சென்னையில் ஜாதி எதிர்ப்புக்கான பெண் போராளிகளின் அறைகூவல் பொதுக் கூட்டத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குனர் திவ்யபாரதி உரையில் குறிப்பிட்டதாவது:

சமுதாயப் பிரச்சினைக்காகப் போராடுகிறவர்கள் மீது ‘தேச விரோதிகள்’ என்று குற்றம்சாட்டு கிறார்கள். இங்கே இவ்வளவு பெரிய அளவில் திரண்டிருக்கிற நாம் எல்லோரும் ‘சங்பரிவார்’ பார்வை யில் தேச விரோதிகள். சாவர்க்கார் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட் டிருந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானவர். அவரை ‘வீர சாவர்க்கார்’ என்று கூறுகிற கூட்டம், நம்மைப் பார்த்து தேச விரோதி என்கிறது.

நான் எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப் படத்துக்காக கடும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது. 25 இடங்களை மய்யமாக வைத்து அங்கே மனித மலத்தை மனிதர் அள்ளும் இழிவு தொடர்வதைப் படம் பிடித்தோம். நகரங்களிலுமா இப்படி நடக்கிறது என்று கேட்டார்கள். ஜாதி இழிவு கிராமத்தில் தான் இருக்கிறது, நகரங்களில் இல்லை என்பது ஒரு மூட நம்பிக்கை. பார்ப்பனியமும் பெண்ணடிமையும் ஜாதியும் கிராமம், நகரம் என்று பேதமின்றி எல்லா மண்டைக்குள்ளும் புதைந்து கிடக்கிறது. சென்னையிலேயே புதிய தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்டு மருத்துவமனையாக மாறியிருக்கும் பகுதியிலேயே உள்ள வீடுகளில் கழிப்பறையை தரையோடு தரையாக வடிவமைத்திருக்கிறார்கள். இதிலே மலம் கழிப்பதை எடுப்பதற்கு மனிதர் தான் வரவேண்டும். இப்படி ஒரு கழிப்பறையை வடிவமைத்திருக் கிறோமே என்ற புத்திகூட இல்லாத அளவுக்கு ஜாதி வெறி வடிவமைத்தவன் மண்டையில் ஏறிக் கிடக்கிறது.

‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை திரை யிடுவதற்கு தொடர்ந்து காவல்துறை யினர் தடை போட்டார்கள். ஆவணப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் பெற வில்லை என்று காவல்துறை அதற்கு காரணம் கூறியது. மனித மலத்தை மனிதன் எடுக்கக் கூடாது என்று 1993லேயே சட்டம் போட்டார்கள். பிறகு 2003லும் சட்டம் போட் டார்கள். சட்டத்தை மத்திய அரசும் மதிப்பதில்லை. மாநில அரசும் மதிப்பதில்லை. சட்டத்தை மதிக்காத இந்த ஆட்சிகளுக்கு சட்ட மீறலை படம்பிடித்துக் காட்டும் எங்களிடம் ‘சென்சார் சர்டிபிகேட்’ வாங்கி விட்டாயா? என்று கேட்பதற்கு யோக்கியதை இல்லை. (கைதட்டல்) திவ்யா ‘தேச விரோதி’ என்கிறார்கள். எங்களை ‘தேச விரோதி’களாக பட்டம் சூட்டுவதற்காக மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நாட்டில் உண்மையான மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என்றால் ‘தேச விரோதி களாகத் தான்’ இருக்க வேண்டும்.

தேச பக்தர்களின் யோக்கியதை என்ன? நாடு முழுதும் கழிப்பறைகளை கட்டுவதற்கு ரூ.2 இலட்சம் கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கினார்கள். நமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நான் கேட்பதெல்லாம் கழிப்பறைக் கட்ட நிதி ஒதுக்கினார்களே! ‘செஃடிக் டேங்கை’ யார் கட்டித் தருவார்கள்? மோகன் பகவத் கட்டித் தருவாரா? அமீத் ஷா கட்டித் தருவாரா? மோடி கட்டித் தருவாரா? ‘செப்டிக் டேங்க்’ இல்லாமல் இவர்கள் கட்டுகிற கழிப்பறைக்கு சுத்தம் செய்வதற்கு தலித் மக்கள் தான் வர வேண்டுமா? இவர்கள் பேசும் தூய்மை இந்தியா திட்டம், தலித் மக்களுக்கு எதிரான திட்டம்.

