மெட்ராஸ் ராஜகோபால் (நாயுடு ) மகன் ராதாகிருஷ்ணன் என்றால் யாருக்குத் தெரியும். சுருக்கமாக எம்.ஆர்.இராதா என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள், சிற்றூர் உட்பட.

எம்.ஆர்.இராதா என்றால் அவர் ஒரு நடிகர் என்பதுதான் பரவலாக அறியப்பட்ட செய்தி. “நான் எப்படி சமுதாயத்துறையில் மாறுதல் எண்ணமும், புரட்சிக் கருத்துகளும் கொண்டு பாடுபட்டு வருகிறேனோ, அப்படியே ராதா அவர்களும் நமது கருத்துகளை நாடகத் துறையில் விடாப்பிடியாக நடத்திக் கொண்டே வருகிறார் ” என்று தந்தை பெரியாரே இராதாவைப் பற்றிச் சொல்லி இருப்பதில் இருந்து அவரின் முழு உருவம் நமக்குத் தெரிகிறது.

கலைமேதையான இராதா நாடகக் கலையைக் கலைக்காகப் பயன் படுத்தவில்லை. திராவிட இன உணர்வுகளுக்காக, மூடநம்பிக் கையைத் தகர்ப்பதற்காகவே பயன்படுத்தியுள்ளார் என்பது அவரின் இராமாயனம் கீமாயணம் நாடகம் உணர்த்துகிறது. இவர் தொடங்கிய நாடக நிறுவனத்தின் பெயரே “திராவிட மறுமலர்ச்சி நாடகக் கம்பெனி ” என்பதுதான்.

நாடக உலகில் முதல்முதல் நாடகம் தணிக்கை செய்யப்பட்டதும், தடை செய்யப்பட்டதும் இவரின் நாடகங்க ளுக்குத்தான். அப்போதும் குறித்தநாளில் குறித்த அதே நாடகத்தை வேறுபெயரில் நடத்திவிடுவார் இராதா. எடுத்துக் காட்டாக ரத்தக்கண்ணீர் நாடகம் தடை செய்யப்பட்டபோது “மேல்நாட்டுப் படிப்பு” என்றும், தூக்கு மேடையை “பேப்பர் நியூஸ்” என்றும், காதல் பலி “நல்ல முடிவு” என்றும் போர்வாளை “சர்வாதிகாரி” என்றும், பெயரை மாற்றி நாடகத்தை நடத்திச் சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டியவர் எம்.ஆர்.இராதா.

நம் முதல்வருக்குக் கலைஞர் என்ற பட்டத்தைக் கொடுத்தவர் இராதா. இராதாவுக்கு நடிகவேள் என்ற பட்டத்தைக் கொடுத்தவர் பட்டுக்கோட்டை அழகிரி.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கு முன்னரே, பெரியாரின் உண்மைத் தொண்டராக, திராவிட இனமான உணர்வுக் கலைஞராக வாழ்ந்த எம்.ஆர்.இராதா 14.04.1907 ஆம் ஆண்டு பிறந்தார், 17.09.1979 ஆம் ஆண்டு மறைந்தார். நடிகவேள் மறைந்தநாள் தந்தை பெரியார் பிறந்தநாள்.

பிறப்பும் இறப்பும் சந்திக்கும் அந்த நாளை நினைவுகூர்வோம்.

Pin It