கொள்கை இல்லாத கூட்டம் சந்தைக் கடை கூட்டமில்லாத கொள்கை பாலைவன நிலா. திருச்சி தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு கொள்கையும் கூட்டமும் சேர்ந்து பேரெழுச்சியுடன் நடந்தது. மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு வருங்காலம் குறித்து நம்பிக்கை பிறந்தது. தமிழ்த் தேசத்தின் அடிவானத்தில் புதிய முகில்கள் கருக்கொண்டு, புயல்மழை ஒன்றுக்கு அணியமாவது தெரிகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இயக்கத் தோழர்கள், இன உணர்வாளர்கள், வந்திருந்தனர். ஓட்டல் அரிஸ்டோவில் உள்ள மிகப்பெரிய மண்டபமான எல்.கே.எஸ்.மகால் நிரம்பி வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளிலும் மண்டபத்தை ஒட்டிய திடலிலும் திரண்டிருந்தனர் தோழர்கள். மகளிர் வருகை வழக்கத்தைவிடக் கூடுதலாக இருந்தது. குழந்தைகளோடு குடும்பமாக வந்தவர்கள் பலர்.
எழுச்சி இசை
2040 ஆனி 28, 2009 சூலை 12 ஞாயிறு காலை சரியாக 9.30 மணிக்குத் தோழர் குமரனின் சமர்ப்பா குழுவினர் எழுச்சி இசை முழக்கி ஈகி முத்துக்குமார் அரங்கை அதிரச் செய்தனர். தோழர் குமரன் பாடல்கள் உண்மையிலேயே சமர்க்களத்தில் பாடப்படுபவை போல் இருந்தன. சமர் பா என்ற பெயர் மிகப் பொருத்தம். புதிதாகக் கேட்டவர்கள் "இப்படி ஒருவர் இன உணர்வுப் பாடல்கள் இசைக்க இருக்கிறாரா" என்று வியப்பெய்தினர். அக்குழுவில் பாடிய சகோதரி மேட்டூர் வசந்தி குரல் மிக இனிமையாகவும் எழுச்சியாகவும் இருந்தது. தபேலாக் கலைஞர் யாகூப், வேறு பல இசைக்கருவிகள் இல்லையே என்ற நினைப்பு யாருக்கும் வராதபடி, தாளமிசைத்தார். பேராசிரியர் யோகீசுவரன் இசைக் குழுவினருக்கு துண்டணிவித்துச் சிறப்புச் செய்தார்.
ஓவியக்காட்சி
ஓவியங்களும் புகைப்படங்களும் நிரம்பிய அரங்கை தணிக்கை அறிஞர் திரு மு.குமரசாமி திறந்து வைத்தார். பெரும்பாலான ஓவியங்கள் தோழர் கவிபாஸ்கர் தீட்டியவை. படைப்பாற்றல் மிக்க அவர் ஓவியங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது. மேலும் தோழர்கள் ஆவடிக் கண்ணன், திருமலை ஆகியோர் தீட்டிய உயிர்த்துடிப்புள்ள ஓவியங்கள் காட்சியில் இடம் பெற்றன. தோழர்கள் நியாஸ், க.காந்திமதி ஆகியோரின் புதுமையான புகைப்படங்கள் காட்சியில் இடம் பெற்றன. ஈரோட்டுத் தோழர் ஆர்.கே.சண்முகவேல் வழங்கிய ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய புகைப்படங்கள் பார்வையாளர் கண்களில் நீரை வரவழைத்தன.
