கழகத் தோழர்கள் கள ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், வடகாடு கிராமத்தில் அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 'அண்ணா கைப்பந்துக் கழகம்' என்ற பெயரில் விளையாட்டுத் திடல் அமைத்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி இடத்தில் தலித் மக்கள் பொங்கல் விழா நடத்துவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முயற்சித்த போது, இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மேற்படி இடம் பட்டியல் இன மக்களுக்குச் சொந்தமானது என்ற தீர்ப்பைப் பெற்றுள்ளனர். அண்ணா கைப்பந்து கழகத்தினர் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட் களுக்கு முன்பாக மேற்படி அடைக்கலங் காத்தார் அய்யனார் கோவிலில் பொங்கல் வைப்பதற்காக தலித் மக்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். அப்போது பிற சமூகத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், எந்தக் குற்றமும் செய்யாத பட்டியலின மக்களைக் கைது செய்து காவல் துறையினர் அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.
இப்படியாக, வடகாடு பகுதியில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து பகைமைப் போக்கு இருந்து வந்துள்ளது. இதனை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், வடகாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த திங்கள்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவிழாவில் பட்டியலின மக்கள் குறிப்பிட்ட தூரம் வரை வெண்குடை ஏந்தி வருவது வழக்கமாக இருந்துள்ளது. திங்கள்கிழமை நடை பெற்ற தேர்த் திருவிழாவில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி பட்டியலின மக்கள் வந்துவிட்டதாக சில ஜாதி வெறியர்கள் தகராறு செய்துள்ளனர்.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், தலித் குடியிருப்புகளுக்குச் சென்று ஜாதிவெறியர்கள் வீட்டைக் கொளுத்தியும், அடித்து நொறுக்கியும் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுமுள்ளனர். இதில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஒரு இரு சக்கர வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இரண்டு கார்கள் சேதமாக்கப் பட்டுள்ளன. 7 வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. ஒரு வீடு எரித்து சாம்பலாக்கப் பட்டுள்ளது. இதில் படுகாயடைந்த 6 பெண்கள் உட்பட 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கொடுத்துள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக உள்ளது. ஏதோ, பெட்ரோல் பங்கில் குடி போதையில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு போல சித்தரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பல இடங்களில் பட்டியல் இன மக்களுக்கு எதிராகப் செயல்படும் போக்கையே காவல்துறையினர் இதிலும் காட்டியுள்ளனர்.
எனவே காவல்துறையினர் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு தாக்குதலில் உண்மையில் ஈடுபட்ட ஜாதி வெறியர்கள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
புதிதாக களத்துக்கு வந்துள்ள இந்துத்துவ சிந்தனை கொண்ட ஒரு ஜாதி சங்கத் தலைவரின் பெரும்பங்கு குறித்தும் பரவலான பேச்சுகள் உள்ளன. இது குறித்தும் விரிவாக விசாரித்து உண்மையைக் கண்டறிவது எதிர்காலத்தில் இவ்வாறான சமூக மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவக்கூடும்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை புதுக்கோட்டை மருத்துவமனையிலும், தாக்குதல் நடத்தப்பட்ட வடகாட்டிலும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் பெரியார் முத்து, இளங்கோவன் மற்றும் பூபதி கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் விசிக, பொதுவுடைமை இயக்கங்கள் தலித் இயக்கங்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கின்றன. திராவிடர் விடுதலைக் கழகமும் அவர்களோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் நீதி கிடைக்கவும் துணை நிற்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.