கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

பிரிட்டிஷ் ஆட்சி மாகாணங்களுக்கு உரிமைகள் வழங்குவது குறித்து அனுப்பிய சைமன் ஆணையம் குறித்து கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். பெரியார் சுயமரியாதை இயக்கம் இதை வரவேற்றது. காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. பெரியார் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வால் பிடிக்கிறார்; தேசத் துரோகி என்று குற்றம் சாட்டினார்.

சைமன் ஆணையம்! ஆதரவும் எதிர்ப்பும்

இது குறித்த ஒரு வரலாற்று விளக்கத்தை இளைய தலைமுறையினருக்கு விளக்கியாக வேண்டும். சைமன் ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 7 உறுப்பினர்களில் ஒருவர்கூட இந்தியர் இல்லை என்று கூறி அன்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆணையத்தைப் புறக்கணித்தபோது, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், இந்தியர்களின் கருத்துகளைக் கேட்க வந்த அந்த ஆணையத்தை வரவேற்றது. முதலில் தயக்கம் காட்டிய நீதிக்கட்சி, பிறகு ஆணையத்திடம் கருத்து கூறும் முடிவுக்கு வந்தது.

ambedkar with simon commission1929இல் செங்கல்பட்டில் பெரியார் கூட்டிய முதல் சுயமரியாதை மாநாட்டில் பெரியார் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம், பெரியார் ஏன் வரவேற்றார் என்பதை தெளிவாக விளக்குகிறது. ஆணையத்தில் இந்தியர்கள் இடம் பெற முடியாது போனதற்குக் காரணம், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் பிராந்திய பிரதிநிதி என்று ஒருவரும் இல்லை. இந்தியாவில் அப்போது பல்வேறு வகுப்பினரின் உரிமைகள் கருத்துகள் ஒன்றுக்கொன்று மாறாக இருக்கும் நிலையில் பல்வேறு வகுப்புகளில் பிரதிநிதிகளையும் சட்டப்படியான உரிமைகளைப் பரிசீலிக்கும் ஆணையத்தில் இடம் பெறச் செய்ய இயலாது என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சி இதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியிருப்பதை சுயமரியாதை மாநாட்டின் தீர்மானம் சுட்டிக் காட்டியது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியாவையே நிர்வகித்து வரும் அதிகாரம் பெற்றிருப்பதை ஏற்றுக் கொண்டு அனைத்துக் கட்சிகளும் அடங்கி ஒத்துழைக்கும்போது அதே நாடாளுமன்றம் நியமித்துள்ள இந்த ஆணையத்தின் முன் சாட்சியம் கூறுவது, இந்திய சுயமரியாதைக்கு எதிரானது என்று (காங்கிரஸ்) கூறுவது பொருத்தமற்ற வாதம் என்று கூறிய அத் தீர்மானம், சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கு ஆணையத்தின் முன் கருத்துகளைப் பதிவு செய்து, அதற்கான வழிமுறைகளைத் தேடுவதே சரியான அணுகுமுறை என்றும் தெளிவு படுத்தியது.

பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை வழிமொழிந்து பேசிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜனகங்கர கண்ணப்பர் சுயராஜ்யமே நமது இறுதி இலட்சியம்; அதனை அடைவதற்கான வாய்ப்புகளை முன்னெடுப்பதற்கு இந்த ஆணையத்தின் முன் கருத்துகளைப் பதிவு செய்வதே இயக்கத்தின் நோக்கம் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் என்ற போர்வையில் பார்ப்பனர்களே பல்வேறு அமைப்புகளில் பங்கேற்று வந்ததை சுட்டிக் காட்டிய பெரியார், இந்தியர்கள் என்ற பெயரில் அவர்கள் தான் இந்தக் குழுவிலும் இடம் பெற்றிருப்பார்கள். இந்நிலையில் இந்தியர்கள் இந்த ஆணையத்தில் இடம் பெறாமல் இருப்பதே நல்லது என்று கூறினார். ரவுலட் சட்டம் மற்றும் பத்திரிகைகளை ஒடுக்கும் சட்டங்களை பிரிட்டிஷார் கொண்டு வந்த போது அதற்கு கையொப்பமிட்டு ஏற்பு வாங்கியது இந்தியர்கள் தானே? என்று கேள்வி எழுப்பினார் பெரியார். ரவுலட் சட்டம் என்ற கொடூரமான ஒடுக்குமுறை சட்டத்தை உருவாக்கியது பிரிட்டிஷ் நீதிபதி ரவுலட் மட்டுமல்ல; குமாரசாமி சாஸ்திரி என்ற பார்ப்பனரோடு இணைந்து உருவாக்கப் பட்டதே அந்த சட்டம் என்ற உண்மையையும் பெரியார் போட்டுடைத்தார். ஆணையத்தைப் புறக்கணிப்பதால் சுயராஜ்ய கோரிக்கையை முன்னெடுக்க முடியாது. சட்டங்களை எதிர்த்து நடத்துகிற போராட்டங்களே நோக்கத்தை முன்னெடுக்கும் என்றார் பெரியார் (Progress could be achieved not by non co-operation but by constitutional agitation).