மாநாட்டின் உரையரங்கம் தொடங்கும் முன் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், தளபதிகளுக்கும், தமிழ்நாட்டில் தீக்குளித்துச் சாவைத் தழுவிய ஈகியர்க்கும் அண்மையில் காலமான முனைவர் இரா.திருமுருகன், திரு நா.வை.சொக்கலிங்கம்(யாதும் ஊரே - ஆசிரியர்) ஆகியோர்க்கும் இரங்கல் தெரிவித்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன்பிறகு, மாநாட்டு ஆயத்தக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான கவிஞர் நா.இராசா ரகுநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். இசை நிகழ்ச்சிழையத் தொடங்கி வைத்த தோழர் இரெ.சு.மணி(தாளாளர், அரியமங்கலம் இலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) பிறகு உரையாற்றினார். அடுது்து, ஓவிய புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்த திருச்சி தணிக்கை அறிஞர் மு.குமரசாமி உரையாற்றினார்.
தமிழ்த் தேசிய அரங்கு
மாநாட்டின் இருபெரும் கருத்தியல் தூண்களில் ஒன்று தமிழ்த்தேசியம், இன்னொன்று தமிழீழம்! தமிழ்த் தேசிய அரங்கிற்குத் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாநாட்டு நோக்கம் குறித்த வரைவறிக்கை 25 நாட்களுக்கு முன்பாகவே சுற்றுக்கு விடப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டது. அறிஞர்கள், தமிழ்த் தேசியர்கள், மார்க்சியர்கள் எனப் பலரும் திறனாய்வுகள் மற்றும் கருத்துகள் வழங்கியிருந்தனர்.
தோழர்கள் தி.க.சி., கோவை ஞானி, புலவர் குமர.தன்னொளியன், காரைக்குடி உறவு வாசகர் வட்டம், முனைவர் ஆறு.அன்புஅரசன், ஆசிரியர் (ஓய்வு) அ.பொன்னுசாமி, தமிழ்ச் சமூக ஆய்வுக்களம் அரங்கநாதன், இராசா, முத்துக்குமார், சேலம் மு.ப.சதாசிவம், முனைவர் பா.இறையரசன், பேராசிரியர் அறிவரசன், திருப்வூர் க.இரா.முத்துசாமி, புலவர் மறவர்கோ, சென்னை சேசாத்திரி(எ) ஆதன், வேலூர் தமிழ்ச்சேரன், முத்துப்பேட்டை இரா.மோகன்ராசன், சிதம்பரம் மு.முருகவேல் ஆகியோர் மடல் வழி திறனாய்வும், கருத்துகளும் அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு எம் நன்றி!
பல்வேறு இடங்களில் நடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வரைவறிக்கை விவாதிக்கப்பட்டது. மடல் வழியாகவும் நேரிலும் வந்த திறனாய்வுகள் மற்றும் கருத்துகள் ஆகியவை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.
ஏற்கக் கூடியவற்றை ஏற்று வரைவறிக்கை செழுமைப்படுத்தப்பட்டது. செழுமைப்படுத்தப்பட்ட வரைவறிக்கை ”தமிழ்த் தேசியத்தின் திசைவழி" எனற் தலைப்பில் அச்சிடப்பட்டு நூலாக மாநாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. மேற்கண்ட செழுமைப் படுத்தப்பட்ட வரைவு அறிக்கையை தோழர் கி.வெ. தமிழ்த் தேசிய அரங்கில் தமது தலைமை உரையில் செறிவாகப் எடுத்துரைத்தார். தமிழ்த் தேசிய நோக்கிலான த.தே.பொ.க.வின் கருத்தியல் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவ்வுரை தெளிவுபடுத்தியது. தமிழ்த் தேசத்தின் முதல் பகைசக்தி இந்தியாவே என்பதை விளக்கினார்.
