செப்.17, பெரியார் பிறந்த நாளில் தான் ‘நடிகவேள்’ இராதா முடிவெய்தினார். அவர் நினைவாக ‘மணா’ தொகுத்த ‘எம்.ஆர்.ராதா காலத்தின் கலைஞன்’ நூலிலிருந்து -சில பகுதிகள்:

நடிகவேள் எம்.ஆர்.இராதா, 1942க்குப் பிறகு மறுபடியும் நாடக மேடைக்கே திரும்பினார். பொன்னுச்சாமி பிள்ளை கம்பெனியில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இழந்த காதல் நாடகத்தில் அவருடைய சவுக்கடிக் காட்சிக்குத் தனிப் பெயர் கிடைத்தது. சிவாஜி பெண் வேடத்தில் நடித்த இந்த நாடகம், வெள்ளித்திரை (திரைப்படம்) தரத் தவறிய புகழைத் தந்தது. அண்ணா உள்படப் பலர் பாராட்டினார்கள். பெரியாரும், சம்பத்தும் வந்து மனப் பூர்வமாக வாழ்த்தினார்கள். பெரியாருடன் தொடர்பு கூடியது. ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்கிற பெயருடன் இயங்க ஆரம்பித்தார் இராதா.

“சுயமரியாதைக் கருத்துகளை நான் ஆராய ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே முழுவதும் அதன் வசமாகிவிட்டேன்” என்று இராதாவே உணர்வுடன் சொல்லு மளவுக்கு திராவிட இயக்கக் கருத்துக்கள் அவருடைய நாடகங்களில் வெளிப்பட்டன.

விமலா அல்லது விதவையின் கண்ணீர் துவங்கி, இலட்சுமி காந்தன், போர்வாள், தூக்குமேடை, இராமாயணம், இரத்தக்கண்ணீர், தசாவதாரம், கதம்பம் என்று பல நாடகங்களை அரங்கேற்றினார்.

கலைஞர் கருணாநிதி, சி.பி. சிற்றரசு, திருவாரூர் தங்கராசு, குத்தூசி குருசாமி என்று பலர் இவருடைய நாடகங் களுக்கான வசனங்களை எழுதினார்கள். ஒவ்வொரு முறையும் இந்த நாடகங்கள் நிகழ்த்தப்படும்போதும் அன்றைக்குள்ள சமூக, அரசியல் குறித்த செய்திகள் நாடகத்தில் அலசப்படுவதின் மூலம் அந்த நாடகங்களுக்குச் சமகாலத்திய அந்தஸ்து கிடைத்தது.

“பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அவர் என்னத்தைச் சாதித்தார்?”

“உன் நெற்றியும் என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே; இதற்குக் காரணம் பெரியார் தாம்ப்பா...” என்று ஒரு காட்சியிலும், கலைஞர் கருணாநிதி யுடன் நடித்துக் கொண் டிருக்கும்போது, “தளபதி தளபதி என்கிறீர்களே அண்ணாதுரை எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்?” என்றும் கேட்பதற்கான துணிவு இராதாவிடம் இருந்தது. சில சாதிச் சின்னங்களைக் குறித்து -

“ஏம்ப்பா... நீ நெற்றியில் போட் டிருக்கியே... டபுள் ஒயிட், சிங்கிள் ரெட். அது என்னப்பா?”

“அது திருப்பதி வெங்கடாசலபதியின் பாதம்.”

“சரி... திருப்பதி வெங்கடாசலபதியின் நெற்றியிலே இருக்கே ஒரு நாமம்... அது யார் பாதம்? என் பாதமா?” என்றெல்லாம் இராதா நாடகத்தில் பேசும் வசனங்கள் அந்தக் காலக்கட்டத்தில் எழுப்பிய அதிர்வுகள் அதிகம்.

1954 டிசம்பர் 11, 12 தேதிகளில் இராமா யணம் நாடகத்திற்குத் தடை விதிக்கப்பட்ட போது, திருச்சியில் உள்ள தேவர் மன்றத்தில், “வராதே. என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால் அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும். எம்.ஆர். ராதா” என்று தட்டி யிலும், நோட்டீசிலும் விளம்பரம் செய்வ தற்குப் பின்னுள்ள உணர்வைப் பற்றி இராதாவே (64இல்) இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“இருபது, இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு சுயமரியாதைக் கொள்கைகளை நாடகங்களில் புகுத்தி நடிப்பதென்பது அத்தனை சுலபமான வேலையல்ல.”

1946இல் சென்னை யில் ‘போர்வாள்’ நாடகத்தை இராதா நடத்த முயன்றபோது அதற்குத் தடை, பிரகாசம் தலைமை யிலான அரசிடமிருந்து, உடனே பெயரை மாற்றிச் சில காட்சி களை மாற்றி அதே நாடகத்தை சர்வாதி காரி, மகாத்மா தொண் டன், சுந்தர லீலா என்கிற பெயர்களில் நடத்தினார்.

மதுரையில் 1946இல் நடந்த திராவிடர் கழக மாநாட்டுப் பந்தலில் தீ வைக்கப்பட்டபோது இராதா தங்கியிருந்த வீட்டிலும் தாக்குதல் நடந்தது. ஏழு வருடங்களுக்குப் பின் திரும்பவும் மதுரையில் இராமாயணம் நாடகம் நடத்தியபோது கலவரமானது. திருச்சி, குடந்தையிலும் இதே மாதிரியான கலாட்டாக்கள். அவருடைய நாடகப் படுதாவில் காட்டப்படும் ‘உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்’ என்கிற வாசகத்திற்கும், அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கும்கூட எதிர்ப்பு வலுத்தது. கோவையில் நாடகம் நடத்தும்போது உருவான கலவரச் சூழலில் ‘உயிருக்குத் துணிந்தவர்கள் மட்டுமே நாடகம் பார்க்க வரலாம்’ என்று இராதாவே மைக்கில் அறிவிக்கும்படி ஆனது. கும்பகோணத்தில் தடையை மீறி இராமாயணம் நாடகத்தை நடத்திய இராதா, இராமர் வேடத்துடனேயே கைது செய்யப்பட்டார்.

நாடகத் தடைச் சட்டம் உருவாக்கப்பட்டு இராதாவின் நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு காமராஜர் ஆட்சியில் மட்டும் இராதா கைது செய்யப்பட்டது 52 தடவைகள். தென்னிந்திய நடிகர் சங்கம் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்கிற ஆதங்கம் இராதாவிடம் இருந்திருக்கிறது.  ..........................

இராமாயணம் நாடகம் இராமனை உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராக சீதை மற்றும் அவர்களுடைய குழந்தைகளான இலவன், குசனின் பார்வையிலிருந்து இராமனைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

“எங்கே எங்கே நீதி

 இராமன் வாழ்விலே

 இராமராஜ்யம் தன்னிலே. அது

 அன்றும் இல்லை

 இன்றும் இல்லை என்றே சொல்வீர்;

 தெய்வம் ஆவானோ இராமன்”

“அநீதியிதே” என்று இலவ குசன்கள் பாடுவதான பாடலுடன் முடிகிறது இராதா நடித்த ‘இராமாயணம்’ நாடகம்.

தனக்கு ஒரு சிலை வைத்து அதில் காறித் துப்புங்கள் என்கிறபடி முடியும் இரத்தக்கண்ணீர் நாடகம்.

Pin It