மூடநம்பிக்கைகளும் வழிபாட்டுணர்வை எதிர்பார்க்கும் பிம்பங்களும் போலிப் பெருமிதங்களும் நிறைந்த தமிழ்த் திரைப் பரப்பில் தனித்ததொரு தீவாய் மிதந்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. ஒளிவட்டங்களின் சூட்டில் பொசுங்கிய பெருவெளியில் கோபம் கொண்ட ஒரு காட்டு விலங்கைப்போல ராதா என்னும் கலைஞன் அலைபாய்ந்ததைப் புரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல. அதற்குமுன் பீடத்தில் ஏற்றப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தையும் இடது காலால் உதைத்தெறிந்த ராதா, மதிப்பீடுகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் பார்த்துப் பகடி செய்தார். போர்க்குணங்களும் அரசியலுணர்வும் மரத்துப் போன காலகட்டத்தில் வாழும் நாம் அந்த கலகக் கலைஞனின் நூற்றாண்டில் அவரை நினைவு கொள்வது நமது வரலாற்றுப் பிரக்ஞையை மீட்டெடுக்கவோ அல்லது குறைந்தபட்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளவோ உதவும்.

M.R.Radha and Sivaji ராதாவின் பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதொன்றும் அதிசயமானதல்ல. எம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு சென்னை சூளையில் முதன்முதலில் எம்டன் குண்டு வீசப்பட்ட தினத்தில் பிறந்தார். மதராஸ் ராஜகோபால் (நாயுடு)வின் மகன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவ வீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார்.

சிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித் திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். இவ்வாறாகத் தொடங்கிய ராதாவின் நாடக வாழ்க்கை சினிமா உலகில் இணைந்தும் விலகியும் ஊடாடியபடியே தொடர்ந்தது

ரிட்டயர்டு லைப் :

ராதா நாடகத் துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து 'ராஜசேகரன்' என்னும் படத்தைத் தயாரித்தார். முதல் படத்திலேயே படத்தை இயக்கிய பிரகாஷ் என்பவருக்கும் ராதாவிற்கும் மோதல் ஆரம்பித்தது. இயக்குனர் என்ற தோரணையில் அவரின் திமிர்த்தனமான நடவடிக்கைகள் ராதாவிற்கு ஒத்து வரவில்லை. 1937ல் ராஜசேகரன் வெளியானது. அதன் பிறகு 1942 வரை அய்ந்தாண்டுகள் அய்ந்து படங்கள் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத் துறைக்கே திரும்பினார்.

நாடகத்திலிருந்து அனைவரும் சினிமாவிற்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவிலிருந்து நாடகத்திற்குத் திரும்பியவர் ராதா மட்டுமே. பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் 'ரத்தக்கண்ணீர்' படத்தின் மூலம் சினிமாவிற்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். சினிமா வாழ்க்கையைக் குறிப்பிடும்போது 'ரிட்டயர்டு லைப்' என்றே குறிப்பிட்டார். படங்களின் வெற்றி விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. காரணம் கேட்டால் ' வியாபார ரீதியாக வசூலைக் குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப் படுவதில்லையே' என்றார்

1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்க மாட்டேன்' என்று மறுத்து விட்டார்.

ராதாவின் நாடகங்களில் புகழ் பெற்றது 'இழந்த காதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சமயங்களில் அப்பாத்திரத்தில் வேறு பல நடிகர்கள் நடித்தபோது மக்கள் அதை ஏற்கவில்லை. ராதாதான் நடிக்க வேண்டுமென்று கலகம் கூட செய்திருக்கின்றனர். அந்நாடகத்தை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் படமாகத் தயாரிக்க எண்னி ஜெகதீஷ் வேடத்தில் கே.பி.காமாட்சி என்னும் நடிகரை நடிக்க ஒப்பந்தம் செய்தார். இதைக் கேள்விப்பட்டு கோபப்பட்ட ராதா 'என்.எஸ்.கே.வைச் சுட்டே தீருவேன்' என்று துப்பாக்கியுடன் அலைந்திருக்கிறார். என்.எஸ்.கே.வே ராதாவை நேரில் சந்தித்து 'உன்னை வைத்து நான் வேலை வாங்க முடியுமா? காமாட்சி என்றால் நான் விருப்பப்படி வேலை வாங்குவேன்' என்று சமாதானம் சொல்லவும்தான் சமாதானம் ஆனாராம் ராதா.

