டெங்கு, காலரா, மலேரியா நோய்களை போல சனாதனம் என்ற சமூக நோயை ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, பாஜக திரித்து பொய்களை கலந்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பது அவர்களின் தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா, அண்ணாமலை போன்றவர்களே இந்த அற்ப பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

சனாதன தர்மம் தான் இந்து கலாச்சாரம் என்று கூறி இந்துக்களின் எதிர்ப்பை ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார் அமித்ஷா. சனாதன ஒழிப்பு என்றால் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவரது ஆதரவு ஊடகங்கள் திரிபுவாதம் செய்கின்றன, திராவிடத்தை ஒழிப்போம், காங்கிரசை ஒழிப்போம், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்களே, அதன் அர்த்தம் அவர்களை எல்லாம் இனப்படுகொலை செய்வது என்பது தானா என்று அமைச்சர் உதயநிதி திருப்பிக் கேட்டுள்ளார். ஒரு தத்துவத்தை ஒழிப்போம் என்றால் அதை ஏற்றுக்கொண்டவர்களை இனப்படுகொலை செய்வது என்பது பாஜகவின் அணுகுமுறையாக இருக்கலாம், அதே அணுகுமுறையால் தான் காந்தியை இந்த கூட்டம் கொலை செய்தது. குஜராத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்தை ஒழிப்போம் என்று கூறி 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்தவர்கள். அதே பார்வையில் உதயநிதி பேச்சையும் திரிக்கிறார்களா?

சனாதன தர்மம் தான் இந்தியாவின் கலாச்சாரம் என்று அமித் ஷாவும் பேசுகிறார். இதைவிட பெரும்பான்மை பார்ப்பனரல்லாத இந்துக்களின் மீது சுமத்தப்படும் இழிவு வேறு எதுவும் இருக்க முடியாது. சனாதன தர்மம் என்றால் ‘பிராமணன்’ உயர்ந்தவன், வணங்கத்தக்கவன், ‘சூத்திரன்’ அடிமைகள், படிக்க கூடாதவர்கள், சொத்துரிமை இல்லாதவர்கள், பிராமணனின் வைப்பாட்டி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. காஞ்சி மூத்த சங்கராச்சாரியே வர்ணாசிரமத்தை பரப்ப நாடு முழுவதும் சனாதன சபைகளையும், சனாதன மாநாடுகளையும் நடத்தினார் என்பது வரலாறு. வர்ணாசிரம தர்மமே நமது தர்மம் என்று கூறியவர் ஆர்.எஸ்.எஸ் தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர் அதன் பெயர் சனாதன தர்மம் என்று எழுத்து மூலம் பதிவு செய்த்துள்ளார்.

‘சனாதன தர்மம்’ மாற்றத்துக்கு இடமில்லை: அப்படியே ஏற்க வேண்டும் என்பது தான் பொருள், அது சமஸ்கிருத சொல். அமைச்சர் உதயநிதியும் அதை சுட்டிக்காட்டி தனது கருத்தில் தான் உறுதியாக இருக்கிறேன் என்று உறுதியுடன் பேசியிருப்பதை பாராட்டி வரவேற்க வேண்டும்.

ஒன்றிய ஆட்சி பேசும் இந்துக்களின் சனாதன பண்பாடு தான் வண்ணார்கள், பொற்கொல்லர், எண்ணெய் ஆட்டுவோர் போன்ற விளிம்புநிலை மக்கள் தங்கள் குலத்தொழிலையே செய்ய வேண்டுமென்று கூறுகிறது. அதற்காகவே மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளார். இது ராஜகோபாலாச்சாரி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தின் மறு வடிவம். இந்த சமூக அநீதியான பார்ப்பனிய திட்டங்களை முறியடித்து விளிம்பு நிலையில் தவிக்கும் சூத்திர பஞ்சம இந்துக்களுக்கு கல்வி பதவிகளுக்கான வாய்ப்புகளை வழங்கி அவர்களை அதிகார மயப்படுத்தியது தான் திராவிட இயக்கம். அதனால் தான் சனாதனம் தாண்டவமாடும் வட மாநிலங்களை விட திராவிடக் கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சியடைந்து முன்னிலை பெற்று நிற்கிறது.

இந்து ராஷ்டிரம் பேசும் பாஜகவும் சங்பரிவாரங்களும் பார்ப்பன ஊது குழல்களும் விளிம்பு நிலையில் உழலும் ஏழை எளிய இந்துக்களின் வாழ்வாதார உரிமைகளை முடக்குகின்றன. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நீட் திணிப்பு, உயர்கல்விக்கு தடை, உயர்கல்வி நிறுவங்களில் சமூகநீதி மறுப்பு, அங்கே பெரியார், அம்பேத்கர் படிப்பு வட்டத்துக்கு தடை, பெண்கள் கோயில் நுழைவு உரிமை தடுப்பு, சமஸ்கிருத இந்தி திணிப்பு என்று அடுக்கடுக்காக இந்த மக்கள் மீது சமூக பொருளாதார சுமைகளை ஏற்றிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அதானி, அம்பானி போன்ற உயர்ஜாதி கோடீஸ்வர இந்துக்களை சட்டத்திற்கு எதிராக கொழுக்க வைக்கிறது. பழங்குடிச் சமூகத்தை சேர்ந்த குடியரசு தலைவரையும், குக்கி இனத்தவரையும் அவமதித்து பழிவாங்கத் துடிக்கிறது. இஸ்லாமிய கிருஸ்துவர்கள் மீது வெறுப்பைக் கக்கி உலக நாடுகளின் பிரபல ஏடுகளின் கண்டனத்திற்கும், ஒபாமா போன்ற தலைவர்களின் விமர்சனத்திற்கும் உள்ளாகிறது.

இந்தியா அரசியல் கூட்டணி பன்னாட்டு பகாசூர இந்து முதலாளிகளுக்கு எதிராக விளிம்புநிலை இந்துக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறது. இப்போது நடக்கும் போராட்டமே விளிம்புநிலையில் இருக்கும் சூத்திர பஞ்சம இந்துக்களுக்கும், பார்ப்பன பன்னாட்டு சுரண்டல் இந்துக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான். இதற்கு அடிப்படைக் காரணம் சனாதனம். இந்த சனாதனத்தை திராவிட இயக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிற்கிறார், உதயநிதி ஸ்டாலின் எதிர்கிறார். சொல்லப்போனால் இந்த சனாதனம் அழிக்கப்பட வேண்டும் என்று சொன்னவர்களே பெரியாரும் அம்பேத்கரும் தான். அவர்களையும் இனப்படுகொலையாளர்களின் பட்டியலில் பாஜக சேர்த்துவிடுமா?

இந்தியா கூட்டணி ஒன்றிய ஆட்சியை நடுங்க வைத்துள்ளது, பாஜக தோல்வியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. அதற்காக இந்த கூட்டணியை உடைக்க இத்தகைய சாணக்ய குறுக்கு வழிகளில் பாஜக முயற்சித்து பார்க்கிறது. இதில் தோற்கப் போவது சனாதனம் தான். வெற்றிபெறப் போவது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைக் கவசங்களோடு விளிம்புநிலை மக்கள் பக்கம் நிற்கும் இந்தியா கூட்டணி தான்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It