“நாங்கள் பார்ப்பனியத் திடமிருந்து ஜாதியிலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம். எங்கள் போராட்ட உணர்வை நசுக்கிட முடியாது” என்று பிரகடனப்படுத்தினார், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார்.

kanniah kumar 383

தேசத் துரோக குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார், இப்போது நாடு முழுதும் கவனிக்கப்படும் போராளி. உச்சநீதிமன்றம், பல நிபந்தனை களோடு அவருக்கு 6 மாதம் பிணை வழங்கியிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற அவருக்கு, மாணவர்கள் எழுச்சியான வரவேற்பு அளித் தார்கள். சிறை மிரட்டல் அவர் உறுதியை குலைத்துவிடவில்லை. புடம் போட்ட போராளியாக வெளியே வந்திருக்கிறார். சிறை மீண்டு மாணவர்களிடையே அவர் ஆற்றிய உரையை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வலைதளங்களில் பார்த்திருக் கிறார்கள். அதே நாளில் மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. மின்சார அதிர்வுகளை உருவாக்கியது போல் அமைந்திருந்தது. அவரது உரை என்று சமூக வலைதளங்கள் வர்ணிக்கின்றன. பார்ப்பனியம், ஜாதி அமைப்புக்கு எதிராக புதிய போராளிகள் புறப்பட்டிருக்கும் செய்தி நம்பிகை வெளிச்சத்தைத் தருகிறது. அவரது முழுமையான உரை:

“நாங்கள் கேட்பது எத்தகைய விடுதலை என்பதை இந்த தேசத்துக்கு அறிவித்திட விரும்புகிறேன். நாங்கள் பார்ப்பனி யத்திலிருந்து ஜாதியத்திலிருந்து முதலாளித்துவத்திலிருந்து விடுதலை கேட்கிறோம்; இந்தியாவுக்குள்ளே நாங்கள் இந்த விடுதலைக்குப் போராடுகிறோம்”.

“நான் கிராமத்திலிருந்து வந்தவன்; அங்கே மக்களை ஏமாற்றும் மோடி வித்தைக்காரர்கள் தாயத்துகளை கட்டி விடுவார்கள். தங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று மக்களும் நம்புவார்கள். அதே கண்கட்டு வித்தைகளைத் தான் இங்கே ஆட்சியாளர்களும் செய்கிறார்கள். கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்கிறார்கள்.

இந்த அரசுக்கு எதிராக பேசினால், உங்கள் முகங்களை வைத்து, தயாரிக்கப்பட்ட போலி வீடியோ பதிவுகளை உருவாக்குவார்கள். மாணவர் விடுதியின் குப்பைத் தொட்டியில் எத்தனை “ஆணுறை”கள் கிடக்கின்றன என்று கணக்கிடு வார்கள். தேசத்தின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தனையோ நமது வீரர்கள் செத்து மடிகிறார்கள். இந்த நிலையில் தேசத் துரோகிகளை அனுமதிக்க முடியுமா? என்று நம்மீது தேசத் துரோக முத்திரை குத்துகிறார்கள். நாங்கள் அந்த இராணுவ வீரர்களை மதிக்கிறோம்; தலை வணங்குகிறோம்; அதே நேரத்தில் பா.ஜ.க.வினரைப் பார்த்து கேட்கிறேன்; இந்த இராணுவ வீரர்கள் யார்?

இப்படி எல்லையில் உயிரிழப்பது உங்கள் மகனா? அல்லது உங்கள் மகளா? இந்த தேசத்தின் வறட்சிப் பிடியில் சிக்கித் தவிக்கும் எங்களின் விவசாயக் குடும்பத்தின் மகனோ அல்லது தந்தையோதான் இப்படி நாட்டுக்காக உயிர்களை இழக்கும் இராணுவத்தினர். அவர்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பியிருக்கலாம். அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போனவர்கள் இராணுவத்திற்கு வந்திருக்கலாம். இந்த இரணுவ வீரர்கள் எங்கள் சமூகத்தினர்; ஆனால், எங்களுக்கு எதிராகவே அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்? (இராணுவத்தின் எல்லையில் உயிரிழப்பது சூத்திரர், தலித்துகளே தவிர பார்ப்பனர்கள் அல்ல - ஆர்)

உணவு உற்பத்தி செய்து, கடன் தொல்லை தாங்காமல், தற்கொலை செய்யும் விவசாயிகளும் நாட்டின் பாதுகாப்புக்கு உயிரிழக்கும் இராணுவத்தினரும் எங்களைப் போன்ற மாணவர்களின் சகோதரர்கள். எங்களுக்குள் எல்லைகளைப் பிரித்து, பொய்யான விவாதங்களை நடத்தாதீர்கள்!

