நம் மாநிலத் தலைநகரின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது பாண்டி பஜார் என்னும் பாண்டியனார் அங்காடி. பலருக்கு முகவரி தரும் அச்சாலை மற்றும் அங்காடிக்கு தன் பெயர் ஈந்தவர், ஊத்தாம்பட்டி புன்னைவன நாடார் அய்யநாடார் சோமசுந்தர சொக்கலிங்க வடிவுள்ள சற்குண சௌந்திர பாண்டியன்.
அன்றைய மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் 15-09-1893 ஆண்டு ஒருபெரும் நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிக் கல்வியை மதுரை ஜக்கிய கிறித்துவ உயர்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் சத்திரிய வித்தியாவிலும் நிறைவு செய்தார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இணை இணையர் கல்வி பெற சேர்ந்தது, பின் குடும்பப் பொறுப்பின் காரணமாக இடையிலேயே கைவிட்டார்.சமுகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அதற்கு எதிராக குரல் கொடுத்ததோடு போராடவும் செய்து, அதில் வெற்றியும் கண்டார். பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், புனிதக் கயிறு புறக்கணிப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணத்தை மக்களிடம் வலியுறுத்தினார்.
ஆணும் பெண்ணும் சரிசமம், ஆணுக்கு உள்ள அத்தனை வாய்ப்புகளும் பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பெண்ணுரிமை, பெண்கல்வி, விதவை மறுமணம், பெண்களுக்கு ஓட்டுரிமை மற்றும் சொத்துரிமை போன்ற செயல்பாடுகளில் முனைப்பு காட்டி வெற்றியும் பெற்றார்.
இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு பெற்று தலைமையேற்று வழிநடத்தியதற்கு பெரியாரால் தமிழர் தளபதி என வாழ்த்தப்பட்டார். பெரியார் தான் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பை சௌந்திரபாண்டியார்க்கு வழங்கி கௌரவித்தார். மேலும் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு சட்டமேதை அம்பேத்கர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து பெருமைப்படுத்தினார்.
நீதிக்கட்சி என்னும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 28 வயதில் சென்னை மாகாண உறுப்பினராக 1921 ஆம் ஆண்டு முதல் 1936 வரை தொடர்ந்து பணியாற்றினார். ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த தண்டவரி என்னும் திமிர்வரியை முழுமையாக ஒழித்துக்கட்டினார். மனித மாண்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது இல்லை என சமூகநீதியை நிலைநாட்டிட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தன் சார்ந்த சமூகம் மட்டுமன்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கும் அவர்களின் சமூக மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டார். அவர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்.
1921-1930 வரை உள்ள காலத்தில் அரசுக் கொறடாவாக பதவி வகித்தார். மேலும் 1928-1930 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக் கழகத்தின் மற்றும் 1943-1947 மதுரை மாவட்ட ஆட்சியில் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்ற பெருமை பெற்றார். இக்காலகட்டத்தில் தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள கிராமங்களில் பள்ளிகளைத் திறக்க ஆணிவேராக இருந்தார்.
தன் சார்ந்த சமூகத்தின் மிக முக்கிய அங்கமாகத் திகழ்ந்தவர், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் துணைத் தலைவராக 26 ஆண்டுகளாய் பொறுப்பு வகித்து திறம்பட செயலாற்றினார். நாடார் வங்கி என்னும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி உருவாகக் காரணமாக இருந்தவர் அதன் இயக்குனராக திறம்பட செயலாற்றினார். நாடார் மகாஜன சங்கத்தின் முலம் கல்லூரிகளும், பள்ளிகளும் உருவாக ஊன்றுகோலாக இருந்தவர். நாடார் அச்சகம் தொடங்கக் காரணமாக இருந்தார்.
