குஜராத் படுகொலையில் மோடிக்கு தொடர்பில்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு கூறிவிட்டது. எனவே மோடிக்கும் குஜராத்தில் 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலைக்கும் தொடர்பே இல்லை. மோடி புத்தரின் வாரிசு, அகிம்சையின் அவதாரம் என்று மோடிக்கு முகமூடி போடுகிறார்கள் - மோடி ரசிகர்கள்.
ராகவன் என்ற ஓய்வு பெற்ற பார்ப்பன காவல் துறை அதிகாரியின் தலைமையில் மோடி உள்ளிட்ட 63 நபர்கள் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரணையை நேர்மையாக நடத்தியதா? இது முக்கிய கேள்வி.
• இஷான் ஜாப்ரி என்ற கொலையுண்ட முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனைவி, குஜராத்தில் 12 மாவட்டங்களில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான மோடி, அவரது சக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 62 நபர்களை பட்டியலிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
• விசாரணை நடத்திய ராகவன் தலைமையிலான புலனாய்வுக் குழு மோடியை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே தனது விசாரணையை நடத்தியது என்று ஜாக்கியா ஜாஃபரி மட்டுமல்ல, குஜராத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ஆர்.பி. சிறீகுமார், மோடியால் பணி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய ‘தெகல்கா’ வார இதழ் செய்தியாளர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டினர்.
• கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு சம்பவம் நடந்த வுடன், மோடி விசாரணை ஏதும் நடப்பதற்கு முன்பே ‘பாகிஸ்தான் உதவியோடு முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட சதி’ என்று அலறினார்.
அப்படி அறிவித்தவுடன், கோத்ராவுக்கு புறப்பட்ட மோடி, தீயில் இறந்துபோன கர சேவகர்கள் மற்றும் பயணிகள் உடலை சட்டத்துக்குப் புறம்பாக ஆர்.எஸ்.எஸ்.காரர் களின் கண் முன்னே ‘பிரேதப் பரிசோதனை’ நடத்த உத்தரவிட்டார். விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலுடன் தொலை பேசியில் பேசினார் மோடி. அவரும் கோத்ரா வந்துவிட்டார். இது நடக்கும் போதே அமைச்சர்கள் கூடி கலவரத்துக்கான சதித் திட்டங்களை தீட்டுகிறது. இறந்து போன கரசேவகர்களின் சடலங்களை விசுவ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கவும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் கும்பல், அந்த சடலங்களை கோத்ரா விலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அகமதாபாத்துக்கு சாலை வழியாக எடுத்துச் செல்லவும் அமைச்சர்கள் கூட்டம் அனுமதிக்கிறது. அரசு சாராத ஒருவரிடம் (ஜெய்சிங் பட்டேலிடம்) சடலங்களை ஒப்படைக்கும் முடிவு சட்டவிரோதமானது என்று , கோத்ரா மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஜெயந்த்ரவி எதிர்த்தார். இதனால் மிக மோசமான வன்முறை வெடிக்கும் ஆபத்துகள் இருப்பது தெரிந்த பிறகும், இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்துடன் மோடி அதற்கு அனுமதி தருமாறு வற்புறுத்தினார்.
அன்று இரவே அகமதாபாத் திரும்பிய நரேந்திர மோடி, உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்து வதைத் தடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டார்.
• அடுத்த நாள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து முழு அடைப்புப் போராட்டத்தை மோடி அரசின் முழு ஆதரவோடு நடத்தியது. அன்று குல்பர்கா சொசைட்டி, நரோடாபாட்டியா ஆகிய இடங் களில் படுகொலையை ஜெய்தீப்பட்டேலும், மோடி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயாபென் கோட் னானியும் தலைமை ஏற்று நடத்தினார். (குற்றம் நிருபிக்கப்பட்டு இவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது) சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தப் பின்னணி நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
• இந்தப் படுகொலைகள் நடந்த 2002, பிப்.27, 28 தேதிகளில் படுகொலைகளை தலைமையேற்று நடத்திய ஜெய்தீப்பட்டேலுக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலை புலனாய்வுக்குழு மோடியைக் காப்பாற்று வதற்காகவே விசாரணைக்கு ஏற்கவில்லை.