பாகப்பிரிவினை திரைப்படம் இந்தியில் தயாரிக்கப்பட்ட போது சுனில் தத் 'சிவாஜியின் பாத்திரத்தில் திலீப்குமார் நடிக்கிறார். அவரால் சிவாஜியை விடவும் கூட சிறப்பாக நடித்துவிட முடியும். ஆனால் ராதாவின் பாத்திரத்தில்தான் ராதாவை விட வேறு யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது" என்றார். தெலுங்கில் அப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டபோதும் ராதாவின் பாத்திரத்தில் நடிக்க பலரும் தயங்கினர். ஆனால் பாகப்பிரிவினை படத்தை இந்திய அளவில் மூன்றாவது சிறந்த படமாக தேர்ந்தெடுத்த இந்திய அரசு விருது வழங்கும் விழாவிற்கு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது. ராதா மட்டும் அழைக்கப்படவில்லை. அதை அப்போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர்.கே.டி.கே.தங்கமணி கண்டித்திருக்கிறார்.

சினிமாவில் நடித்தபோதும் 'சினிமா பார்க்காதீர்கள்' என்றே பிரச்சாரம் செய்தவர் ராதா. ஆனால் சாகும்வரை நாடகங்கள் நடத்தி வந்தார். எதிர்ப்பையும் வரவேற்பையும் நேரடியாக அனுபவிக்கும் ஊடகம் என்பதாலோ என்னவோ நாடகம் அவருக்குப் பிடித்துப் போனது. 125 படங்கள் நடித்த ராதா எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு நடிக்க ஒத்துக் கொண்ட படங்கள் ஆறு. அவற்றில் இரண்டு படங்களின் பெயரைக் கேட்டால் நம் புருவங்கள் உயரும். அவை 'சுட்டான் சுட்டாள் சுட்டேன்', 'நான்தான் சுட்டேன்'.

தூக்கு மேடையில் தனித்திருந்த போர்வாள்

நாடகத்தின் காதலரான ராதா சிறுவயதில் நாடகக் கம்பெனியில் பார்ப்பன ஆதிக்கத்தையும் வைதீக மூடத்தனங்களையும் சந்தித்திருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை எதிர்த்துக் கலகமும் செய்திருக்கிறார். நாடகக் கம்பெனிகளில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனியாக உணவும் காபியும் தயாரிக்கப்பட்டபோது முடிந்த போதெல்லாம் அதை எச்சில் படுத்தியிருக்கிறார்.

ஜெகந்நாதய்யர் என்னும் பார்ப்பனரின் நாடகக் குழுவில் நடித்துவந்த ராதா அவரைப் பெரிதும் மதித்திருக்கிறார். அவர் பெரும்பாலும் இந்த சாதி பேதத்திற்கு அப்பாற்பட்டே வாழ்ந்து வந்திருக்கிறார். 'சங்கரதாஸ் சுவாமிகள் நல்ல நாடகக் கலைஞர். ஆனால் அவர் வேறு கலைஞர்களை உருவாக்கியதில்லை. எனவே அவரை நாடக உலகின் தந்தை என்று அழைப்பது தவறு. ஜெகந்நாதய்யரைத்தான் அப்படி அழைக்க வேண்டும்' என்பது ராதாவின் கருத்து.

ஒரு முறை 'கிருஷ்ணலீலா' நாடகத்தில் ராதா சிறப்பாக நடித்திருந்தும் நாடகத்திற்குத் தலைமை தாங்கிய சத்தியமூர்த்தி (அய்யர்) அவரைப் புறக்கணித்துவிட்டு அதே நாடகத்தில் நடித்த டி.ஆர்.மகாலிங்கத்தை மட்டும் புகழ்ந்திருக்கிறார். அப்போதே இந்தப் பார்ப்பனப் புறக்கணிப்பு கண்டு மனம் வெதும்பியிருக்கிறார் ராதா.

பெரியாரின் இயக்கத்திற்கு வருமுன்பே இடதுசாரிச் சிந்தனையாளராகவே வாழ்ந்திருக்கிறார். பகத்சிங்கின் பார்வர்டு கட்சியின் அனுதாபியாக இருந்த அவர் முதன்முதல் நாடக சபாவை ஆரம்பித்து நாடகத்தை நடத்தும்போது நாடகத் திரைச்சீலைகளில் 'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்னும் வாசகம் இடம் பெற்றிருந்தது. பிறகு பெரியாரின் இயக்கத்தில் இணைந்தபிறகு 'திராவிடப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்று அந்த வாசகம் மாறியது.

