தமிழ்த் தேசியம் பேசுவோரிட மிருந்து பெரியார் பேசிய சுயமரியாதைக்கான தேசியம் வேறுபடும் புள்ளிகளை விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.

பெரியார் தோன்றி 137 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இந்தியாவில் பா.ச.க.வின் ஆட்சி நடந்து கொண் டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் வாழும் மக்களின் பெருத்த ஆதரவோடு பா.ச.க தெரிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசு கடைபிடித்த அதே பொருளியல் கொள்கைகளைத்தான் பா.ச.க முழு வீச்சில் நடைமுறைப் படுத்துகிறது. இன்னொரு புறம் பா.ச.க. வால் முன்னெடுக்கப்படும் பார்ப் பனியப் பண்பாட்டு ஆதிக்கமென்பது அன்றாடச் செய்தியாகிக் கொண் டிருக்கிறது. இத்தகைய சூழலில் சமூக மாற்றத்திற்காக உழைப்போருக்கு பெரியாரின் கருத்துகள் மாபெரும் கருவியாக இருக்கிறதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

 2009 இல் ஈழப் போரில் ஏற்பட்ட தமிழினப் பேரழிவும் அதை தடுக்க முடியாமல் தமிழ்நாடு கையறு நிலையில் இருந்ததும் அமுங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பிவிட்டது. புதிய புதிய இயக் கங்கள், பேரியக்கங்கள், கட்சிகள் பிறப்பெடுத்துள்ளன. இளந்தலை முறையொன்றும் அரசியல் களத் திற்குள் புகுந்துள்ளது. எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்த் தேசியக் கருத்தியல் விவாதிக்கப் படுகிறது. அந்த விவாதங்களில் பெரியாரைத் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவராகக் காட்சிப்படுத்தும் போக்கு பெருகி வருகிறது.

கன்னடத்தைத் தாய்மொழியாக கொண்ட பெரியார் வழிகாட்டி தானே ஒழிய தலைவர் அல்ல என்பாரும் உளர். சேர , சோழ, பாண்டியர்கள் தமிழ் மன்னர்கள். பல்லவர், நாயக்க மன்னர்கள் வேற்று மொழி மன்னர்கள். வரலாறு முழுவதும் தமிழினம் வேற்று மொழியினரின் ஆளுகையின் கீழ் இருந்து வந்திருக் கிறது. தமிழருக்கு முதல் எதிரி திராவிடம் தாம்; திராவிடத்தை வீழ்த்த வேண்டும்” என்றும் பெரியாரை எதிரியாகவே முன் வைப்பாரும் உளர். பெரியாரின் மொழிக் கொள்கையைக் காட்டி தமிழுக்கும், தமிழருக்கும் எதிரானவர் என்று சொல்வாரும் உளர்.

இவற்றை மறுத்து பல்வேறு முனைகளில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கருத்து மோதல்கள் நமக்கு புதிதல்ல. வர லாற்றில் வாழ்ந்து மறைந்த ஆளுமை களின் பங்களிப்பைத் திறனாய்வுக்கு உட்படுத்துவது வளர்ச்சிக்கே துணை செய்யும். ஆனால் வரலாற்றை அறிவியல் வழிநின்று புரிந்து கொள் வதில் இருந்துதான் அத்திறனாய்வு வளர்ச்சிக்குத் துணை செய்வதாக அமையக் கூடும்.

தேசியம் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம்

பெரியார் எப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார் என்பதைவிட தமிழ்த் தேசியம் என்னவாகப் புரிந்து கொள்ளப்பட் டுள்ளது என்பதில் தான் சிக்கலின் மையமே இருக்கிறது. பன்னெடுங் காலமாக ஒரு மொழி பேசும் மக்கள், ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்கள் ஒரு தொகுதியாக வாழ்ந்து கொண்டிருந் தாலும் மனித குலத்தில் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் வயது சற்றேறக் குறைய 350 ஆண்டுகள் தாம். உலகின் முதலாவது தேசிய விடுதலைப் போராட்டம் அமெரிக்க விடுதலை போராட்டமாகும். அது பதினெட்டாம் நூற்றாண்டாகும். மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் யுகத்தைத் தொடங்கியது தேசியம்.

