பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு

21.06.1925இல் பிறந்து 06.04.2021இல் மறைவு வரை 95¾ ஆண்டுகள் வாழ்ந்த தோழர் வே. ஆனைமுத்து, 1947 முதல் 74 ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கச் சிந்தனைகளால், எழுதியவற்றால், பேசியவற்றால், செயல்பாடுகளால் சாதித்தவை பல பல.

21.06.1925இல் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்ட புரத்திற்கு அருகில் முருக்கன்குடி எனும் சிற்றூரில் ஓர் எளிய உழவர் குடியில் பிறந்தார் தோழர் வே. ஆனைமுத்து. 1944இல் பெரியாரின் சொற்பொழிவு களைக் கேட்டு அப்போது முதல் பெரியாரின் தன்மானக் கொள்கை யாளர் ஆனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘இடைநிலை’ வரைக் கல்வி கற்ற தோழர் ஆனைமுத்து திராவிடர் கழகப் பணியை முழு நேரமும் மேற்கொள் வதற்காக தென்னார்க்காடு ஒழுங்கு முறை விற்பனைச் சங்கத்தில் 1952 முதல் ஏற்றிருந்தப் பணியை 1956இல் துறந்தார். அப்போது அவருடைய அகவை 30 ஆகும். 22.08.1954இல் தம் 29ஆம் அகவையில் சுசீலா அவர்களை மணந்தார்.

பெரியாரின் கட்டளையை ஏற்று வருணாசிரமத்தை -சாதியமைப்பைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 13(3) (a), (b), பிரிவு 25(1), பிரிவு 372(1)(b) ஆகியவற்றை எரித்துவிட்டுச் சிறைச் சென்ற 3000 தோழர்களுள் ஒருவர் ஆனைமுத்து. இவர் தமது 32 அகவையில், 2 அகவையில் ஒரு பெண் குழந்தைக்கும், 9 மாதத்தில் ஓர் ஆண் குழந்தைக்கும் தந்தை என்ற நிலையில் 18 மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையிலும் திருச்சி சிறையிலும் தண்டனையைக் கழித்தார்.

1960இல் திருச்சியில் குடியமர்ந்த வே.ஆ. 1962 முதல் 1973 வரை பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். இவரது முன் முயற்சியால் 1970இல் திருச்சியில் ‘சிந்தனையாளர் கழகம்’ என்ற பெயரில் பதிவு செய்யப் பெற்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது. இதனைப் பெரியார் 07.03.1970இல் தொடங்கி வைத்தார். பொறியாளர் கு.ம.சுப்பிரமணியன் (1935-2020) அதன் தலைவர்; வே. ஆனைமுத்து அதன் செயலாளர்.

பெரியாரின் தெரிந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களையும் பேச்சுக்களையும் தொகுத்து “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” (Thoughts of Periyar E.V.R.) என்ற பெயரில் இராயல் அளவில் 2104 பக்கங்கள், 3 தொகுதிகளாகப் பதிப்பித்தார். அந்நூல் 01.07.1974 அன்று திருச்சியில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்வரிய பணிக்குத் தோழர் வே.ஆனைமுத்து செலுத்திய உழைப்பு அளவிடக்கரியதாகும். பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனை கள் வெளிவந்த பின்னர்தான் பெரியார் இயக்கத்தின் புறத்தேயும் அகத்தேயும் உள்ள அறிவாளர்கள், ஆய்வாளர்கள் பெரியார் சிந்தனை களின் செறிவு, நுட்பம், பரப்பு, ஆழம், தீவிரம் ஆகிய முழு பரிமாணங் களையும் அறிய வாய்ப்புக் கிடைக் கப் பெற்றது. பெரியார் நாத்திகர், ஆதிக்கப் பார்ப்பன எதிர்ப்பாளர், பெண்ணுரிமைப் பேசியவர் மட்டு மல்லர், அவர் ஒரு மாபெரும் சிந்தனைப் பேராறு என்பது உணரப் பட்டது. இத்தொகுப்பில் கூறியது கூறல் (Repetition) தவிர்க்கப் பட்டுள்ளது. இத்தொகுப்பு நூல் தான் “பெரியாரியல்” என்பது ஒரு மெய்யியல் என நிறுவிட முதல் அடிப்படை யாக அமைந்தது. 1974 பதிப்பில் விடுபட்ட வற்றுள் முதன்மையானவற்றைத் தெரிந்தெடுத்துச் சேர்த்து 9300 பக்கங்களில் 20 தொகுதிகளாகத் தொகுத்து, பகுத்து 2009இல் பதிப்பித்தார், வே. ஆனைமுத்து. சமுதாயம், இயக்கங்கள், அரசியல், மதமும் கடவுளும், தத்துவம், அறிவு வளர்ச்சி, கலைகள், கிளர்ச்சிகள் என 13 பகுதிகளாகவும் 73 தலைப்புகளிலும் மேலும் பல உள் தலைப்புகளுடனும் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டுப் பதிப்பிலும் 2104 பக்கங்கள் எண் தொடர்ச்சியாகத் தரப்பட்டுள்ளது; 2009ஆம் ஆண்டுப் பதிப்பிலும் 9300 பக்கங்களுக்கும் தொடர் எண் தரப்பட்டுள்ளது. நூலில் வரும் முக்கியப் பெயர்கள், நிகழ்வுகள் பற்றி படிப்போர் புரிந்துகொள்வதற்காக அடிக்குறிப்பில் சிறு விளக்கம் தரப்பட்டுள்ளது. 73 தலைப்புகளுக்கும் ஒவ்வொரு தலைப்பின் இறுதியிலும் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பெரியாரியலை ஒரு மெய்யியலாக நிலைநாட்டிட தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்தவர், உழைத்தவர் தோழர் வே. ஆனைமுத்து.