தலைமை உரைக்குப்பின் இளந்தமிழர் இயக்கப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் ம.செந்தமிழன் "தமிழ்த்தேசியமும் உலகமயமும்" என்ற தலைப்பில் பேசினார். தேசியத் தாயகங்களை அழிக்க உலக ஏகாதிபத்தியங்கள் செய்யும் சூழ்ச்சிகள், ஈழதேசத்தை அழிக்க நார்வேயைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய ஏகாதிபத்தியங்கள் பின்னிய சதிவலை, இவற்றிலிருந்து மீள நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் ஆகியவற்றை ஆற்றலுடன் வெளிப்படுத்தினார். அடுத்து மொழியியல் அறிஞர் முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் "மொழிக்கொள்கை" என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். உலக முதல்மொழி தமிழ் என்பதையும் இந்தியாவெங்கும் பேசப்பட்டது தமிழ் என்பதையும், வேர்ச்சொல் ஆராய்ச்சி, ஆங்கில ஆய்வாளர்களின் நூல்கள் ஆகியவற்றின் துணை கொண்டு பேராசிரியர் நிறுவியது, பெருவியப்பை உண்டாக்கியது. பார்வையாளர்கள் மெய்சிலிர்த்து பெருமிதம் பொங்க அவர் உரை கேட்டனர். "ஒரு மொழிக்கொள்கையைத்தான் நாம் கடைபிடிக்க வேண்டும்" என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.
தமிழ்த் தேசிய அரங்கில் இறுதியில் பேச வந்தவர் முனைவர் த.செயராமன்! பகல் உணவுப் பசி நேரம்! பேராசிரியர் செயராமன் படைத்த செவி உணவு, வயிற்றுப்பசியை அடக்கி விட்டது. "தமிழர் இழந்த நில - நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் பேசினார். கலகலப்பு உவமைகளும், குத்தீட்டி போல் தைக்கும் குத்தல் திறனாய்வுகளும் கூட்டத்தைக் கட்டிப் போட்டன. நிலத்திலும் நீரிலும் இருந்த உரிமைகளை இந்தியா என்னென்ன வழிகளில் நம்மிடமிருந்து பறித்தது என்பதைப் பார்வையாளர் மனங்களில் பதியவைத்தார். உணவுக்கென்று தனி இடைவேளை தேவைப்படாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு ஆயத்தக் குழுவினர்,
கட்டணமின்றி சுவைமிக்க உணவு வழங்கினர். இதற்காக அரிசி, தேங்காய், மாங்காய், நிதி வழங்கியோர் நன்றிக்குரியவர்கள். இயல்பாக சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. மாநாடும் இடைநிறுத்தமின்றி இயங்கிக் கொண்டிருந்தது.
நாட்டியம்
புரட்சிக் கவிஞரின் ”சங்கே முழங்கு” பாடல் அரங்கில் அதிர்ந்த போது, நாற்காலிகளில் சாய்ந்திருந்தோர் நிமிர்ந்து உட்கார்ந்தனர். திருச்சி அரியமங்கலம் இலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் அடவு பிடித்து ஆடத் தொடங்கியதும் தமிழின வீரமும் பெருமிதமும் பொங்கிப் பெருக பார்வையாளர்கள், மனக்கிளர்ச்சி அடைந்தனர். "ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும், கூடிய" நெறியில் கூத்தும் இசையும் கொழித்த மாதவி காலத் தமிழர் வாழ்வை நினைவூட்டியது மாணவச் செல்வங்களின் நாட்டியம். ஆசிரியை மல்லிகாவின் அரிய பயிற்சியில் திறம் பெற்ற மாணவியர் ஆர்த்தி, ஆலி‘h, ஆயி‘h, மாணவர்கள் விவேக், அவிநாஷ், கார்த்திக், அசாருதீன் ஆகியோரைப் பாராட்டி தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியர் முனைவர் மு.இராமசாமி நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
நாடகம்