மரபார்ந்த வணிக குடும்பத்தில் பிறந்தவர், சேமிப்பு வழக்கத்தை மேம்படுத்த சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியன் சர்கார் ஆயுள் காப்புக் கழகம் என்னும் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். பின்னாளில் இந்நிறுவனம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தோடு இணைக்கப்பட்டது. பின்பு மதுரையை தலைமையிடமாகக் கொண்டு அன்னை இந்திய ஆயுள் காப்புக் கழகம் ஒன்றை நிறுவினார்.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் சர்க்கரைத் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவதியுற்றபோது தன் நண்பன் பி.டி.ராஜனுடன் இணைந்து இந்தியாவின் மிகப் பெரிய மதுரை சர்க்கரை ஆலையைத் தொடங்கினார். அந்த புதிய இடத்திற்கு இவர்கள் பெயரை இணைத்து பாண்டியராஜபுரம் என கி.ஆ.பெ விசுவநாதன் அவர்கள் பெயர் சூட்டினார்.
நாடு விடுதலை அடந்த பின் கூட்டுறவு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பட்டிவீரன்பட்டியில் காஃபி பதனிடும் கூட்டுறவுத் தொழிந்சாலையை நிறுவினார். இன்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலையாக அது வளர்ந்து நிற்கிறது.
மேலும் பட்டிவீரன்பட்டியில் கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம், கூட்டுறவு பண்டகச்சாலை நிறுவினார். ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்றிலிருந்து காஃபி போர்டு தலைவராகப் பொறுப்பேற்று பல சாதனைகளை நிகழத்தியதுடன் இடைத்தரகர்களை ஒழித்து நேரடி விற்பனை மூலம் விவசாயிகளுக்கு அதிக வருமானம் பெற வழி வகை செய்தார்.
தமிழகம் மட்டுமன்றி மைசூரிலும் 500 ஏக்கர் நிலத்தில் அசோகப் பண்ணை என்னும் பெயரில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்து நெல், கரும்பு, நிலக்கடலை ஆகியவற்றிற்கான அரசின் பாராட்டுப் பரிசு மற்றும் பதக்கத்தையும் பெற்றார். 1943-ல் தென்னிந்திய ஏலக்காய விவசாய சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இறுதிக் காலம் வரை பதவி வகித்தார்.
அன்றைய காலக்கட்டத்தில் அச்சுறுத்தலாக இருந்த கொள்ளையர்களை நேரடியாக மோதி வீழ்த்தி வணிகர்களுக்கு பாதுகாப்பு அரண் ஆகத் திகழ்ந்ததால் 'அச்சம் அகற்றிய அண்ணல்' என்று மக்களால் அழைக்கப்பட்டார். பிரிட்டிஷ் காரரின் மிக உயரிய சர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்து நம் தேசப்பற்றை வெளிப்படுத்தினார்.
பாண்டியனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருதுநகரின் பிரதான சாலைக்கும், சென்னை தியாகராய நகரின் முக்கிய தெருவிற்கும், கோபால சமுத்திரத்தில் உள்ள பாலத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை அயனாவரத்தில் அண்ணாரது பெயரில் மேல்நிலைப்பள்ளியும் மற்றும் தமிழகம் முழுவதும் பல வணிக வளாகங்களும், கல்லூரி வளாகங்களும் நினைவு நுழைவாயிலும் படிப்பகமும் நிறுவப்பட்டிருக்கிறது.
தன் சமூகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவர் சுயமரியாதை இயக்கத் தலைவர், சமூக சீத்திருத்தவாதி, அச்சம் அரியா அடலேறு, கல்வியின் காவலர், அண்ணல் என்ற புகழ் மொழியோடு அனைத்து மக்களாலும் பாராட்டப் பெற்றார்.
மேலும் கலிபோர்னிய பல்கலைக்கழக அறிஞர்களாலும், ஜரோப்பிய எழுத்தாளர்களாலும் இவரது புகழ் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. வரலாறு சான்று உடையவர்களை விட சாதனையாளர்களுக்கே இடம் கொடுக்கின்றது.
- முனைவர் மு.ஜோதிமுனியாண்டி