தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, பாஜகவினர் திமுக வில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டியே வருகின்றனர். குற்றம் சாட்டுவதுடன், பாஜகவில் வாரிசு அரசியலே கிடையாது என்றும் கூறி வருகின்றனர். பாஜகவிலும் வாரிசு அரசியல் உள்ளது என்பதை பலரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசியத் தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநிலத் தலைமையிலும் வாரிசுகள் இல்லை” என்று குறிப்பிடப்பட் டுள்ளது. பாஜகவின் பொறுப்புகளில் வேண்டுமானால் வாரிசுகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்திய ஒன்றியத்தின் அமைச்சரவையிலும், பாஜக ஆளும் மாநிலங்களின் அமைச்சரவைகளிலும் பாஜக வின் வாரிசுகள் எந்தளவிற்கு இடம் பெற்றுள்ளனர் என்பதை சிறு புள்ளிவிவரத்தின் மூலம் காணலாம்.

  • பியூஸ் கோயல் - மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தந்தை: வேத் பிரகாஷ் கோயல் - முன்னாள் மத்திய அமைச்சர், தாய்: சந்திரகாந்தா கோயல் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • அனுராக் தாகூர் - மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தந்தை: பிரேம் குமார் துமால் - முன்னாள் முதல்வர், ஹிமாச்சல் பிரதேசம்
  • தர்மேந்திர பிரதான் - மத்திய கல்வித்துறை அமைச்சர், தந்தை: தேபேந்திர பிரதான் - முன்னாள் மத்திய அமைச்சர்
  • ஜோதிராதித்ய சிந்தியா - மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர், தந்தை: மாதவராவ் சிந்தியா - முன்னாள் மத்திய அமைச்சர்
  • ராஜ்நாத் சிங் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், மகன்: பங்கஜ் சிங் - எம்.எல்.ஏ, உத்தரப்பிரதேசம்
  • கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தந்தை: எஸ்.ஆர்.பொம்மை - முன்னாள் முதல்வர், கர்நாடகா
  • துஷ்யந்த் சிங் - மக்களவை எம்.பி, தாய்: வசுந்தரா ராஜே - முன்னாள் முதல்வர் ராஜஸ்தான்
  • வருண்காந்தி - மக்களவை எம்.பி, தாய்: மேனகா காந்தி - மக்களவை எம்.பி
  • நீரஜ் சேகர் - மாநிலங்களவை எம்.பி, தந்தை: சந்திரசேகர் - முன்னாள் பிரதமர்
  • ராஜ்வீர் சிங் - மக்களவை எம்.பி, தந்தை: கல்யாண் சிங் - முன்னாள் முதல்வர், உத்தரப்பிரதேசம்.

இவர்களெல்லாம் பாஜகவின் வாரிசுகள் இல்லையென்று கூறப்போகிறார்களா பாஜகவினர்  வானதி சீனிவாசன் அறிக்கையில், “பிறப்பின் அடிப்படையில் ஒருவர் கட்சியின் தலைமைக்கு வருவது தான்” வாரிசு அரசியல் என்று வாரிசு அரசியலுக்கு ஒரு புது விளக்கத்தையும் கொடுத்துள்ளார். தற்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (2017 - 2019 வரை பாதுகாப்புத் துறை அமைச்சர்) ஆகியோர் எந்த தொகுதியில் நின்று மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றனர்?  தேர்தலையே சந்திக்காதவர்கள் நாட்டின் உயரிய பொறுப்புகளில் நியமிப்பதற்கு காரணம் தான் என்ன? அவர்களின் செயல்களா அல்லது பிறப்பின் அடிப்படையிலா? இறுதியாக, இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிற்கும் அல்லாத முக்கியத்துவம் வழங்கப்படும் கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டாரே அது எதன்  அடிப்படையில் ?

- விடுதலை இராசேந்திரன்

Pin It