ஆரியர், ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமூதாயத்தினரிடம் இன்னும் பெருமளவுக்கு இருப்பதனாலும் ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதினாலும் தான். எனவேதான் தம்பி, நமது கழகம், ஆரியரை ஒழித்திடும் வேலையை அல்ல, ஆரியத்தை ஒழித்திடும் வேலையில் ஈடுபடுகிறது.

- பேரறிஞர் அண்ணா

(திராவிட நாடு, 09-10-1955)

அரசு அலுவலகங்களில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் செய்யப்படும் நுண்ணரசியல் வெளிப்படையானது. சேவை மனப்பான்மையுடனும், பொதுநல நோக்குடனும் இயங்க வேண்டிய அரசு அலுவலகங்கள் சாதிப் பஞ்சாயத்துகளினும் கேடாய் விளங்குகின்றன. ஒவ்வொரு அரசுத்துறையிலும், தலைமை தொடங்கி, கடைநிலை ஊழியர் வரை வியாபித்திருப்பது சாதி மட்டுமே.

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுவதற்குத் தடையுள்ள போதிலும், மிகவும் விமரிசையாக வெளிப்படையாகவும் எவ்வித கூச்சமுமின்றி ஆயுத பூஜை, பிள்ளையார் பூஜை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதில் முக்கிய பங்காற்றுவது அலுவலகங்களிலுள்ள பார்ப்பன லாபியும், அதற்குத் துதிபாடும் அதிகார வர்க்கமும். இவ்வகை விழாக்கள் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே வசூல்வேட்டை தொடங்கிவிடும். வசூலுக்கு ரசீது தரும் நடைமுறையும் சில அலுவலகங்களில் உண்டு. பூஜைக்குப் பணம் கொடுப்பவர்கள் ஆழ்வார், நாயன்மார்களைப் போல பெருமிதம் கொள்வதும், பணம் கொடாதவர்களை விரோதப் பார்வையால் வேடிக்கை செய்வதும் வேதனை தரும் விஷயங்கள். பலர் இத்தகைய ஒதுக்கப்படுதலுக்கு அஞ்சியே ‘நமக்கேன் வம்பு” என்று தயக்கத்துடன் பணம் தருவதும் உண்டு. இதில் உச்சக்கட்ட காமெடி என்னவென்றால், அந்தந்த துறைத் தலைவர்களே இத்தகைய விழாக்களில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பிப்பது.

அலுவலக வளாகங்கள் உள்ளே கோயிலும் அமைந்து விட்டால், கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள் செய்யும் ரகளைகள் தனிரகம். இடுப்பில் வேட்டியும், தோளில் ஒரு துண்டுமாய் அரைகுறை ஆடையோடு இவர்கள் சுற்றிவருவது அரசு அலுவலகங்களின் தனித்துவமான காட்சி. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரைக் காட்டிலும், அதிகப்படியான வரவேற்புகளும் உபசரிப்புகளும் இவர்களுக்கு உண்டு. ‘சாமி” என்றே பெரும்பாலும் இவர்கள் அழைக்கப்படுவர். நாளொரு சதுர்த்தியும் பொழுதொரு பூஜையுமாக வசூல் வேட்டை தவறாது நடப்பதுண்டு.

இவ்வாறு ஒரு பக்கம் பார்ப்பனீய ஆதிக்கம் நடைபெறுகிறதென்றால் மற்றொரு பக்கம் ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்டவர்களின் மீது நடத்தும் உளவியல் வன்முறைகள்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உயர்ஜாதியினர் என்று கருதிக்கொள்வோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றவர்களின் சாதியை அறிந்துகொள்ளக் காட்டக்கூடிய ஆர்வம் வியப்பைத் தருவது புதியதாகப் பணியில் சேர்ந்த ஒருவரின் கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும், அவரது சாதிப் பின்புலத்தை அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் மிகுதியாக இருக்கும். பணியில் சேர்ந்தவரும் தம்மைப் போல ஒரு உயர்ஜாதியினர் சூத்திரர் என்று தெரிந்துகொண்டால், அதனால் அடையும் ஆனந்தமே அலாதி. அதிலும் அவர் தனது ஜாதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தால், அவருக்குப் பெண் பார்க்கும் படலமே தொடங்கிவிடும். அது மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் பட்டியல் இனத்தவர் யார் யாரென்று அவருக்கு அடையாளம்காட்டப்பட்டு, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு இலவச அறிவுரைகளும் வழங்கப்படும்.

சாதியின் அடிப்படையில் சலுகைகள் தரப்படுவதும், விதிமுறைகள் தளர்த்தப்படுவதும் அரசு அலுவலகங்களில் வழக்கமான நடைமுறை. எடுத்துக்காட்டாக, ஒரு அலுவலகத்தில் தகுதிகாண் பருவம் (Probation) முடித்து, ஊதியத்தோடு விடுப்பு எடுப்பதற்கான தகுதியுள்ள ஒருவர் மருத்துவச் சான்றிதழோடு விடுப்பு எடுக்கும்போதிலும், அவர் பிற்படுத்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால், அவரது ஊதியம் நிறுத்தப்படுகிறது. அதே நேரம், தகுதிகாண் பருவத்தையே நிறைவு செய்யாது விடுப்பு எடுக்கும் ஒருவருக்கு ‘தகுதியின் அடிப்படையில் இவருக்கு விடுப்பு அனுமதி வழங்கலாம்” என்ற வாசகத்தோடு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. பூணூல் தான் அந்தத் தகுதி என்பதை சொல்லவும் வேண்டுமா?

பட்டியல் இனத்தவரைப் பாதுகாக்க சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதும், குடும்ப சூழ்நிலை, எதிர்கால பணிச்சூழல், தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் போன்ற பல காரணங்களால் இத்தகைய நிகழ்வுகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை. அட்ஜஸ்ட் செய்துகொண்டு பணிபுரிவதே யதார்த்தமாகிப் போகிறது.

மொத்தத்தில், இந்தியாவில் சமயச்சார்பற்ற தன்மை இருக்கிறதோ இல்லையோ, அரசு அலுவலகங்களில் சாதிச் சார்புள்ள தன்மைதான் இருக்கிறது என்பதே நடைமுறை உண்மை.

Pin It