முதன்முதலில் ராதாவிற்குப் பெரியார் யாரென்றே தெரியாது. நாடகக் கலைஞர்கள் பலரும் பச்சை அட்டை போட்ட குடியரசு புத்தகத்தை ரகசியமாகப் படிப்பதைப் பார்த்து நாடகக் கலைஞரான எதார்த்தம் பொன்னுச்சாமி (பிள்ளை)யிடம் 'பெரியார் என்பவர் யார்?' என்று விசாரித்திருக்கிறார். ராவணன் போல அவரும் ஒரு அரக்கன் என்று கூறிய பொன்னுச்சாமி, அவரைப் பெரியாரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அதன் பிறகு ராதாவின் 'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நாடகத்திற்கு பெரியாரும் அண்ணாவும் தாங்களாகவே டிக்கெட் எடுத்துக் கொண்டு நாடகம் பார்த்தார்களாம். நாடகம் முடிந்ததும் இருவரும் மேடை ஏறினர். அண்ணா "நாங்கள் நூறு மாநாடுகள் நடத்துவதும் ராதா ஒரு நாடகம் நடத்துவதும் சமம்" என்று புகழ்ந்தார். அன்றிலிருந்து பெரியார் பற்றாளராக மாறிய ராதா சாகும்வரை பெரியாரின் மீது காதல் கொண்ட கிறுக்கனாய் வாழ்ந்தார். பெரியாரின் போர்ப்படைத் தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு 'நடிகவேள்' பட்டம் அளித்தவர். இன்று உலகமெங்கும் புகழ்பெற்று பெயர்போலவே மாறிவிட்ட 'கலைஞர்' என்னும் பட்டத்தை மு.கருணாநிதிக்கு வழங்கியவர் ராதாதான்.

ராதாவின் நாடகங்கள் இறுகி நிலை பெற்றுவிட்ட பிரதிகள் இல்லை. அவை ஒரே கதையைக் கொண்டிருக்கலாம். ஆனால் திரைக்கதையும் வசனமும் நாடகம் நடத்தப்படும் இடங்கள், அரசியல் சூழல்கள், எதிர்ப்பின் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். படப்பிடிப்பின்போது கூட சமயங்களில் ராதா ஸ்கிரிப்டில் இல்லாத வசனங்களைப் பேசி அயல்பாத்திரங்களைத் திக்குமுக்காடச் செய்வார். ஆனால் ராதாவைத் திணறடிக்கும் நுட்பம் மட்டும் எந்தக் கலைஞனுக்கும் வாய்க்கப் பெறவில்லை. ஒரு வகையில் ராதாவின் பிரதிகள் மாறிக் கொண்டேயிருந்ததால் அது 'நிலைத்த தன்மை' என்னும் இயங்கா தன்மையை மறுத்ததெனினும் இன்னொரு வகையில் ராதாவின் நாடகங்கள் எழுத்துப் பிரதிகளாக உருமாறி ஆவணப்படாமல் போனதற்கும் இத்தன்மையே தடையாய் இருந்ததையும் உணரலாம்.

தேவாசுரப் போராட்டம் அல்லது கலகத்தின் சில துளிகள்:

ராதா தன் நாடகங்களில் செய்த கலகங்களும் அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகளும் அதனை அவர் எதிர்கொண்ட முறைகளும் சொல்லி மாளாதவை. இந்திய வரலாற்றிலேயே இத்தகைய துணிச்சல் மிக்க ஒரு நாடகக் கலைஞனைக் காண்பது அரிது. சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாடகம் நடத்துவதற்கும் இயக்கப் பணிகளுக்கும் செலவிட்டார்.

ராதா வால்மீகி ராமாயணத்தின் அடிப்படையில் 'ராமாயணம்' நாடகத்தை நடத்தினார். நாடகத்தின் முதல் காட்சியிலேயே ஒரு புத்தக அலமாரி காட்டப்படும். அதில் ராமாயண ஆராய்ச்சி நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் பெரும்பாலனவை பார்ப்பன வரலாற்றாய்வாளர்கள் எழுதியவைதான். அதன்படி ராமனைக் குடிகாரனாகவும், புலால் உண்ணுபவனாகவும் சித்தரித்து நாடகம் நடத்தப்படும்.

தொடர்ந்து பார்ப்பனர்களும் வைதீகர்களும் காங்கிரசுக்காரர்களும் கலாட்டா செய்வர். அரசு தடை விதிக்கும். போலீசு கைது செய்யும். எத்தனை முறை தடை விதிக்கப்பட்டாலும் கைதாகி நாடகங்களை தொடர்ந்து நடத்துவார் அல்லது அதே நாடகங்களை வேறு பெயரில் நடத்துவார்.

பெரியாருக்காகவே அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டதும் முதன்முதலில் தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடைச் சட்டம் அவருக்காகவே கொண்டு வரப்பட்டதும் வரலாற்றின் பக்கங்களில் எஞ்சிப் போன உண்மைகள். கிளர்ச்சியையும் அதிகார எதிர்ப்பையும் தாங்கவியலாத ஆளும் வர்க்கங்கள் புதிது புதிதாய்ச் சட்டங்களை உருவாக்குவதும் இருக்கும் சட்டங்களை இல்லாது அழித்தொழிப்பதும் புதிதல்லவே. அதே போலத்தான் ராதாவை ஒடுக்குவதற்காகவே தமிழக அரசு ஒரு புதிய சட்டத்தைத் தயாரித்தது. முதன்முதலாக நாடகத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது ராதாவிற்காகத்தான். 1954ல் நாடகங்களின் திரைக்கதையை அரசின் அனுமதி பெற்றே நாடகம் நடத்தப்பட வேண்டும் என்று அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கெதிராக சட்டமன்ற வளாகத்திலேயே போய் வாதாடினார் ராதா. ராமாயண நாடக நோட்டீசில் 'உள்ளே வராதே' என்று அச்சடிக்கப்பட்டிருக்கும். அதன்கீழ் 'இந்துக்கள் தங்கள் மனம் புண்படுகிறது என்று கருதினால் நாடகத்திற்கு வர வேண்டாம். அப்படி மீறி வந்து மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரியல்ல' என்னும் வாசகமும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