15.01.1949, 16.01.1949இல் பெரியார் சென்னையில் திருக்குறள் மாநாடு, தமிழர் நெறி விளக்க மாநாடு நடத்தினார். அதன் தாக்கத்தினால் 1950இல் தனது அகவை 25இல் ஆனைமுத்துவும் ஆசிரியர் ந. கணபதியும் இணைந்து திருக்குறளார் வீ.முனிசாமியை ஆசிரியராகக் கொண்டு “குறள்மலர்” எனும் கிழமை இதழை நடத்தினர். 1956இல் வே.ஆ. தாம் ஆற்றி வந்த அரசுசார் பணியைத் துறந்துவிட்டதால், 11.01.1957இல் “குறள்முரசு” எனும் கிழமை இதழைத் தம் சொந்தப் பொறுப்பில் நடத்தினார். இவ்விதழ்களில் வே.ஆ. எழுதியக் கட்டுரைகள் பெரியார், குத்தூசியார் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தன. வே.ஆ. எழுதி, குறள் முரசில் வெளிவந்த கட்டுரைகள் ‘விடுதலை’இல் வெளியிடப்பட்டன.

‘சிந்தனையாளன்’ எனும் கிழமை இதழை 17.08.1974இல் திருச்சியில் தொடங்கி, தாமே ஆசிரிய ராகவும் வெளியீட்டாளராகவும் இருந்து நடத்தினார். இவர் 16.11.1975இல் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 08.08.1976இல் “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்ற அமைப்பை இவருடன் ஒத்தக் கருத்தினர்களான சேலம் அ. சித்தையன், சீர்காழி மா. முத்துச்சாமி, அரியலூர் ஆ.செ. தங்கவேலு, வீரானந்தபுரம் ந.கணபதி, தக்கோலம் கா.ந.ஜலநாதன் போன்றவர்கள் துணையுடன் தொடங்கினார். இக் கழகமே 13.08.1988 முதல் “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” எனப் பெயர் மாற்றம் அடைந்தது.

சிந்தனையாளன் இதழ் 1982 திசம்பர் முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கிழமை இதழாகச் சென்னையில் இருந்து வெளியிடப் பட்டது. கிழமை இதழான சிந்தனையாளன் சில ஆண்டுகள் மாதமிருமுறை வெளியீடாகவும் பின் மாத இதழாகவும் தோழர் வே.ஆ. அவர்கள் இவ்விதழில் 1974 முதல் 2020 இறுதி வரை 45 ஆண்டுகளாக அவர் எழுதிய கருத்துக் கருவூலம் ஏராளம்.

1994 அக்டோபரில் தொடங்கிய “பெரியார் ஊழி” (Periyar Era) ஆங்கில மாத இதழ் 15 ஆண்டுகள் தோழர் வே.ஆனைமுத்து அவர்களை ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் கொண்டு வெளிவந்தது. இவ்விதழில் ஈழத்தமிழர் சிக்கல்கள் குறித்த செய்திகள் முதன்மையளிக்கப்பட்டு வந்தது. 1981 முதல் ஈழம் பற்றியச் செய்திகளில் அதிகம் நாட்டம் கொண்ட தோழர் வே.ஆ. 27.05.2005 முதல் 26.06.2025 வரை இலங்கைக்குச் சென்று வந்தார். முதல் 14 நாள்கள் ஈழத்திலும் அடுத்த 14 நாள்கள் மலையகப் பகுதி களிலும் சுற்றுப்பயணம் செய்தார். 2 நாள்கள் கொழும்பில் செலவிட்டார். எதையும் நுட்பமாக ஆய்வுக் கண்ணோட் டத்தில் அணுகும் தோழர் வே.ஆ.அங்கு நாம் கண்டறிந்தவற்றை “தமிழீழத் தமிழரை, இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கள்!” என்ற பெயரில் 256 பக்கங்கள் கொண்ட நூலாக்கி 17.09.2005இல் வெளியிட்டார்.

அறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் 1947 முதல் 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிய ஆய்வுக் கட்டு ரைகள் தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பொதுவுடை மைவாதிகளும் பெரியார் கொள்கைகளும், வகுப்புரிமைப் போராட்டம் ஏன்?, இந்திய அரசியல் சட்டம் ஒரு மோசடி, நாத்திகர் போர்வாள் ஆகிய அய்ந்து நூல்கள் 1980இல் வெளியிடப்பட்டன. இந்த 5 நூல்களும் உள்ளடங்கிய 16 நூல்கள் “திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம்” என்ற பெயரில் 13.10.2012 அன்று சூலூரில் வெளியிடப்பட்டன. இந்நூல்கள் பெரியார் சிந்தனைகளுக்குச் செழுமை சேர்க்கும் தன்மையன.

இவற்றுடன் பெரியார் 1912 முதல் 1973 வரை மேற்கொண்ட பயணங்களின் விவரங்களை 454 பக்கங்களில் “பெரியார் ஈ.வெ.ரா.பயணக் காலக் கண்ணாடி Periyar E.V.R.Detailed Chronology 1912­-1973)” நூலாகப் பதிப்பித்தார். இது தோழர் வே.ஆ.வின் சிறப்பு வாய்ந்த பணியாகும்.

இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும், பிற்படுத் தப்பட்ட மக்கள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பின ராகவும் விளங்கிய பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) தலைமையில் அப்போதையத் தலைமை அமைச்சர் மொரார்சி தேசாயால் 01.01.1979இல் அமைக்கப்பட மூல காரணர் தோழர் வே. ஆனைமுத்து ஆவார். 31.12.1980இல் மண்டல் ஆணையம் அளித்தப் பரிந்துரைப்படி தான் ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர், அலுவலர்கள் பணியமர்த்தத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட 13.08.1990இல் வி.பி. சிங் ஆணை பிறப்பித்தார்.

ஒன்றிய அரசால் 29.01.1953இல் காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம், அதன் பரிந்துரை அறிக்கையை 30.03.1955இல் பிரதமர் சவகர்லால் நேருவிடம் அளித்தது. அந்த அறிக்கை பரிந்துரைத்ததன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு காலாவதியாக்கப்பட்டது.

காகா கலேல்கர் ஆணையம் அளித்த பரிந்துரை அறிக்கைக்கு நேர்ந்த கதி, மண்டல் ஆணையப் பரிந்துரை அறிக்கைக்கு நேர விடக் கூடாது என்ற கவலையில் தோழர் வே.ஆ. அவ்வறிக்கை அப்போதைய உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் அவர்களால் 26.01.1982 அன்று மக்களவையில் வெளியிடப்படுகின்ற வரை ஓயாது செயல்பட்டார். சரண் சிங் பிரதமராக இருந்த போது புது தில்லியில் அவரது வீட்டின் மறியல் போராட்டம், பின்னர் அகில இந்திய வானொலி நிலையம் முன் மறியல் செய்ததில் 1773 பேர் கைது செய்யப்பட்டு 15.11.1979 முதல் 01.12.1979 வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

14.01.1980இல் இந்திரா பிரதமரான பின் 26.01.1982 அன்று மண்டல் அறிக்கைப் பரிந்துரைப்படி 27 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கையை செயல்படுத்திட வலியுறுத்தி அவரவர் வீடுகளின்மீது கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் அறிவித்ததால், 25.01.1982 அன்று உள்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு புதுதில்லி வருமாறு வே. ஆனைமுத்துவுக்கு அழைப்பு வந்தது. எனினும் பல ஊர்களில் 26.01.1982 அன்று கருப்புக் கொடி ஏற்றியதில் சில ஊர்களில் மட்டும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 1982க்குப்பின் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் “மண்டல் அறிக்கையை செயல்படுத்து” எனப் போராடினர்.

தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் தாதம்பட்டி எம். இராஜு மற்றும் சீர்காழி மா. முத்துச்சாமி இரு வரையும் உடன் அழைத்துக் கொண்டு 29.04.1978 முதல் 10.05.1978 முடிய 12 நாள்கள் புதுதில்லி உள்ளிட்ட வடமாநிலப் பயணம் மேற்கொண்டார். அப்போது பீகார் மாநில பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் தலைவரும் ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினருமான இராம் அவதேஷ் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி. மண்டல், விநாயக் பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் அறிமுகம் கிடைத்தது. 07.05.1978 அன்று முசாபர் நகரில் நடந்த உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப் பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைத்து தோழர் வே.ஆ. உரையாற்றினார். அடுத்த நாள் 08.05.1978 அன்று குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ் ரெட்டியைச் சந்தித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி விண்ணப்பம் ஒன்றினை அளித்தார். இதுவே மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதற்கான முதல் விதையாகும்.

24.06.1978 அன்று சென்னையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடத்தினார். அதனைத் தொடங்கி வைத்திட ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் தணிக்லால் மண்டலை வரவழைத்தார். அம்மாநாட்டில் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் பி. பசுவலிங்கப்பா உள்ளிட்ட ஆந்திர, கேரள மாநிலத்

தலைவர்கள் பங்கேற்றனர். இராம் அவதேஷ் சிங் முதலானோரும் கலந்து கொண்டனர். 19.08.1978இல் “அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் பேரவை”யை தோழர் வே.ஆ. உருவாக்கினார்.

இராம் அவதேஷ் சிங் அழைத்ததனால் தோழர் களுடன் பீகார் சென்ற வே.ஆ., 17.09.1978 அன்று பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தித் தொடர்ந்து 18.10.1978 வரை 32 நாள்கள் 32 மாவட்டங்களில் பெரியார்-இடஒதுக்கீட்டுப் பரப்புரையை மேற்கொண் டார். 19.10.1978 அன்று பாட்னாவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. விளைவாக பீகார் மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு செய்து முதலமைச்சர் கர்ப்பூரி தாகூர் 31.10.1978 அன்று ஆணை பிறப்பித்தார். 30 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருந்த பீகார் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இது சாதனை ஆகும்.

பெரியார் நூற்றாண்டு விழாவையும் இராம் மனோகர் லோகியாவின் 80ஆம் பிறந்த நாளையும் இணைத்து தில்லியில் 23.3.1979 அன்று பெரியார் சமஉரிமைக் கழகமும் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் கொண்டாட ஏற்பாடு செய்தார். அன்று பழைய தில்லி கோட்லா திடலிலிருந்து போட் கிளப் திடல் வரை சுமார் முப்பதாயிரம் பேர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. தோழர் வே. ஆனைமுத்து தலைமையில் போட் கிளப் திடலில் நடந்த விழாவில் அப்போதைய துணைத் தலைமையமைச்சர் பாபு செகசீவன்ராம் சிறப்புரை ஆற்றினார். பெரியார் இடஒதுக்கீடு தொடர்பாக எழுதிய, பேசிய சிலவற்றை இந்தியில் மொழிபெயர்த்த சிறு நூலை விழாவில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் இராஜ் நாராயணன் வெளியிட்டார்.

25.03.1979 அன்று பேரவையைச் சேர்ந்த 20 பேருடன் தலைமை அமைச்சர் மொரார்சி தேசாயைச் சந்தித்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வே.ஆ.வும் மற்றவர்களும் வலியுறுத்தினர். ஏப்ரல் 1978 முதல் மண்டல் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை 16.11.1992இல் நடைமுறைப்படுத்தப்படும் வரை மொரார்சி தேசாய், சரண் சிங், இந்திரா காந்தி, வி.பி. சிங், நரசிம்மராவ் என 5 தலைமையமைச்சர்கள் காலத்தில் தோழர் வே. ஆனைமுத்து மேற்கொண்ட முயற்சிகள், போராட்டங்கள் குறித்து “மண்டல் குழு பரிந்துரை - மக்கள் நாயக உரிமைப் போர்” என தனி நூலாகவே தோழர் வே.ஆ. எழுதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு 31 விழுக்காடு என்றிருந்ததை அ.தி.மு.க.

