அதிர்கிறது இந்திய ஒன்றியம், அலறுகிறார்கள் காவிகள், “சனாதனத்தை ஒழிப்போம்” என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சால்.

மத்தியப் பிரதேசத்திலிருந்து பிரதமர் மோடி சொல்கிறார், “சனாதனம் இந்தியாவை இணைக்கிறது” என்று. ஆனால் சனாதனம் என்றால் என்ன என்று தெளிவாகச் சொல்லவில்லை அவர்.

சாதிய ஏற்றத் தாழ்வுகளைச் சொல்லி மனித உரிமைகளைப் பறிக்கும் ஆதிக்கத்தின் பெயர் சனாதனம்.

சேரன்மாதேவி குருகுலம், கேரளத்தின் வைக்கம் போராட்டத்திற்கான காரணங்கள், சனாதனம்.

மனித இனத்திற்கு எதிரான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் உதயநிதி. இல்லையில்லை, சனாதனத்தைக் காக்க வேண்டும் என்று மதச்சாயம் பூசுகிறார் மோடி.

எந்த ஒரு பேசுபொருளாயினும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் அவை மறைந்து வேறு ஒரு பேசுபொருளுக்குள் போய்விடும் பா.ஜ.கவின் அரசியல், உதயநிதியால் சொல்லப்பட்ட ‘சனாதனம்’ என்ற சொல்லை விட்டு நகர மறுக்கிறது.

ஏனென்றால் கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க வின் ஆட்சி இமாலய ஊழல்களால் நிறைந்து வழிகிறது.

அண்மையில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் ரூபாய் 7,500,000,000,000 ஊழல் செய்திருக்கிறது என்பது அம்பலம் ஆகியிருக்கிறது.

மதவாதம், இனவாதம், வெறுப்பு அரசியல், வன்முறை, வேலையில்லாத் திண்டாட்டம், தேர்தல் வந்தால் பொய் வாக்குறுதிகள், திரித்துப் பேசுவது, பொய் பொய்யாய்ப் பேசுவது தவிர மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்த, இருக்கும் அரசு மோடியின் பா.ஜ.க. அரசு.

இவை எல்லாம் மக்களுக்குத் தெரிகிறது. அதனால் உருப்படியாக 9 ஆண்டுகளில் செய்த செயல்களைச் சொல்ல முடியாத மோடியும், அவரின் சகாக்களும் வேறு வழியின்றி சனாதனத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படித்தான் தொங்கினாலும் 2024 ஆண்டுத் தேர்தல் நீரில் அவர்களின் பருப்பு வேகாது. பா.ஜ.க.ஆட்சி ‘ஸ்வாஹா’!

வீழட்டும் பா.ஜ.க, வெல்லட்டும் இந்தியா கூட்டணி!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It