"ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே...” – என்று இந்த உலகத்து பாட்டாளி வர்க்கத்துக்கு ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ என்கிற அரிய பொக்கிஷத்தைப் படைத்துத் தந்த கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். மனித குலம் உருவாகிய காலந்தொட்டு இதோ இப்போதைய ஏகாதிபத்திய சமூகம் ஈறாக நாளை அமையவிருக்கும் சோஷலிச சமூகம் வரை அனைத்திற்கும் பொருந்துகின்ற அற்புதப் படைப்பு அது. இராக், பாலஸ்தீனம், கொசோவா என்று ஈழம் வரை நீளுகின்ற விடுதலைப் போராட்டங்கள் நம் சமகாலத்திய துயரங்களாக நம்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவையனைத்திலும் தெளிவாகத் துருத்திக் கொண்டு ஏகாதிபத்திய சுரண்டலில் கோரப்பற்கள் வெளித்தெரிகிறது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இனப் போராட்டங்களாகவோ ‘தீவிரவாதத்திற்கு’ எதிரான போர் எனும் போலிச் சித்திரத்திற்குள் அடைத்து முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தாலும் இதற்குள் உறைந்திருப்பது வர்க்கப் போராட்டங்கள்தான் என்பது அவ்வப்போது அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை தனது இருத்தலை பாதுகாத்துக்கொள்வதற்கு, நிலவுகின்ற சமூக முரண்பாடுகளில் வர்க்கம் என்கிற அடையாளத்தை வெளித்தெரியாமல் மூடி மறைக்க வேண்டிய நெருக்கடியிலிருக்கிறது. இந்த நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது சகல முனைகளிலிருந்தும் எதிர்த்துவரும் புரட்சிகர கம்யூனிச அணிகள்தான். அதற்காக இந்த சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; இவ்வழியில் பல இடங்களில் ஆதாயத்தையும் பெற்றுவருகிறது, சில இடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து வர்க்கப் போராக அம்பலப்படுத்தப்ப்ட்டு ஏகாதிபத்தியம் தோற்கடிக்கவும் படுகிறது. இதற்கு சமீபத்திய சரியான உதாரணம் நேபாளம்.
மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போராட்டங்கள் முழுமையானதொரு விடிவை, விடுதலையை உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்காது. மாறாக அது ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குத்தான் வழியமைத்துக் கொடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய ஸ்பான்சரோடு நட்த்தப்படுகின்ற போராட்டங்களில் கூட ஒடுக்கப்படுகின்ற இனத்திற்கோ, சாதிக்கோ சாதகமான விளைவுகளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்தித் தந்ததே இல்லை. அது என்றும் எப்போதும் தனது சொந்த வர்க்கமான ஒடுக்குகின்ற அணியைச் சார்ந்தே நின்றுகொள்கிறது. இதற்கும் நாம் கண்முன் காணுகின்ற பல்வேறு உதாரணங்களைச் சொல்லமுடியும்.
எனவே, சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ அடையாளப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்ற மக்கள் தங்களின் இந்த அடையாளங்களைத் துறந்து வர்க்க ரீதியாகத் திரண்டு எதிரியைச் சந்தித்தாலொழிய வெற்றி பெற முடியாது, என்பதுதான் வரலாற்றுப் பூர்வமான படிப்பினை. இதைத்தான் நாம் இந்தியா என்கிற மோசடி தேசியம் முதலாக ஈழப் போராட்டம் வரையிலாகட்டும், இன்னபிற உலகில் வேறு எங்கெல்லாம் தேசிய-இனப்பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அனைத்திற்கும் பொருத்தி போராடி வருகிறோம். ஈழப் போராட்டம் தோல்வியுற்றதற்கும் சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்ததற்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன் தான் காரணம் என்கிற எளிய உண்மையை, நம் கண்முன் தெளிவாகக் காணக் கிடக்கும் உண்மையைக் கொண்டு அம்பலப்படுத்தி பேசிவருகிறோம். இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளித்துவம்தான் இந்தியாவின் அளவு கடந்த ஆதரவை நிதியாகவும், ராணுவ ரீதியிலும் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அப்போரை முட்டுக்கொடுத்து நடத்தி லட்சக்கணக்கான தமிழர்களையும் அவர்களுக்கு தலைமைதாங்கி போராடிய புலிகளையும் கொன்றொழித்திருக்கிறது என்பதுதான் நமது குற்றச்சாட்டும், உண்மையுமாகும்.
ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கேயுள்ள ‘தொப்புள் கொடி’ உறவினர்களான தமிழ் தேசியவாதிகள் இவற்றின் அடிப்படையைப் புரிந்து கொள்வதே கிடையாது. ஈழப் போரின் இந்தியத் தலையீடு மலையாள அதிகாரிகளின் சதி எனவும் அவர்கள்தான் மன்மோகனுக்கும் பிரனாப் முகர்ஜிக்கும் முன்வாயும் பின்வாயுமாக இருந்து பேசிவருவதாகவும் உருவகப்படுத்துகிறார்கள். ஈழத்தின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாயச் சுரண்டலை ஏதோ சில மலையாளிகளின் சதி என்பதாக கற்பனையாக உருவகப்படுத்திப் பேசிவருகிறார்கள். சிவசங்கர் மேன்னையும் பாதுகாப்பு ஆலோசகரான நாராயணனையும் இன்னபிற அதிகாரிகளையும் மையப்படுத்தி, அந்த அயோக்கியர்களை மலையாள சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக்கி, மலையாளிகளுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பிரச்சினையாகச் சித்தரிக்கிறார்கள். நாம் இதனை மறுத்தால் உடனே நம்மை ஆரிய இந்தியாவின் பிரதிநிதியாக்கி பார்ப்பனியம் அது இதுவென்று வசைபாடுகிறார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்குக் கூட முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற முறைகள் பதில் சொல்லி அலுத்துவிடட்து. இன்னும் கிளிப்பிள்ளை கணக்காக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அது ஏன்?
சரி நமக்கு பார்ப்பன பட்டம் கொடுக்கும் அளவுக்கு ’உயர்ந்துவிட்ட’ இவர்களின் பார்ப்பன எதிர்ப்புணர்வு எப்படிப்பட்ட்து என்பதைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் காணக் கண் கூசுகிறது. தில்லைக் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடியதற்காக தீட்சிதப் பார்ப்பனர்களால் அடித்து வீசப்பட்ட ஆறுமுக சாமியை அழைத்துக்கொண்டு தில்லை நகரத்து வீதிகளில் நமது தோழர்கள் போராட்டங்கள் நட்த்திக் கொண்டிருந்த அதே நாட்களில், அந்த தீட்சிதக் கும்பலின் பிரதிநிதிகளை கொல்லைப்புறமாக அழைத்து மேடையில் வைத்து கவுரவித்தது, மணியரசன் கும்பலின் தமிழ் காப்பணி. இந்த போலிதேசிய பார்ப்பன அடிவருடிக் கும்பல், தில்லையில் ‘சேக்கிழர் செந்தமிழ் விழா’ என்கிற பெயரில் தீட்சிதப் பார்ப்பனர்களை அழைத்து மேடையில் வைத்துக் கொண்டு கூத்தடித்தது. இந்த இழிவான நடவடிக்கையைக் கண்டித்து 28.07.2006 அன்று அதே கூட்டத்தில் எமது தோழர்கள் துண்டறிக்கை வினியோகித்தனர்.(நன்றி: புதிய ஜனநாயகம் – மே’08) இந்த பார்ப்பன சேவகக் கூட்டம்தான் ம.க.இ.க.வுக்கு பார்ப்பன முத்திரை குத்த துடித்துக்கொண்டிருக்கிறது.
புலிகளின் தலைவர்களில் ஒருவரான சுப.தமிழ்ச் செல்வனின் மறைவை வெடிவெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய சோ, ஜெயலலிதா முதலான பார்ப்பனக் கூட்டம், அத்தோடு நிற்காமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எகிறிக்குதித்த்து. இந்த பார்ப்பனக் கூட்டம்தான் ஈழம் பெற்றுத் தரப்போகிறது என்று வீதிவீதியாக, தேர்தல் பிரச்சாரம் செய்தது இந்த போலிதேசிய பித்தலாட்ட கும்பல். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள், ஈழம் பெற்றுத்தருவதாகச் சொன்ன ஜெயாமாமியிடமிருந்து முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த ஈழ மக்களுக்காக ஒரு துண்டறிக்கையைக் கூட பெறமுடியாமல் கூனிக் குறுகிக் கிடந்தது வேறுவிஷயம்.