எம்.ஜி. இராமச்சந்திரன் முதல மைச்சராக இருந்த போது, 02.07.1979இல் ஆண்டு வரு மானம் ரூ.9000/-க்கு மேல் உள்ளவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது என உத்தரவிட்டார். அப்போது எல்லோரும் வருமான அளவுகோல் புகுத்தப்பட்டதை அகற்றிடக் கோரியபோது, தோழர் வே.ஆனைமுத்து வரு மான வரம்பு அகற்றப்படுவ துடன் 65 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 31 விழுக்காடாக உள்ள இடஒதுக் கீட்டை 60 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என அதற்கான

தரவுகளுடன் கோரிக்கை விண்ணப்பத்தினை 17.08.1979 இல் தமிழ்நாட்டு அரசுக்கு அளித்தார். அமைச்சராக இருந்த பண்ருட்டி எஸ். இராமச்சந்திரனிடம் இது பற்றி விரிவாக எடுத்துரைத்து, அவர் முதலமைச்சரிடம் கோரிக்கையின் நியாயத்தை விளக்கினார். 1980 சனவரியில் நடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்ததால் எம்.ஜி. இராமச் சந்திரன் அரசு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தி 01.02.1980இல் ஆணையிட்டது. இதுவும் ஆனைமுத்து அவர்களின் முயற்சி ஈட்டிய சாதனையாகும்.

தீர்வு காண வேண்டிய மக்கள் பிரச்சினைகள் பல இருந்த போதிலும் விகிதாசார இடப்பங்கீடு மற்றும் கூட்டரசியம் ஆகிய இரண்டை மட்டும் முதன்மை இலக்குகளாகக் கொண்டு செயல்படுவது என்று கட்சியின் தொடக்கத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இந்தியா இன்று ஒற்றை அதிகார மய்யமாகவும் ஒரே முற்றதிகார ஆட்சியாகவும் உள்ளது. எல்லா தேசிய மொழிகளும் இந்தியக் கூட்டரசின் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும். மொழி அடிப்படையில் அமைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில ஆட்சி மொழியே அம்மாநில எல்லைக்குள் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களிலும்  ஆட்சிமொழியாகக் கட்டாயம் இருக்க வேண்டும்.

நடுவண் அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அகற்றப்பட வேண்டும். அனைத்துத் துறைகளுக்கும் தேவையான அனைத்து நிலை அலுவலர்களை, பணியாளர்களைத் தேர்வு செய்யும் முற்றதிகாரம் அந்தந்த மாநிலப் பணியாளர் தேர்வாணையங் களுக்கே இருக்க வேண்டும். தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்களுக்குத் தனித்தனி அரசமைப்புச் சட்டங்கள் வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் ஒரு தேசியக் கொடியைக் கொண்டிருக்க வேண்டும்; தனக்கான பிரதேசத் தனிப்டையைக் (Territorial Army) கொண்டிருக்க வேண்டும்.

‘உண்மையான சமதர்ம, மதச்சார்பற்ற, சனநாயகத் தன்னாட்சிக் குடியரசுகள் இணைந்த கூட்டமைப்பாக இந்தியாவை மறுகட்டமைப்புச் செய்வோம்’ என்பதே தோழர் ஆனைமுத்து முன்வைத்த கொள்கை முழக்க மாகும்.

இந்த நோக்கத்திற்காக மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய மாநிலங்களில் ஒத்த கொள்கையுடைய அமைப்புகளுடன் சில முறை அங்கு சென்று உரை யாடியுள்ளார். 1986 நவம்பரில் நடந்த ‘பன்மைத்து வத்திற்கு எதிரான மதவாதம்’ என்ற மாநாட்டில் சன நாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும், பன்மைத்துவத்திற்கும் அச்சுறுத்தலாக இந்திய ஒன்றிய அரசு உள்ளது என உரையாற்றினார். 1987 ஏப்ரலில் லூதியானாவிலும் 1987 செப்டம்பரில் ஜலந்தரிலும் நடைபெற்ற மாநாடு களில் பங்கேற்று ஆற்றிய உரைகளின் தொகுப்பை “அழிவின் விளிம்பில் கூட்டரசியம்” (Federation in Peril) எனும் 48 பக்கங்கள் கொண்ட நூலாக 1988 இல் வெளியிட்டார்.

மேலும் தோழர் வே. ஆனைமுத்து அவர்களின் பங்களிப்புகளில் மார்க்சியத்தையும் பெரியாரியத்தை இசைவுப்படுத்தி நிறுவியது முதன்மையானதாகும்.

பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே. ஆனைமுத்து நுண்ணறிவாலும், எண்ணத்தாலும், எழுத்தாலும், செயலாலும் ஆற்றியவை பல பல. அவற்றுள் சில அவரது நூறாவது பிறந்த நாளான 21.06.2024இல் நினைவுகூரப்பட்டுள்ளது.

தோழர் வே. ஆனைமுத்துவின் புகழ் ஓங்குக!

- சா.குப்பன்