கருப்புக்குரல் நாடகம்- கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் செய்துவிட்டது. ஈழப்பேரவலம் கலை வடிவில் வந்த போது அதன் தாக்கம் பெரிதாகவே இருந்தது. தமிழ்நாட்டுத் துரோகக் கட்சிகளின் தலைவர்களும், நாஜி என்.ராம், சோ, சிவசங்கரமேனன் உள்ளிட்ட இனப்பகைவர்களும் குற்ற விசாரணைக்குட்படும் போது மண்டபம் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக பார்வையாளர்கள் காரித்துப்பாமல் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்கள். ஈழத்தமிழர் விடிவுக்கான போராட்டங்களில் எடுப்பான பங்களிப்பு செலுத்திய தமிழ்த் திரைப்படத் துணை இயக்குநர்கள் கருப்புக்குரல் நாடகத்தை வழங்கினர். தோழர் ஐந்து கோவிலான் இந்நாடகத்தை இயக்கினார். திரைப்படத் துணை இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இந்நாடகத்தில் பங்கேற்றனர். இயக்குநர் பெங்க்ர் கணேசு, உதவி இயக்குநர்கள் பாலமுரளிவர்மன், கலைசேகரன், கருப்பன், மகேந்திரவர்மன், சண்முகம், பிரேம் நசீர், நாகராசு, நடிகர்கள் செல்வா, ஒய்யான், ராஜா, சம்பத், ராணி ஆகியோர் உணர்வுகள் உந்த அருமையாக நடித்தனர். அறிவுக்கரசன் குழுவினர் எழுச்சியுடன் பாடல்கள் இசைத்தனர். சமர்ப்பா குழு யாக்கூப் தபேலா வாசித்தார். சிங்கள நாஜிகள் மின்சார முள்கம்பி வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களாக, தமிழ்க் குழந்தைகளாக, பார்வையாளர் பகுதியிலிருந்து சென்றோர் நடித்தனர். இயக்குநர் மற்றும் நடிகர்கள், இசைக் கலைஞர்கள் ஆகியோரைப் பாராட்டி தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் அறிவியல் புல இயக்குநர் முனைவர் இராம.சுந்தரம் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
பாவீச்சு
அடுத்து பாவீச்சு. திரு சு.முருகானந்தம் அவர்கள் பாவரங்கைத் தொடங்கி வைத்து திருச்சிக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். பாவலர்கள் கவித்துவன், கவிபாஸ்கர், தமிழேந்தி ஆகியோர் எழுச்சியுடன் கவிதை வழங்கினர். அடுத்து்து மாநாட்டி்டின் நடுவமாக உள்ள்ள
தீர்மான அரங்கம்.
தமிழகம் இழந்துள்ள உரிமைகளை மீட்கவும் தமிழ் ஈழவிடுதலைப் போருக்குத் துணை நிற்கவும், வதை முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, 2009 ஆகஸ்ட்டு 26இல் கடைபிடிக்க உள்ள தமிழ்த் தேசிய எழுச்சி நாள் போராட்டத்திற்கான தீர்மானத்தை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு முன்வைத்தார். முதலில், ஆகஸ்ட்டு 20 அன்று எழுச்சி நாள் நடத்தப்படும் என்று முன்மொழியப்பட்டது. பிறகு, ஆகஸ்ட்டு 26-க்கு மாற்றி வைக்கப்பட்டது. தீர்மானம் 2: "ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளில் இருந்து இலங்கை அரசை நீக்க வேண்டும் ஐ.நா.மன்றமே அப்பணியைச் செய்ய வேண்டும்" என்ற தீர்மானத்தைத் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மதுரை அ.ஆனந்தன் முன் வைத்தார். தீர்மானம் 3: "தமிழ்நாட்டில், அகதி முகாம்களில் மூன்றாண்டுகளுக்கு மேல் வசிப்போர்க்குக் குடியுரிமை வழங்க வேண்டும்" என்ற தீர்மானத்தைத் த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம் முன்வைத்தார். தீர்மானம் 4: "ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடியோர் - பேசியோர் மீது போட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்" என்ற தீர்மானத்தை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து முன்வைத்தார். இந்நான்கு தீர்மானங்களும் இதே இதழில் தனியே வெளியிடப்பட்டுள்ளன.