பெரியார், பிரிட்டிஷ் ஆட்சிக்கு ‘வால் பிடித்தவர்’ என்ற தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பார்ப்பனர்கள் இன்று வரை கூறுவதற்கு சைமன் ஆணையத்தை வரவேற்றதையே முதன்மையானதாக சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் அரசியல் பின்னணியை அன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

பெரியாரை தேச விரோதியாக சித்தரிக்கும் பார்ப்பனர்கள், உண்மையில் சைமன் ஆணையத்தின் முன் சாட்சி கூறாமல் புறக்கணித்தார்களா என்றால் அதுவும் இல்லை. இது பற்றி பெரியார் ‘குடிஅரசு’ இதழில் (15.7.1928) இந்த உண்மையை அம்பலப்படுத்தினார்.

“பார்ப்பன சபையும், வர்ணாஸ்ரம பார்ப்பன சபையும் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கக் கூடாது என்று கூறியதோடு, சாட்சி சொல்லவும், ஒத்துழைக்கவும், தீர்மானங்கள் செய்தும் யதாஸ்து (கோரிக்கை மனு) தயார் செய்தும் அனுப்பி விட்டன. திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியார், சத்திய மூர்த்தியார் போன்ற ‘பிரபல’ தேசியவாதிகள் எல்லோரும் மேற்குறிப்பிட்ட சபைகளில் அங்கத்தினர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தவிர முதல் வகுப்பு தேசியத் தலைவர்களான திருவாளர்கள் விஜயராகவாச் சாரியார், ஸ்ரீனிவாசய்யங்கார், எ. ரங்க சாமி அய்யங்கார் முதலியோர்களும் தங்கள் யதாஸ்தை (கோரிக்கை மனு) சைமன் கமிஷனுக்கு போய்ச் சேரும்படி செய்தாகிவிட்டது. அவைகள் கடை களிலும் விற்க ஏற்பாடு செய்தாகி விட்டது”

- என்று உண்மைகளை பொது வெளியில் அம்பலப்படுத்தினார் பெரியார்.

சைமன் குழுவை வரவேற்றதற்காக பெரியாருக்கு ‘தேச துரோகி’ பட்டம் சூட்டிய காங்கிரசும் பார்ப்பனர்கள் திரைமறைவில் தங்கள் சொந்த ஜாதி - வர்ண அமைப்புகளின் பெயரில் ஆணையத்துக்கு தங்களின் மேலாதிக்கத்துக்கான கோரிக்கைகளை முன் வைத்து இரட்டை வேடம் போட்ட வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்

அரசியல் சட்ட சீர்திருத்தங்களை ஆராய வந்த சைமன் குழுவைப் புறக்கணித்த காங்கிரஸ், இந்தியாவுக்கான ஒரு அரசியல் சட்டத்தை தங்களாகவே உருவாக்கப் போவதாக முடிவெடுத்தது, மோதிலால் நேரு தலைமையில் (ஜவஹர்லால் நேருவின் தந்தை) ஒரு குழுவை நியமித்து, ஒரு அறிக்கையை தயாரித்தது. 1929இல் தான் காங்கிரஸ் முதன்முதலாக ‘முழு சுயராஜ்யம்’ என்ற கோரிக்கையையே முன் வைத்தது. அதற்குப் பிறகும்கூட மோதிலால் நேரு குழு தயாரித்த பரிந்துரை முழு சுதந்திரத்தை வலியுறுத்தவில்லை, பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட சுயராஜ்யத்தையே (Dominion Status) முன்மொழிந்தது.

