புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி)

புத்த மார்க்கம் பார்ப்பனர்களையும் ஏற்றுக் கொண்டதால் அதற்கான கடும் விலையை அது தர வேண்டியிருந்தது. புத்த மார்க்கப் புரட்சியால் யாகம், சடங்குகளின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வருமானமில்லாத நிலையில் பல பார்ப்பனர்கள், பார்ப்பன உணர்வுகளைவிட்டு விடாமலேயே புத்த மார்க்கத்தில் இணைந்துக் கொண்டனர். புத்த பிட்சுக்களாக உருவாக்கப்பட்ட ‘ஆஸ்ரமங்களில்’ அவர்கள் சுகவாழ்வு வாழத் தொடங்கினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களைப் பார்ப்பனர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்ட அதே கதைதான். புத்த பிட்சுவாக மாறிய பிறகும் பார்ப்பனர்கள் தங்கள் ‘தீண்டாமை’யை விட்டு விடவில்லை என்பதை சீனப் பயணியாக இந்தியாவுக்கு வந்த ஃபாஹியான் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.

“புத்த மார்க்கத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஒரு பார்ப்பன புத்த பிக்கு பாடலிபுத்திரத்தில் இருந்தார். மன்னர் அவரைச் சந்திக்கச் செல்லும்போது குருவின் கைகளைத் தொட்டு வணங்குவார். உடனே அந்த ‘பார்ப்பன பிக்கு’ தலைமுதல் பாதம் வரை தண்ணீரில் தேய்த்து குளிப்பது வழக்கம்” என்று குறிப்பிடுகிறார். புத்த மதத்தின் கட்டுப்பாடு பாடலிபுரத்தில் இருந்தவரை ஊடுருவிய பார்ப்பனர்களால் எந்த மாற்றமும் செய்ய முடியவில்லை என்றும் வெளி நாட்டினர் ஏராளமாக வரத் தொடங்கி அவர்கள் புத்த மார்க்கத்தில் சேர்ந்து ஆஸ்ரமங்களைக் கைப்பற்றிய பிறகு பார்ப்பனர்கள் புரோகித மந்திர தந்திரங்களை புத்த மார்க்கத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக மாற்றிவிட்டனர். பவுத்தப் பேரரசுகளின் அதிகாரம் குன்றி வெளி நாட்டினர் இந்தியாவுக்கு வந்து அரசாட்சியைக் கைப்பற்றிய வுடன் பார்ப்பனர்கள் புத்தமதத்தை இரண்டாகப் பிளந்து புத்தரை கடவுளாக்கி யாக சடங்குகளைப் புகுத்தி விட்டனர் என்று ஹேவல், ஆர்.சி.தத் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பார்ப்பனர்களின் தலைமையில் உருவானதுதான் ‘மகாயான பவுத்தம்’, அதன் வழியாக புத்தரும் காளி தேவியும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டனர். புத்தமார்க்கம் இரண்டாகப் பிளவுபட்டது வைசாலி என்ற பகுதியில் தான்.

புத்தரின் மரணத்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது உண்மையான சீடர்கள் சதவானி என்ற மலைக்குகை வாயிலில் முதல் பவுத்தப் பேரவையை கூட்டினார்கள். புத்தரின் அனைத்து கோட்பாடு களையும் முறையாக மூன்று பிரிவுகளாக தொகுத்து ஒழுங்குபடுத்தி, ‘திரிபீடகம்’ என்று அதற்கு பெயரிட்டார்கள். பீடகம் என்றால் பிரிவு என்று பொருள். இந்த ‘திரிபீடகம்’ எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதற்குப் பிறகு 100 ஆண்டுகள் கழித்து தான் இரண்டாம் பவுத்தப் பேரவை வைசாலியில் கூடியது. புத்தர் அப்போது உயிருடன் இல்லை. அப்போது புத்த துறவிகளுக்கான விதிமுறைகளை மாற்றுவது என முடிbடுத்து பத்து மாற்றங்களை ஊடுருவிய பார்ப்பனர்கள் செய்தார்கள். புத்தர் கூறிய சங்கத்துக்கான விதிமுறைகளை கட்டாயம் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்பதும், தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களை தானமாகப் பெறக் கூடாது என்ற விதியை மாற்றி தானமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் மாற்றப்பட்ட திருத்தங்களில் அடங்கும்.