தமிழீழ அரங்கு
இவ்வரங்கிற்கு இலக்கியத் திறனாய்வாளர் தோழர் வீ.ந.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். இந்திராகாந்தி குடும்பத்தின் சூழ்ச்சி அரசியலைத் தோலுரித்துக் காட்டினார். ஈழத்தமிழர்களை அழிக்க அது செய்த சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினார். இளந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் க.அருணபாரதி ‘ஈழத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் பேசினார். நடந்த அவலங்களைச் சொன்னதுடன், தமிழீழம் பிறந்தே தீரும் என்று தக்க சான்றுகளுடன் கூறினார். வழக்கறிஞர் த.பானுமதி ‘இந்தியமும் ஈழமும்’ என்ற பொருள் குறித்துப் பேசினார். இந்திய ஆளும் வர்க்கம், ஈழத்தை அழிக்க, சிங்களவர்க்குத் துணை போனதற்கு முதன்மையான காரணம், தமிழ் இனத்தின் மீது இந்தியா கொண்டுள்ள இனப்பகைமையே ஆகும். தமிழர்கள் தங்கள் அடிமைத்தளையை உடைத்தெறிய ஒன்று திரள வேண்டும் என்றார். ‘ஈழமும் உலகநாடுகளும்’ என்ற தலைப்பில் பேசிய தோழர் கண.குறிஞ்சி (தமிழகத் துணைத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), கம்யூனிஸ்ட் நாடுகள் சிங்கள இனவெறிக்குத் துணை போனதை சுட்டிக்காட்டினார். ஏகாதிபத்திய நாடுகளின் சதியை அம்பலப்படுத்தினார். நாம் நமது தேசியத்தில் காலூன்றி நின்று போராட வேண்டிய தேவையை எடுத்துரைத்தார்.
கொடி எரிப்புப் போராட்டத்தில் சிறை சென்றோர்க்குப் பாராட்டு
ஈழத்தமிழின அழிப்புப் போரில் கூட்டாக ஈடுபட்ட இந்திய, இலங்கை அரசுக் கொடிகளை எரிக்கும் போராட்டம் 2009 ஏப்ரல் 25 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் சென்னை, ஒசூர், தஞ்சாவூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் நடந்தது. தஞ்சை, ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களைச் சிறையிலடைத்தனர். கோவையில் பிணை வழங்குவதற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, ஒருவாரம் அவரவர் வீட்டு வாசலில் இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்துப் பிணை வழங்கினார். கோவைச் சிறையில் உள்ள தோழர்கள் பா.தமிழரசன் (த.தே.பொ.க.), பாரதி (த.தே.வி.இ.), உயர்நீதிமன்ற நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இருவரும் மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளனர்.
கொடி எரிப்புப் போராட்டத்த்ில் சிறை சென்ற தோழர்களுக்குப் பாராட்டிதழ் வழங்கி துண்டு அணிவித்துச் சிறப்பித்தார் திருப்வூர் மொழிப்போர் ஈகி.ப.பெரியசாமி. பிறகு உரையாற்றினார். தோழர் தமிழரசனுக்குரியப் பாரட்டிதழை அவர் தம்பி பா.சங்கர வடிவேலு பெற்றுக் கொண்டார். தோழர் பாரதிக்குரிய பாராட்டிதழை அவர் தந்தையார் திரு.வேலுமணி பெற்றுக் கொண்டார். "இயக்கம் முடிவெடுக்கும் வரை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என் மகன் சிறையிருக்கட்டும்" என்று அவர் கூறியது பெருமிதத்தின் உச்சமாக இருந்தது. அவர் ஒலி பெருக்கி முன் சென்று சொல்லாமல் நின்ற இடத்திலேயே கூறியதால் பலருக்கு அவர் கூறிய சொற்கள் கேட்கவில்லை. தஞ்சைத் தோழர்கள் பழ.இராசேந்திரன், தெ.காசிநாதன், இரா.சிவராசு, இராமதாசு, ஆ.அண்ணாத்துரை, செயச்சந்திரன், குழ.