ஓரணி என்பதை உறுதிப்படுத்தலாம்.

இப்படியாகச் செயல்படுவதின் வழியாக மாற்றம் தேடும் புதிய இளைஞர்களை உள்வாங்கலாம். அவர்களை அரசியல் வழிப்படுத்தவும் செய்யலாம். அரபு வசந்தம் போல் தமிழ் வசந்தத்திற்கும் வழி காணலாமே? அரபு நாடுகளில் வசந்தம் தோற்றிருக்கலாம். தமிழகத்தில் அது வெற்றி பெறலாமே? அரபுச் சூழலும் தமிழகச் சூழலும் வேறு வேறுதானே? அரபுத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வெற்றியை நோக்கித் திட்டமிடலாமே?

மழை வெள்ளத்திற்குப் பிறகு ஆங்காங்கு வெளிப்பட்ட எண்ண அலைகளின் வீச்சில் இக்கட்டுரையில் சில கருத்துகள் முன் மொழியப்பட்டுள்ளன. இவற்றை விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்துச் செயல்தளத்தை நோக்கிப் பயணிக்கலாம். அல்லது இவற்றைச் சிறு பிள்ளைத்தனமானவை என முற்றாக விலக்கி இன்னும் தெளிந்த பக்குவப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் கூட்டுச் செயல்தளத்திற்கு வழி சமைக்கலாம்.

எது எப்படி இருப்பினும் இக்கட்டுரையில் எழுப்பப்பட்ட அரசியல் கொள்ளையர்கள் கையில் தாய்த்தமிழகத்தை என்றென்றைக்கும் தாரைவார்த்து விடுவதா என்ற கேள்விக்குப் புரட்சியாளர்கள் என்று தம்மைக் கருதிக் கொள்வோர் விடை கண்டாக வேண்டும். இல்லையெனில் பதவிக் கட்சிக்காரர்கள் போல இவர்களும் இரண்டகர்களே! மக்கள் பகைவர்களே! வரலாறு இப்படித்தான் தீர்ப்பெழுதும்.

- வேலிறையன்