எத்தகைய கோரிக்கைகளை வைத்தாலும் அவை இந்தியாவின் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும்கூட பிரிட்டிஷ் அரசரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரலின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும் என்பதுதான் அப்போதிருந்த சட்டம். இந்தப் பின்னணியில் காங்கிரஸ் எடுத்த ‘சைமன் ஆணைய’ப் புறக்கணிப்பு நிலைப்பாடு ஒரு வெற்று ‘தேச பக்தி’ நாடகம் என்றே கூற வேண்டும். சைமன் ஆணையப் பரிந்துரையில் -

“அதிகாரங்களைப் பங்கிட்டு வழங்கிய முறை (Devolution) முழுமையடையவில்லை. வருங்காலத்தில் ஒவ்வொரு மாகாணமும் இயன்றவரை தனது வீட்டின் எஜமானியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். (It is our intention that in future each province should be as for as possible mistress in her own house. Thus independent life will be given to the provinces which will from the nucleus of the new federal structure - Commission Report vol II, Para 27) என்று கூறியதோடு ஆணையத்தின் அறிக்கை “கூட்டாட்சி தனித் தன்மையை பெற்றிருக்க வேண்டும்; தன்னுணர்வு என்ற பிரக்ஞையும் இருக்க வேண்டும்” என்றும் கூறியது.

சைமன் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கான அரசியல் சட்டத்தை 1935இல் உருவாக்கியது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிக்குட்பட்ட அதிகாரங்களின் ஒரு பகுதியையே பிரித்து மாகாணங்களுக்கு வழங்காமல் வைஸ்ராய்க்கு தந்து விட்டது. எனவே மத்தியில் கூட்டாட்சி உருவாகவில்லை. மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களிலும் மத்திய அரசு குறுக்கீடு செய்வதாகவே இருந்தது. ஆனாலும், மாகாணங்கள் வெறும் நிர்வாகத் தரகர்கள் என்ற நிலை மாறி மாகாண அரசுகளும் அரசியல் சட்டத்திலிருந்தே அதிகாரங்களைப் பெறும் தனி வடிவத்தை, இந்திய வரலாற்றில் முதன்முறையாகப் பெற்றது என்கிறார், ‘மாநில சுயாட்சி’ ஆய்வு நூலை எழுதிய முரசொலி மாறன். அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் இது முழு மாநில சுயாட்சி அல்ல; முழுமையான சுயாட்சியையே வழங்க வேண்டும் என்ற குரலையே ஒலித்தனர். அப்போது முழு மாநில சுயாட்சி பேசியவர்கள் சுதந்திர இந்தியாவில் ஏன் மாநில சுயாட்சியை கை கழுவினர்? அப்படி பேசுவதே தேச விரோதம் என்று கூறினர்.

பார்ப்பன-பனியாக்களுக்கு அதிகார மாற்றம்

‘பிரிட்டிஷ் இந்தியா’ காலகட்டத்தில் மாகாணங்களில் எழுந்த கோரிக்கைகளை முழு உடன்பாடு கொண்டு ஏற்காவிட்டாலும்கூட பிரிட்டிஷ் ஆட்சி அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து வந்திருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கூறு. 'ஆணையத்தை அறிவித்து அறிக்கையை அலமாரியில் தூங்க வைக்கும்' இன்றைய தேச பக்தர்களைப்போல் அல்லாமல், ஏதோ ஒரு வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது என்பதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். 1935இல் பிரிட்டிஷ் அரசு உருவாக்கித் தந்த சட்டம் தான் 1950இல் இந்தியாவில் உருவான அரசியல் சட்டத்துக்கும் அடிப்படையாக அமைந்தது.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

Pin It