பா.ஸ்டாலின், விசயகாந்த், வூபதி, மகாதேவன்(அனைவரும் த.தே.பொ.க.), விடுதலைச்சுடர் (குடந்தை தமிழர் கழகம்), அரசூர் ஆறுமுகம்(ப.ம.க.), பனசை அரங்கன் (த.தே.இ.), ஈரோடைத் தோழர்கள் மோகன்ராசு, மாதேசு, கண்ணன், ரவிக்குமார் (அனைவரும் த.தே.வி.இ.), கோவைத் தோழர்கள் பா.தமிழரசன், பா.சங்கர வடிவேலு, தனபால் (அனைவரும் த.தே.பொ.க.), பாரதி, தேவேந்திரன், குணசேகரன் (அனைவரும் த.தே.பொ.க.), திருவள்ளுவன் (த.தே.இ.), சீனவாசன் (தமிழின உணர்வாளர்) ஆகியோர்க்குப் பாராட்டிதழ் வழங்கி, துண்டணிவித்து சிறப்பித்தார் மொழிப்போர் ஈகி. இறுதியாக கடந்த சனவரி மாதம் சென்னை அண்ணாசாலையில் தனியொருவராக இந்தியக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தி சிறை சென்ற தோழர் நாத்திகன் கேசவனைப்(த.தே.வி.இ.) பாராட்டி துண்டணிவித்தார் ஈ.கி.பெரியசாமி.
தமிழறிஞர் இரா.திருமுருகன் படத்திறப்பு
அண்மையில் காலமான புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகன் உருவப் படத்திறப்பு, புதுவை செந்தமிழர் இயக்கத் தலைவர் தோழர் ந.மு.தமிழ்மணி தலைமையில் நடந்தது. மெய்யான முத்தமிழறிஞர் திருமுருகன் என்பதை தமிழ்மணி நிறுவினார். தமிழை முழுமையான ஆட்சிமொழியாக்காத புதுவை அரசைக் கண்டித்து அவ்வரசு தமக்குக் கொடுத்த விருதைத் திருப்பிக் கொடுத்தவர் திருமுருகன் என்றார். குடந்தைத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் தோழர் சா.பேகன் முனைவர் திருமுருகன் உருவப்படத்தைத் திறந்து வைத்து அவர் சிறப்புகளைக் குறிப்பிட்டதுடன், தமிழ்த்தேசியத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசினார்.
மாலையில் கூட்டம் இன்னும் கூடுதலாக வந்ததால் வெளியில் திரை கட்டி மேடை நிகழ்வுகள் ஒளிக்காட்சியாகக் காட்டப்பட்டன. மண்டபத்திற்கு வெளியே பெரிய திடல் இருந்ததால், வெளியூர்களிலிருந்து வந்த பேருந்துகள், வேன்கள், மகிழுந்துகள் ஒரு பக்கம் நின்றன. திடலின் மறுபக்கம் ஒரே புத்தகக் கடைகள். புத்தகக் கண்காட்சி போல் அத்தனை கடைகள்! அக்கடைகளை மொய்த்து நிற்கும் கூட்டம்! மாநாட்டிற்கு வந்தவர்களின் அறிவுத் தேடல் மகிழ்ச்சி அளித்தது.
நிறைவரங்கம்
பாவலர் பரணர் தலைமையில் நிறைவரங்கம் நடந்தது. தலைமையுரையில், தமிழினத்தின் பகையாக இந்தியா இருக்கிறது, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மீது குறிபார்த்துக் குண்டு போட்டுக் கொன்றதற்கு, இந்திய அரசின் செயற்கைக் கோள் தகவல் தான் காரணம். இந்தியா தமிழினத்தின் மீது தீராத பகை கொண்டுள்ளது என்றார். அடுத்து தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை. பேசினார். 1990 பிப்ரவரி 25இல் சென்னையில் நாம் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு நடந்த போது, அதை நடத்தியவர்கள் பின்னால் அவர்கள் நிழல்கூட வராது என்றார் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி. இன்று இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்தும் அளவிற்கு தமிழ்த் தேசியம் வளர்ந்துள்ளது. இன்று தமிழினத்திற்கான போராட்டங்களைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழ்த் தேசிய சக்திகள் தான் இருக்கின்றன என்றார்.