ராமாயண நாடகம் மட்டுமல்ல ராதாவின் பெரும்பாலான நாடகங்கள் தடை செய்யப்படவே செய்தன. கூட்டங்களில் புகுந்து கலகம் செய்யப்படவே செய்தன. ஆனால் இதையெல்லாம் மீறி ராதாவின் நாடகங்கள் பலமுறை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. (ரத்தக் கண்ணீர் நாடகம் மட்டும் 3021 நாட்கள் நடத்தப்பட்டிருக்கிறது.)

ஒரு முறை ராதா நாடகம் நடத்தும்போது அவருக்குத் தீராத வயிற்றுப்போக்கு. அவரால் நடிக்க முடியாத நிலை. எனவே தனக்குப் பதிலாகத் தன்மகன் வாசு நடிப்பார் என்று அறிவித்த ராதா, "விருப்பமிருப்பவர்கள் நாடகம் பார்க்கலாம். விருப்பமில்லாதவர்கள் கவுண்டரில் சென்று டிக்கெட்டைக் கொடுத்து விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று அறிவித்தார்.

இன்னொரு முறை நாடகத்தினிடையில் பெரியார் பேசுவதாக இருந்தது. அவர் பேசுவதாக அறிவிக்கப்பட்டபோது முன்வரிசையிலிருந்த சில பார்ப்பனர்களும் காங்கிரசுக்காரர்களும் எழுந்து 'ராதா, உன் நாடகம் பார்க்கத்தான் காசு கொடுத்து வந்தோம். அந்தாள் (பெரியார்) பேச்சைக் கேட்க இல்லை" என்று கலாட்டா செய்தனர். உடனே ஒலிபெருக்கி முன் வந்த ராதா, "நாடகம் பார்க்கத்தானே வந்தாய். நான் சொல்றேன். நாடகம் முடிஞ்சு போச்சு. இனிமே நாடகம் இல்லை. இனிமேல் பெரியார் மட்டும்தான் பேசுவார்" என்று அறிவித்தார்.

அதேபோல பொதுவாகவே எல்லா நிகழ்ச்சிகளிலுமே வி.அய்.பி. இருக்கை என்று தனியாக இருப்பது இன்றுவரை வழக்கத்திலுள்ள நடைமுறையே. இந்த வி.அய்.பிக்கள் எப்போதுமே இலவச அழைப்பாளர்கள்தான். ஒரு முறை காசு கொடுத்து தரை டிக்கெட் வாங்கிய கூட்டம் அலைமோதியது. இன்னொரு பக்கம் வி.அய்.பிக்கள் வரிசையும் நிரம்பி வழிந்தது. அப்போது மேடையில் தோன்றிய ராதா, "காசு கொடுத்தவன்லாம் தரையிலே உக்கார முடியாம தவிக்கிறான். ஆனால் ஓசியிலே வந்தவன்லாம் சேர்லே உட்கார்ந்திருக்கான்" என்று அவரது பாணியிலேயே முகத்திற்கு நேராக விமர்சித்திருக்கிறார். இத்தகைய தைரியமும் துணிச்சலும் ராதாவைத் தவிர வேறு எவனுக்கு வரும்?

பொதுவாக ராதாவைக் கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரிகள் நாடகம் முடிந்த பிறகே கைது செய்வது வழக்கம். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி நாடகம் தொடங்குவதற்கு முன்பே கைது செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்திருக்கிறார். நாடகக் குழுவினர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ராதாவிடம் போய்ச் சொல்லியிருக்கிறார்கள். ராதா நாடகத்தைத் தொடங்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். நாடகத்தின் முதல் காட்சியில் ராதா பேசிய முதல் வசனம், "யாருடா அங்கே நாயை அவிழ்த்து விட்டது,? அது பாட்டுக்குக் குலைச்சுக்கிட்டிருக்கு". அந்த போலீஸ் அதிகாரியின் முகத்தில் ஈ ஆடவில்லை.