கருணாநிதியும் காங்கிரசும் ஏதோ உலகமகா யோக்கியர்கள் என்று நாம் சொல்லவில்லை. அவர்கள்தான் நடந்து முடிந்த ஈழப் போரின் விளைவுகளுக்குப் பொறுப்பு என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இதற்காக கருணாநிதியும் காங்கிரசும் மக்களிடம் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்களா என்றால் நிச்சயம் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான் என்பதுதான் நமது நிலைப்பாடும். அதை மையப்படுத்தித்தான் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் களத்தில் போராடிக் கொண்டிருந்தன. (அதுகுறித்த செய்திகள் கட்டுரைகள் வினவு தளத்திலும் இன்னபிற தோழர்களின் தளத்திலும் காட்சிக்கு அப்படியே இருக்கின்றன பார்த்துக்கொள்ளலாம்.)
ஈழப் போரை சூத்திரதாரியாக நின்று நடத்துகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு வக்கற்ற இக்கூலிக்கும்பல், பா.ஜ.க.வுக்கும் ஜெயாவுக்கும் ஓட்டுப் பொறுக்கித் தந்து குறுக்கு வழியில் ஈழத்தை மீட்டுவிடலாம் என்று கனவு கண்டது. இந்தக் கனவை மெய்யாக்க இக்கும்பல் மிச்சமிருந்த மானம், மரியாதையைத்தான் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்ததேயொழிய விளைவு இவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. தேர்தல் கமிஷனின் ஏகோபித்த ஆசியோடு நடைபெற்று வரும் நமது பணநாயகத் தேர்தலில் இவர்களது கோரிக்கை எடுபடாதது போலித் தேசியவாதிகளுக்கு மட்டுமின்றி, மந்திரத்தில் ஈழம் பெற்றுத்தருவதாக சவடால் அடித்த ‘அம்மா’வுக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்தது.
ஈழம் பெற்றுத்தருவார்கள் என்று இவர்கள் காட்டிய நபர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்திய தேசியத்தின் காவலர்கள்தான் என்பதையும், காஷ்மீர், அஸ்ஸாம் மக்களைக் குதறிக்கிழிக்கும் இந்திய தேசிய ஒடுக்குமுறை எனும் இழிநிலையை நேரடியாக ஆதரிப்பவர்கள்தான் என்பதையும் பற்றி இந்த போலித் தேசியவாதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. பார்ப்பன-இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமாக பிற சிறுபான்மை மதத்தவரையும், அனைத்து சாதி/மத உழைக்கும் மக்களையும் கேட்பாரில்லாமல் ஒடுக்கிவரும் பார்ப்பனிய சக்திகள் இவர்களுக்கு எப்படி ஈழம் பெற்றுத்தருவார்கள் என்பது பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவற்றை அம்பலப்படுத்தி, இந்தியாவில் கோலோச்சுகின்ற இந்த ஒடுக்குமுறை சக்திகள் ஈழத்தில் தலையிட அருகதையற்றவர்கள் என்று பேசினால் நாம் பார்ப்பனியவாதிகளாம்.
புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்த்தால் நாம் பார்ப்பனியவாதிகள் என்றும் இக்கூலிக்கும்பல் பிதற்றுகிறது. இறுதிப் போரில் களத்தில் வீரமரணமடைந்த புலிப்படை அணிகளுக்கு நாங்கள் வீர வணக்கம் தெரிவித்ததை இக்கும்பல் வேறு விதமாகத் திரிக்கிறது. புலிகள் மீதான எமது விமர்சனத்தை இவர்கள் ஏதோ துப்பறிந்து கண்டுபிடித்தது போல பீற்றிக் கொள்கிறார்கள். எமது விமர்சனங்கள் யாவும் வெளிப்படையானதுதான். புலிகளை நாங்கள் விமர்சித்ததை எங்கும் எப்போதும் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனம் எந்தக் கோணத்தில் வைக்கப்பட்டது என்பதை பரிசீலிக்கத் தெரியாத இந்த பிழைப்புவாதக் கும்பல்தான் தர்க்க ரீதியாக அவ்விமர்சனங்களை எதிர்கொள்ள மறுக்கிறது.
