ration coronaதற்பொழுது 7 ஆண்டுகளை நிறைவு செய்யும் பாஜக அரசு, தனது ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் ஆகியவற்றை கொடுத்திருப்பதாக 'மன் கி பாத் ' நிகழ்ச்சியில் மோடி பெருமிதம் கொள்கிறார்.

இந்தியாவின் வறுமைக் கோட்டில் 7.5 கோடி பேர் புதிதாக தள்ளப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு 10 கோடி வேலைவாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 6 மே 2021-இல் அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், பெருந்தொற்றினால் 23 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டதாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது நாளொன்றுக்கு ரூ.375 வீதம் கூட ஈட்ட முடியாத நிலையில் உள்ளவர்களின் கணக்கீடு இது. ‘மன் கி பாத்’ நிகழ்வில் பேசியது அப்பட்டமான பொய் என்பதையே இந்த அறிக்கை நிரூபிக்கிறது.

இதற்கான காரணிகளில் வேலையிழப்பு, ஊரடங்கு என்பதோடு உணவுப்பாதுகாப்பு ஏற்பாடான நியாய விலைக்கடைகளில் பயன்பெறுபவரின் நிலையையும் சேர்த்து பார்ப்பது முழுமையான நிலையை நமக்கு உணர்த்தும். மே பதினேழு இயக்கம் 2016 ஏப்ரல் முதல் எச்சரித்து வருகின்ற ரேசன் கடைகளை மட்டுப்படுத்துவது, பயன்பாட்டை குறைப்பது அல்லது மூடுவது என்கிற மோடி அரசின் நிலைப்பாட்டினால் ஏற்பட்ட மோசமான விளைவை பார்க்க வேண்டும்.

4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து:

கருவிழி அடையாளம், கட்டை விரல் ரேகை பதிவு செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் இணையத்தின் செயல்பாடு (கிடைக்காமல் போதல்) போன்ற காரணங்களால், நாட்டில் கிட்டத்தட்ட 4 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் கைரேகைகள் ஸ்கேனர் (Scanner) அல்லது கருவிழி ஸ்கேனர் சரியாக வேலை செய்யவில்லை. ஆதார் அட்டையுடன் இணைக்காததால், ரேஷன் பொருட்களை இழந்த மக்கள் பட்டினியால் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2019 டிசம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் இடமிருந்தும் விவரங்களை கோரி இருந்தது.

கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று ஜார்க்கண்டில் உள்ள சிம்டேகா மாவட்டத்தில், ஒடுக்கப்பட்ட ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷி என்ற 11 வயது சிறுமி, பட்டினியால் இறந்தார். ஆதார் அட்டையுடன் இணைக்கத் தவறியதால் உள்ளூர் அதிகாரிகள் அவரது குடும்பத்தின் ரேஷன் அட்டையை ரத்து செய்ததே இதற்கு காரணம் எனத் தெரிய வந்தது.

பட்டினியால் இறந்த 11 வயது சிறுமியின் தாயார் கொய்லி தேவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆதார் அட்டையுடன் இணைக்காததால், கிட்டத்தட்ட நான்கு கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்தது மிகத் தீவிரமான விடயம் என்றுகூறி, மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடமிருந்து விளக்கமும் கோரியுள்ளது.

இந்த நிலையானது கொரொனோ பெருந்தொற்று காலத்தில் வறுமை நிலையை மேலும் மோசமாக்கி உள்ளது என்பதை வேறு வழிகளிலும் கண்டறிய முடிகிறது. பெருந்தொற்று காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் கிட்டதட்ட 90% தொழிலாளர்கள் தங்கள் உணவு உட்கொள்வதை குறைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் உணவு கிடைக்காததால் தங்கள் உணவு உட்கொள்ளுதலை குறைத்திருப்பதையே இது நமக்கு சொல்லுகிறது. வருமானம் வீழ்ச்சியடைந்ததால், கடன்கள் உயர்ந்தன. வேலைவாய்ப்பு முறைகள் கூட மாற்றப்பட்டன. முறையான சம்பளத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் முறைசாரா வேலைக்குச் சென்றனர் .

இந்தியாவின் வளர்ந்து வரும் வறுமைக்கு கொரொனோ தொற்றை மட்டும் காரணியாக்கிவிட முடியாது. மோடி ஆட்சியின் காலத்தில் கீழிறங்கிய பொருளாதார நிலை முக்கியமானது. மேலும் மோடி அரசு கைவிட்ட மக்கள் நல பாதுகாப்புத் திட்டங்கள் இக்கொரொனோ தொற்று காலத்தில் மிகப்பெரும் ஊறு விளைவித்திருக்கின்றன.

45% நகர மக்கள் சுயவேலைவாய்ப்பு மற்றும் முறைசாரா தொழில்களில் இருப்பவர்கள். கருப்பு பண ஒழிப்பு, ஜி.எஸ்.டி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இம்மக்கள், ஊரடங்கினால் மிகப்பெரும் நெருக்கடிக்குள்ளானார்கள்.

