விஜய் தொலைக்காட்சி நடத்திய 'நீயா நானா நிகழ்ச்சியில்' போடி நாயக்கனூரைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி 'காலனி' என்ற சொல் எப்படி காயப்படுத்துகிறது என்ற வேதனையை உருக்கமுடன் பேசினார். அடுத்த இரண்டு நாட்களில், தமிழ்நாடு முதல்வர் சட்டமன்றத்தில் இனி அரசுப் பதிவேடுகளில் 'காலனி' என்ற சொல் நீக்கப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த வாரம் வெளிவந்துள்ள ஆனந்த விகடன் வார ஏடு வார்த்தையை நீக்கி விட்டால் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா? என்று தமிழ்நாடு அரசை கடுமையாக் கண்டித்து தலையங்கம் தீட்டி இருக்கிறது. ஜாதி ஒழிப்புக் களத்தில் குறியீட்டு ஒழிப்புகளும் ஒரு தேவைதான்; ஜாதி ஒழிப்புக்கு மந்திரக்கோல் எதுவும் கிடையாது.பல்வேறு களங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற வேண்டும். ஜாதி தீண்டாமைகளை முற்றிலும் ஒழித்து விடாமல் இப்படி பெயரை மட்டும் மாற்றுவது சரியா என்று கேட்கும் கேள்விகளில் திமுக எதிர்ப்பு என்ற உள்நோக்கத்தைத் தவிர கொள்கைப் பார்வை ஏதும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசும் நிர்வாகமும் ஜாதிய மனநிலையிலேயே செயல்படுவதாக தடித்த வார்த்தைகளால் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது; பரவாயில்லை, ஆனந்த விகடன் ஜாதியை எதிர்த்து எழுதுவதற்கு ஒரு வாய்ப்பையாவது இந்த அறிவிப்பு கொடுத்திருக்கிறது என்பதற்காக நாம் பாராட்டலாம், அதே நேரத்தில் இதே தேதியிட்ட‌ ஆனந்த விகடன் பத்திரிகையில் காஞ்சி சங்கர மடத்தின் புதிய சங்கராச்சாரியையும் காஞ்சி மடத்தின் பெருமையையும் பாராட்டி மகிழ்ந்து கொண்டாடி இருக்கிறது. ஜாதியையும் தீண்டாமையையும் மடத்தின் கொள்கையாகவே அறிவித்திருக்கும் மடம் அது; இரண்டு நாட்களுக்கு முன் கூட அந்த மடத்தின் நிர்வாகி மடத்தின் மரபுப்படி எவரையும் தொட்டு பேசக்கூடாது என்று பேட்டி அளித்திருக்கிறார்.

தீண்டாமை ஷேமகரமானது என்று கூறியவர் மகா பெரியவர் சந்திர சேகரேந்திர சங்கராச்சாரி,விடை பெற்று இருக்கிற சங்கராச்சாரி விஜயேந்திரன் பெங்களூர் பிராமண சங்க மாநாட்டில் பிராமணர்கள் தனி குடியிருப்பில் தான் வாழ வேண்டும் பிற ஜாதியினருடன் கலந்து வாழக்கூடாது என்று வெளிப்படையாக பேசி அது டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளில் வெளிவந்து இருக்கிறது. அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகம் இது ஒரு இன ஒதுக்கல் குற்றம் என்று நடவடிக்கை கோரி தமிழ்நாடு முழுதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பகிரங்கமாக ஜாதி தீண்டாமையை செயல்படுத்தி வரும் பார்ப்பன மடத்தின் பெருமையை பேசிக்கொண்டு தலையங்கத்தில் மட்டும் ஜாதி தீண்டாமை ஒழிப்பு வீரர்களைப் போல் நாடகம் நடத்துகிறது விகடன். இவர்களின் நோக்கம் ஜாதி தீண்டாமை ஒழிப்பு அல்ல மாறாக திராவிட மாடல் ஆட்சியை எந்த ஆயுதத்தை எடுத்தாவது வீழ்த்தியாக வேண்டும் ஆவேசம்தான்!.

- விடுதலை இராசேந்திரன்