இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் நிதியிலிருந்து சென்னை கொளத்தூரில் அரசு கலைக் கல்லூரி ஒன்றைத் தொடங்க, தமிழக அரசு முடிவெடுத்திருப்பது பாராட்டி வரவேற்க வேண்டிய முயற்சி. அதற்கான ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோரி இருக்கிறது. இதில் ‘இந்துக்கள்’ மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதித்திருப்பது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை சட்டத்துக்கான 10ஆவது விதி, கோயில் அதிகாரிகள், பணியாளர்களாக ‘இந்து’க்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள். கல்லூரிகள் கோயில்களின் மத நடவடிக்கைகளின் கீழ் வராதவை. அனைவருக்கும் கல்வி வழங்கி, எதிர்காலத் தலைமுறைகளை உருவாக்கும் நிறுவனம். அதற்கு எப்படி இந்த விதி பொருந்தும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு, கோயில் நிதியைக் கொண்டு, ‘தர்ம அறக்கட்டளை’ வழியாக நடத்தப்படுவதால் ‘இந்துக்கள்’ மட்டுமே என்ற விதிக்கு உட்பட்டு விடுகிறது என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாடு பொதுப் பள்ளி அமைப்பின் நிர்வாகிகள் இந்த விதிகளை ஏற்கவியலாது என்று மறுத்துள்ளனர். இந்துக்களுக்காக நடத்தப்படும் மத நிறுவனம் வேறு; கோயில் நிதி வழியாக நடத்தும் கல்வி நிறுவனங்கள் வேறு; இரண்டையும் ஒன்றாகக் கருதிட முடியாது. கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ‘இந்து’க்களாகவே இருக்க வேண்டும் என்ற விதி கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. எனவே இந்த அறிவிப்பைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இது நியாயமான செயல்படுத்த வேண்டிய கோரிக்கை என்பதே நமது உறுதியான கருத்து.

இந்துக் கோயில்களில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களாக இந்து ஆண்கள் மட்டுமே இருக்க வேண்டும்; இந்து பெண்களுக்கு உரிமையில்லை என்ற நிலை, 15 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் துரைசாமி, இப்படி வந்த ஒரு அரசு அறிவிப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்துப் பெண்களும் அதிகாரிகளாக முடியும் என்று தீர்ப்பைப் பெற்றுத் தந்தார். அதன் பிறகு தான் அறநிலையத் துறையில் பல பெண்கள் உயர் அதிகாரிகளாக நுழைந்து பணியாற்றி வருகிறார்கள்.

அறநிலையத் துறைச் சட்டத்தின் 6(5)ஆவது பிரிவு இந்து அறக்கட்டளைகள் வழியாக நடத்தப்படும் சத்திரங்கள், ஓய்வு விடுதிகள், பாடசாலைகள், ஏழைகளைப் பாதுகாக்கும் இல்லங்களில்கூட இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அப்படி ஒரு விதி இருந்தால் மாற்றப்பட வேண்டும். கோயில்கள் நடக்கும் ‘அன்னதானத்தில்’கூட இஸ்லாமியர், கிறிஸ்தவர் சாப்பிடக் கூடாது; இந்துக்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றுகூட எதிர்காலத்தில் வாதிடலாம்.

