பாப்ரி மசூதியை இடித்து ‘கர சேவை’ நடத்திய சங் பரிவாரம் இப்போது அடுக்கடுக்காக மசூதிகளைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரியில் காசியில் உள்ள ஞானவாபி மசூதியைக் குறிவைத்தார்கள். அது சிவன் கோயிலை இடித்துக்கட்டிய மசூதி என்று 2020இல் இந்து அமைப்புகள் நீதிமன்றம் சென்றது. வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் இந்து தரப்பு வாதங்களை ஏற்றது. ஆணையர் ஆய்வுக்கு உத்தரவிட்டது. (அட்வகேட் கமிஷனர்) அது இந்து கோயில் தான் என்று ஆணையர் அறிக்கை தந்தார். அது நீரூற்று என்ற இஸ்லாமியர் தரப்பு வாதம் புறக்கணிக்கப்பட்டது. ஞானவாபி மசூதிக்குள் ‘சிவன்’ கோயில் இருந்ததாகக் கூறப்படும் குறிப்பிட்ட இடத்தை மசூதியிலிருந்து தனியாகப் பிரித்து சீல் வைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை ஆய்வு கோரப்பட்டது. ஒன்றிய ஆட்சி அனுமதித்தது. இஸ்லாமியர்கள் நீதிமன்றம் சென்றனர். நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூவர் அமர்வு தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி தந்தது. இது சட்டத்துக்கு எதிரான தீர்ப்பு. முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டிருந்த தலைமை நீதிபதி சந்திர சூட், ‘இந்துத்துவா வெறியாட்டத்துக்கு துணை நின்றார் என்பதை அம்பலப்படுத்தியத் தீர்ப்பு என்றே இதைக் கூற வேண்டும்.’
1991 வழிபடும் இடங்களுக்கான சட்டம் (Place Of Worship Special Provision Act 1991) வழிபாட்டு இடங்களை உறுதி செய்தது. அதன்படி 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து எந்தெந்த இடங்களில் கோயில், மசூதி, சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு இடங்கள் இருந்ததோ, அதை மாற்றக்கூடாது என்று அந்தச் சட்டம் கூறியது. அந்தச் சட்டத்தில் ஓட்டையைப் போட்டு மாபெரும் துரோகத்தைச் செய்தது நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒவ்வொரு மசூதியாக இந்துத்துவா சக்திகளால் குறிவைக்கப்படுகின்றன. தொடர்ந்து உ.பி. மாநிலம், சாம்பல் மாவட்டம் சந்தூரியில் உள்ள ‘ஷாஹி ஜமா மஸ்ஜித்’தை இடிக்க வேண்டும் என்றும் அங்கே சிவன் கோயில் இருந்தது என்றும் நீதிமன்றம் சென்றார்கள். மனுத்தாக்கல் செய்த அன்றே மாவட்ட நீதிமன்றம் வழக்கறிஞர் – அரசு அதிகாரிகள் – குழுவினரின் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இஸ்லாமிய தரப்பினரிடமிருந்து, நீதிமன்றம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உள்ளூர் முஸ்லீம்கள் எதிர்த்தனர். முதல்முறை ஆய்வில் எதிர்க்கவில்லை, இரண்டாம் முறையாகவும் ஆய்வுக்கு வந்த போது கலவரம் வெடித்தது. துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இப்போது உச்சநீதிமன்றம் தலையிட்டு ‘இந்துத்துவா’ தொடர் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.
தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா, சிவன் கோயில் என்று வழக்கு போட்டு தொல்லியல் ஆய்வுக்கு நீதிமன்ற ஒப்புதலையும் பெற்றுள்ளனர். இது பழமைவாய்ந்த உலகப் புகழ்பெற்ற புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. மசூதிகளை இந்துக் கோயில்களாக மாற்றியமைக்கும் மதவெறி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றங்கள் உடனே அனுமதிக்கின்றன. ஒன்றிய ஆட்சியின் தொல்லியல்துறை, உடனே வாசலில் வந்து நிற்கிறது.
இந்த நிலையில் இந்தியாவில் சிறுபான்மை மக்களை நசுக்கிவரும் ஒன்றிய ஆட்சி, வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்புக்குக் குரல் கொடுக்கிறது. சிறுபான்மையினர், எந்தப் பிரிவாக இருந்தாலும் ஒடுக்கப்படுவதை ஏற்கமுடியாது. ஆனால் அதற்கான தார்மீக உரிமையை மோடியின் பா.ஜ.க. ஆட்சி இழந்துவிட்டது. மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட வங்கதேச முன்னாள் அதிபர் ஹசீனாவுக்கு பா.ஜ.க. ஆட்சி அடைக்கலம் தந்துள்ளது. இது வங்கதேச மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. அடைக்கலம் தேடிவந்தவர் ‘இந்துக்களுக்காக’ இந்தியாவில் இருந்து குரல் கொடுப்பதும், வங்கதேச அரசைக் கண்டிப்பதும் வங்கதேசத்தின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டுள்ளது. மோடி ஆட்சி இதற்கு எப்படி அனுமதிக் கொடுத்தது? அண்டை நாடுகளின் உறவுகளை மதவாதக் கண்ணோட்டத்துடனே அணுகுவதால், மோடி ஆட்சி இந்த விலை கொடுக்க வேண்டியுள்ளது.
வங்கதேச இந்துக்களுக்காக அய்.நா.வில் புகார் அளிக்கும் பா.ஜ.க. ஆட்சி. இங்கே ஒவ்வொரு நாளும் வதைபடும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு என்ன பதில் கூறப் போகிறது?
- விடுதலை இராசேந்திரன்