கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

நாட்டில் நடந்திடும் அத்துணை பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளியாய் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை குழித்தோண்டி புதைத்து, அந்தக் கல்லறையின் மீது மனுவின் சட்டத்தை மீண்டும் அரியணை ஏற்றத் துடிக்கின்றனர் ஆர். எஸ். எஸ். மற்றும் அதன் அரசியல் முகங்களான பி.ஜே.பி ; சங் பரிவார்; வி.ச் .பி ; இந்து முன்னணி போன்ற ஆரியக் கும்பல்.

பகுத்தறிவாளர்கள் - எழுத்தாளர்கள் - மாணவர்கள் துவக்கிகள் முன் துவண்டு அடங்க வேண்டும் என்ற ஒற்றைப் பாசிச சர்வாதிகாரத்தின் காரணமாய் சுடப்பட்டு சவக்குழிக்குள் புதைக்கப்படுகின்றனர். நரேந்திர தபோல்கர் , கோவிந்த் பன்சாரே, கல்பூர்கி தொடங்கி மதச்சார்பற்ற கருத்தாளர்களை - ஒடுக்கப்பட்ட மக்களை, வேற்று மதத்தவரைக் கொன்று தங்களின் இந்துத்துவ ஆட்சியை நிறுவத் துடிக்கின்றது பார்ப்பனீயம் !!

JNU Protestsபார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிராக போர்க்குரல் நாம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மத்திய ஆட்சியில் பாரதீய ஜனதா எனும் மதவாதக் கட்சி இருப்பதால் அனைத்துப் போராட்டங்களும் இங்கு இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுகின்றன. கருத்துச் சுதந்திரமும் -பேச்சு உரிமையும் முழுவதும் பறிக்கப்பட்டு , இந்து பயங்கரவாத அரசு நடந்து கொண்டிருக்கின்றது.

கல்வியில் வரலாற்றுத் திரிபுகளை செய்து வரலாறு என்பதே - பார்ப்பனர்களின் வரலாறாக மாற்றும் முயற்சிகள் விறுவிறு என்று நடந்து கொண்டிருக்கின்றன. எந்த அளவிற்கு என்பதற்கு உதாரணமாக காந்தியை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன் அல்ல, பிரிட்டிஷ் ஏஜன்ட் என்று சொல்லக் கூடிய அளவிற்கு பள்ளிப் பாடங்களில் பார்ப்பன விடம் பரப்பப்பட்டு வருகின்றது.

தேசியக் கொடி மூவர்ணக் கொடி அல்ல, காவிக் கொடி தான் என்று சொல்வது - பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால் தூக்கில் போடுவோம் -சுட்டுத் தள்ளுவோம் என்று வெளிப்படையாக மிரட்டும் அளவிற்கு பார்ப்பனர்கள் இன்றைக்கு துணிவு பெற்றிருக்கின்றார்கள் என்றால்"பார்ப்பான் பண்ணையம் கேட்க ஆளில்லை "என்பதால் தானே?

பல்கலைக்கழகங்கள் பாடம் நடத்தும் இடங்களாக அல்லாது பார்ப்பனர்களின் குலக் கல்வி பிம்பங்களாய் செயல்படுகின்றன. ABVP என்னும் அமைப்பைக் கொண்டு பல்கலைக்கழகங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் அனைவரையும் தேசத் துரோகிகள் போல் சித்தரிக்க இங்கு நீதிமன்றங்கள் முதல் ஊடகங்கள் -நெறியாளர்கள் வரை அவாள் ஆட்சியின் அடிவருடிகளே !!

JNU பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது ஏன் மோடி அரசுக்கு இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ? தொடர்ந்து அங்கே படிக்கும் மாணவர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கும் பின்னணி என்ன?

சித்தரிக்கப்பட்ட காணொளி ; அதில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் இல்லை என்று நிருபித்தப் பின்னரும் ஏன் கண்ணைய குமார் விடுவிக்கப்படவில்லை?

ஆர்.எஸ் எஸ் -இல் இருந்து விடுதலை வேண்டும்; மனுவில் இருந்து விடுதலை வேண்டும்; பார்ப்பனியத்திலிருந்து விடுதலை வேண்டும் என்ற முழக்கங்கள் கொண்டு மாணவர் எழுச்சியை கட்டிக் காத்து சரியானபாதையில் எடுத்துச் செல்கின்றார் என்பதால் தானே?

வெறும் அரசியல் காரணங்களுக்காக இந்த அடக்குமுறை நடக்கின்றது என்று எடுத்துக் கொள்ள முடியாது. பல ஆயிரம் நூற்றாண்டுகளாக ஆரியத்தை எதிர்த்து வந்த பார்ப்பன அல்லாத மக்களின் எழுச்சியை முற்றிலும் ஒழித்துவிடத் துடிக்கின்றது மோடி தலைமையிலான பா. ஜ. க அரசு என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

ஆனால் ஒன்றை மோடி அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரியத்திற்கு எதிரான போராட்டம் என்பதுஅடக்கு முறைக்கு எதிரான போராட்டம்; சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டம்; ஜாதியத்திற்கு எதிரான போராட்டம்; மதவாதத்திற்கு எதிரான போராட்டம்; இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டம். இதனை தேசத் துரோகம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கி - அழித்து விட முடியாது.

இந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு துணைக்கண்டம் . இங்கே ஆரியம் அதன் இந்துத்துவக் கொள்கை மட்டுமே நிலை பெற வேண்டும் என்று நினைத்தால் அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ; இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

தேசத் துரோகியாய் கண்ணைய குமாரை பார்ப்பனர்கள் சித்தரித்தாலும் அனைத்து நாட்டு கல்வியாளர்களும், JNU மாணவர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆதரவுக் கரம் நீட்டுகின்றார்களே - அதுவே இந்த மாணவர்களின் போராட்டத்திற்கான வெற்றி .

ஆட்சி தங்களிடம் இருப்பதால் அம்பேத்கரின் கொள்கைகளை - அம்பேத்கரின் கொள்கை வாரிசுகளை அழித்து விடலாம் என்று நினைத்தால் அதற்கான விலையை ஆரியம் தந்தே ஆக வேண்டும் !!

- வழக்கறிஞர் ம.வீ.கனிமொழி