சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்களின் சர்ச்சையும் சர்வதிகாரப் போக்கும், இன்று நேற்றா நடைபெறுகின்றது? பெரியபுராணக் காலத்தில் இருந்தே பேசப்பட்டு வருகிறது. நந்தன் தீயில் இறங்கி ஜோதியில் கலந்தார் என்கிறது அந்தப் புராணம். கோயில் உள்ளே சென்றவர் வெளியில் வரவில்லை. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இன்றும் நந்தன் உள்ளே சென்றதால் தீட்டுப்பட்டதாகச் சொல்லப்படும், தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டே காணப்படுவது மனித குலத்தின் அவமானச் சின்னம்.

brahmins 365கடந்த 2008-ஆம் ஆண்டு ஓதுவார் ஆறுமுகசாமி, சிற்றம்பலம் ஏறி தமிழில் தேவாரம் பாட முயற்சித்த போது, தீட்சிிதர்கள் அடித்து உதைத்துக் கோயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்தனர். அப்பொழுது கலைஞர் முதலமைச்சராக இருந்ததால், உடனே அரசாணை வெளியிட்டு சிற்றம்பலத்தில் தேவாரம் பாட அனுமதிக்கப்பட்டதுடன், உரிய மதிப்புடன் நடத்துவதையும் உறுதி செய்தார்.

இதற்கு முன்பு கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்பதை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றிருந்தனர். கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் 2-2-2009 அன்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றே கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வழிசெய்தார். தீட்சிிதர்கள் மேல் முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் சென்றனர் தீட்சிதர்கள்.

இந்நிலையில் 2011-இல் ஆட்சி மாறியது. அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் எந்த எதிர்வாதமும், விளக்கமும் அளிக்காமல் இருந்ததால் சந்தேகங்களும் கண்டங்களும் எழுந்தன. அதன் பிறகும் பேருக்குச் சில நிமிடங்கள் வாதிடப்பட்டதே ஒழிய உரிய பங்களிப்பு இல்லாததால், தீட்சிதர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்க வசதி செய்யப்பட்டது. இதனால் நாம் உரிமை இழக்க நேர்ந்தது.

இதற்குள் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் உள்ளது. அரசு கையில் எடுக்கும் முன் 2007-இல் ஆண்டு வருமானமாக கோயில் நிர்வாகம் காட்டியது ரூ. 37,000 தான். ஆனால் அரசு கையில் இருந்த பொழுது உண்மையான கணக்கு வெளிவந்தது. ஆண்டுக்கு ரூ.63,00,000 சராசரியாக வருமானம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் பிறகு, 2019-இல் கோயில் விதிமுறைக்கு மாறாக ஒரு திருமணம் ஆயிரம் கால் மண்டபத்தில் நடத்தப்பட்ட குற்றச்சாட்டில் சர்ச்சை எழுந்தது. இம்மண்டபத்தில் அதற்கு முன்பு வள்ளலார், கிருபானந்த வாரியார் ஆகியோர் நுழைவது தடுக்கப்பட்ட வரலாறு உண்டு. இம்மண்டபத்தின் புனிதம் கெட்டு விடும் என்பதே அந்த மறுப்புக்கான காரணம். அதே ஆண்டு மகனின் பிறந்தநாளுக்காகக் கோயிலுக்கு வந்தப் பெண், தங்களுக்கு அர்ச்சனை சரியான முறையில் செய்யக் கோரியதால், அவர் மகன் முன்னிலையில் அறையப்பட்டார்.

தற்போது ஒரு தீட்சிதர், பெண் ஒருவரைச் சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது. அதற்குள் அங்கு குவிந்த மற்ற தீட்ஷிதர்கள் அந்தப் பட்டியலினப் பெண்ணைச் சாதி பெயர் குறிப்பிட்டு திட்டவும் செய்துள்ளது பொது வெளியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பெயரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையினர் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. கோயிலில் இந்தத் தொடர் குளறுபடிகளின் அடிப்படையில், கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தலைவர்களும், மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழர்களையும், தமிழ் மொழியையும் பாகுபாட்டுடன் நடத்தும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து கோயிலை விடுவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் சட்ட வழியை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதால், இப்பொழுது சட்டமன்றத்தில் சட்டமியற்றி கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வழி ஏற்பட்டுள்ளது.

தமிழ் மானம் காக்க திமுக அரசு எப்பொழுதும் முன்னின்று இருக்கின்றது. இச்சிக்கலிலும் உரிய நடவடிக்கையைத் தக்க நேரத்தில் எடுக்க வேண்டும், தமிழர்களின் இழிநிலையைப் போக்க வேண்டும். தீட்சிதர்களின் சர்வாதிகாரத்திற்கு முற்றுபுள்ளி வைக்க, சிதம்பரம் நடராசர் கோயிலைத் தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு.

- மதிவாணன்

Pin It