• மாநிலம் முழுதும் பதட்டம், கலவரம் வெடிக்கும் சூழ்நிலைகளை சுட்டிக் காட்டியும், நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதை எச்சரித்தும் மாநில உளவுத் துறை அனுப்பிய தந்திச்செய்திகளை புறந்தள்ளியது விசாரணைக் குழு.
• கொலைகாரர்களுக்கு எதிரான தொலைபேசி உரையாடல், உளவுத்துறை மாநில அரசுக்கு அனுப்பிய எச்சரிக்கை தந்திகள் விசாரணைக்கு ஏற்கப்படாத நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தந்த சாட்சியங்களால்தான் இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது. மத்திய பாதுகாப்புப் படை பாதுகாப்பை உச்சநீதிமன்றம் சாட்சிகளுக்கு வழங்கியிருக்காவிடில், இதுவும் நடந்திருக்காது. மாநில அரசே சாட்சிகளை மிரட்டி குற்றவாளிகளை மோடியைப் போல் தப்பிக்கவிட்டிருக்கும்.
• பூர்வாங்க விசாரணை என்று கூறிக் கொண்டு மோடி உள்ளிட்ட 63 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யாமலே புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
மோடி ஒரே ஒரு முறை மட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் பல இருந்தும் சிறப்புப் புலனாய்வுக்குழு எந்த குறுக்குக் கேள்வியும் கேட்காமல் அவரது வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்து கொண்டது. குற்ற நடவடிக்கை சட்டம் 161 ஆவது பிரிவின் கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் சட்டத்தின் பிடிக்குள் மோடி கொண்டுவரப்பட்டிருப்பார். 69 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, நெருப்பில் போட்டுக் கொளுத்திய கொலை வெறியாட்டம் பற்றி ஒரு முதலமைச்சர் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் தனக்கு தெரிய வந்தது என்று கூறியதை புலன் விசாரணை நடத்திய ராகவன் குழு, எந்த சந்தேகமும் எழுப்பாமல் ஏற்றுக் கொண்டது தான் அதிசயம். ‘குல்பர்கா சொசைட்டி’ முஸ்லிம்கள் குடியிருப்பில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை மோடி ஆட்சி, மூடி மறைத்து குற்றவாளிகளை தப்பிக்கச்செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது என்று உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டது. ஆனால், வேடிக்கை என்னவென்றால், இந்த கொலைகளை மூடி மறைப்பதற்கு உதவிய காவல்துறை அதிகாரியையே சிறப்பு விசாரணைக் குழுவில் ஒருவராக நியமிக்கப்பட்டது தான் இதற்கு அதே உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
• இந்த வழக்கில் விசாரணையை கண்காணிக்கவும், நண்பராக உதவிடவும் (அமிகஸ் கியுரே), ராஜி ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞரை உச்சநீதிமன்றம் நியமித்தது. சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீது வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரமில்லை என்று தப்பிக்க விட்டாலும், மதப்பகையை தூண்டிவிட்ட குற்றச்சாட்டில் மோடி மீது வழக்குப் பதிவு செய்திருக்க முடியும் என்று, அவர் தனது அறிக்கையில் கூறினார். ‘இந்துக்கள் வெளிப்படுத்தும் கோபத்தை தடுக்க வேண்டாம்’ என்று உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி கூறியதை வெட்டவெளிச்சமாக்கிய அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை புலனாய்வுக் குழு ஏற்கவில்லை. ஆனால், ‘அமிகஸ்கியுரே’வாக செயல்பட்ட ராஜி ராமச்சந்திரன், “இந்த போலீஸ் அதிகாரியின் சாட்சியம் உண்மைதானா என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்திருக்க வேண்டுமே தவிர புலனாய்வுக்குழு அல்ல” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்புக்கு உச்சநீதிமன்றம் ஆர்.கே.ராகவனை நியமித்ததே சரியான தேர்வு அல்ல. ராஜிவ் கொலை நடந்தபோது, தமிழ்நாட்டில் காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்த அவருக்கு, ராஜிவ் பாதுகாப்புக்கான பொறுப்பு அளிக்கப்பட்டது. ராஜிவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதாக ராஜிவ் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி விசாரித்த ராகவன், வர்மா ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர். எனவே குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தந்த அறிக்கை ஒரு சார்பானது. அந்தக் குழு நடத்திய விசாரணை நேர்மையற்றது. மோடியை தப்பிக்கச் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது.
ஆதாரம் : (The Fiction and Fact Finding-மனோஜ் மித்தா நூல்)