ஒரு முறை ராதாவின் நாடகத்திற்கு ஜஸ்டிஸ் எஸ்.ஏ.பி.அய்யர் தலைமை தாங்கியிருந்தார். அப்போது ஒரு பாத்திரம் ராதாவிடம் பேசுவதுபோல ஒரு வசனம். "உன் நாடகத்தை எல்லாம் எவண்டா பார்ப்பான்?". அதற்கு ராதா சொன்ன பதில், "பார்ப்பான் பார்ப்பான்". ராதா யாருடைய முகத்திற்காகவும் தயங்குபவரோ அஞ்சுபவரோ அல்ல என்பதற்கு இது ஒரு சான்று.

மேலும் அவர் வெறுமனே வசன வீரர் மட்டுமில்லை, செயல்வீரரும் கூட. நாடகத்திலும் மேடைகளிலும் கலகம் செய்பவர்களைக் களத்திலே இறங்கிச் சந்திப்பவர். சிலம்புச் சண்டை, துப்பாக்கி சுடுதல், குதிரையேற்றம் போன்ற பலகலைகளைத் தெரிந்து வைத்திருந்தார். எலெக்ட்ரிக்கல் வேலைகள் பார்ப்பதிலும் நிபுணர். ஆரம்ப காலகட்டங்களில் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் அமைப்பதற்கும் ராதாவின் உதவியே தேவைப்பட்டது. (இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு திருப்பதிக்கு ஏழுமலையானைத் தரிசிக்க சென்றிருக்கிறார் ராதா. மாலைவரை காத்திருந்தும் தரிசனம் பார்ப்பதற்குத் தாமதமாகவே ஆத்திரங் கொண்ட ராதா திருப்பதி மலையைத் தகர்ப்பதற்குத் டைனமைட் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார்.)

ராதாவின் மேடையில் எப்போதும் கலைஞர்களும் எதிர் வன்முறைக்குத் தயாராக இருப்பார்கள், ஆயுதங்களும் தயாராக இருக்கும். யாரேனும் எதிரிகள் தாக்குதலில் ஈடுபட்டால் நாடகக் குழுவினரும் பதில் தாக்குதலைத் தொடுப்பார்கள். ஒருமுறை நாடகக் குழுவினர் தங்கியிருந்த இடத்திற்கே வந்து பார்ப்பனக் கூலிகள் தாக்குதலைத் தொடுக்க அவர்களைவிட எண்ணிக்கையில் அதிகமிருந்த நாடகக் குழுவினரின் தாக்குதல் தாங்க முடியாது ஓடிவிட்டனர். மறுநாள் எப்படியும் இன்னும் அதிக ஆட்களை அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்த்த ராதா கதவின் கம்பிகளில் மின்சாரம் பாய்ச்சியிருந்தார். தாக்க வந்தவர்கள் மின்சார அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியிருக்கிறார்கள்.

விலையுயர்ந்த இம்பாலா காரைப் பலரும் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வந்த சூழலில் தினமும் படப்பிடிப்பிற்கு வைக்கோல் ஏற்றி வந்து பார்ப்பவர்களை ராதா அதிரச் செய்த சம்பவம் பலரும் அறிந்தவொன்று. ஒரு முறை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனை வரவேற்பதற்காக சில அதிகாரிகள் ராதாவிடம் இம்பாலா காரைக் கேட்டிருக்கின்றனர். 'நான் அந்த ராதாகிருஷ்ணனுக்காக (ஜனாதிபதி) கார் வாங்கலை, இந்த ராதாகிருஷ்ணனுக்காகத்தான் கார் வாங்கியிருக்கிறேன்' என்று மறுத்திருக்கிறார்.

இப்படிக் கலகபூர்வமாக வாழ்ந்த ராதாவின் இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியால் நிரம்பியது. பேரன்பும் பெருங்கருணையும் விரிந்து பரந்த நேசமும் ததும்பி வழியும் மனம்தானே தார்மீக ஆவேசமும் அறவுணர்வும் நிரம்பப் பெற்றதாயிருக்கும். அப்படியான கலைஞன்தான் ராதா. வறுமையில் வாடிய எத்தனையோ இயக்கத் தோழர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களுக்கு விளம்பரங்களை எதிர்பாராது உதவிய ராதா, அவர்களுக்கு நிதி சேகரிப்பதற்காக இலவசமாக நாடகங்களும் நடத்திக் கொடுத்திருக்கிறார்.

புகழ்பெற்ற நாதசுவரக் கலைஞர் ராஜரத்தினம் (பிள்ளை) தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடினார். அவரது குடும்ப நலத்திற்காக பல்வேறு நடிகர்களிடமும் நிதி திரட்டினார் ராதா. ஆனால் பெரிய நடிகர்கள் வழக்கம்போல கை விரித்துவிட சிறிய கலைஞர்கள் மட்டுமே தங்களால் இயன்ற நிதியை அளித்திருக்கிறார்கள். சொற்பத் தொகையே சேர மனம் நொந்து போனார். அந்த சிறிய தொகையையும் தன்மானத்தின் காரணமாக வாங்க மறுத்து விட்டார் ராஜரத்தினம். கடைசியில் வறுமையிலேயே அந்தக் கலைஞன் மாண்டு போக தனது சொந்த செலவிலேயே அவரை அடக்கம் செய்த ராதா அவரது நினைவகத்தில் 48 அடி உயரத்தில் நாதசுவர நினைவுச் சின்னம் அமைத்தார்.