சிறைச்சாலைக்குள்ளே உணவுக்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கும் எனக்கு உதவிய காவலாளிகள் என்னைப் போன்ற எளிய மனிதர்கள்தான். புரையோடிக் கிடக்கும் ஊழல் அமைப்பின் ஒரு பகுதியினர்தான். நான் அவர்களிடம் பேசினேன். நாம் எத்தகைய விடுதலையை பார்ப்பனியத்திட மிருந்து ஜாதியத்திடமிருந்து முதலாளித்துவத்திடமிருந்து பெற வேண்டியிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். அவர்கள் புரிந்து கொண்டார்கள். ‘புரட்சி ஓங்குக’ என்ற முழக்கத்தை அவர்களிடம் விளக்கினேன்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரே குரலாக எழுந்து நிற்க நாம் விரும்புகிறோம். இந்த ஒன்றுபட்ட குரலை சுரண்டல் சக்திகள் விரும்பவில்லை.

அம்பேத்கர் கூறினார்: “அரசியல் ஜனநாயகம் மட்டும் உரிமைகளை மீட்டுத் தராது; சமூக ஜனநாயகம் வேண்டும்” என்றார். “ஜனநாயகத்திலிருந்து சோஷலிசத்தைப் பிரித்துவிட முடியாது” என்றார் லெனின். நாம் கருத்துரிமையை சமத்துவத்தை கோருகிறோம். ஒரு காலம் வரவேண்டும். ஒரு பியூனின் மகனும், குடியரசுத் தலைவரின் மகனும் ஒன்றாக இணைந்து படிக்கும் காலம் வரவேண்டும்.

ஒவ்வொரு அழுத்தத்திற்கும் எதிர்வினை உண்டு என்று அறிவியல் கூறுகிறது. நாம் அறிவியலை படிக்கிறோம். ஆனால் அறிவியல் மனப்பான்மை நம்மிடம் இல்லை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்கி விட்டால். அவர்களை மாற்றத்துக்கு தயார் செய்து விடலாம். ஏழ்மை, சுரண்டலிலிருந்து தலித், பழங்குடியினர், பெண்கள், மைனாரிட்டிகளை விடுதலை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு ரோகித்தைக் கொன்றீர்கள்; அதனால் இந்த விடுதலை உணர்வை உங்களால் அழித்துவிட முடியாது, புரிந்து கொள்ளுங்கள்.

சிறையில் எனக்கு இரண்டு குவளைகளைக் கொடுத்தார்கள். ஒன்று நீல நிறம்; மற்றொன்று சிவப்பு நிறம்; நீல நிறம் - எனக்கு அம்பேத்கரியத்தையும் சிவப்பு நிறம் சோஷலிசத்தையும் உணர்த்தியது. சாப்பாட்டு தட்டு இந்தியாவாக தோன்றியது. இந்த நீலமும் சிவப்பும் ஒருங்கிணைய வேண்டும். அந்த ஒருங்கிணைப்பை உருவாக்கி விட்டால் பார்ப்பனியம், ஜாதியம் முதலாளித்துவத்தை வீழ்த்திட முடியும். நாட்டை விற்பனைப் பொருளாக்குவோரை ஏலம் விடுவோரை அதிகாரத்திலிருந்து விரட்டி அடிக்க முடியும்.

லெனின், ஸ்டாலின் குறித்து அவர்களை சர்வாதிகாரிகள் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஹிட்லரைப் பற்றி ஏன் பேசவில்லை? முசோலினியைப் பற்றியாவது பேசியிருக்க லாமே? முசோலினியின் கருப்பு குல்லாவைத்தானே உங்களது ஆர்.எஸ்.எஸ். குருஜியும் அணிந்திருக்கிறார்? இந்தியாவை இந்துத்துவமாக்குவதற்கான திட்டங்களையும் நடைமுறைகளையும் உங்கள் குரு கோல்வாக்கர் பாசிச ஜெர்மனியிடமிருந்து தானே கற்றுக் கொண்டார்?