தமிழக மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் மதுரை அருணா, சிங்கள இனவெறி அரசு நடத்தும் ஈழத்தமிழர் இன அழிப்புப் போரில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ்ப் பெண்களே என்றார். தமிழ்ப் பெண்ணியம், ஒரே நேரத்தில் இன விடுதலைக்கும் பெண் விடுதலைக்கும் போராடும் கருத்தியல் என்றார்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளின் நட்புறவுக் கழகம் சார்பில் எழுத்தாளர் அமரந்தா பேசினார். "மக்கள் நலம் பேணும் கியூபா, வெனிசுவேலா, பொலிவியா, நிகரகுவா போன்ற நாடுகள் ஈழவிடுதலையை ஆதரிக்காமல், சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பது துயரமானது. அந்நாடுகளுக்கு ஈழத்தில் நடைபெறும் உண்மைகளை விளக்கி, அவர்களுடன் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். இது குறித்து கியூபாவுக்கு நான் எழுதிய கடிதத்திற்கு நல்ல எதிர்வினைகள் வந்து கொண்டுள்ளன. சீனாவின் வளர்ச்சிப் பாதையை கியூபா முன்மாதிரியாகக் கொள்கிறது. அது சரியல்ல. அது மீண்டும் முதலாளியத்தை நோக்கி கியூபாவை நகர்த்திவிடும்" என்றார்.
அடுத்து, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு பேசினார். "தமிழ்த்தேசியம் சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள் தமிழ்த்தேசியம் தேவையா இல்லையா என்று தான் கேட்க வேண்டும். சாத்தியமா என்று கேட்டுக் கொண்டே இருந்தால் சாத்தியமில்லை தான். தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.
பின்னர் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பேசினார். தமிழர்களுக்கு இப்போது தேவை ஆவேசம். மன அமைத்திகாக தியானம் செய்வதாகச் சிலர் சொல்கிறார்கள். தியானம் செய்வோர் மனம் ஆவேசம் அடைவதற்காகத் தான் தியானம் செய்ய வேண்டும். தமிழ்த்தேசியம் தேவை தான். ஆனால் தமிழர்களுக்குள், சாதி ஆதிக்கம், இந்துத்துவக் கொடுமைகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு தமிழ்த்தேசம் அடைந்தால் அது எப்படி இருக்கும்? எனவே அவற்றை ஒழிக்க நாங்கள் முன்னுரிமை தருகிறோம். நம்மைப் பற்றி இந்திய அரசு ஏன் அக்கறை கொள்ளவில்லை என்ற கோபமும், வேகமும் குறைவாக உள்ளது. 15 நாட்களுக்காவது சிறையில் இருக்கக்கூடிய மனத்துணிச்சலை நம் இளைஞர்கள் பெற வேண்டும் என்றார்.