தலைமை தாங்கிய புத்த துறவி ரேவதர், இந்த திருத்தங்கள் புத்தரின் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஏற்க மறுத்தார். ‘வஜ்ஜியத் துறவிகள்’ என்று அழைக்கப்பட்ட பார்ப்பன துறவிகள் பேரவையி லிருந்து வெளியேறி தனிப் பிரிவாக செயல்படத் தொடங்கினர். வைசாலியில் புத்த மார்க்கம் இரண்டாகப் பிளவுபட்டது. அடுத்த 400 ஆண்டுகளில் பவுத்தம் 108 பிரிவுகளாக சிதறியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் 18 பவுத்தப் பிரிவுகள் பற்றிய குறிப்புகள் மட்டும் இருக்கின்றன. இதில் மகாயான பவுத்தப் பிரிவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திராவைச் சார்ந்த நாகார்ஜுனன் என்ற பார்ப்பனர் உருவாக்கினார். மகாயானப் பவுத்தப் பிபரிவு தோன்றியதற்குப் பிறகு ஏனைய பவுத்தப் பிரிவினரை அது விழுங்கிக் காணாமல் போகச் செய்துவிட்டது. நாகார்ஜூனன் முன் வைத்த ‘மாயாவாதம்’ என்ற தத்துவம் புத்தரின் பொருளிய நாத்திகத்துக்கு முற்றிலும் எதிரானது என்கிறார் ஆய்வாளர் தேவி சட்டோபாத்யாயா.

“உலகத்தை கடவுள் படைத்தார்; அல்லது கடவுளால் உலகம் படைக்கப்படவில்லை” என்ற முரண்பாட்டு தர்க்கத்தை நாகார்ஜூனன் குழப்பி, நாத்திகம் பேசும் பாவனையோடு தெளிவற்ற நிலைக்கு கொண்டு சென்று விடுவதை சட்டோபாத்யாயா சுட்டிக் காட்டுகிறார்.அவரது மொழியிலேயே கூற வேண்டுமானால், “நாகார்ஜூனரைப் பொறுத்தவரை முரண்பாட்டு விதி என்பது கழைக் கூத்தாடியின் வெற்று வித்தையைப் போன்றது. தனது மாயா ஜாலத்தின் மூலம் யாதொன்றையும் கணப்பொழு துக்கு நம் கண்களிலிருந்து மறைத்திடும் கழைக் கூத்தாடியைப்போல, புலனறிவுக்கு உட்படுகிற உண்மைகள் அனைத்தையும் நாகார்ஜூனன் சூன்யத்துக்குள் தள்ளி விடுகிறார். அவரின் இந்த மாயாவாதம் - தத்துவக் கண்ணோட்டத்தில் மிகவும் ஆபத்தானது” என்கிறார். புத்தரின் கருத்துகள் சிதைக்கப்பட்டது மட்டுமல்ல, புத்தமார்க்கமும் சிதைக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் புகலிடமாக புத்தர் காலத்தில் இருந்த புத்த மடங்கள் சொகுசு மடங் களாகி, புத்தரின்கோட்பாடுகள் அனைத்துக்கும் எதிரானதாக மாறிப் போனது என்கிறார் ஆய்வாளர் ரொமிலா தாப்பர். ஆதரவற்ற ஏழைகள் படும் துயரத்துக்கான காரணம் அவர்கள் முற்பிறவியில் செய்த தீமைகள் என்றும் நியாயப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பவுத்தத்தைப் பின்பற்றிய அசோகர் சமூகப் புரட்சியை முன்னெடுப்பதில் ஓரளவுதான் வெற்றி பெற்றார். பார்ப்பனர்களின் கொட்டங்கள் அசோகர் காலத்திலேயே தொடங்கி விட்டன. அவர்களை அசோகர் அடக்கத் தவறி விட்டார். அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்ற அவரது அன்பு உள்ளமே கொள்கைத் தோல்வியில் முடிந்தது என்கிறார் ஆய்வாளர் ரைஸ்டேவிட்ஸ். அசோகர் மறைந்த 40 ஆண்டுகளுக்குள் வரலாற்றின் பொற்காலம் என்று அம்பேத்கர் வர்ணிக்கும் மவுரிய ஆட்சியும் முடிவுக்கு வந்தது.

