இந்தியாவில் ஒற்றை மதவாத ஆட்சியைத் திணிக்கும் நோக்கத்தோடு செயல்படும் ஒன்றிய ஆட்சியின் அத்துமீறல்களுக்கு எதிராக திராவிட மாடல் ஆட்சி தான்‌ கொள்கைப் போராட்டம் நடத்துகிறது.

தொகுதி மறுவரையறை திட்டத்தைப் பயன்படுத்தி தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற எண்ணிக்கையைக் குறைக்கும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர்.

இப்போது மீண்டும் மாநில முதலமைச்சர்களுக்கு சட்டமன்றஉரிமையை மீட்கும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ஆளுநரின் அதிகாரப் பிடியில் இருந்து சட்டமன்ற உரிமையை மீட்டெடுக்கும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த உரிமைகளை ஒழிப்பதற்கு குறுக்கு வழியில் குடியரசுத் தலைவருக்கான 143-ஆவது அதிகாரத்தைப் பயன்படுத்த முன் வந்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. இதில் ஒன்றிய ஆட்சிக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது? ஏன் இதை குறுக்கு வழியில் சீர்குலைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்?

நாடாளுமன்றம் நிறைவேற்றுகிற மசோதாவுக்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்து விடுகிறார். பாஜக ஆட்சி செய்யும் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு உடனே அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதலைத் தந்து விடுகிறார்கள்.

ஆனால் பாஜக அல்லாத மாநில ஆட்சிகள் நிறைவேற்றுகின்ற மசோதாவுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி தனது கடமைகளைச் செய்ய முடியாமல் நியமிக்கப்படுகின்ற ஆளுநர்கள் சட்டமன்ற உரிமைகளை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது ஒரு ஜனநாயகத்திற்கோ அல்லது கூட்டாட்சித் தத்துவத்திற்கோ உகந்ததுதானா?

நீதிமன்றம் உயர்ந்ததா? சட்டமன்றம் உயர்ந்ததா? என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கவாய் ஒரு சரியான பதிலைக் கூறியிருக்கிறார். இரண்டையும் விட அரசியல் சட்டம் தான் உயர்ந்தது என்பது தான் அவரது பதில்.

அரசியல் சட்டம் வகுத்துள்ள கோட்பாடுகள் அதன் நோக்கங்கள் முறையாக பயன்படுத்தாதபோது நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு உரிமை உண்டு.

ஏற்கனவே தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனுக்கள் பல ஆண்டு காலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அதை சரி செய்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியரசுத் தலைவர் மாளிகையில் கருணை மனுகிடப்பில் இருந்தால் நீதிமன்றம் தலையிட்டு அதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற தீர்ப்புகள் வந்திருக்கின்றன.

உச்சநீதிமன்றம் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நீதிமன்றமே தனது தீர்ப்பில் தெளிவாக விளக்கி இருக்கிறது.

 * 2016 ஆம் ஆண்டு ஒன்றிய ஆட்சி பிப்ரவரி 4-ஆம் தேதி உள்துறை அமைச்சகம் வழியாக வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் " மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட மசோதாக்கள் மீது மூன்று மாதத்துக்குள் கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளது.

* அதே தேதியில் மாநில அரசுகளுக்கும் அலுவலகக் குறிப்பு ஒன்றை அனுப்பி உள்ளது. அதிலும் மசோதாக்கள் நிறைவேற்றத்திற்கு மூன்று மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

* "மாநில அரசுகளின் நலனில் அக்கறை கொண்டு மாநில அரசின் சட்டங்கள் மீது காலக்கெடுவுடன் முடிவெடுக்க அரசு அக்கறை கொண்டிருக்கிறது" என்று அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இதைச் சுட்டிக்காட்டி அதன் அடிப்படையிலேயே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். இதே ஒன்றிய அரசு தான் இப்போது குடியரசுத் தலைவர் வழியாக காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து கேள்விகளைக் கேட்க வைத்திருப்பது பச்சை சந்தர்ப்பவாதம்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் வழியாக பாஜகவே ஆட்சி செய்யத் துடிக்கிறது, என்பதுதான் குடியரசுத் தலைவர் வழியாக கேள்வி கேட்க வைத்திருக்கும் ஒன்றிய ஆட்சியின் நோக்கமாக இருக்கிறது. இதைவிட ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வேட்டு வைக்கின்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது.

குடியரசுத் தலைவர் 143 வது விதி எழுப்பும் கேள்விகளுக்கு நீதிமன்றம் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா சென்னையில் நடந்த விழா ஒன்றில் கூறியிருக்கிறார். அயோத்தியில் ராம ஜென்ம பூமி வழக்கில் இதே போல் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையைக் கேட்டது, ஆனால் உச்ச நீதிமன்றம் அதற்குப் பதில் அளிக்கவில்லை.

அரசியல் நிர்ணய சபையில் 1949 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் இது குறித்து விவாதம் நடந்தது எச் பி காமத் என்ற உறுப்பினர் இந்த பிரச்சனையை எழுப்பிய போது வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கர் இதை தெளிவுபடுத்தினார். "143 ஆவது பிரிவு எங்கும் குடியரசுத் தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை (The supreme court is not bound)"

அரசியல் சட்டத்தின் நோக்கத்தை ஒன்றிய ஆட்சி சிதைக்கிறது மதவாதத்துக்கும் ஜனநாயகப் படுகொலைக்கும் முறைக்கேடாகப் பயன்படுத்தத் துடிக்கும் இவர்கள் தான் "தேசத்து துரோகிகள்."

- விடுதலை இராசேந்திரன்