இந்து அறநிலையத் துறை நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மதம் தொடர்பான நிகழ்வுகளில் ஈடுபடவில்லை. மாணவர்களாக அனைத்துப் பிரிவினருமே சேர்க்கப்படுகிறார்கள். எனவே, கல்வி நிறுவனங்களை அறநிலையத் துறை நடத்துவதால் மத நிறுவனங்களோடு சமப்படுத்த முடியாது என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு கூறியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் 16ஆவது பிரிவு வேலை வாய்ப்புகளில் சமத்துவத்தை வலியுறுத்தும் பல பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது. இதில் 16(5) பிரிவு மதம் அல்லது மதக் குழுவினரோடு தொடர்புடைய நிறுவனங்களின் நிர்வாகக் குழுவின் பணிகளிலும் நியமிக்கப்படுவோர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவோராக இருக்க வேண்டும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. அது சட்டத்துக்கு எதிரானது அல்ல என்று கூறியிருப்பதை நீதிபதி சந்துரு எடுத்துக் காட்டியுள்ளதோடு, இந்த 16(5)ஆவது பிரிவு வழங்கும் உரிமையைப் பயன்படுத்தி, இந்த அரசாணையை மாற்றி அமைக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். தொல் பொருள் ஆய்வுத் துறையில் கே.பி.ஏ. நல்லா முகம்மது என்ற இஸ்லாமியர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தம்மிடம் வந்த வழக்கில் கல்வெட்டு, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் இந்து மதத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை; இது கோயில்களுக்கு வெளியே நாடு முழுதும் நடக்கும் பணி என்று தாம் தீர்ப்பளித்தையும் நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஏற்கனவே பழனி மற்றும் மேலையூரில் அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் ஆசிரியர், பணியாளர் நியமனங்களில் ‘இந்து’க்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

‘சூத்திரர்’களுக்கு கல்வியைத் தரக் கூடாது என்பதே ‘இந்து’ வேத மதத்தின் கோட்பாடாக இருந்த காலத்தில் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவ நிறுவனங்கள் தான் இந்து மதத்தில் புறக்கணிக்கப்பட்ட அடித்தள மக்களுக்கு கல்வியை வழங்குவதை தங்கள் முதன்மைப் பணியாகக் கருதி தொண்டாற்றின. அவர்கள் உருவாக்கிய செயின்ட் ஜோசப், இலயோலா, சென்னை கிறிஸ்தவக் கல்லூரிகள் போன்ற பல கல்லூரிகள் நட்சத்திரக் குறியீடுகளுடன் பெருமையோடு செயல்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்காகவே உருவான வேலூர் கிறிஸ்தவ கல்லூரியும் மருத்துவ மனையும் இன்று அனைத்து மத மக்களையும் அரவணைத்து சேவையாற்றி வருகின்றது. இந்த நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள் மட்டும் தான் பேராசிரியர்களாகவே பணியாளர்களாகவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இல்லை.

இந்து அறநிலையத் துறை விதிகள் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றியமைப்பதில் எந்தத்தவறும் இல்லை. கோயில் அதனால் புனிதம் கெட்டு விடாது.

இந்து கோயில்கள் குறித்த வழக்கு என்றால் இந்து நீதிபதிதான் விசாரிக்க வேண்டும்; கோயிலுக்கு ஏதேனும் விபத்து என்றால் அதை சரி செய்ய ‘இந்துக்கள் மட்டுமே வரவேண்டும்; கோயில் அர்ச்சகர்களுக்கு நோய் வந்தால் இந்து டாக்டர்களிடமே போக வேண்டும் என்றெல்லாம் 2021ஆம் ஆண்டிலும் பேசிக் கொண்டிருப்பது அபத்தம்!

அறநிலையத் துறைச் சட்டம், பனகல் அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டு, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சிக் காலத்திலும் பிறகு காமராசர் ஆட்சி காலத்திலும் பல மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டது வரலாறு. எனவே சட்டம் சமூக நீதிக்குத் தடையாக வந்தால் அதை மாற்றித் தான் ஆக வேண்டும்.

தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ள ‘இந்து மட்டும்’ என்ற அறிவிப்பை மாற்றி வெளியிட முன் வரவேண்டும். அது சாதனைகளைக் குவித்து வரும் தி.மு.க. ஆட்சிக்கு மற்றொரு மகுடத்தைச் சூட்டும்.

பா.ஜ.க.வினர் பார்ப்பனர்கள் மிரட்டலுக்குப் பணியக் கூடாது; அவற்றை எங்களைப் போன்ற பெரியார் இயக்கங்கள் எதிர்கொண்டு, மக்கள் கருத்தை ஆட்சிக்கு ஆதரவாக உருவாக்கும்!

Pin It