‘திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு’ 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக்கி சாதனைப் படைத்திருக்கிறது. இதில் 6 அர்ச்சகர்கள் ‘தலித்’துகள் என்பது கூடுதல் சிறப்பு. ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில் ‘பிராமணர்கள்’ மட்டுமே அர்ச்சகராக முடியும்; வேறு ‘பிரிவினர்’ அர்ச்சகராவது ஆகமங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் எதிரானது என்று தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் ஜாதித் திமிரோடு கூறி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி 1970ஆம் ஆண்டே தந்தை பெரியார் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள் நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று சட்டத்தை முடக்கினார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது இது குறித்து ஆராய நீதிபதி மகாராஜன் தலைமையில் 1979ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரை 1982இல் வெளியிடப்பட்டது.

ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக் காட்டி, அந்தக் குழுப் பரிந்துரை வழங்கியது. 2003ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம், இப்பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுக்க காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கர்ப்பகிரக நுழைவுப் போராட்டம் நடத்தி 1000 தோழர்கள் கைதானார்கள். பிறகு 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது, “உரிய கல்விப் பயிற்சி பெற்ற எந்த ‘இந்து’வையும் இந்து கோயில்களில் அர்ச்சகராககலாம்” என்ற அரசாணையை பிறப்பித்தது (23.05.2006). அதைத் தொடர்ந்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (14.07.2006). பழக்க வழக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த நியமனங்களை தடைப்படுத்த முடியாது. இதற்கேற்றவாறு இந்து அற நிலையத் துறையின் 55ஆவது பிரிவு ஏற்கெனவே திருத்தப்பட்டிருக்கிறது” என்று அந்த அவசர சட்டம் கூறியது. ஆளுநரின் அவசர சட்டத்துக்கு தமிழக அரசு சட்டமியற்றி ஒப்புதல் வழங்கியது (29.8.2006).

இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதற்கான பின்னணியில் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்த ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்தது. அது கேரளாவில் ஆதித்யன் என்ற நம்பூதிரி பார்ப்பனர் தொடர்ந்த வழக்கு. நம்பூதிரிப் பார்ப்பனர் மட்டுமே வழமையாக அர்ச்சகராக இருந்த ஒரு கேரள கோயிலில் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு (எ. ராஜேந்திர பாபு-துரைசாமி ராஜூ) இந்த வழக்கில் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை அளித்தனர்.

“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே அர்ச்சகராக வர முடியும் என்ற ஒரு பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு பழைய பழக்க வழக்கம் (Custom and Usage) என்று காட்டி அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையை கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள் கவுரம் சமூக சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது. அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர் குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அந்த ஜாதியின் பெற்றோர்களுக்கு பிறந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அத்யாவசியமானது அல்ல. அப்படி செய்வதற்கு அடிப்படையும் இல்லை” என்று உச்சநீதிமன்றம் கூறி ஆதித்யன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் சட்டத்தில் ‘பழக்க வழக்கம்’ என்ற பிரிவு நீக்கப்பட்டது.

இதே அடிப்படையில் கேரளாவில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் இப்போது நியமிக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில் ‘கேரள தேவஸ்வம் போர்டு’ கட்டுப்பாட்டில் உள்ள 1248 கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் தகுதி அடிப்படையில் நியமிக்கலாம் என்று மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இப்போது உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தேவஸ்வம்போர்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வுகளை நடத்தி 6 தலித் உள்ளிட்ட 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகராக நியமித்துள்ளது. ஆணையாளர் இராமராஜ பிரசாத் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளார். கேரள அரசின் இந்த ஜாதி ஒழிப்புப் புரட்சியை பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரிகள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாக சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். மனுவை தள்ளுபடி செய்தாலும் தீர்ப்பில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரே அர்ச்சகராக முடியும் என்று ஆகமங்கள் கூறுவதை நியாயப்படுத்திய உச்சநீதிமன்றம் இதைத் ‘தீண்டாமை’ யாகக் கருத முடியாது என்று கூறி (Agamas was not violation of the right to equality) மீண்டும் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்ற ‘கர்ப்பக்கிரக தீண்டாமையை’ உறுதிப்படுத்தியிருக்கிறது.

“கேரளத்திலுள்ள இந்துக் கோயில்களும், கடவுள்களும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக அரவணைக்கும்; தமிழ்நாட்டில் உள்ள ‘இந்து கோயில்களும், இந்து கடவுள்களும்’ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத எவரையும் ‘அர்ச்சகராக’ ஏற்றுக் கொள்ளாது!” என்ன விசித்திரம்! இதுதான் ஒற்றை ‘இந்து’ கலாச்சாரமா?

தமிழ்நாட்டைச் சார்ந்த பார்ப்பன எழுத்தாளர்கள் இப்போதும் ‘தி ஒயர்’ போன்ற இணையதளங்களில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை ‘பாசிசம்’, ‘இனவாதம்’ என்று எழுதிக் கொண்டிருக் கிறார்கள். அனைவருக்கும் பொதுவானவர் என்று கூறப்படும் கடவுளை நெருங்கவும் அர்ச்சனை செய்யவும் ஒரு இனத்துக்கு மட்டுமே உரிமை என்று கூறும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் இனவாதியா? அனைத்து ஜாதியினருக்கும் (பார்ப்பனர் உட்பட) உரிமை வேண்டும் என்று கேட்ட பெரியார் இனவாதியா? என்று கேட்க விரும்புகிறோம்.

கேரளா காட்டும் வழியில் தமிழகத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நிலையை உருவாக்க வேண்டும்!

Pin It