இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசி இருக்கிறார்.

ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 சமஸ்கிருத்துக்கு மட்டுமே அழுத்தத்தையும் முன்னுரிமையும் தருகிறது. வணிகம், வானவியல், தத்துவம் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுடன் சமஸ்கிருதத் தொடர்புகளை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை ஆதரித்து கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவினர் இதில் இந்தி இல்லை என்று வாதிட்டனர். தாய்மொழி தான் வலியுறுத்தப்படுகிறது என்றும் இதற்காக மோடி இந்தி குறித்த சொற்றொடர்களை நீக்கி விட்டார் என்றும் பேசினார்கள்.

நடைமுறையில் மும்மொழி திட்டம் என்பது இந்தித் திணிப்புக்கே வழிவகுக்கும் என்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அமித்ஷாவின் இந்த பேச்சு மும்மொழித் திட்டம் பார்ப்பனியத்தை வலியுறுத்துவதே என்பதை உறுதிப்படுத்துகிறது.

அமித்ஷா மொழி அறிஞர் அல்ல. அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்மொழி என்பதற்கு அவர் எந்த வித சான்றுகளையும் முன்வைக்கவில்லை. உண்மையில் அமித்ஷாவின் தாய்மொழி குஜராத்தி. மும்மொழிக் கொள்கை தாய்மொழியை வலியுறுத்துகிறது என்று சொன்னால் அவர் குஜராத்தி மொழி பெருமையைத் தானே பேசி இருக்க வேண்டும் மாறாக சமஸ்கிருதத்தை ஏன் தூக்கி பிடிக்கிறார்.

பார்ப்பனிய சக்திகள் கண்மூடித்தனமாக இப்படி ஒரு கருத்தை வழக்கமாகக் கூறிவருகிறார்கள். சொல்லப்போனால் உலகின் முதல் மொழி குறித்தோ உலகின் முதல் மனிதர்கள் குறித்தோ நேரடியான விடை அறிவியலில் இல்லை என்று மானுடவியலாளர்கள் (anthpologists) கூறுகிறார்கள்.‌

ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் எது தொன்மையான முதல் மொழி என்று ஒப்பீட்டளவில் உறுதியாகக் கூறமுடியும். சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கி.பி 300-ல் தான். ஆனால் அதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழில் கல்வெட்டு கிடைத்து விட்டது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தங்க ஆபரணத்தை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை ஆய்வு செய்து 3000 ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்தது. அக்காலத்தில் சமஸ்கிருதம் தோன்றவே இல்லை.

2016-ம் ஆண்டு மதுரைக்கு அருகே வைகைக்கரை கிராமம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் தங்கக் கட்டிகள் இருந்தன. அந்த தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்று இருந்ததை‌ தொல்லியல் துறை உறுதிச் செய்தது.

சமஸ்கிருதம் ஒரு மொழி என்பதை விட பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறை வடிவமாகும். சமஸ்கிருத வேதங்கள் சூத்திரர்கள் படிப்பதற்கு தடை விதித்தன. வேதங்களைப் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும் என்று மனுதர்மம் கூறியது.

வேதம் கற்பது மட்டுமே கல்வி என்ற நிலை இருந்தது. மெக்காலே கல்வித்திட்டம் வரும் வரை வேதபாடசாலைகளே இந்த நாட்டில் இருந்தன. அதற்குப் பின்பும் கூட பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத திருவிதாங்கூர், கொச்சி போன்ற சிற்றரசுகளில் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு கல்வி மறுக்கப்பட்டது.

‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ என்னும் நூலில் டாக்டர் கே.கே பிள்ளை இவ்வாறு கூறுகிறார்:

"உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்க செல்வாக்கும். வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப்பெற்ற பிராமணர்கள் அவை யாவும் எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும். மென்மேலும் வளர்ந்து வரவும் தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். வேந்தர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் ஜாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதையே தம் சீரிய கடமை எனக் கூறும் மெய்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரியப் பழக்க வழக்கத்தைப் பாராட்டிக்கூறும் சாஸ்திரங்களும், புராணங்களும் எழுந்தன. அவற்றைப் பிராமணர் பயில்வதற்கென அரசர்கள் பல கல்வி நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தனர்.''- (பக்கம் 318).

மன்னர்கள் நிறுவிய பள்ளிகள் யாவும் பிராமணருக்கு மட்டும் வடமொழிப் பயிற்சியை அளித்து வந்தன. சமஸ்கிருதம் இப்படி தமிழர்களின் வாழ்வுரிமையையும், கல்வியையும் சிதைத்தது. மருத்துவம் படிப்பதற்கு சமஸ்கிருதம் வேண்டும் என்ற நிலை பனகல் அரசர் காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் பண்டிதர் பட்டம் பெறுவதற்கு கூட சமஸ்கிருத அறிவு தேவை என்ற விதி இருந்தது. இதை ஒழிப்பதற்கு கடும் போராட்டம் நடந்தது. இன்றைக்கும் கோயில் கருவறை வழியாக சமஸ்கிருதத்துக்கே உரிமை கொண்டாடுகிறார்கள்.

காஞ்சி சங்கரமடங்கள் உள்ளிட்ட பார்ப்பன நிறுவனங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வேத பாடசாலைகளை உருவாக்குகிறார்கள். அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் ஆகம கோயில்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். கடல் தாண்டக் கூடாது என்ற சாஸ்திரங்களை மீறி அர்ச்சகர் வேலைக்கு பார்ப்பனர்கள் வெளிநாடு பறக்கிறார்கள். ஆனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி பள்ளியில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத 200-க்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு காத்து இருக்கிறார்கள். சமஸ்கிருத பண்டிதர்கள் உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்குகிறார்கள்.

கல்வி உரிமைகளை பறித்து ஓர் இனத்தின் பண்பாட்டை சிதைக்கும் சமஸ்கிருதம் தான் அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என அமித்ஷா கூறுகிறார். இதை வலியுறுத்தும் மும்மொழிக் கல்விக் கொள்கையை தமிழர்கள் ஏற்க வேண்டும் என்பது பார்ப்பன அதிகாரத் திமிர் அல்லாமல் வேறு என்ன?..

- விடுதலை இராசேந்திரன்