கலை - அரசியல் வெளிகளில் பாவிப் பரந்த கருப்பு நிழல் (அல்லது) சிறைச் சாலையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்ட கதை

பெரியாரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ராதா இறுதிவரை பெரியாரைப் பின்பற்றுபவராகவே வாழ்ந்தார். பெரியாரிடம் கருத்து மாறுபாடு கொண்டு பலர் அவரை விட்டுப் பிரிந்தபோதும் இறுதிவரை அவரது தலைமையை ஏற்றுக் கொண்டவராகவே வாழ்ந்தார்.

அண்ணா பெரியாரிடம் கருத்து மாறுபாடு கொண்டு அவரை விட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று நூலை எழுதி அவரிடமே கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். அதேபோல் குத்தூசி குருசாமி திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தபோதும் பெரியாருக்கு ஆதரவாக நின்றார்.

கம்யூனிசத் தத்துவத்தில் ஈர்ப்பு கொண்ட ராதா கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆதரித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது ஜீவாவிற்கு அடைக்கலம் தந்தார். அவரை மொட்டையடிக்க வைத்து பட்டை அணிவித்து சாமியார் என்று போலீஸை ஏமாற்றியிருக்கிறார். அப்போது ஜீவா தரும் கடிதங்களை ஒரு இடத்தில் ரகசியமாகக் கொண்டு சேர்ப்பித்திருக்கிறார். அந்தக் கடிதங்கள் புரட்சிகரத் தகவல் அடங்கிய ரகசியக் கடிதங்களென்றே ராதா கருதி வந்தார். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்திருக்கிறது, அவை ஜீவா தன் காதலி பத்மாவதிக்கு எழுதிய கடிதங்கள் என்று.

காமராசரின் மீதும் கலைஞர் கருணாநிதியின் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனால் பெருமளவு அண்னாதுரையை ராதாவிற்குப் பிடிக்காது என்றே தெரிகிறது. அண்ணாவின் சாத்வீகக் குணங்கள் ராதாவின் கலக மனோநிலைக்கு ஒத்துப் போகாமல் இருந்திருக்கலாம்.

திராவிடர் கழகத்தில் அண்ணாவைத் தளபதி என்றே அழைப்பது வழக்கம். ஒரு முறை நாடக ஒத்திகையில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்திருக்கிறார்' என்று பதட்டத்துடன் வந்து சேதி சொல்லியிருக்கிறார்கள். ராதா நக்கலாகக் கேட்டாராம், 'தளபதி குதிரையை எங்கே நிறுத்தியிருக்கிறார்?' என்று.

இதேபோல் இன்னொரு சம்பவம். தூக்குமேடை நாடகத்தில் உடன் நடித்த கருணாநிதியிடம், 'தளபதி தளபதி என்கிறீர்களே, எத்தனை போர்க்களங்களைச் சந்தித்திருப்பார் உங்கள் தளபதி?' என்று கேட்டிருக்கிறார். அது நாடகத்திலேயே இல்லாத வசனம். ஒரு கணம் தடுமாறினாலும் 'போருக்குப் போகாவிட்டாலும் உறையிலிருக்கும் வாளுக்கும் வாள் என்றுதான் பெயர்' என்று வசனம் பேசிச் சமாளித்திருக்கிறார் ராதாவால் கலைஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட கருணாநிதி.

பெரியார் முன்னின்று நடத்திய பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார் ராதா. பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், வடநாட்டு ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி, பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் தான் கலந்து கொண்டது மட்டுமில்லாது தனது நாடகக் குழுவினரையும் ஈடுபடுத்தினார். சாதி ஒழிப்பிற்காக அரசியல் சட்டத்தை எரித்து சிறை புகுந்த தோழர்கள் பலருக்கும் பல வகையில் உதவினார். இயக்கத்திற்கும் இயக்கத் தோழர்களுக்கும் நிதி திரட்டுவதற்காகப் பல முறை இலவசமாக நாடகம் நடத்தினார். நெருக்கடி நிலை காலகட்டத்தின்போது மிசாவில் கைதான ஒரே நடிகர் ராதா மட்டுமே. அவரது இரண்டு சிறைச்சாலைச் சம்பவங்கள் சுவாரசியமானவை.

எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கில் ராதாவிற்கு ஏழரையாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன. ஆனால் நாலரை ஆண்டுகளிலேயே அவரை விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்து விட்டது. இது தெரியாத ராதா, அன்று காலையில் வழக்கம்போல குளிப்பதற்காக துண்டு, வாளி சகிதம் கிளம்பியிருக்கிறார். சிறை அதிகாரி வந்து , "உங்களை விடுதலை செய்தாச்சு, கிளம்பலாம்' என்றிருக்கிறார். ஆனால் ராதாவோ, கொஞ்சமும் பதட்டப்படாமல் 'குளித்துவிட்டுத்தான் கிளம்புவேன்' என்று பதிலளித்திருக்கிறார்.

மிசா காலத்தின்போது யாரை எதற்குக் கைது செய்கிறோம் என்று தெரிவிக்க வேண்டிய அவசியமில்லாத சூழல் நிலவியது. அப்படித்தான் ராதாவையும் கைது செய்திருந்தார்கள். சிறையிலே நேர்காணலுக்கு உறவினர்கள் வரும்போது பின்னாலிருந்து அதிகாரிகள் குறிப்பெடுப்பது வழக்கம். ராதாவின் மனைவி அவரைக் காண வந்திருக்கிறார். 'என்ன மாமா, நிறைய பேர் விடுதலையாகி வெளியே வர்றாங்க. நீங்களும் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வரலாமே' என்றிருக்கிறார்.

உடனே ராதா, 'என்ன எழுதிக் கொடுப்பது?' என்று கேட்டிருக்கிறார்.

'இனிமேல் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே' என்று மனைவியும் பதிலளிக்க,

உடனே ராதா, 'இதோ பாரம்மா. என்னையேன் கைது செய்திருக்காங்கன்னு எனக்கும் தெரியாது. இங்க இருக்கிறவங்களுக்கும் தெரியாது. கைது செய்தவங்களுக்கும் தெரியாது. அதுதான் மிசா. நான் பாட்டுக்குத் தூங்கிக் கொண்டிருந்தேன். பிடிச்சு உள்ளே தள்ளிட்டாங்க. நான் செய்த ஒரே தப்பு அதுதான். அப்ப நான் இனிமே வாழ்நாள் முழுதும் தூங்காமலே இருக்கணுமா?' என்றிருக்கிறார். குறிப்பெடுத்துக் கொண்டிருந்த அதிகாரியும் சிரித்து விட்டாராம்.

வாக்குமூலம்

ராதாவின் உணர்வுகளையும் இயல்பையும் வாழ்முறையையும் புரிந்து கொள்ள வேறெதையும் விட அவரது வார்த்தைகளே துணை செய்யும் என்பதால் அவரது நேர்காணலிலிருந்து சில பகுதிகள்...

ஒரு முறை ராதாவிடம் பேட்டி எடுக்க வந்த பத்திரிகையாளர் மாடியிலிருந்து இறங்கிய அவரின் மனைவியைப் புகைப்படமெடுக்க முயன்றிருக்கிறார். உடனே ராதா, 'நான்தான் சினிமாக்காரன், பப்ளிக் புராபர்ட்டி. என் பொண்டாட்டியை ஏன் படமெடுக்கிறே' என்று மறுத்து விட்டாராம்.

இனி அவரது சில நேர்காணல்களிலிருந்து...

கேள்வி : இப்போது நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்தும் வழக்கம் அதிகமாகி விட்டதே. இதுபற்றித் தங்கள் அபிப்பிராயம் என்ன?

ராதா : பொன்னாடை போர்த்த வேண்டியது பிணத்திற்குத்தான்.

கே : நீங்கள் எதில் அதிகம் இன்பம் காண்கிறீர்கள்?

ராதா : எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை எதிர்த்து ஒரு தோற்றத்தைத் தருவதுதான் என்னுடைய பழக்கம்.

கே : உங்களுக்குப் பாடத் தெரியுமா?

ராதா : நன்றாகத் தெரியும். தியாகராஜர் கீர்த்தனைகளில் 200 பாடல்களுக்கு மெட்டுடன் பாடத் தெரியும். ஆனால் பாடல்களினால்தான் நாடகம் நடக்கும் என்பதை மாற்றவே நான் பாடுவதில்லை.

- தென்றல் திரை - 01.02.1956

கே : நீங்கள் ஏன் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை?

ராதா : நடிகர்கள் தேயிலைத் தோட்டக் கூலிகள் போல நடத்தப்பட்டனர். போதிய சவுகரியங்கள் இல்லை. முடிவாக நான் படவுலகை அடியோடு வெறுக்க மாடர்ன் தியேட்டர்தான் காரணம். ஒரு நடிகன் நடிகையோடு பேசினால் கட்டி வைத்து அடிப்பார்கள். இந்நிலை எனக்கு மிக்க வெறுப்பையும் அவமானத்தையும் அளித்தது.

- சினிமா மெயில் 20.01.1957

சில வாசகர் கேள்விகளும் ராதாவின் பதில்களும்

கே : திரையில் தங்களைப் பார்த்தால் பயந்து நடுங்குகிறேன். நேரில் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் என் அச்சம் நீங்குமா, அதிகமாகுமா?