மன்னர்களின் கைகளில் இருந்த அதிகாரம் மக்களின் கை களுக்கு மாறுவதுதான் மக்களாட்சி. ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ மட்டும் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்வைத் தீர்மானிப் பதற்கு மாறாக பெருந்திரள் மக்கள் அரசியல் முடிவுகளில் பங்கேற்கும் ஏற்பாடே சனநாயகம் ஆகும். அந்த சனநாயகத்தோடு ஒட்டிப் பிறந்ததே தேசியம் ஆகும். தேசியமும் சனநாயக மும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக காட்சி அளிக்கின்றன. மன்னர்கள் மட்டுமின்றி மன்னனின் கொடி, குடி, ஆலவட்டம், மன்னர் கால அரசியல் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் புதைத்தது தேசியம் .

பத்தொன்பது - இருபதாம் நூற்றாண்டில் காலனியாதிக்கத்திற்கு எதிராக சனநாயகத்தை சுமந்து செல்லும் வாகனமாக தேசியம் இருந்தது. இன்று, காலனியாதிக்கம் போட்டுத் தந்த சனநாயகமற்ற ஆட்சிப்புலத்தில் சிக்குண்டிருக்கும் மக்களை சனநாயகத்திற்கு இட்டுச் செல்லும் பாத்திரத்தை வகித்துக் கொண்டிருக்கிறது தேசியம். தேசியம் என்னும் கருத்தாக்கத்தை 21 ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமான வகையில் வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

சாதிய சமூகத்தில் தேசியம்

இந்தப் பின்னணியில் நமது சொந்த தேசத்தின் வரலாற்றை உற்று நோக்கு வோம். இங்கு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் வடிவம் தான் சாதி. சாதி அடுக்குகளாக நம் சமூகம் அமைந்திருக்கிறது. தமிழ் மொழி தொன்மையானது. தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றனர். ஆனால் தமிழ்த் தேசியம் என்பது புதிது. இங்கு சாதி நாயகத்திற்கு மாறாக சனநாயகத்தைப் பிரசவிப்பதே தமிழ்த்தேசியத்தின் பணியாகும். ஒடுக்குமுறை இருக்கும் போது அதற்கு எதிரானப் போராட் டமும் இருக்கும். சாதி ஆதிக்கத்தின் வயதும் அதற்கெதிரானப் போராட் டத்தின் வயதும் ஒன்றாகத் தான் இருக்க முடியும். ஆயினும் ஆங்கிலே யரின் ஆளுகையின் கீழ் தமிழ்நாடு வந்தபின் நடந்த பொருளியல் மாற்றங் கள்தான் சாதிக் கட்டமைப்பைக் கலகலக்க வைக்கக் கூடிய புறநிலையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் சாதியக் கட்டமைப்பை அடித்து நொறுக்கு வதற்கான வரலாற்றின் கருவியாகப் பெரியார் விளங்கினார்.

சுயமரியாதை இயக்கமும்

தமிழ்த் தேசியமும்

தேசியம் என்பது முதலில் சுயம் பற்றியது. தேசியம் எல்லாவிடத்திலும் சுயம் பற்றிக் கூறும். சுயகௌரவம் (சுயமரியாதை), சுயாட்சி, சுயநிர்ணய உரிமை என தனி மனித உரிமையில் தொடங்கி இனம், நாடு என்ற கூட்டுச்சுயம் வரை அது விரிந்து பரந்த ஒன்றாகிறது. பெரியார் 1926 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்.சுயமரியாதை என்பது எதிரியின் பொருட்டான அடிமைத் தனத்தையும் நிராகரிக்கிறது; தன் பொருட்டான அடிமைப் புத்தியை யும், அடிமை மனப்பாங்கினையும் நிராகரிக்கிறது. பெரியார் சூத்திரர், பஞ்சமர் என்று நம்மீது சுமத்தப்பட் டிருந்த சாதி இழிவைக் கேள்விக் குள்ளாக்கினார்.

ஒருவன் அல்லது ஒருத்தி தனது மதிப்பைத் தானே உணர்வது, தன்னைத்தானே மதிப்பது, தன்மதிப்பை, தன்மானத்தைத் தானே நிலைநாட்டுவது, தன்னிடமிருக்கும் எசமானத்துவ விசுவாசத்திற்கு தானே கொள்ளிவைப்பது, கூனிக் குருகி நிற்கும் பல்லக்குத் தூக்கி மனப்பாங்கை அடித்து நொறுக்குவது, பிறப்பால் அனைவரும் சமம் என்ற மன நிமிர்வைப் பெறுவது, எல்லாவிதமான அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடுவது எனச் சுயமரியாதை தனது சிறகை விரிக்கின்றது. இது தனி மனிதனிலிருந்து தேசிய இனம் வரையிலான உலகளாவிய அனைத் திற்கும் பொருந்தும்.