2013இல் கொண்டு வரப்பட்ட கையால் மலம் எடுப்பதைத் தடுக்கும் சட்டம் அதன் முகப்பிலேயே அவர்களுக்கு மறுவாழ்வு தர வேண்டும் என்று கூறுகிறது. மறுவாழ்வு எத்தனை பேருக்கு தந்தார்கள்? 2015ஆம் ஆண்டு கையால் மலம் எடுக்கும் தொழி லாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தினார்கள். தமிழ்நாட்டில் அப்படி கையால் மலம் எடுப்பவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா? வெறும் 462 பேர். இந்த கணக்கெடுப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.23 கோடி. இது அப்பட்டமான பொய். பல்லாயிரக் கணக்கில் கையில் மலம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பு சரியானது அல்ல; மறுகணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ‘பாடம்’ நாராயணன் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் மறு கணக்கெடுப் புக்கு உத்தரவிட்டது. மறு கணக் கெடுப்பு நடத்தியபோது இந்த எண்ணிக்கை 332 ஆக குறைந்தது. இந்தக் கணக்கெடுப்புக்கு செலவிட்ட தொகை ரூ.17 கோடி. இந்தக் கணக் கெடுப்புகளுக்கு மட்டும் ஒதுக்கப் பட்ட 40 கோடி தொகையை மலம் எடுக்கும் தலித் மக்களின் மறு வாழ்வுக்கு பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ பயன் கிடைத்திருக்கும்.

சி.அய்.டி.யு. தொழிற் சங்கத்திலேயே கையால் மலம் எடுப்போர் 8000 பேர் இருக்கிறார்கள். 100 வார்டுகளைக் கொண்ட எங்கள் மதுரையில் 8 வார்டு களில் மட்டும் 400பேர் இருக் கிறார்கள். இந்திய அரசு வெளியிட்டுள்ள எண்ணிக்கை 12841. இதில் 10,000 பேர் பா.ஜ.க. சாமியார் ஆதித்ய நாத் ஆட்சி நடத்தும் உ.பி.யில் இருக்கிறார்கள். இந்த கணக்கே பொய். அதிலும் உ.பி. மாநிலத்தின் யோக்கியதை எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு எவ்வளவோ வளர்ந்த நிலையில் இருக்கிறது. மலக்குழியை சுத்தப் படுத்துவதற்காக மனிதர்கள் இறக்கி விடப்படுகிறார்கள். இதில் நச்சு வாயுவினால் இறந்து போகிறார்கள். இப்படி தலித் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆனால் காவல்துறை ‘சந்தேக மரணம்’ என்று வழக்குகளைப் பதிவு செய்கிறது. கொலையை சந்தேக மரணம் என்று வெட்கமின்றி பதிவு செய்கிறது. காவல்துறையும் ஜாதி வெறியுடனே செயல்படுகிறது. சந்தேக மரணமாக பதிவு செய்யாதே என்று வழக்கை மாற்றுவதற்காக கடும் போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது.

இந்த நிலையில் ஜப்பானிலிருந்து ஒரு இலட்சத்து எட்டாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, டெல்லிக்கும் அகமதாபாத்துக்கும் மோடி புல்லட் இரயில் விடுகிறாராம். ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 7000. வடநாட்டு இரயில் நிலையங்களில் தலித் மக்கள் கையாலே மலம் அள்ளுகிறார்கள். இதை ஒழிக்க முன் வராதவர்கள், புல்லட் இரயில் விடுகிறார்கள். டெல்லியிலிருந்து மோடியை இதே இரயிலில் மீண்டும் அகமதாபாத்துக்கு அனுப்ப வேண்டும். (கைதட்டல்)

‘ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்’ அணிகளை அடிமைப்படுத்தி, கிருஷ்ணசாமி போன்றவர்களைப் பயன்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற துடிக்கிறது. புதிய தமிழகம் கட்சியைப் புதிய பார்ப்பனியமாக மாற்றி வருகிறார், கிருஷ்ணசாமி. பெண்களை இழிவுபடுத்தி இவர் பேசும் கருத்து களுக்கு பாலபாரதி சரியான பதிலடி தந்திருக்கிறார்.

இந்தச் சூழலில் கருப்பு, நீலம், சிவப்பு ஒன்றாக இணைய வேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கான மேடையை திராவிடர் விடுதலைக் கழகம் உருவாக்கியிருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார் திவ்யபாரதி.

Pin It