புராண காலங்களிலேயே இந்தியா,மரபணு விஞ்ஞானத்திலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் சிறந்து விளங்கியது என்று ஒருவர் பேசியிருக்கிறார். பேசியவர், ஏதோ‘புராண கதாகாலட்சேபம்’நடத்தும் வைதீகர் அல்ல;இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி. பேசிய இடம் -

சர். எச்.என்.ரிலையன்சு அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆய்வு மய்யத் திறப்பு விழா!

புராண காலத்து அறிவியலை உறுதிப்படுத்த மோடி கூறியிருக்கும் எடுத்துக்காட்டுகள் என்ன தெரியுமா? மகாபாரதத்தில் கர்ணன்,தாயின் கர்ப்பப்பையிலிருந்து பிறக்கவில்லையாம். எப்படி பிறந்தார்?அந்தக் காலத்திலேயே மரபணு விஞ்ஞானம் இருந்ததாம். அதேபோல் விநாயகன் தலையில் யானையை பொருத்தியிருப்பது அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறதாம். மோடியின் இந்த‘ஆராய்ச்சி’யைக் கேட்டு மருத்துவர்கள் விலா நோக சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மோடியின் ‘மேதை’மையை வெளிப்படுத்தும் இந்த ‘சிந்தனை’களை ஊடகங்கள் பலவும் திட்டமிட்டு இருட்டடித்து, மோடியைக் காப்பாற்றியுள்ளன. இந்த அபத்தத்தை எந்த ஒரு விஞ்ஞானியும் ஏன் மறுக்க முன்வரவில்லை என்று‘ஹெட் லைன்ஸ்டுடே’தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளர் கரன் தாப்பர் ஆங்கில நாளேடு ஒன்றில் எழுதிய கட்டுரையில் கேட்டுள்ளார். நியாயமான கேள்வி!

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்த பிறகு,அதை புராணக் கற்பனைகளோடு பொருத்தி புராண காலத்திலேயே இந்தியாவில் அறிவியல் அறிவு இருந்தது என்று பெருமை பேசுவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது. பார்ப்பன கலாச்சாரமான வேத மதத்தை கட்டிக் காப்பாற்ற இந்தப் புரட்டுகள் இவர்களுக்கு தேவைப்படுகிறது.

மரபணு மாற்றமும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையும்‘கர்ணன்’, ‘வினாயக’னோடு மட்டும் ஏன் முடிந்து போனது?அதற்குப் பிறகு ஏன் புராண காலம் முழுதும் தொடராமல் போனது என்ற கேள்விக்கு என்ன பதில் கூறுவார்கள்?

போலி அறிவியலை உறுதிப்படுத்துவதற்கு,அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கூடமான ‘நாசா’வை துணைக்கு அழைப்பது இவர்களின் வழக்கமாகிவிட்டது. ‘இராமன்’ கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ‘நாசா’வே இராமன் பாலத்தை படம் பிடித்திருக்கிறது என்று கதை விட்டார்கள். ‘நாசா’ மறுத்துவிட்டது. வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதி இப்போதும் பூமிக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது;இதை நாசாவே செயற்கைக் கோள் வழியாக படம் பிடித்துள்ளது என்றார்கள். அதற்கும் நாசா மறுப்பு தெரிவித்தது. தில்லை நடராசன் கோயிலுக்கு நேர் எதிரே வானவெளியிலிருந்து புகைப்படம் எடுத்தால் படம் விழாது என்றும்,திருநள்ளாறுக்கு (சனீஸ்வரன் கோயில் உள்ள ஊர்) நேர் எதிராக வானத்தில் கடந்து செல்லும் செயற்கைக் கோள் செயலிழந்துவிடும் என்றும், இவையெல்லாம் நாசாவின் கண்டுபிடிப்பு என்றும் கதை விட்டார்கள். அனைத்தையும் நாசா மறுத்து விட்டது.

இப்போது மற்றொரு புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது. சூரியனில் உருவாக இருக்கும் காந்தப் புயலால்,டிசம்பர்2014இல் உலகம் முழுதும் ஆறு நாள்கள் இருளில் மூழ்கப் போகிறதாம்! இதையும் வழமை போலவே‘நாசா’அறிவித்திருப்பதாக கூறுகிறார்கள். இது உண்மையல்ல என்று‘நாசா’மறுத்துள்ளது. சூரியப் புயல்கள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் மேற்பரப்பு வரை வருகிறது. இதை பூமியின் மேலடுக்கில் உள்ள‘வளி’மண்டலம் தடுத்து மீண்டும் வானத்துக்கு திருப்பி அனுப்பி விடும். இந்த சூரியப் புயலால் எந்த பாதிப்பும் வந்து விடாது என்று‘நாசா’மறுப்பு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதேபோல் 2012ஆம் ஆண்டு ஏடுகளில் ஒரு செய்தி வெளியானது. கேரளாவைச் சார்ந்த அருண் என்ற மாணவர் பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள வாழ்க்கைக் குறித்து ஆராய்ச்சி செய்ய ‘நாசா’ தன்னை தேர்வு செய்துள்ளதாகவும் மாசூசெட்ஸ்விஞ்ஞான ஆய்வுக் கழகத்தில் இது குறித்து முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியை செய்து வருவதாகவும் கூறினார். செய்தி உண்மை தானா என்பதை உறுதி செய்து கொள்ளாமலே ஏடுகள் வெளியிட்டன. அது உண்மைக்கு மாறான தகவல். அப்படி எந்த ஒரு ஆய்வையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று கடந்த வாரம் நாசா மற்றும் மாசூசெட்ஸ்ஆய்வு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு பி.ஆர்.பி. பாஸ்கர் மற்றும் ஜெஸ்டின் ஜாய் என்ற இருவரும் இணையத்தில் அம்பலப்படுத்தியுள்ளனர். (‘இந்து’ நாளேடு நவம்பர்3ஆம் தேதி இதழில் “வாசகர்களுக்கான ஆசிரியர்” எழுதிய கட்டுரையில் இதை சுட்டிக் காட்டுகிறார்)

இப்படி,போலி அறிவியலைப் பரப்பி மக்களை நம்ப வைக்கும் முயற்சிகளில் ஏதோ, புராண பிரச்சாரர்கள், மடமையாளர்கள் மட்டுமா இறங்கு வார்கள்?இந்தியாவின் பிரதமரே இதைத்தான் செய்து வருகிறார்.

விஞ்ஞான மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாக அரசியல் சட்டத்தின்51ஏ(பி) பிரிவு கூறுகிறது. நாட்டின் பிரதமரோ - புராணப் பெருமை பேசுவதே விஞ்ஞான மனப்பான்மை என்கிறார்!இதை வெட்கம்;அவமானம்;தலைகுனிவு! என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

 

Pin It