மேலும் இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகள், தொழில்களுக்காக வாங்கிய வங்கிக் கடன்களும், அதன் வட்டியும் ஊரடங்கு காலத்தில் இம்மக்கள் கைகளில் எஞ்சியிருந்த பணத்தையும் பிடுங்கியது. மேலதிக வீட்டு தேவைகளுக்காக இவர்கள் கடன்களுக்குள் தள்ளப்பட்டனர்.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களில் லட்சம் பேர் அரசு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். இதன் பின்னனியில் அம்மாணவர்களின் பெற்றோர்களால் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் கட்ட இயலாத நிலை அவர்களின் பொருளாதார நெருக்கடியை அம்பலமாக்குகிறது. தமிழ்நாட்டின் இந்நிலை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பொறுத்திப் பார்க்கும் பட்சத்தில் இந்த நாட்டின் வறுமை எவ்வளவு கொடியதாக பரவி வருகிறது என்பதை உணரலாம்.

இந்த கொரொனோ தொற்று காலத்தில் நிரந்தர சம்பளம் பெறுபவர்களில் 9.8% பேர் தினக்கூலிகளாகவும், 34.1% சுயதொழிலுக்கும், 8.5% தற்காலிக பணிகளுக்கும் சென்றுவிட்டனர். கிட்டதட்ட பாதி ஊழியர்கள் 47.6% மட்டுமே அதே பணிகளில் நீடிக்கின்றனர்.

குடும்பங்களின் வறுமை நிலை கொரொனோ தொற்றிற்கு முன்பிருந்தே மிகப்பெரும் நெருக்கடியாக உயர்ந்து கொண்டிருந்தது. நாட்டின் மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணிக்கை, போதிய உடல் எடை இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை மற்றும் ஐந்து வயதுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் அடிப்படைக் காரணிகளாகக் கொண்டு உலக உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய பசி ஒழிப்பு பட்டியலில் 2015இல் 93வது இடத்தில் இருந்த இந்தியா 2016இல் 97ம் இடத்திற்கும், 2017இல் 100 இடத்திற்கும் என தொடர்ந்து சரிவையே சந்தித்துள்ளது.

இந்தியாவில், பிறந்து 6 முதல் 23 மாதங்கள் வரையான காலத்தில் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவு ஊட்டப்படும் குழந்தைகள் எண்ணிக்கை 9.6% மட்டுமே.இந்தியாவின் மக்கள் தொகையில் 14.9% மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

ஆனால் இதே கால கட்டத்தில் உலகளாவிய பசி ஒழிப்பு தரவரிசையில் முன்னேறியுள்ள வங்கதேசத்துக்கு இந்த அறிக்கையில் பாராட்டு கிடைத்துள்ளது. அந்நாடு "விரிவான பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் முக்கியத்துவம் தந்திருப்பது" மட்டுமே பட்டியலில் முன்னேறக் காரணிகளாக உள்ளன. இந்த அடிப்படை காரணிகளை மோடி அரசு புறக்கணித்ததே இந்த மோசமான நிலைக்கு பின்னனி.

statics bangladeshஇந்தியா வங்கதேசம் இடையேயான உலகளாவிய பசி குறியீட்டு மதிப்பெண்

மோடி அரசு ஏழை மக்கள் விரோதியாகவும், அதானி, அம்பானிகளின் வளர்ப்பு தாயாகவும் ஆட்சியை நடத்தி வருகிறது. மேல் சொன்ன காலகட்டத்தில் மக்கள் கடுமையான வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை எதிர்கொண்டாலும், அம்பானி, அதானி போன்ற பனியா முதலாளிகளில் சொத்துகள் ரூ.13 லட்சம் கோடியாக வளர்ந்திருக்கின்றன.

இவர்களிடம் குவிந்த இப்பணத்தை வைத்து கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு நூறுநாள் வேலை திட்டத்தினை இந்தியா முழுவதும் நடத்திவிட முடியும். இன்னும் கூடுதலாக சொன்னால், இந்தியாவின் சுகாதார அமைச்சகத்தின் 10 ஆண்டு செலவினை இப்பணத்தால் செய்துவிட முடியும். இது கிட்டதட்ட ஒவ்வொரு இந்தியரிடம் ரூ.94,000 பணத்தை பிடுங்கியதற்கு ஒப்பானது.

இப்படியாக ஒருபுறம் பணம் குவிவதும், மறுபுறம் ஏழைகள் உணவின்றி போராடுவதுமான நிலையை உருவாக்கியதே ராமராஜ்ஜியத்தின் வெற்றியாக பார்க்கலாம். இந்த நிலையை மாற்றவேண்டுமென்றால் இந்துத்துவ அமைப்புகள் அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். மக்களை அணி திரட்டுகின்ற பணியை இயக்கங்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

- மே பதினேழு இயக்கம்

Pin It