பவுத்த மதம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். வேதம் மீண்டும் அரியணையில் ஏற்றப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பார்ப்பனர்கள், அதற்கு கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் சிந்தனைகள் நூல்களை எல்லாம் முற்றாக அழிக்கும் வேலைகளைத் தொடங்கினர். சட்டோத்யாயா வேதனையுடன் இவ்வாறு கூறுகிறார்: “கடவுளை மறுத்த லோகாயதவாதிகளின் உன்னதமான படைப்பிலக்கியங்களை மூலப் படிகளை மீட்கவே முடியாதவாறு அழிக்கப்பட்டுவிட்டன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட சில பகுதிகள் தான் கிடைக்கின்றன. அவைகள்கூட லோகயாதத்தை எதிர்த்தவர்கள் நூல்களிலிருந்துதான் கண்டறிய முடிகிறது” என்கிறார்.

மவுரிய வம்சத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த புஷ்யமித்திர சுங்கன் என்ற சுங்க வம்சத்தைச் சார்ந்த பார்ப்பனன், அசோகர் நிறுவிய 84000 தூண்களை (புத்தர் பொன்மொழிகளைக் கொண்டவை) இடித்துத் தரைமட்டமாக்கினான். பார்ப்பனர்களும் களத்தில் இறங்கினார்கள். புத்த மடாலயங்களை தரைமட்டமாக்கி புத்த பிக்குகளையும் கொன்று ஒழித்தார்கள். இந்த கொடூரமான வரலாறுகளை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம்.

புத்த மதத்தில் ஊடுருவிய பார்ப்பனியம் அதை மெல்ல வலுவிலக்கச் செய்து கொண்டிருந்த சமூகச் சூழலில் கி.பி.8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கேரள பார்ப்பனர் சங்கரர், பார்ப்பனியத்துக்கு புத்துயிரூட்ட ‘அத்வைதம்’ என்ற தத்துவத்தை முன் வைத்தார். பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தி ‘நான்கு வர்ண’ சமூகத்தை மேலும் வலிமைப்படுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது. உலகத்தை ‘மாயை’, ‘உண்மையற்றது’ என்று கூறிய சங்கரரின் அத்வைதம், ‘புத்த மார்க்கத்தை’ மட்டும் ‘மாயை’ என்ற பார்வையில் பார்க்காமல் அதை அழித்து ஒழிப்பதில் சங்கரர் ஈவிரக்கமின்றி செயல்பட்டதை வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள். புத்தரின் கொள்கைகளைப் பரப்ப, ‘புத்த மடாலயங்கள்’ ஏற்படுத்தியதை அப்படியே பின்பற்றிய சங்கரர், வடக்கே பத்ரிநாத், மேற்கே துவாரகை, கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி என்ற மடங்களை நிறுவினார். (காஞ்சிபுரம் சங்கர மடம், உண்மையில் சங்கரர் நிறுவியதுஅல்ல. சங்கரர் நிறுவியதாகக் கூறிக் கொண்ட மோசடி மடம்) ‘சூத்திரர்கள் வேதம் படிக்கவோ, யாகம் செய்யவோ உரிமையில்லை’ என்றார் சங்கரர். மக்கள் தொகையில் பெரும் பான்மையாக இருந்த ‘சூத்திரர்கள்’ கல்வி அறிவற்றவர்களாகவே முடங்கவேண்டும் என்ற ‘காருண்யமிக்க’வர்களாகவே சங்கரர்கள் இருந்தார்கள்.

புத்த மார்க்கத்தில் ஊடுருவி, அதன் கொள்கை களை சிதைத்த பார்ப்பனர்கள், கடைசியில் புத்தரை ‘விஷ்ணு’வின் 10 அவதாரங்களில் 9ஆவது அவதாரமாக அறிவித்து விட்டனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட மச்ச புராண சுலோகம் விவரிக்கும் பத்து அவதாரங்களில் “ராமோ ரமகோ கிருஸ்ணங்கா - ‘புத்தா’ கல்கி இதிகா க்ரம்திஹ்” - என்று எழுதி புத்தரையும் அவதாரமாக்கி விட்டது.

வரலாற்றில் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் அழிக்கப்பட்டார்கள்; வீழ்த்தப் பட்டார்கள் இன்று வரை ‘உயிரோடு’ நிலைத்து நிற்பது பெரியார் மட்டும் தான்.

பெரியாரியத்தின் தூதுவர்களாக நாம் களத்தில் நிற்கிறோம்.

(நிறைவு)

Pin It