ராதா : தங்கள் மனதின் பலவீனத்தைப் பொறுத்தது.

கே : நேரு, பெரியார், ராஜாஜி, அண்ணாத்துரை இவர்களில் பொதுப்படையான பொருளைக் கருத்தாழத்தோடு பேசுபவர்களை வரிசைப்படுத்தவும்.

ராதா : பெரியார்தான். வரிசை தேவையில்லை.

கே : கட்சி விட்டுக் கட்சி மாறும் 'பச்சோந்திகள்' பற்றித் தங்கள் கருத்து என்ன?

ராதா : பச்சோந்தி

கே : நான் எங்கள் ஊரில் தங்கள் பெயரில் மன்றம் அமைக்க முயற்சி செய்தேன். ஆனால் எங்கள் ஊர்த் திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவர் அவர் பெயரில் மன்றம் அமைவதை விரும்ப மாட்டார் என்கிறார். இது உண்மைதானா?

ராதா : உண்மைதான்.

கே : எல்லாப் படங்களிலும் வில்லனாகவும் கொடூரமாகவும் காட்சியளிக்கிறீர்களே, இல்லத்தில் மனைவி மக்களோடும் சுற்றத்தோடும் எப்படிப் பழகுவீர்கள் என்பதை அறிய ஆவல்.

ராதா : அது தங்களுக்குத் தேவையில்லை.

கே : அண்ணே, உங்களை எல்லோரும் கஞ்சன்னு சொல்றாங்களே, உண்மையா?

ராதா : திருடன், முடிச்சவிழ்க்கி, அயோக்கியன் ஆகியவர்களுக்கு நான் கஞ்சன்.

கே : தாங்கள் இந்த நாட்டின் முதன்மந்திரியானால்..?

ராதா : இதுமாதிரிக் கேள்வி கேட்பவர்களைத் தூக்கில் போட சட்டம் கொண்டு வருவேன்.

- தமிழ்நாடு - ஜனவரி 1961.

----
மேலும் ராதா ஒரு நேர்காணலில் தான் பாய்ஸ் நாடகக் குழுவில் இருந்தபோது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கிறார். தான் ஒரு gay என்று ஒத்துக் கொண்ட தமிழ் ஆளுமை ராதாதான். தமிழ்க் கலைவெளியில் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட எத்தனையோ கலைஞர்கள் உண்டு. ஆனால் நடிப்பாற்றலோடு அர்ப்பணிப்பு மிக்க அரசியல் உணர்வும் 'போர்முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத' துணிச்சலுமிக்க கலைஞனாய் ராதா மட்டுமே ஒற்றைத் தீவாய் வாழ்ந்து மறைந்து போனார்.

காலம் தொலைத்த மனசாட்சி :

ராதா நம்புதற்கரிய சாத்தியங்களோடு வாழ்ந்தவர். எதிர்ப்பையுண்டு வாழ்ந்த ராஜாளி. அவரது பிறப்பு ஒரு குண்டுவெடிப்போடு தொடங்கியதென்றால் அவரது வாழ்க்கை பல அதிர்வுகளை உண்டு பண்ணியது. அவரது இறப்பும் ஒரு ஆச்சரியம்தான். திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பியதிலும் படத்தில் புகுத்தியதிலும் கலைவாணர் என்.எஸ்.கே, அண்ணா, கலைஞர்.கருணாநிதி போன்ற பலரும் குறிப்பிடத் தக்களவு பங்காற்றியுள்ளனர் என்பது மறுக்கத் தக்கதல்ல. ஆனாலும் அவர்களிடத்தில் தமிழ்ப் பெருமிதம், பண்பாடு குறித்த மயக்கங்கள் மலிந்து கிடந்தன. இவை அவர்களது பிரதிகளிலும் கலை வெளிப்பாடுகளிலும் வெளிப்பட்டன. ஆனால் இத்தகைய மயக்கங்களுக்கு அப்பாற்பட்டு பெரியாரின் சிந்தனை வெளிச்சத்தைச் சரியாகப் பிரதிபலித்த கலைஞன் என்று ராதாவைச் சொல்லலாம். பெரியாரை நிழல் போலவே பின்தொடர்ந்த ராதா இறந்தது பெரியார் பிறந்த நாளான செப்டம்பர்17. இறந்த நேரம் பெரியார் இறந்த அதே காலை 7.25 மணி.

உதவியவை :

ராமாயணத்தைத் தடைசெய் - நடிகவேள் எம்.ஆர்.ராதா

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள் - விந்தன்

பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா - தஞ்சை.ச.சோமசுந்தரம்

மற்றும்

மூத்த திராவிட இயக்கத்தவர்களின் வாய்மொழித் தரவுகள்.

- சுகுணா திவாகர்

Pin It