ஈழத் துரோகக் குழுக்களை புலிகள் அழித்தொழித்ததைத் தவிர்த்து, ஏனைய தோழமை சக்திகளை பாசிச முறையில் புலிகள் வேட்டையாடியதை பலமுறை நாம் கண்டித்திருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியங்களால் வளர்க்கப்பட்ட புலிகள், அதே ஏகாதிபத்திய சதியின் முன்னால் தோற்றுக்கொண்டிருப்பதை காணப் பொறுக்காத நிலையில், அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்பினோம். அந்த அக்கறையில், செயல் தந்திர ரீதியிலான முரண்பாடுகளை மட்டும் அவர்களுக்காக நாம் முன்வைத்தோம். அவற்றைப் பரிசீலிக்கத் தயாராக இல்லாத புலிகள், இந்த போலித் தேசியவாதிகளையும் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளையும் நம்பி சீரழிந்தார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றம் தமக்குச் சாதகமானதாக அமையும் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன் இவர்களை முடித்துவிட்டது சிங்கள பேரினவதமும், இந்திய மேலாதிக்கமும்.
இது மாபெரும் தோல்வியைச் சந்தித்த துயரந்தோய்ந்த வரலாறுதான். ஆனால், அத்தோல்விக்கான காரணிகளைப் பரிசீலிப்பதுதான் இத்தோல்வியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியுமே, ஒழிய ஆத்திரமும், உணர்ச்சிமயமான வார்த்தைஜாலங்களும் அல்ல. ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை சாத்தியப்படவேண்டும் என்றால் இந்தியாவின் பார்ப்பன தேசிய ஒடுக்குமுறையும் அதற்குள் குளிர்காயும் ஏகாதிபத்திய-தரகுமுதலாளித்துவ சுரண்டல்களையும் சிறிதும் சமரசமின்றி மக்கள்முன் அம்பலப்படுத்தி இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் எடுபிடிகளான அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் எதிரான போராட்டங்களை களத்தில் உருவாக்க வேண்டும். மலையாள மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் எதிராக அல்ல. இப்படிப் பிற தேசிய இனங்களை தமிழனோடு மோதவிடுவது போல பேசுவதன் மூலமாக உலகைச் சூறையாடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், ஈழத்தைக் குதறியெறிந்த இந்திய மேலாதிக்கத்தையும் இவர்கள் மறைமுகமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள் என்பதையும் இந்த போலித்தேசியவாதிகளின் கேளாச் செவிகளில் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
பார்ப்பன இந்து தேசியத்திற்கு எதிராகவும், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் நம்மை நட்பு சக்தியாகக் கூட கருத வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொள்ளும் இக்கூட்டம், எதிர்முகாமில் இருக்கும் சக்திகளோடு சிறிதும் கூசாமல் எப்படி உறவு கொள்ள முடிகிறது? பார்ப்பனியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சந்தர்ப்பவாத இணக்கம் காட்டும் இந்த போலித் தேசியக் கூட்டம் நம்மை விமர்சிப்பதுதான் நமக்கு இவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்களின் இந்த பிழைப்புவாத நடவடிக்கைகள் எதார்த்தமாக, ஏதோ வேறு வழியின்றி செயல்படுத்தப்படுபவை அல்ல. அது தேர்ந்து தெளிந்து திட்டமிட்டுத்தான் அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மணியரசனிலிருந்து பழ.நெடுமாறன் வரை அனைவரிடத்திலிருந்தும் நாம் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.
ஏகாதிபத்தியத்தின் இருத்தல் என்பது எப்படி சாதி, மத, இன வேறுபாட்டு அடையாளங்களுக்குள் தந்திரமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்கிறதோ, அப்படித்தான் இந்த இனவாத அரசியலும் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளில் தமது இருத்தலை நிலைநிறுத்திக்கொள்கிறது. அதனால்தான் இவர்களது நடவடிக்கைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் அரும்பணியைச் செய்வதாக அமைந்துவிடுகிறது. நமது புரட்சிகர கருத்தாக்கங்கள் ஏகாதிபத்தியத்தின் குடுமியைப் பிடித்து இழுத்துவந்து வர்க்க முரண்பாட்டுக்குள் வெளிப்படையாக நிறுத்திவிடுவதைப் போல, தவிர்க்க இயலாமல் இந்த போலித் தேசிய பிழைப்புவாத அரசியலும் நம்மால் அம்பலப்படுத்தப்படுகிறது. தமது இருத்தல் பறிபோகும் நிலையில் இப்போலித் தமிழ்த்தேசியக் கும்பல் நம்மீது அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை பொழிகிறது. எப்படியாகிலும் நாம் கற்றுக் கொண்ட புரட்சிகர-மார்க்சிய-லெனினிய அரசியல் அவற்றைச் சந்திக்கும் துணிவை நமக்கு இயல்பாகவே வழங்கிவிடுகிறது. சந்திப்போம் திரைகிழிப்போம்!
- ஏகலைவன் (