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி முதலில் சாதி இழிவைக் கேள்விக்குள்ளாக்கி, அதில் இந்து மதத்திற்கு இருக்கும் பங்கை அம்பலப்படுத்தி, கடவுளை மறுத்து, பெண்களின் உரிமைக்காக போர் முழக்கம் செய்த பெரியார், மக்களின் சனநாயகத்திற்காகப் பாடுபட்டதோடு நிற்காமல் தேசத்தின் சனநாயகத்திற் காகவும் பேசத் தொடங்கினார். அதன் வெளிப்பாடுதான் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் முன் வைத்த முழக்கம். பெரியார் ஒரு நடைமுறைவாதி என்பதால் தனி மனித உரிமையில் தொடங்கிப் படிப்படியாக தேசத்தின் சனநாயகம் வரை வந்து நின்றார். பெரியாரின் அரசியலை உருத்திரட்டினால் அதில் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தனித் தமிழ்நாடு ஆகிய கோரிக்கைகள் இருக்கின்றன.

தேசியவாதமா? இனக்குழுமவாதமா?

தேசியவாதத்திற்கும் இனக்குழும வாதத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியாதது தான் இன்று பெரும் சிக்கலாக இருக்கிறது. ஓர் இனக்குழுவானது ஏற்றத் தாழ்வு களையும், அடிமைத்தனங்களையும், எசமானத்துவங்களையும் தன்னகத்தே பேணிக் கொண்டு இனக்குழு அடையாளத்தின் அடிப்படையில் இன்னொரு இனக்குழுவோடு போட்டியிடும், பொருதும், பெருமை பேசும். ஆனால் தேசிய இன உணர்வு அப்படியானது அல்ல. அது தன்னகத்தே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும், ஆண்டான், அடிமை நிலைகளையும் களைந்து அரசியல் பண்பாட்டு அளவில் சமத்துவத்தைக் கோரி நிற்கும். தேசிய அடையாளம் என்பது இங்கு போட்டியல்ல. ஒரு யதார்த்தம் என்பதும், அந்த அடை யாளம் ஒரு தற்காப்பு வரம்பு என்பதும் தான். அதுவும் ஓர் இயற்கையே தவிர வீம்பல்ல. அடுத்து முற்றிலும் அந்தத் தேசிய வரம்புக்குள் வாழும் மக்களது சமூக மாற்றம் பற்றியது. இது இனக் குழும வாதத்தில் கிடையாது. எனவே, தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு முன்வைக்கப்படும் கருத்துகள் அனைத்தும் தமிழ்த் தேசியம் ஆகிவிடாது. அது தேசிய வாதமா? அல்லது இனக்குழும வாதமா? என்பதை மேற்படி அளவுகோலில் இருந்து பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

 சனநாயகத் தமிழ்த் தேசியம்

இந்திய தேசியம் கீதைக்குள்ளும் வேதங்களுக்குள்ளும் தேடப்பட்டு அரச தேசியமாக வளர்ந்து நிற்கிறது. மகாவம்சத்திற்குள் தேடப்பட்ட சிங்கள தேசியம் பேரினவாதமாக முற்றி நிற்கிறது. விதிவிலக்கின்றி ஆசியாவில் பிறப்பெடுத்த அனைத்து தேசியத்திற்குள்ளும் இனக்குழு உணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயினும் இந்தியத் துணைக் கண்ட அளவில் தோன்றிய தேசிய இயக்கங்களுக்குள் அதிகபட்ச தேசியத் தன்மை கொண்ட இயக்கம் சுயமரியாதை இயக்கம் தான். இதில் மட்டும் தான் தேசியத்திற்கு உரித்தான சமூக கண்ணோட்டம் இருந்தது. அடி மட்டத்திலிருந்து இது தேசிய இயக்கம் பற்றி சிந்தித்தது. அப்பாசறை யில் இருந்த வந்த பெரும் கட்சிகள் அதன் கொள்கைகளில் இருந்து தடம் மாறிச் சென்றன என்றாலும் நமது வரலாற்றின் வழித்தடத்தில் பதிந்து இருக்கும் சனநாயகத் தமிழ்த்தேசியக் கூறுகளை வளர்த்தெடுத்து பாதை சமைக்க வேண்டிய பொறுப்பு நமது தோள்களில் இருக்கிறது!

(‘இளம் தமிழகம்’ இயக்கம் வெளியிட்டுள்ள கட்டுரை இது.)

Pin It