நான் மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது தாயாரிடம் இன்று பேசினேன். ‘மோடியையும் ஒரு தாய் தானே பெற்றிருப்பாள்? இப்படி என் மகன் வாழ்க்கையை சீரழிக்கலாமா?’ என்று கேட்டார். அவருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த ‘ஜெ.என்.யூ.’ பல்கலைக்கழகம் பெருமைக்குரியது. இங்கே இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது. 60 சதவீதம் பேர் மாணவிகள். என்னைப் போன்ற எத்தனையோ விளிம்புநிலை மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் படிக்க முடிகிறது. என்னுடைய குடும்ப வருமானம் 3000 ரூபாய்தான். இந்த நிலையிலும் இந்த பல்கலைக் கழகத்தில் நான் ஓர் ஆராய்ச்சி மாணவன். இந்த வாய்ப்பு வேறு எங்கு கிடைக்க முடியும்?

இந்த ஆட்சிக்கு வாக்களித்தவர்கள் 31 சதவீதம் பேர் மட்டுமே! 69 சதவீதம் பேர் எதிர்த்தே வாக்களித்துள்ளனர். மறந்து விடாதீர்! சூரியனை சந்திரன் என்று கூறி நம்ப வைக்க முயற்சிக்காதீர்கள். சூரியன் சூரியன் தான். நாடாளுமன்றத்திலே இவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்கள். வெளியே ‘கவனத்தை திசை திருப்பும்’ பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். அடுத்தத் திட்டம் ராமனுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நான் சிறையை விட்டு வெளியே வரும்போது, ஒரு போலீஸ்காரரிடம் மதத்தை நம்புகிறீர்களா? என்று கேட்டேன். ‘ஆம், நான் இந்து’ என்றார். ‘உலகத்தைப் படைத்தவர் கடவுள்! அவர் எங்கும் வியாபித்திருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘ஆம்’ என்றார். அப்படியானால், “மசூதி இருந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான்; அங்கே தான் கோயில் கட்ட வேண்டும் என்று கூறுவதை ஏற்கிறீர்களா?” என்று கேட்டேன். ‘அது சுத்த மடத்தனம்’ என்று அவரிடமிருந்து பதில் வந்தது.

மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த பல்கலைக்கழகம் குறித்து, சுப்ரமணியசாமி, ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழலான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் இழிவாக எழுதியிருக்கிறார். தேசத் துரோகிகள் இருக்குமிடம் என்கிறார். வித்யார்த்தி பரிஷத் நண்பர்களை கேட்கிறேன்; சுப்ரமணியசாமியை இங்கே அழைத்து வாருங்கள்; அவரிடம் நேரடியாக விவாதிக்க தயார். ‘இந்த பல்கலைக் கழகம் தேச விரோதமானது என்று நிரூபித்தால், பல்கலைக் கழகத்தை இழுத்து மூடட்டும்; நிரூபிக்க முடியவில்லை என்றால், சுவாமிஜி, இந்த நாட்டைவிட்டு வெளியேறி ஏற்கெனவே வாழ்ந்தது போல் வேறு நாடுகளுக்குப் போய் விடுங்கள்’ என்று நாம் அவரிடம் வேண்டுகோள் வைப்போம். ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான நாக்பூரிலிருந்து நமது பல்கலைக்கழகத்தை குறி வைத்து தாக்குவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது நமக்கு நன்றாகத் தெரியும்.

இந்த பல்கலைக் கழகத்திலிருந்து புறப்பட்டுள்ள பார்ப்பனிய - ஜாதிய - முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை உங்களால் நசுக்கிட முடியாது. இந்த பல்கலைக் கழகம் அதை சந்திக்கும். அடிக்க அடிக்க எழும் பந்துபோல், அடக்க அடக்க நாம் மேலும் வீரியம் பெறுவோம்” என்று முழக்கமிட்டார் கன்யாகுமார்.

கன்யாகுமார் பீகாரில் ‘பூமிகார்’ எனும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்த மாணவர். தாய் மீனாதேவி, அங்கன்வாடியில் ரூ.3000 ஊதியத்தில் பணியாற்றுகிறார். தந்தை ஜெய்சங்கர்சிங் - பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Pin It