நிறைவுரை ஆற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன்:
"இந்த மாநாடு சிறக்க தமிழகமெங்குமுள்ள நம் தோழர்கள், இன உணர்வாளர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். திருச்சி தோழர்கள் தங்கள் சக்திக்கு மீறி உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் உழைப்பால் தான் மனநிறைவடையும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழகத் தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும். ஈழ விடுதலைக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த இரட்டைக் கடமை நம்முன் உள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கான, தமிழ்த் தேசியத்திற்கான இந்த மண்ணின் சிக்கல்களை நாம் முன்வைக்காவிட்டால் நாம் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு இங்கு வலிமை பெற முடியாது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய தத்துவங்கள் நமக்குத் தேவை. தத்துவங்கள் நமது தமிழ்த் தேசியப் புரட்சிக்கு வழிகாட்ட வேண்டும். சமூகத்திற்காகத் தத்துவங்களே தவிர, தத்துவங்களுக்காக சமூகம் அல்ல. ஒரு தத்துவத்தை மெய்ப்பிக்க வேண்டும் என்பதற்காகப் புரட்சி நடக்காது. புரட்சிக்குத் துணை செய்ய தத்துவம் பயன்பட வேண்டும். தத்துவம் போர்வாள் போன்றது. அதன் கூர்மை குறைந்திருந்தால் நாம் அதை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். ஈழத்தில் இன அழிப்புப் போர் இன்னும் தொடர்கிறது. கடந்த மே 16, 17, 18 உடன் அப்போர் முடிந்துவிடவில்லை. வதை முகாம் களில் உள்ள தமிழர்கள் 1 வாரத்திற்கு 1400 பேர் வீதம் சாகிறார்கள் அல்லது சாகடிக்கப்படுகிறார்கள் என்று இலண்டனிலிருந்து வரும் டைம்ஸ் ஏடு குறிப்பிடுகிறது. நாஜிப் பத்திரிக்கையான "இந்து" ஏடுதான், அங்கு அகதி முகாம்கள் சொர்க்க புரியாக இருப்பதாக வர்ணிக்கிறது. கண்ணி வெடிகள் அகற்றுவதற்காக என்று சாக்குச் சொல்லி இந்தியப்படை அங்கு போகிறது. அங்கு போய் எஞ்சியுள்ள நம் இன மக்களை அழிக்கப் போகிறது. இந்தியப் படை ஈழம் போகக்கூடாது என்று நாம் குரல் கொடுக்க வேண்டும். தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ பணம், பதவி, விளம்பரம் ஆகியவற்றிற்கு ஆசைப்படாத இளைஞர்கள் முன்வர வேண்டும். ஆகஸ்ட்டு மாதம் நடைபெறும் தமிழ்த் தேசிய எழுச்சி நாளை மக்களிடம் கொண்டு சேர்த்து மாபெரும் தாக்கத்தை உண்டாக்கும் வகையில் அந்நாளைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்றார்.
இறுதியில் தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார். தமிழ்த் தேசியம் சிறப்பு மாநாடு நிறைவிற்கு வந்தது. மாநாட்டு ஆயத்தக்குழுவில் ஒருங்கிணைப்பாளராகச் செயலபட்ட தோழர் கவித்துவன், ஆயத்தக்குழுப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் நா.இராசா ரகுநாதன், பொருளாளர் தோழர் தி.ம.சரவணன், தமிழறிஞர் பாவலர் பரணர், தோழர்கள் வே.க.இலட்சுமணன், இரெ.சு.மணி, சத்தியா, திருக்குறள் சு.முருகானந்தம், வீ.ந.சோமசுந்தரம், தணிக்கை அறிஞர் மு.குமரசாமி, பழனிவேல். கணேசன், ராமராசன், பொற்கோ, புலவர் செங்கொடி, வீரமணி(ம.தி.மு.க) ஆகியோரின் உழைப்பு மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறக்கச் செய்தது. நிதியளித்து மாநாட்டை நிமிரச் செய்தோர் பங்களிப்புப் பெரிது. மாநாட்டின் வெற்றி, அதன் தொடர் நிகழ்வுகளில் அடங்கியுள்ளது. திருச்சியில் நடந்ததால் சொல் இனிமைக்காக அது "திருப்புமுனை" மாநாடாகிவிடாது. அதில் தீர்மானிக்கப்பட்ட முடிவுகள், போராட்டக் களங்களில் உயிர் பெறும் போது தான் உண்மையில் திருப்புமுனை அமையும். தெளிவான இலக்குகள், தீர்மானித்துக் கொண்ட பாதை - இவையே திருச்சி மாநாட்டின் சிறப்புகள். செயற்களம் காத்திருக்கிறது.
- நம் செய்தியாளர்.